தமிழில் பசுமை இலக்கியம்

நூல்களின் பங்களிப்பு – ஒரு பார்வை
நவீன காலத்தில் தமிழில் ‘சூழலியல்’ என்ற துறை முக்கியத்துவம் பெறுவதற்கு முன்பே இயற்கை வரலாறு, காட்டுயிர் தொடர்பாக எழுதியவர்கள் மிகக் குறைவு. விஞ்ஞானிகளும் வேட்டைக்காரர்களும் பெரிதாக எழுதவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் சூழலியல் தொடர்பாக தமிழில் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: மா. கிருஷ்ணன், எம்.ஏ. பாட்சா, பிலோ, இருதயராஜ், ஆர்.பி. சீனிவாசன், ஜே. மங்களராஜ் ஜான்சன், சு.தியடோர் பாஸ்கரன், ச. பாலகதிரேசன் ஆகியோர்.

சென்னையைச் சேர்ந்த மா. கிருஷ்ணன் (1913 – 1996) தமிழ் இலக்கியவாதி முன்னோடிகளில் ஒருவரான அ. மாதவையாவின் மகன். காட்டுயிர்கள் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். ஸ்டேட்ஸ்மேன் நாளிதழில் 1950 முதல் அவர் எழுதிய “மை கன்ட்ரி நோட்புக்” என்ற குறிப்புகள் அவர் இறக்கும் வரை தொடர்ச்சியாக வெளிவந்து புகழ்பெற்றவை. ஒளிப்படம் எடுப்பதிலும், ஓவியம் வரைவதிலும் வல்லுநர். பத்மசிறீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள அவர், “கதிரேசன் செட்டியாரின் காதல்” என்ற துப்பறியும் நாவல்கூட எழுதியிருக்கிறார். அவரது தமிழ் கட்டுரைகள் “மழைக்காலமும் குயிலோசையும்” என்ற தொகுப்பாக வந்துள்ளன.

பி.லூர்துசாமி (1928 – 1995) என்ற பெயர் கொண்ட பி.எல்.சாமி முன்னாள் புதுவை ஆட்சியர். தமிழறிஞர், இயற்கை விரும்பி, சங்கத்தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர். சங்க இலக்கியத்தில் புள்ளினம், விலங்கினம், செடிகொடி கள், மீன்கள், ஊர்வனவற்றின் விளக்கம் பற்றி அவர் எழுதிய நூல் வரிசை திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்து தனித்தன்மையுடன் திகழ்கிறது. ஆனால் இந்த நூல்கள் தற்போது கிடைப்பதில்லை என்பது துரதிருஷ்டம். சங்க இலக்கியத்தில் புதைந்து கிடக்கும் இயற்கைக் கூறுகளைப் பற்றி உலகறியச் செய்தவர்களில் முதன்மையானவர் சேவியர் தனி நாயகம் அடிகள் (1913 – 1980). ஆங்கிலத்தில் இவர் எழுதிய “இயற்கைக் காட்சியும் கவிதையும்” என்ற நூல் புகழ்பெற்றது. பலராலும் அறியப்பட்ட தமிழறி ஞரான மு. வரதராசனின் (1928 – 1994) “சங்க இலக்கியத்தில் இயற்கையின் வெளிப்பாடு” என்ற ஆங்கில நூல் மிகவும் புகழ்பெற்றது.

தற்போதும் எழுதிக் கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் தாராபுரத்தில் பிறந்த சு. தியடோர் பாஸ்கரன். இந்திய அஞ்சல் துறையின் மாநிலத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இயற்கை வரலாற்றில் மறைந்திருக்கும் தனித்தன்மை, அவற்றை பழைய இலக்கியங்கள் வழி வெளிப்படுத்துவது, புதிய கலைச்சொற்கள் போன்றவற்றால் இயற்கை மீதான ஈடுபாட்டையும் அழகுணர்வையும் ஊக்குவிப்பது இவரது தனி எழுத்துப் பாணி. பல தமிழ், ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். திரைப்பட வரலாற்று ஆய்வாளரும்கூட, “தி ஐ ஆஃப் தி செர்பென்ட்” என்ற திரைப்பட ஆய்வு நூலுக்கு குடியரசுத் தலைவர் விருது பெற்றுள்ளார்.

சூழலியலில் பசுமை இலக்கியம் என்ற துறை கவனம் பெறுவதற்கு முந்தைய காலத்தில் அதன் மீது அக்கறை செலுத்தியவர்கள் இவர்கள். சமீப ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை பரவலாகி இருக்கிறது. அது பற்றி எழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. அதேநேரம், முழுமையான நோக்குடன் அந்த எழுத்துகள் அமைந்துள்ளனவா என்பது முக்கிய கேள்வி. சமீப காலத்தில் வெளியான முக்கிய சூழலியல் நூல்களைப் பற்றி இந்தக் கட்டுரை கவனம் செலுத்துகிறது.

கானுறை வேங்கை
1980களில் இருந்து காட்டுயிர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர் உல்லாஸ் காரந்த். கன்னட இலக்கியவாதி சிவராம காரந்தின் மகன். சர்வதேச அளவில் புகழ்பெற்ற வேங்கைப் புலி ஆய்வாளரான இவர், கர்நாடகத்தில் உள்ள நாகரஹோளே தேசிய பூங்காவில் “இரைகொல்லி – இரை விலங்கு இடையிலான உறவு” பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தனது ஆய்வுகளை சாதாரண மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நூலாக எழுதியுள்ளார், அதுவே “கானுறை வேங்கை”. இந்த நூலை சு. தியடோர் பாஸ்கரன் மொழிபெயர்த்துள்ளார். நமது தேசிய விலங்கு என்ற அடையாளம் தவிர, பெரிதாக அரியப்படாத வேங்கைகள் பற்றி சரியாகப் புரிந்து கொள்ள ஏற்ற முழுமையான நூல் இது. வேங்கைப் புலிகளும் அவை வசிக்கும் காடுகளும் முக்கியமா? மனிதர்கள் காடுகளுக்குள் வாழ்வது முக்கியமா என்ற சர்ச்சைகள் பெரிதாகி வரும் நிலையில், இந்தியாவில் வேங்கைகள் பாதுகாப்பு, அதன் வாழ்வியல், அழிவு ஆகியவற்றைப் பற்றி இந்த நூல் அறிவியல்பூர்வமாக எழுதப்பட்டுள்ளது.

வேங்கைப் புலிகளை முற்றிலும் அழிவிலிருந்து காப்பாற்ற 70களில் இந்திரா காந்தி காலத்தில் “புலி பாதுகாப்புத் திட்டம்” ஆரம்பிக்கப்பட்டபோது 1500க்கும் குறைவான புலிகளே இருந்தன. இடையில் அதிகரித்து வந்த வேங்கைகளின் எண்ணிக்கை, 30 ஆண்டுகளில் மீண்டும் பழைய நிலைமையையே அடைந்துவிட்டது. 3,500க்கும் மேலாக இருந்த புலிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவை கடந்த பத்தாண்டுகளில் அழிந்து, வெறும் 1,400 வேங்கைகளே தற்போது காட்டில் உள்ளன. இந்த சூழலில்தான் “கானுறை வேங்கை” நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

வேங்கைகளைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்கும் இந்த நூல், வேங்கை தோன்றிய கதை, இப்புவியில் பரவிய வரலாறு, வேங்கைகளை எதற்காக பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தலைப்புகளில் விரிவாக அமைந்துள்ளது. பாஸ்கரனின் அழகிய தமிழ் நடை காரணமாக இது மொழிபெயர்ப்பு என்று தெரியாத வண்ணம் வாசிக்க முடிகிறது. வேங்கை – மனிதர் இடையிலான மோதல் ஏன் நிகழ்கிறது? அதைத் தடுக்க முடியுமா? என்பது போன்ற பல முக்கிய கேள்விகளுக்கு அறிவியல் பூர்வ விடை கிடைக்கிறது.

காட்டுயிர்களுக்கு மனிதனே மிகப் பெரிய எதிரியாகிவிட்ட சூழ்நிலையில், மனிதனால் வேங்கை இனத்தைக் காப்பாற்ற இயலும் என்ற நம்பிக்கை ஒரு சிறிய ஆறுதலை அளிக்கிறது.

தமிழரும் தாவரமும்
முனைவர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி எழுதிய “தமிழரும் தாவரமும்” நூல் பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு. பண்டை காலம் முதல் தமிழர்களின் வாழ்வில் தாவரங்களின் பங்களிப்பு பற்றி பதினோரு தலைப்புகளில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. ஆசிரியரின் கடின உழைப்பும், அறிவியல்பூர்வ ஆய்வுநெறியும் நூலில் தெளிவாகத் தெரிகின்றன.

தமிழகத்தின் பின்னணியையும் ஆதாரப்பூர்வமாக ஆராயும் இந்த நூல் குமரிக்கண்டம் மற்றும் லெமூரியா ஆகியவற்றை ஆதாரத்துடன் மறுத்து உள்ளது. மனித பரிணாம வளர்ச்சிப் போக்கில் தமிழர்கள் தோன்றிய விதமும் கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் நிலத்தில் ஆதிகாலம் தொட்டு இருக்கும் தாவரங்களை “இயல் தாவரங்கள்” என்றும், பிற்காலத்தில் புகுந்தவற்றை “அயல் தாவரங்கள்” என்றும் ஆசிரியர் வேறுபடுத்தியுள்ளார். பூக்களைப் பற்றியும், அதன் தன்மைகளையும் விரிவாக ஆய்வு செய்துள்ள கிருஷ்ணமூர்த்தி, பண்டைய தமிழர்கள் தாவரங்களுக்கு பெயரிட்ட போது இனிய மெல்லோசை வருமாறு பார்த்து பெயரிட்டதைக் குறிப்பிடும்போது ஆச்சரியம் மேலிடுகிறது. அத்துடன் தாவரம், பயிர், மரம் போன்ற சொற்கள் உருவான விதத்தை ஆழமாக ஆய்வு செய்துள்ளார்.

பண்டைய காலத்தில் இருந்து தமிழர் பகுதிக்குள் நுழைந்த தாவரங்களை கால வரிசைப்படி விளக்கியுள்ளார். கி.பி. முதலாம் நூற்றாண்டில் மலேசியாவிலிருந்து வெற்றிலையும் பாக்கும் நுழைந்தன, பிலிப்பைன்ஸ் – பசிபிக் தீவுகளில் தோன்றி இலங்கை வழியாக கேரளம், தமிழகத்தை தென்னை வந்தடைந்துள்ளது. தமிழ்ச் சமூகத்தில் தாம்பூலம் கொடுக்கும் பழக்கம், புகையிலை பொருள்கள் பயன்பாடு, வாசனை பொருள்களின் பயன்பாடு பற்றி விரிவான ஆய்வு செய்து நமது பார்வைக்குக் கொண்டு வருகிறார். பண்டைய தமிழ்ச் சமூகத்தில் சோறும் நீரும் விற்பனைக்கு உரியவையல்ல என்பதை அறியும்போது, தற்கால தமிழ்ச் சமூகச் சூழலை எண்ணி நெஞ்சு பதைக்கிறது. இன்றைக்கு தமிழர்களின் சிறந்த உணவாகக் கருதப்படும் இட்லி கி.பி. 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் தமிழகத்தை வந்தடைந்துள்ளது. இப்படி உணவுக் கலையை ஆய்வு செய்துள்ள ஆசிரியர் நாட்டு மருத்துவம், பழங்குடி மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஆய்வு செய்துள்ளார். இதுபோல பண்டைய தமிழரின் அனைத்து துறை சாதனைகளையும் பதிவு செய்து வெளியிடும்போது, தமிழனின் பெருமை உலகளவில் தலைநிமிரும்.

தமிழரின் நாகரிகம் மிகப் பழைமையானது. அதை மார்க்சிய பார்வையில், அறிவியல் கண்ணோட்டம் – பகுத்தறிவுச் சிந்தனையின் பின்னணியில் ஆய்வு செய்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. முனைவர் கிருஷ்ணமூர்த்தி இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது.

இயற்கை: செய்திகள், சிந்தனைகள்
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுயிர், இயற்கை வரலாறு பற்றி கட்டுரைகள், மேடைப் பேச்சு, எழுத்து வழியாகச் செயல்பட்டு வருபவர் ச. முகமது அலி. கோவையை அடுத்த மேட்டுப் பாளையத்தில் வசிக்கும் இவர், தமிழில் வெளியாகும் காட்டுயிர்களுக்கான ஒரே இதழான “காட்டுயிர்” இதழை நடத்தி வருபவர். இவரது “இயற்கை: செய்திகள், சிந்தனைகள்” நூல் (இயற்கை வரலாற்று அறக்கட்டளை வெளியீடு) காட்டுயிர்கள், இயற்கை வரலாறு பற்றிய குறுஞ்செய்திகள் அடங்கிய களஞ்சியம் என்றால் மிகையல்ல. 18 தலைப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகவல்களை உள்ளடக்கிய நூலாக இது வெளிவந்துள்ளது. கதிரவனின் வயது 1000 கோடி ஆண்டுகள். அரிசி ஒரு கிலோ விளைவிக்க 4,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ தேன் கிடைக்க ஒன்றரை லட்சம் பெரிய மலர்கள் தேவை. இவற்றை 1000 தேனீக்கள் சேர்ந்து சேகரிக்கின்றன. ஒரு ஜோடி சிலந்திகள் ஓர் ஆண்டில் 2,000 சிலந்திகளை உற்பத்தி செய்ய வல்லவை. வண்டு, பூச்சி, கொசு போன்றவை பறக்கும்போது மணிக்கு சுமார் 13,33,000 முறை சிறகை அசைக்கின்றன என்பது போன்று இந்த நூல் தரும் தகவல்கள் வேறெங்கும் படித்தறிய முடியாதவை. நூலாசிரியரின் கடின உழைப்பும், தகவல் தெரிவும் நூல் முழுவதும் வெளிப்படுகிறது. காட்டுயிர்கள், இயற்கை வரலாறு பற்றி அறியாமை விலக இதுபோன்ற நூல்கள் அவசியம் உதவும்.

முகமது அலி எழுதியுள்ள மற்றொரு சிறிய நூல் “பறவையியல் அறிஞர் சாலிம் அலி” (சாலிம் அலி என்பதே சரியான உச்சரிப்பு, சலிம் அலி அல்ல). பறவையியலைப் பற்றி பெரிதாக அறியாதவர்கள்கூட, பறவையியலின் தந்தை சாலிம் அலியின் (1896 – 1987) பெயரை மட்டுமாவது குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பார்கள். அவரது வரலாற்றுச் சாதனைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் அனைவரிடமும் எடுத்துச் செல்லும் முயற்சிதான் இந்த நூல். சாலிம் அலிக்கு பறவைகள் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி, ஆரம்ப காலப் பணிகள், குடும்ப வாழ்க்கை என எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சாலிம் அலியின் கடின முயற்சியால் இந்தியாவில் பல்வேறு சரணாலயங்கள் காப்பாற்றப்பட்டன. இவற்றில் குறிப்பிடத்தக்கதான அமைதிப் பள்ளத்தாக்கு காப் பாற்றப்பட்ட விதம், பரத்பூர் சரணாலயம் காக்கப் பட்ட முறை போன்றவை இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்க்க வேண்டியவை. “பறவைகளுக்கு வளையமிடுதல்” என்று அவர் தொடங்கி வைத்த பறவை ஆராய்ச்சி முறை இன்றும் வெற்றிகரமாக பல ஆராய்ச்சிகளுக்கு உதவி வருகிறது. இன்று நாம் பார்க்கும் பல பறவைகள், காட்டுயிர்கள், காடுகள் சாலிம் அலி காப்பாற்றி நம் கையில் ஒப்படைத்துச் சென்றவை. இவற்றை நாம் அப்படியே அடுத்த தலைமுறையினருக்கு ஒப்படைக்கப் போகிறோமா என்பது இந்த நூலை படித்து முடிக்கும் போது நம் மனதில் எழும் கேள்வி.

ஏழாவது ஊழி
ஈழத்து எழுத்தாளரான பொ.ஐங்கரநேசன் எழுதி சாளரம் வெளியீடாக வந்துள்ளது “ஏழாவது ஊழி”. ஐங்கரநேசன் பல்வேறு இதழ்களில் எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த 41 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இந்த நூலைப் பற்றி சுருக்கமாகக் கூறுவது என்றால், சுற்றுச்சூழல், காட்டுயிர்களின் மேல் அளவு கடந்த பிடிப்பு கொண்ட ஒருவர், அவற்றுக்கு நேரிடும் அவலங்களைக் கண்டு கோபம்கொண்டு, அவற்றின் மதிப்பை அறிவியல்பூர்வமாக விளக்கி எழுதியிருக்கும் கட்டுரைகளே இந்தத் தொகுப்பில் உள்ளவை எனலாம்.

அன்றாட வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்படும் ஞெகிழி என்ற பிளாஸ்டிக் பற்றி அவர் குறிப்பிடும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மழை நீர் நிலத்தில் இறங்கா வண்ணம் தடுக்கும் ஞெகிழி, தாவரங்களின் முளைப்புத் திறனையும் மழுங்கடித்து விடுகிறது என்ற வார்த்தைகள் 100 சதவீதம் உண்மை. “கொலைக்களமாகும் அடுக்களைகள்” கட்டுரையில் சமையலறையில் பயன்படுத்தப்படும் நான்ஸ்டிக் பாத்திரங்களால் ஏற்படும் உடல் நலக் கேடுகள் தோலுரிக்கப் பட்டுள்ளன. தாய்ப்பாலின் பெருமை, மென் பானங்களின் வன்முறை என விரியும் நூலாசிரி யரின் கோபம் சமூக அவலங் களுக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் நின்று பேசுகிறது. ஈழத்தில் போர் பாதித்த பகுதிகளில் பேரினவாதிகளால் சுற்றுச்சூழல் எப்படி சீர்கெட்டுள்ளது என்பதையும் படம் பிடித்துள்ளார்.

கலைச்சொற்கள் சிறப்பான முறையில் பயன்படுத் தப்பட்டுள்ளன. எளிய, அழகிய நடையில் அறிவியல் பூர்வமாகவும் எழுதப்பட்டுள்ளது. “தமிழ் அறிவியல் எழுத்து” என்ற அடைமொழிக்கு முற்றிலும் பொருத் தமான நூல் இது.

ஏ.சண்முகானந்தம்
‘பூவுலகு’ 2011 மார்ச் இதழில் வெளியான கட்டுரை

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments