பேரழிவுகளின் வரலாறு

சூரிய குடும்பத்தில்  உள்ள அனைத்து  கோள்களிலும், பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றன. பூமி தோன்றிய 450 கோடி ஆண்டுகளில் இங்குப் பல வகையான உயிரினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இன்று நாம் பூமியில் காணும் அனைத்து உயிரினங்களும் அந்த அழிவிலிருந்துத் தப்பிப்பிழைத்தவையே. நாம் அனைவருமே (அனைத்து உரினங்களும்) அவ்வுயிரினங்களின் சந்ததியினர்தான். கடந்த 200 கோடி ஆண்டுகளில் இந்த பூமியில் 5 முறைப் பெரும் அழிவுகள் நேர்ந்துள்ளன. முதல் பேரழிவிலிருந்து தப்பித்த மீன்களின் பரிணாமத்தினால் தான், பிரமாண்ட தோற்றம் கொண்ட டைனோசர்களும், ஊர்வன விலங்குகளும், கீச்சொலி எழுப்பி பறக்கும் பறவைகளும், பாலூடிகளும், இக்கட்டுரை எழுதும்; அதை வாசிக்கும் மனிதனும்கூடத் தோன்ற காரணமாய் அமைந்தது. இப்பூமியில் தோன்றிய அனைத்து வகையான உயிரினகளும் ஒரே மரத்தில் இருந்து பிரிந்த கிளைகளே.

அர்டோவிசியன் காலம்:

சுமார் 44  கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புவியின் வெப்பநிலை தற்போதைய அளவைக் காட்டிலும் 3 டிகிரி அதிகரிக்க பனிப்பாறைகள் எல்லாம் உருகி, தற்போதைய கடல்மட்ட அளவைவிட 600 மீ அதிகரித்து இருந்தது. அது கடல் வாழ் உயிரினகளுக்கு வாழ ஏதுவான சூழல் உருவான காரணத்தினால் பலவகையான உயிரினகள் தோன்றின. பூமியின் எதோ ஓர் மூலையில் தோன்றிய நுண்ணுயிரிகளால், எல்லா உயிரினங்களும் தோன்றி, கடல்களில் அனைத்து இடங்களிலும் பல்கிப்பெருகின. முதன்முதலாக முட்களைக் கொண்ட மீன்களும், செபோலோபோட்ஸ் (cephalopod) எனப்படும் ஆக்டோபஸின் தாத்தாவும் (அப்போது மீன்களை வேட்டையாடி உண்ணும் விலங்காக இருந்தது), கிரினாய்டு (Crinoids) எனும் தாவரத்தைப்போல் உருவம் கொண்ட சிறு வகையான உயிரனங்களை (அப்போதைய நெப்பந்தஸ்) உண்னும் விலங்குகளும் இருந்தன. சில மில்லியன் ஆண்டுகளில் கடலின் வெப்பநிலை 4 டிகிரிக்குக் குறைய, பனிப்பாறைகள் அதிகரிக்க உயிரினங்கள் அனைத்தும் அழியத் தொடங்கின. அப்போதுப் புவியில் வாழ்ந்த  85% உயிரனங்கள் அழிந்தன. அர்டோவிசியன் (Ordovician Age) எனும் புவியியல் காலக்கட்டத்தில் தான், முதல் முறையாக புவியில் பெரும் அழிவு ஏற்ப்பட்டது.

 

டெவோனியன் காலம்:

அர்டோவிசியன் காலத்தில் ஏற்ப்பட்ட அழிவிலிருந்து தப்பித்த உயரினங்கள் மீண்டும் பழைய சூழலைத் திரும்பப்பெற பல இலட்ச ஆண்டுகள் தேவைப்பட்டது. அச்சூழல் டேவோனியன் காலத்தில் மீண்டும் திரும்பப்பெற்றது. இக்காலத்தில்தான், டன்கிலாச்டியஸ் (Dunkleosteus) எனும் மீன் மாபெரும் வேட்டையாடும் விலங்காக இருந்தது. டெவோனியன் காலத்தின் உணவுச்சங்கிலியில் அது முதன்மையாகவும் இருந்துள்ளது. பிற உயிரினங்கள் மட்டும்மல்லாதுத் தன் இனத்தையே உண்ணும் அளவுத் திறன் கொண்டது டன்கிலாச்டியஸ். இது  ஆதிக்கம் செலுத்தி வந்த அதேக்காலக்கட்டத்தில் தான், நிலப்பரப்புகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதற்குமுன், பாறைகளாக இருந்த நிலப்பரப்புகளில் சிறு செடிகள் முளைக்க தொடங்கி அடர்ந்த வனங்களாக உருப்பெற்றன. நீராவியைக் காற்றினில் கடத்தி பலத்த புயல்களையும், பெரும் மழையையும் உண்டாக்கும் தன்மை கொண்டது காடுகள் என்பது நாம் அறிந்ததே. மழை பெருமளவில் தாவரங்களைக் கடலினுள் அடித்து சென்று கடலில் ஆக்சிஜென் அளவு குறையக் காரணமானது. புவி வெப்பத்தின் அளவு ஒரு புறம் குறைய, எரிமலைகளின் கொந்தளிப்புகளும் டெவோனியன் கால உயிர்ச்சூழலை பெரிதும் சிதைத்தது. இறுதியில் உணவுச்சங்கிலி முற்றிலும் அழிந்து, அடுத்தப் பேரழிவு நிகழ்ந்தது. இந்த பேரழிவில் முக்கால்பங்கு கடல் உயிரினங்கள் முற்றிலும் அழிந்தன. அதேசமயத்தில் தொடர்ந்து நிலப்பரப்பு செழிக்கத் தொடங்கியது. பேரழிவில் இருந்து கடல் உயரினங்கள் தப்பிக்க உடலில் புதிய பரிணாமம் தேவைப்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியகத்தின் இயற்க்கை வரலாற்று துறையின் இயக்குனரும், புதைமடிம ஆய்வாளருமான கிர்க் ஜான்சன் கூற்றுப்படி, ‘ஆழம் குறைந்த பகுதிகளில் உள்ள மீன்களுக்கு காதுமடல்களின் அடிப்பாகம் துடுப்புபோல் உருவம் கொண்டவை; இவ்வகையான மீன்கள் தான் பின்நாளில் இருவாழ்விகளாக (Amphibians) மாறின; முதன்முதலில் டிக்டாலிக் (Tiktaalik) எனும் விலங்குதான், இருவழ்விகளுக்கு மூதாதயர்களாக திகழ்கிறது. அதன்பின், தான் மற்ற பல உயிரினங்கள் தோன்றியன.’

பெர்மியன் காலம் :

பெர்மியன் காலத்தில் தான் இன்று நாம் காணும் மரங்கள் முதன்முதலாக தோன்றியன. மீன்கள் டெட்ராபோட்ஸ் (Tetrapods) என்று அழைக்கப்படக்கூடிய 4 கால்களால் நடக்கும் விலங்குகளாக பரிணாமம் அடைய ஆரம்பித்தன. கண்ட நகர்வின் விழைவால் இரண்டு கடல் தட்டுக்கள் மோதி, மீண்டும் கடலில் உயிர்வாழ சூழல் ஏற்ப்பட்டது.  செபோலோபோட்ஸ் வகைகள், பவளப்பாறைகள், மீன் வகைகள் மேலும் முதன்முதலாக சுறாவும் தோன்றியது. அந்த வகை சுறாக்கள் ஹெலிகோப்ப்ரியன் (Helicopriyan) என்றழைக்கப்படுகிறது. அவற்றின் பற்கள் தொல்படிமமாக கண்டறியப்பட்டுள்ளன. அப்பற்க்களின் அளவை வைத்து அச்சுறாக்கள் 12 மீ அளவு வரை இருந்தது எனக் கணித்துள்ளனர்.

இன்றுள்ள பூமி போல், நிலப்பகுதியிலும், கடல் பகுதியிலும் உயிர்பன்மயம் எவ்வித கெடுதல் இன்றி சீராக இருந்தது. அனால் எல்லாம் சில லட்ச ஆண்டுகளுக்கு மட்டும் தான். நாம் வாழும் இன்றைய உலகம் வரை, பூமி கண்டிராத மிகப்பெரிய அழிவு பெர்மியன் காலத்தில் ஏற்ப்பட்டது. தற்போது உள்ள சைபீரியா நாட்டில் தொடர்ந்து எரிமலைகள் வெடித்து பல பத்தாயிரம் ஆண்டுகள்வரையிலும்கூட நெருப்பு குழம்புகளைக் கக்கிக்கொண்டே இருந்தன. எரிமலைக்குழம்புகளால் உருவான பாறைகள் துளைகளோடு காணப்படும். அத்துளைகளில் கார்பன்டை ஆக்சைட், சல்பர் ஆக்சைட், நீராவி நிறைந்து இருக்கும். ஒருக்கட்டதில் அவ்வாயுக்கள் வெளியேறுதலால் துளைகள் உண்டாகும். பசுமை இல்ல வாயுக்களான கார்பன்டை ஆக்சைட் மற்றும் நீராவி போன்றவை வெப்ப நிலையை அதிகரித்து விடும்.  சல்பர் டை ஆக்சைட் அமில மழையை உண்டாக்குவதோடு, சூரிய ஒளியையும் தடுத்து விடுகிறது. சூரிய ஒளி குறைவதனால், ஒளிச்சேர்க்கை குறைந்து தாவரங்கள் அழியத் தொடங்கி, தாவரங்களை மட்டும் உண்ணும் விலங்குகள் அழிந்து, அவற்றை உண்ணும் பிற விலங்குகளும் அழிந்தன.

டிரையாசிக் – ஜுரச்சிக் காலம் :

முதல் இரண்டு பெரிய அழிவுகளில் இருந்து தப்பித்த கடல்வாழ் உயிரங்கள் கூட பெர்மியன் காலத்தில் அழிந்தன. நிலப்பகுதியில் தப்பித்த சில டெட்ராபொட்ஸ் டைனோசர்களாகவும், பாலூடிகளாவும்  பரிணாமம் அடைந்ன. டிரையாசிக் காலகட்டத்தில். மீண்டும் கடலில் உயிர்ச்சூழல் உருபெற தொடங்கி பவளப்பாறைகள், அம்மோனைடுகள், நட்சத்திர மீன்கள் போன்றவைத் தோன்றின. டேரோசார்ஸ் (Pterosaurs) எனும் முதல் பறக்கும் ஊர்வன விலங்கு பறக்க தொடங்கியது. நிலப்பகுதியில் பெரிய அளவு உருவம் கொண்ட தாவரங்களை உண்ணும் விலங்குகளும் தோன்றின. சீலோபிசிஸ் (Coelophysis) எனும் முதல் வகையான டினோசர்கள் தங்களின் வேட்டையைத் தொடங்கியிருந்தன. இங்கிருந்து பல நூறு லட்சம் ஆண்டுகள் கழித்து நடக்கக்கூடிய பேரழிவு வரை டினோசர்கள் தம் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தன. 20 கோடி ஆண்டுகள் முன்பு அமெரிக்கத்தட்டில் இருந்த ஐரோப்பாவும், ஆப்ரிக்காவும் பிரிந்து அட்லாண்டிக் பெருங்கடல் உருவாக காரணமாய் அமைந்தது. அப்போது மீண்டும் எரிமலைகள் வெடிக்க தொடங்கி நான்காம் பேரழிவு நடக்க காரணமாய் அமைந்தது. நிலப்பகுதியில் நான்கில் மூன்று பங்கு உயிரினங்களும், 96% கடல் உயிரினங்களும் அழிந்ததுன.

 

 

க்ரிடேசியஸ் காலம் :

க்ரிடேசியஸ் காலத்தில் தான் அதுவரை பூமியில் தோன்றாத அளவில் மிகப்பெரிய அளவிலான உயிரினங்கள் தோன்றியது – மெகா டைனோசர்ஸ். சில லட்சம் ஆண்டுகளிலே இன்றைய யானைகளை விட மூன்று மடங்கு பெரிய அளவில் அவைப் பரிணாமம் அடைந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை லெடுமஹாடி மஃபுபே (Ledumahadi Mafube) எனும் பெரிய வகை டைனோசர்கள். இவ்வகை டைனோசர்களின் தென் ஆப்ரிக்க பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எலும்புகளின் எடையை வைத்து அந்த டினோசார்கள் 12 டன் வரை எடை இருக்கும் என வித்வாடேர்ஸ்ரான்ட் பல்கலைக்கழக பேராசிரியரும், புதைமடிம ஆய்வாளருமான ஜொஹன்ஸ் கூறுகிறார். டேராசர்ஸ் (Pterosars) எனும் பறக்கும் உயிரனம், இதுவரை தோன்றிய பறக்கும் உயிரனங்களில் மிகப்பெரிய உயிரினம் ஆகும். அதன் சிறகே 12 மீ நீளம் கொண்டது. மொசோசர் எனும் ஊர்வன விலங்கு சுமார் 18 மீ அளவு வளரக்கூடியது. டைனோசர்கள் 175 மில்லியன் (ஜுரச்சிக் & க்ரிடேசியஸ் காலகட்டங்கள்) ஆண்டுகளுக்கு மேலாக பூமியில் ஆதிக்கம் செலுத்தியது.

பிரமாண்டமானத் தோற்றம் கொண்ட டைனசர்களின் அழிவிற்கு காரணம் தெரியாமல் ஆய்வாளர்கள் குழம்பி கிடக்க 1980 ஆம் ஆண்டு மேற்கு கனடாவின் ராயல் ட்டிரெல் அருங்காட்சியகத்தின் புதைமடிம ஆய்வாளரான பிரான்கைஸ் சாவன் (Francoise Chavan) ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார். விண்வெளியில் இருந்து வந்த ஒரு பெரிய வின்கல் பூமியில் மோதி டைனோசர் அழிந்து இருக்கலாம் என கூறியபோது கேலிக்கு உள்ளானார். ஆனால் தொடர்ந்து மேற்கு கனடாவில் உள்ள புவியியல் காரணிகளால் சிதைவுண்ட நிலப்பரப்புகளில் (Bad Land Topography) தன் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். அந்நிலத்தில் பல டைனோசர்களின் எலும்புகளும் மேலும் செந்நிறத்திலான படிமமும் கண்டறிகிறார். அச்செந்நிற அடுக்கில் (layer) க்ரிடேசியஸ் காலத்தில் கடைசியாக பூத்த பூவின் மகரந்தமும், இரிடியம் ஐ (Iridium I) எனும் தனிமம் (Element) கண்டறிகிறார். இந்த இரிடியம் பூமியில் கிடைக்கும் மிக அரியவகைத் தனிமம் ஆகும். அதேப்போல், விண்கற்களில் அதிக அளவில் கிடைக்கும் தனிமம் ஆகும். 20ஆம் நூற்றாண்டின் இறுதி வரை ஆராய்ச்சியாளர்களால் இக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி வின்கல்லால் அழிவு ஏற்ப்பட்டால் பூமியில் பெரிய பள்ளத்தை உருவாக்கி இருக்கும். எனவே ஆராய்ச்சியாளர்கள் பூமியில் தாங்கள் கண்டுபிடித்த அனைத்துப் பள்ளங்களையும் ஆராய்ந்தனர். ஆனால் எதுவும் டைனோசர் அழிய காரனமாய் இருந்ததற்கு ஒத்துப்போகவில்லை. ஓர் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்த புவியியல் அறிவியலர்கள் மேக்சிகோவின் யுகாடன் பகுதியில் நீரினால் பாதி மூடப்ட்ட ஒரு பள்ளத்தாக்கை தற்செயலாகக் கண்டறிந்தனர்.

6.6 கோடி ஆண்டிற்கு முன் ஏற்பட்ட ஒரு விண்கல் மோதலால், சுமார் 17 கோடி ஆண்டுகள் பூமியில் வாழ்ந்த உயிரினம் ஓரிரு நாட்களில் அழியத் தொடங்கியது தெரியவருகிறது. விண்கல்லின் தாக்கத்தினால் 13 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்ப்பட்டு சுனாமி உண்டாகுகிறது. கடல்வாழ் உயரினங்கள் அனைத்தும் அழிகின்றன. நேரடியாக விண்கல் மோதலின் தாக்கத்தில் இருந்து தப்பித்த சில டைனோசர்களும்கூட உணவில்லாமல் அழிகின்றன.

ஐந்து முறை மாபெரும் பேரழிவுகள் ஏற்பட்டும், பூமியானது மீண்டும் தன்னில் உயிரினங்கள் வாழ்ந்து பரிணாமம் அடையச்செய்துள்ளது. தன்னை மிஞ்சும் இயற்கையின் சக்தியைக் கண்டறியும் பொருட்டோ அல்லது அதையும் மிஞ்சும் பொருட்டோ நம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்ப்பாடுகளும் ஓரு விண்கல் மோதினால் அழியும் பூமியில் தான் நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

இதுவரை எந்த ஒரு உயிரினமும் இன்னொரு இனம் அழிய காரனமாய் அமையவில்லை. ஆறாம் பேரழிவு ஏற்பட்டால் அது முழுக்க முழுக்க மனித இனத்தையேச் சாரும். நாம் பேசி வரும் காலநிலை மாற்றத்தினாலோ அல்லது உணவுச்சங்கிலி சிதைவினாலோ ஏற்ப்படும் மாபெரும் அழிவுகள் ஏற்கனவே இப்புவியில் நிகழ்ந்தவையே. அனால் அவை இயற்கையாக நிகழ்ந்தன.

தனது நீண்ட வரலாற்றில் இப்போது நாம் காணும் மாற்றங்களையும் இதைவிட மோசமான மாற்றங்களையும், அழகிய சூழலையும் இந்த பூமி பார்த்திருக்கிறது. நுண்ணுயிர்களிலிருந்து மாபெரும் டைனோசர் வரை கண்ட பூமிக்கு நாமும் ஒரு சாதாரண உயிரினமே. நாம் எதிர்கொண்டிருக்கும் அழிவும்கூட புவிக்குப் பத்தோடு ஒன்று பதினொன்றாக ஆகிவிடக்கூடும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments