பாகன்  கையிலிருக்கும் பொம்மை! 

 

 

யானை‌ உருவத்தில் எவ்வளவு பெரியதாய் இருக்கிறது! பாகன் எவ்வளவு சிறிய ஆள்‌! யானையின்‌ ஓர்கால் அளவு கூட இல்லை. பாகன் கையில் இருக்கும் குச்சிக்குப் (அங்குசம்) பயந்து பாகன் சொல்வதையெல்லாம் செய்கிறது யானை.‌ பாகன் உன்மையிலேயே சிறந்த கெட்டிக்காரர்தான். பாவம் இந்த யானைதான் எவ்வளவு முட்டாளாய் இருக்கிறது? யானை நினைத்தால் ஒருநொடியில் அந்த பாகனை மிதித்து விட்டுத்தப்பிவிடலாம். “முட்டாள்யானை” என்று அந்த யானையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

தான் சொல்வதையெல்லாம் (கட்டளையிடுவது) இந்த யானை அன்பினால் தான் செய்கிறது என்றும், தன்னைப்பிரிந்து ஆண்டாளோ (யானையின்பெயர்) இல்லை யானையைப் பிரிந்துதானோ இருப்பது கடினம் என்றும் உருக்கமாக அந்தப் பாகன் சொல்லிக்கொண்டிருந்தார். யானை என்பது அதிக அன்புள்ள ஒரு முட்டாள் என்றும் விளக்கம் அளித்தவாறு யானையைக் கூட்டிக்கொண்டு நகர்ந்து சென்றார் அந்தப் பாகன். பாகன் கூட்டிச் சென்றது ஓர் உணர்வுகள் நிறைந்த யானை என்று‌ நாம் பார்ப்பதில்லை. வெறும் உருவத்தை மட்டும் மனதில் கொண்டு யானையை ஒரு பொம்மையாகத்தான் பெரும்பாலானோர் பார்க்கிறோம்.

முழுவளர்ச்சியடைந்த ஒரு‌ ஆசிய ஆண் யானையின் உயரம் 7.8’ முதல் 9.8’ அடிகள் வரை, உடல் எடை 3,500 முதல் 6,000 கிலோ வரை இருக்கும். ‌‌அதேப்போல் முழுவளர்ச்சியடைந்த ஒரு‌ ஆசியப் பெண் யானை 6.4’ முதல் 7.8’ அடிகள் உயரம் கொண்டதாகவும், உடல் எடை 2,000 முதல் 3,500 கிலோவுடனும் இருக்கும். யானையின் ஒரு பல் ஒரு கிலோ முதல் 5கிலோ வரைஇருக்கும். நன்கு வளர்ந்த யானை ஒரு‌ நாளைக்கு 150 லிட்டர் தண்ணீரும் 200 கிலோ உணவும் உட்கொள்ளும். சராசரியாக ஆசிய யானையின் ஆயுட்காலம் 48 ஆண்டுகள். 80 வயது தாண்டியும் ஒருசில ஆசிய யானைகள் வாழ்ந்திருக்கின்றன.

நம்மில் பெரும்பாலானோர் யானையின் வெறும் உடல் அம்சங்களை மட்டும் தெரிந்துவைத்து கொண்டு அதன் வாழ்க்கைமுறை, பண்புகள், நம் சூழலுக்கு யானைகள் செய்யும் பங்களிப்பு போன்றவற்றையெல்லாம் நாம் சிந்திப்பதற்கு மறுத்துப் பின்தள்ளிவிடுகிறோம்.இதன் விளைவே “வாழைத்தோட்டத்தைச் சூறையாடிய யானைக் கூட்டம்”, “ஊருக்குள் புகுந்து அராஜகம் செய்த காட்டு யானை”, “நெற்பயிரை நாசம் செய்த யானை” என்று யானையை இழிவு படுத்தும் செய்திகளும்,”யானையைத் தடியால் விரட்டி விரட்டி அடிக்கும் இளைஞர்கள்”, “யானை மீது பெட்ரோல் குண்டு வீச்சு!” என்று ஏராளமான யானைகளைப் பற்றியப் புரிதலற்றச் செய்திகளையும் அவற்றிற்கு எதிராக நடக்கும் வன்முறை செய்திகளையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு யானையுடைய வாழ்க்கைச்சூழல், பண்புகள், சூழலுக்கு அவை ஆற்றும் பங்கு முதலியவைகள் பற்றி சரியான புரிதல் இல்லாததும் அவற்றின் வாழ்வில் மனிதத்தலையீடு குறித்துப் பேசமறுப்பதுமே முக்கிய காரணமாகிறது.

 

“யானைகள்: அழியும்பேருயிர்” என்றப் புத்தகத்தில் யானையின் வாழ்க்கைச்சூழல் பற்றி சூழலியல் எழுத்தாளர் முகம்மது அலி விவரமாகத் எழுதியிருக்கிறார். யானைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வாசிக்க வேண்டிய முக்கிய நூல் அது. யானைகளை மனிதர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே பழக்கப்படுத்தத் தொடங்கிவிட்டனர். மனிதர்கள் தங்களின் தேவைக்காக விலங்குகளின் உள்ளார்ந்த பண்புகளை மாற்றியமைத்துப் பலகட்டங்களாகத் தொடர்ப்பயிற்சி செயல்முறைகளால் பொருளாதாரத் தேவைக்காகவோ அல்லது பொழுது போக்குக்காக  விலங்குகளைப் பழக்கப்படுத்துவதுதான் “Taming” எனப்படுகிறது.

மனிதர்கள் யானைகளைப் பழக்கப்படுத்தி அடிமைப்படுத்துவதற்காகப் பெருமுயற்சிசெய்து, பல படிநிலை பயிற்சிகள் அளித்து அதில் வெற்றியும் அடைந்துவிட்டு, யானையை முட்டாள் என்று சொல்வது நியாயம்தானா?  முதலில் உயிரினங்களைப் ‘புத்தியுள்ள’அல்லது ‘முட்டாள்’ என்று வகைப்படுத்துவதே ஒரு மேலோட்டமான குறுகியப் பார்வைதான். உயிரினங்கள் அவற்றின் சூழலுக்கேற்ப படிமலர்ச்சியால் தமக்கே உரித்தான உள்ளார்ந்த பண்புகளைப் பெற்றிருக்கின்றன. இங்கு பல்வேறு பேரழிவுகளைத் தாண்டி உயிர்வாழும் ஒவ்வொரு உயிரினமும் வரலாற்றில் வெற்றிபெற்ற உயிரினமே. நாம் மனிதனின் அறிவைமையப்படுத்திப் பிற உயிரினங்களோடு ஒப்பிட்டு சிறுமைப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமாகாது. யானையின் இயற்கைப் பண்புகளை உடைத்து தங்களுக்கு ஏற்றவாறு பதிலளிக்கும் – சேவை செய்யும் இயந்திரமாகயானையை மாற்றிவைத்து விட்டு அதில் அன்பு இருப்பதாகவும் முட்டாள் தனம் இருப்பதாகவும் சொல்வது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை?

 

12000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதன் சில விலங்குகளைப் பழக்கப்படுத்த ஆரம்பித்துவிட்டான். இந்த செயல் மனித இனத்தின் வளர்ச்சிக்குமிகப் பெரிய பங்குவகிக்கிறது. அதற்கு எத்தனை நியாயங்கள் இருந்தாலும் அவற்றால் மிருகங்களுக்கும் சூழலுக்கும் ஏற்படும் தீங்குகள் வாசிக்கப்படாத இருண்ட பக்கங்களாகவே இருக்கின்றது. அதிலும் முக்கியமாக யானை போன்ற ஆதார உயிரினங்களில் அவற்றின் குணத்தை மாற்றியமைப்பதை அதுவும் பெரும் வன்முறையை ஏவி அதைச்செய்வதை எந்த ஒரு குற்றவுணர்ச்சியோ வருத்தமோ இன்றி யானைகளை வெறும் பொம்மைகளாகவேக் கருதி மனிதர்களால் இரசிக்க முடிகிறது என்பது பெரும் வேதனை அளிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 25 கிலோ மீட்டர் முதல் 190 கிலோ மீட்டர் தூரம் நடப்பதை வாழ்க்கை முறையாக கொண்ட யானைகளை கட்டிப்போடுவது கொடுமையாக தெரியவில்லையா?

இயற்கையாகவே யானையின் செரிமானம் 40 சதவீதம் தான் இருக்கும் என்பதால் தான் உண்ட உணவில் இருக்கும் செரிக்கப்படாத விதைகளை தன்கழிவுகள் மூலம் செல்லும் இடமெல்லாம் பரப்பிக்கொண்டே செல்கிறது. யானையின் கழிவுகளில் இருக்கும் விதைகளுக்கு முளைப்புத்திறன் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் யானை சூழலுக்கு அளிக்கும் பங்களிப்பைக் குறிப்பதற்காக மட்டுமல்ல மாறாகக் காட்டில் வெகுதூரம் உலாவுவது என்பது யானையின் வாழ்க்கை முறையில் ஒரு அங்கம் என்பதை நினைவூட்டவே.ஆனால் நாம் யானையைக் காட்டிலிருந்து பிரித்து ஒரு கோயிலுக்கு உள்ளே அல்லது மரக்கூண்டுக்கு உள்ளே அடைத்து வைப்பது என்பது அந்த உயிரினத்தின் இயல்புக்குச் செய்யும் விதிமீறல். யானையை காட்டில் இருந்து பிரிப்பது  என்பது, ஒரு மீனைத் தண்ணீரை விட்டுப்பிரித்து தரையில் அதை வாழவைக்க முயற்சி செய்வது போன்ற மடமையாகும்.

 

பல நூற்றாண்டுகளாக, யானைகள் மூன்று முக்கிய பணிகளுக்காகப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன: போர், தொழில் மற்றும் பொழுதுபோக்கு (உயிரியல்பூங்காக்கள்மற்றும்சர்க்கஸ்களில்). இன்று இவை விழிப்புணர்வு‌ மற்றும் சட்டத்தின் மூலமாகப் குறைந்து போய் இருந்தாலும் மதவிழாக்களில் இன்றும் இந்தியாவில் யானைகளை அதிக அளவில் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘காட்ஸ்இன்ஷேக்கிள்ஸ்’ (Gods in Shackles) என்ற ஆவணப்படத்தை பார்க்கும் போது யானைகள்படும் துயரம் மற்றும் அவல நிலையை நம்மால் உணர்ந்து கொள்ளமுடிகிறது. யானைகளைத் இத்துயரத்தில் இருந்து விடுவிக்க பல விலங்குநல ஆர்வலர்களும் சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்துப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அந்தப் போராட்டம் பல நேரங்களில் மதச்சம்பிரதாயம், பாரம்பரியம் என்று சொல்லி தட்டிக்கழிக்கப்படுகிறது.

 

எது நம்பாரம்பரியம்? எது தற்போது நம் சூழலுக்கு முக்கியம் போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டியது இப்போது முக்கியமாகிறது. இவைமட்டுமின்றி மக்கள் வசிக்கும் இடங்களில் சுற்றித் திரியும் காட்டு யானைகளைப் பிடிக்கும் வனத்துறை, அவற்றின் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தெளிவான புரிதல்களும் விழிப்புணர்வுகளும் மிக அதிகமாக தேவைப்படுகிறது, அவையே மக்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களை வனவிலங்கு மற்றும் சூழலைகாக்கும் சட்டத்திட்டங்களை கண்டிப்பாக பின்பற்ற உதவியாக இருக்கும். யானைகள் யானைகளாகவே பார்க்கப்பட வேண்டுமே ஒழிய பாகன் கையிலிருக்கும் பொம்மைகளாக அவற்றைப் பார்த்து இழிவுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நாம் செய்கின்ற சூழற்கேடுகளால் அழிந்துவரும் இந்த பேருயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்முடையது.

 

– அருண்தட்சண்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments