சறுக்கும் அணுசக்தி, ஆபத்தை உணருமா இந்தியா?

சர்வதேச அணுமின் சக்தி உற்பத்தி மற்றும் அணுமின் நிலையங்கள் குறித்த அறிக்கை அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் மைக்கேல் ஸ்னைடர் எனப்படும் தனியார் அணிசக்திக் கொள்கை ஆய்வாளர் குழுவால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

இவ்வறிக்கையின்படி உலக அளவில் 2021ஆம் ஆண்டு ஒட்டுமொத்த மின்னுற்பத்தியில் அணுமின்சக்தியின் பங்கு 9.8% ஆகக் குறைந்துள்ளது. முதல் முறையாக 10 விழுக்காடுக்கு குறைவாக அணுமின்சக்தியின் பங்கு குறைவது இதுவே முதல்முறையாகும்.

பன்னாட்டு அணுசக்தி முகமையின் கணக்கின்படி, 2021ம் ஆண்டின் இறுதியில் உலகமுழுவதும் 396.4 கிகாவாட் உற்பத்தித்திறன்கொண்ட 449 அணுவுலைகள் செயல்பட்டு வந்ததாகவும், அதில் 23 உலைகள் 2010 – 2013ம் ஆண்டுகளில் இருந்து இயக்கப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ல் அரையாண்டு நிலவரப்படி 33 நாடுகளில் 411 அணுவுலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. 6 அணுவுலை அலகுகள் 2021ம் ஆண்டில் மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. அதில் 3 அலகுகள் சீனாவைச் சேர்ந்தவை. 5 அணுவுலை அலகுகள் 2022ம் ஆண்டில் செயல்படத் துவங்கியுள்ளன. அதில், 2 அலகுகள் சீனாவைச் சேர்ந்தவை.

2021ம் ஆண்டில் மட்டும் 8 அணுவுலைகள் மூடப்பட்டுள்ளன. 2002 – 2021 வரையிலான காலத்தில் மட்டும் 98 அணுவுலைகள் புதுதாகத் துவங்கப்பட்டடுள்ளன; 105 அணுவுலைகள் மூடப்பட்டுள்ளன. இதில் சீனாவில் மட்டும் 50 உலைகள் துவஙகப்பட்டுள்ளன. உலகளவில் அணுமின் சக்தியின் உற்பத்தி 3.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆனால், இது 2019ஆம் ஆண்டு இருந்ததை விடக் குறைவு.

காற்றாலை மற்றும் சூரிய மின்னாற்றல் உற்பத்தியானது 2021ம் ஆண்டில் ஒட்டுமொத்த மின்னுற்பத்தியில் முதல் முறையாக 10.2 விழுக்காட்டை எட்டி அணுமின்னுற்பத்தியைத் தாண்டியுள்ளது.

அணுமின் ஆற்றல் – புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒப்பீடு

2021ம் ஆண்டில் மட்டும் அணுமின் ஆற்றலில் செய்யப்பட்ட முதலீட்டைவிடச் சூரிய மின்னாற்றலில் 8.5 மடங்கும், காற்றாலை ஆற்றலில் 6 மடங்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Lazard எனும் அமெரிக்க வங்கியின் ஆய்வுப்படி 2009 முதல் 2021 இடைப்பட்ட காலத்தில் சூரிய ஆற்றலின் விலை 90 விழுக்காடாகவும் காற்றாலை ஆற்றலின் விலை 72 விழுக்காடாவும் குறைந்துள்ளது. அதே நேரத்தில் புதிய அணுமின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை 36 விழுக்காடு உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் 92 கிகாவாட் காற்றாலை ஆற்றலும், 138 கிகாவாட் சூரிய ஆற்றலும் மின் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், அணுமின் ஆற்றலைப் பொருத்தவரையில் 0.4கிகாவாட் குறைவான ஆற்றலே புதிதாக மின் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி வளர்ச்சி விகிதத்தைப் பொருத்தமட்டில் உலகளவில் காற்றாலை மின்னுற்பத்தியின் வளர்ச்சி 17.0 விழுக்காடாவும், சூரிய மின்னுற்பத்தியின் வளர்ச்சி 22.3 விழுக்காடாகவும், அணுமின்னுற்பத்தியின் வளர்ச்சி 3.9 விழுக்காடாகவும் உள்ளது.

இந்திய மின்துறையின் நிலை

இந்தியாவில் 2021ம் ஆண்டில் 19 அணுவுலைகள் செயல்பாட்டில் இருந்ததாக தேசிய அணுமின் சக்திக் கழகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இதில் ராஜஸ்தான் உலை-1 மட்டும் 2004ம் ஆண்டிலிருந்தே நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. தாராப்பூர்-1. தாராப்பூ-2 மற்றும் மெட்ராஸ்-1 ஆகிய உலைகள் 2021ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டின் முற்பாதி வரை மின்னுற்பத்தி செய்யவில்லை என அறிக்கை கூறுகிறது.

6.0 கிகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட 8 உலைகள் கட்டுமான நிலையில் உள்ளது. இதில் கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் நான்கு VVER-1000 உலைகளும் அடங்கும். பன்னாட்டு அணுசக்தி முகமையின் தரவுப்படி இந்தியாவில் செயல்பட்டு வரும் அணுவுலைகள் 39.8 TWh (2020ம் ஆண்டில் 40.4 TWh)மி ன்னுற்பத்தி செய்துள்ளன. இந்தியாவின் மொத்த மின்னுற்பத்தியில் இது 3.2 விழுக்காடாகும்.

மேற்கண்ட வரைபடத்தின்படி பார்த்தால் கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் அணுமின் உற்பத்தி,காற்றாலை உற்பத்தி, சூரிய ஆற்றல் உற்பத்தி முறையே 43.9 TWh, 68.1 TWh, 68.3 TWh ஆக இருந்துள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டு முறையே 44.6 TWh, 60.4 TWh, 58.7 TWh ஆக இருந்துள்ளது. இதன்மூலம் 2021ம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டைவிடப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அதிகமாகவும் அணுமின் ஆற்றல் உற்பத்தி குறைவாகவும் இருப்பதை அறிய முடிகிறது.

தற்போது கட்டுமானத்தில் உள்ள 8 உலைகளும் தாமதத்தை எதிர்கொண்டோ அல்லது எதிர்கொள்ளப்போகும் நிலையிலோ இருந்து வருவதாக இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. இதில் கூடங்குளத்தில் கட்டப்பட்டுல் 4 உலைகளின் கட்டுமான காலம் திட்டமிட்டதைவிடத் தள்ளிப்போகும் என இந்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. போரின் காரணமாக ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்து இறக்குமதியாக வேண்டிய பொருட்கள் தாமதாவது இதற்கு முக்கியக்காரணமாகும். ஜூலை 2022 நிலவரப்படி கூடங்குளம் அணுவுலை அலகு 3 மற்றும் 4ன் கட்டுமானம் நவம்பர் 2023ம் ஆண்டு முடிவடையும் என இந்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்த உலைகள் நவம்பர் 2020ம் ஆண்டுக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 36 மாதங்கள் தாமதமாகியுள்ளது. இந்தத் தாமதக் காலத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் விலையானது கடுமையாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில் அணுமின் ஆற்றலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. புதிதாக அணுமின் நிலையங்களைக் கட்ட முற்படுவது பொருளாதார அடிப்படையில் வீண் செலவு என்பதற்கு இத்தரவுகள் பெரிய உதாரணங்களாகும்.

ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத இந்திய அரசு தொடர்ந்து அணுசக்தியில் முதலீடு செய்து வருகிறது. எகிப்து நாட்டின் ஷார்ம் –எல் –ஷேக்கில் 2022 நவம்பர் 6 தொடங்கி 18 வரை நடைபெறும் CoP 27 மாநாட்டின் இந்தியக் குழுவிற்குத் தலைமையேற்று சென்றுள்ள ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் குறைந்த அளவு கரியமிலவாயு வெளியேற்றத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள நீண்ட கால உத்தியை கடந்த 14ம் தேதி சமர்ப்பித்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அனைத்து உறுப்பு நாடுகளும் 2022ம் ஆண்டிற்குள் தங்களது குறைந்த அளவு கரியமிலவாயு வெளியேற்றத்திற்கான நீண்ட கால உத்தியை சமர்ப்பித்திருக்க வேண்டும். இதுவரை இந்தியா உட்பட 57 நாடுகள் மட்டுமே இந்த உத்தியை சமர்ப்பித்துள்ளன.

உயிரி எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்தல், குறிப்பாகப் பெட்ரோலில் எத்தனாலை கலத்தல், மின்சார வாகன பரவலாக்கலை அதிகரிக்கும் இயக்கம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்தல், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், 2025 வாக்கில் எத்தனால் கலப்பை 20 சதவீதம் அளவை எட்டுதல், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை பொதுபோக்குவரத்திற்கு மாற்றுவதற்கான வலுவான நடைமுறை, காலநிலையைத் தாக்குப்பிடிக்கவல்ல மேம்பாட்டிற்குப் பொலிவுறு நகர முன்முயற்சிகள், விரிவடைந்த எரிசக்தி மற்றும் ஆதாரவளங்கள் பயன்பாட்டை மேற்கொள்ளும் மைய நீரோட்டத்திற்காக நகரங்களின் ஒருங்கிணைந்த திட்டமிடல், தீவிரமான பசுமை கட்டட விதிகள், திட மற்றும் திரவக் கழிவுகள் மேலாண்மையில் புதிய, விரைவான வளர்ச்சியை உருவாக்குதல் போன்றவை இந்தியா சமர்ப்பித்துள்ள செயல்திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாகும்.

இந்தப் பட்டியலில் அணுசக்தியும் இடம்பெற்றிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தியா சமர்ப்பித்துள்ள செயல்திட்டத்தில் அணுசக்தியைப் பற்றிக் குறிப்பிடுகையில் “இந்தியா, அணுசக்தியை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் முக்கியக் கூறாகக் கருதுவதாகவும், தொடர்ந்து இது தொடர்பாக ஆராய்ச்சிகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் இந்தியா மேற்கொள்ளும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2032 வாக்கில் அணுசக்தித் திறனை மூன்று மடங்கு அதிகரித்தல் மின்சாரத் துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கென மேற்கொள்ளப்பட்ட சில மைல்கற்களில் ஒன்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணுவுலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நடைமுறையில் கரியமிலவாயு வெளியேற்றம் இல்லை என்பதால் அணுசக்தியை ஒரு பசுமையான ஆற்றலாக ஏற்றுக்கொள்ள முடியாது.

அணு ஆற்றல் நமது சுற்றுச்சூழலிலும் மக்களின் ஆரோக்கியத்தின் மீதும் மிகப்பெரும் தாக்குதலை நிகழ்த்துகிறது. அதனால், அணு ஆற்றல் காலநிலை மாற்ற விளைவுகளைக் குறைக்கும் கருவி என்பது தவறான வாதம்.

அணுக்கழிவு எனப்படும் அணுவுலையிலிருந்து மின்சாரம் உற்பத்தியான பின்னர் வெளிவரும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளானது பல நூறாயிரம் ஆண்டுகள் நமது சுற்றத்திலேயேதான் இருக்கும். அணுக்கழிவுகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு நமது சுற்றுச்சூழலில் தவிர்க்க இயலாத, ஒழித்துக்கட்ட இயலாத ஒன்று என்பது பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஃபுகுஷிமா, செர்னோபில் போன்ற ஒரு அணு உலை விபத்து பரந்த நிலப்பரப்பினை அணுக்கதிர் வீச்சால் பாழ்படுத்திவிட்டதை நாம் பார்த்து வருகிறோம். அணுவுலை விபத்து அந்த நிலத்தை வாழத் தகுதியற்ற நிலமாக மாற்றிவிட்டது. செர்னோபில் விபத்து நிகழ்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றளவும் 6,50,000 ஏக்கருக்கும் மேலான நிலத்தை மக்களால் பயன்படுத்த முடியவில்லை.

இப்படி அணுசக்தி உற்பத்தியில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் இந்த நாகசாரத் திட்டங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் திணிக்கப்படுகிறது. குஜராத்தில் அம்மாநில முதல்வரே புதிய அணுவுலைக்கு எதிராகப் பேசியுள்ளார். கர்நாடகாவில் மாநில பா.ஜ.க. அம்மாநிலத்தில் எங்கும் அணுக்கழிவுகளைப் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கிறது.

ஆனால், அணுசக்திக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாட்டில் மட்டும் புதிய அணுவுலைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் மீறி குறுக்கு வழியில் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அங்கேயே வைப்பதற்கு தேசிய அணுமின் சக்திக் கழகம் முயன்று வருகிறது.

ஒன்றிய அரசு அணுசக்தி தொடர்பான தனது செயல்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டிய காலமிது.

நன்றி: எம்.வி.ரமணா, சுவ்ரத் ராஜூ

  • சதீஷ் லெட்சுமணன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments