கியாம்பூ காடுகளும் ஜிம் கார்பெட்டின் பேத்தியும்

கென்யாவின் தலைநகரான நைரோபியை ஒட்டி அமைந்துள்ளது கியாம்பூ காடு. கென்யாவின் பொருளாதாரம் இந்த இயற்கை வளங்களை நம்பித்தான் உள்ளது. நைரோபியில் நிலத்தின் விலை அதிகரிக்க ஆரம்பித்தது, கியாம்பூ காடுகள் ரியல் எஸ்டேட் மாபியாக்கள் கண்களை உறுத்த ஆரம்பித்தன. அந்த காடுகளுக்குள் இருந்த பல்லுயிரியம் மிகவும் தனித்துவமானது, பல்வேறு சதுப்பு நிலங்களும் இருந்தன.

நிலத்தின் விலை எகிற ஆரம்பித்தவுடன் சதுப்புநிலங்களை பிளாட்டுகளாக மாற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் துடித்தன. அதை எதிர்த்து போராட ஆரம்பித்தார் ஜோனாஹ் ஸ்டட்ச்பரி, இவர் புகழ் பெற்ற வனஉயிர் ஆர்வலர் ஜிம் கார்பெட்டின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. கியாம்பூ காடுகளில் எந்தவிதமான கட்டுமானங்களையும் அனுமதிக்கக் கூடாது என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். அதனால் சக்தி வாய்ந்த ரியல் எஸ்டேட் லாபிக்கு எதிரியானார். தொடர்ச்சியாக பல்வேறு மிரட்டல்கள் ஜோனாஹ்விற்கு வந்தவண்ணம் இருந்தன.

எந்தவிதமான மிரட்டல்களையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை முன்னெடுத்துவந்த ஜோனாஹ் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அவருடைய வீட்டிற்கு அருகாமையில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். வெளியே சென்று திரும்பிவந்து கொண்டிருந்தவர் வீட்டிற்கு அருகாமையில் சாலையை மறித்து சில மரக்கிளைகள்  விழுந்திருந்ததால் அவற்றை விலக்கிவிட கீழே இறங்கியதும் அவர் மீது சரமாரியாக குண்டுகளைசுட்டு விட்டு தப்பியுள்ளார் கொலையாளிகள். அவருடைய வீட்டிற்கு அருகாமையிலேயே நடைபெற்ற இந்த துயர சம்பவம் கென்யாவை உலுக்கியுள்ளது.

“கடந்த பல ஆண்டுகளாக கியாம்பூ காடுகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றி நம் நாட்டின் சுற்றுச்சூழலையும் இயற்கை வளத்தையும் பாதுகாப்பதில் முன்னோடியாக திகழ்ந்தார் ஜோனாஹ், அவருடைய படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார் அந்நாட்டின் அதிபர் உஹுரு கென்யாட்டா. ஜோனாஹ்வின் படுகொலை கென்யாவில் செயல்படும் காட்டுயிர் பாதுகாவலர்களை அதிர்ச்சியில் ஆளாகியுள்ளது என்கிறார் வைல்ட்லைப் டிரெக்ட் என்கிற தன்னார்வ தொண்டுநிறுவனத்தின் பவுலா கஹும்பு.

கடந்த சில ஆண்டுகளாக கென்யாவில் காட்டுயிர் பாதுகாவலர்கள், இயற்கை வள பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் என பலரும் கொல்லப்பட்டு வருகிறார்கள், அதன் தொடர்ச்சியே ஜோனாஹ்வின் படுகொலை. 2018 ஆம் ஆண்டு, யானைகள் மற்றும் காண்டாமிருகங்களின் தந்தங்கள் கடத்தப்படுவது தொடர்பாக துப்பறிந்து வெளிக்கொண்டுவந்த எஸ்மோண்ட் பிராட்லி கொல்லப்பட்டார், அவருடைய மரணத்தின் புதிரும் அவிழ்க்கப்படாமல் உள்ளது. இதைப்போன்று பல்வேறு கொலைகளில் இன்னமும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர்.

உலகம் முழுவதும் சூழலியல் செயல்பாட்டாளர்கள் கொல்லப்படுவது அதிகரிக்கிறது. குளோபல் விட்னஸ் எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலகெங்கும் நடக்கும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் அதில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ஆண்டறிக்கை வெளியிட்டு வருகிறது.

அவ்வறிக்கையின்படி கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் 21 நாடுகளில் நிலவுரிமைக்காகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் போராடிய 212 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது வாரத்திற்கு 4பேர் என்ற கணக்காகும். கொல்லப்பட்டவர்களில் பத்தில் ஒருவர் பெண் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வளங்களை பாதுகாப்பதன் மூலம் வாழ்வாதாரங்களை பாதுகாக்க முடியும் என்று பல்வேறு பூர்வகுடிகள் நிரூபித்துள்ள நிலையில், வளங்களை கைப்பற்றுவதற்கான செயல்களை பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு பெருமுதலாளிகளும் அதிகரித்துள்ளன. காலநிலை மாற்றம் வளங்களை அரிதாக்குகிறது, அதனால் தகராறுகள் அதிகரிக்கும். சூழலியல் செயல்பாட்டாளர்களை பாதுகாப்பது நம்முடைய வளங்களை பாதுகாப்பது ஆகும், இதை நினைவில் கொண்டு நாம் செயல்படுவோம்.

  • கோ.சுந்தர்ராஜன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments