சுட்டெரிக்கும் வெயிலில் உருகும் மேற்குலக நாடுகள்

சுட்டெரிக்கும் வெயிலில் உருகும் மேற்குலக நாடுகள்

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் கிரீஸ் உள்ளிட நாடுகள் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையாகப் போராடி வருகின்றன. 23.07.2022 வரை 51,5000 ஹெக்டர் நிலம் ஐரோப்பா முழுவதும் எரிந்து நாசமாகியுள்லது. இது சராசரியை விட நான்கு மடங்கு அதிகம். ஐரோப்பாவில் உள்ள ஏழு நாடுகளின் தலைநகரங்களில் வெப்பநிலை (லண்டன், ரோம், ரூபளின் உட்பட) கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக பதிவாகியுள்ளது.

இதுவரை கண்டிராத மிக நீண்ட கோடைக் காலத்தையும் வெப்பத்தையும் தற்போது இந்த நாடுகள் சந்தித்து வருகின்றன. வெப்ப அலை மற்றும் வெப்ப உயர்வால் காட்டுத் தீ ஐரோப்பாவை வாட்டி வதைக்கிறது பிரான்சில் இதுவரை 37 ஆயிரம் பேர் இதனால் தங்கள் இடத்தைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர், பெல்ஜியத்தில் உள்ள விலங்குகளுக்கு குறிப்பாக பாண்டா, போலார் கரடி போன்றவற்றிற்கு உணவுடன் பனிக்கட்டியும் சேர்த்து குளிர்ச்சிக்காக கொடுக்கின்ற அளவிற்கு மிகக் கொடுமையான வெப்பநிலை அங்கு நிலவுகின்றது. 1100க்கும் மேற்பட்ட இறப்புகள் இந்த வெப்ப உயர்வால் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ், போர்ச்சுகல் ,ஜெர்மன், இத்தாலி போன்ற அனைத்து நாடுகளும் இந்த வெப்ப அலை மற்றும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெயினில் காட்டுத்தீ மிக அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி மக்களை அவர்களது உடைமைகளை எல்லாம் விட்டுத் தப்பியோட வைத்துள்ளது. இந்தக் காட்டுத்தீயின் பாதிப்புகளை நேரில் சென்று பார்த்த பின் ஸ்பெயினின் பிரதமர் ஊடகங்களிடம்  “காலநிலை மாற்றம் தான் இது அனைத்திற்கும் காரணம். இது காடுகளை அழிக்கிறது, மனிதர்களைக் கொல்கிறது, மொத்த சூழலையும் அழிக்கிறது என்று கூறினார்”. 17,000 ஹெக்டர் காடுகள் தென்மேற்குப் பிரான்சில் இதுவரைக் காட்டுத்தீயால் அழிந்துள்ளது. அரசாங்கம் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மிகப் பெரிய போராட்டத்தை நடத்திவருகிறது. 2000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்தத் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதனால் இடம் பெயர்ந்துள்ளனர்.

இத்தாலி 70 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சியைத் தற்போது சந்தித்துள்ளது. இத்தாலியில் உள்ள சிசிலியில் 48.8 டிகிரி செல்சியஸ் ஆக ஐரோப்பாவின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. போர்ச்சுகலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அதிக வெப்பநிலை காரணமாக இறந்துள்ளனர். இத்தீவிர வெப்பநிலை உயர்வால் சூரியன் மறையாத நாடு என அழைக்கப்படும் இங்கிலாந்து சூரியன் மறைய வேண்டும் என்று விரும்புகிறது. இதுவரை எப்பொழுதும் பார்த்திராத வெப்பநிலையான 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை முதல் முறையாக இங்கிலாந்து உணர்ந்ததே இதற்குக் காரணம் 40 டிகிரி செல்சியஸ் என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சாதாரணமாகத் தோன்றலாம் ஆனால், அரசாங்கம் அங்கு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது மேலும் அவசரக் கூட்டங்களைக் கூட்டும் அளவிற்குப் பிரச்சினையாக அது உள்ளது. இது சாலைப் போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தையும் இங்கிலாந்தில் பாதித்துள்ளது. ஏனெனில், இந்த அதீத வெப்பநிலையால் விமானநிலையத்தில் உள்ள விமான ஓடுதளம் இராணுவ விமான ஓடுதளம் உட்பட அனைத்தும் உருகுகியுள்ளது.

இந்தக் கோடையில்தான் இங்கிலாந்து அரசு முதல்முறையாக சிவப்பு அபாய வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து பத்திரிகைகளும் உருகும் இங்கிலாந்து ‘MELTING ENGLAND’ என்று தலைப்புச் செய்தி அச்சடிக்கும் அளவிற்கு இது மிகப்பெரியப் பிரச்சினையாக மாறியுள்ளது. இங்கிலாந்தில் இதுவரை 8 சதவீத வீடுகளில் மட்டுமே குளிர்சாதனக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது ஏனெனில், அதற்கான தேவை அங்கு மிக மிகக் குறைவு. ஆனால் இப்போது 800% அதிகமான மின்விசிறி விற்பனையும் 2400% சதவீதம் அதிகமான ஏசி விற்பனையும் நடைபெற்றுள்ளது. இளவரசர் சார்லஸ் “காலநிலை அபாயம் உண்மையில் ஒரு மிகப்பெரிய அபாயம்” என்று கூறியுள்ளார். லண்டன் தீயணைப்புத் துறையோ இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இதுவே மிகக் கடுமையான காலம் என்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கட்டுப்படுத்தித் தனது அதிகாரத்தைக் காட்டி ஐரோப்பிய நாடுகள் இயற்கை அதிகாரத்தால் ஆடிப்போய் உள்ளன. உலகின் செழிப்பான கண்டம், அதீத வசதி, வல்லரசு நாடுகள், உயர்தரக் காலநிலையை முன்கூட்டியே அறியும் வசதி ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டும் அதனால் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க முடியவில்லை. கண்டிப்பாக அதுமுடியாத காரியமும் கூட ஏனெனில் இயற்க்கையின் முன் அனைவரும் சிறியவர்களே. இதைப் புரிந்துகொண்டு உலகநாடுகள் வெறும் வெற்று ஒப்பந்தங்கள் மட்டும் போடாமல் புவிவெப்பமயமாதலைத் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

  • கார்முகில்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments