உலக மக்கள் தொகையில் 99% மக்கள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாக WHO தகவல்

RDS_DELHI_POLLUTION_16a0853cd68_medium
Image: PTI

உலக சுகாதார தினத்தை (7.04.2022) முன்னிட்டு அரசாங்கங்கள் தங்களது நாட்டில் காற்றின் தரத்தை உயர்த்த உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 22.09.2021 அன்று உலக சுகாதார நிறுவனம் தனது புதிய காற்று தர நெறிமுறைகளை வெளியிட்டது. இதன்படி இதற்கு முன் 25 மைக்ரோ கிராமாக இருந்த PM10 நுண்துகளின் அளவு 15 மைக்ரோ கிராமாகவும், 10 மைக்ரோ கிராமாக இருந்த PM2.5இன் அளவு 5மைக்ரோ கிராமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாத்துகாப்பான PM10 அளவுகள் 60 ஆகவும் PM2.5 அளவுகள் 40 ஆகவும் உள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள பாதுகாப்பான அளவுகளை விட 6 மற்றும் 8 மடங்கு அதிகமாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் புதிய காற்றுத் தர நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு மற்ற நாடுகளும் அவர்களது தேசிய காற்றுத் தர நிர்ணய அளவினை புதுப்பிக்க வேண்டும் என தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, உலக சுகாதார நாளின் கருப்பொருள் ‘நமது பூமி நமது ஆரோக்கியம்’ (Our Earth Our Health) ஆகும். இதனை முன்னிட்டு வெளியான,  உலக சுகாதார நாளிற்கான அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்திருப்பதாகவும், உலக மக்கள் தொகையில் 99%  மக்கள் மாசடைந்த காற்றினை சுவாசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசைக் குறைக்க உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள ஆலோசனைகள்:

1. தேசிய காற்றுத் தர நிர்ணய அளவினை புதிய உலக சுகாதார நிறுவனத்தின் காற்றுத்தர அளவினை அடிப்படையாகக் கொண்டு மறுபரிசீலனை செய்தல்.

2. காற்றின் தரத்தை பரவலாக கண்காணிப்பதோடு காற்று மாசுபாடு எதனால் வருகிறது என்றும் கண்டறிதல்.

3. வளர்ந்து வரும் நாடுகளில்  சமையல், வெளிச்சம் மற்றும் குளிரூட்டும் தேவைகளுக்காக விறகு எரிப்பதனை தவிர்த்தல்.

4. பாதுகாப்பான மற்றும் விலை குறைந்த பொதுப் போக்குவரத்தினை கட்டமைத்தல் & பாதுகாப்பான நடைபாதை மற்றும் சைக்கிள் பாதைகளை உருவாக்குதல்.

5. வாகனப் புகையை கட்டுப்படுத்தும் விதம் மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை தீவிரப்படுத்தல் & கண்காணிப்பு பொறிமுறைகளை அதிகரித்தல்.

6. மின்னாற்றலை சிக்கனப்படுத்தும் நவீன மின் உற்பத்தி முறைகளில் முதலீடு செய்தல்.

7. தொழிற்சாலைக் கழிவுகள் & திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துதல்.

8. விவசாயக் கழிவுகளை எரித்தல் & காட்டுத்தீ ஆகியவற்றை குறைத்தல்.

9. காற்று மாசு தொடர்பான பாடத்திட்டத்தினை மருத்துவப் படிப்பிலும் சுகாதாரம் தொடர்பான படிப்புகளிலும் சேர்த்தல்.

10. சுகாதாரத்துறையினை காற்று மாசு தொடர்பான செயல்பாடுகளில் இணைத்தல்.

 

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு இந்தியா முழுவதில் காற்று மாசால் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக க்ரீன்பீஸ் அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இம்மரணங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

– பிரபாகரன் வீரஅரசு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments