தொடர்ந்து நேர்மறையான பதிவுகளை வெளியிட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்று நமக்கும் ஆசை தான்.
ஆனால், இப்போதைய மனித இனம் அதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் தேடித் தேடி அடைத்தும் அழித்தும் வருகிறதே… என்ன செய்ய?
மேற்குத் தொடர்ச்சி மலை என்பது உலகிலுள்ள தலைசிறந்த பத்து பல்லுயிர்ச்சூழல் மண்டலங்களுள் ஒன்று.
கிழக்கு நோக்கிப் பாய்கிற 38 ஆறுகளுக்கும், அரபிக்கடலில் கலக்கிற 27 ஆறுகளுக்கும் கர்ப்பப்பை இந்த மேற்குத் தொடர்ச்சி மலை தான். காவிரி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற பெருநதிகளும் இவற்றில் அடக்கம்.
7400க்கும் மேற்பட்ட வகையான பூக்கும் தாவர இனங்கள்
1800க்கும் மேற்பட்ட வகையான பூக்காத் தாவர இனங்கள்
139 வகையான பாலுட்டியினங்கள்
508 வகையான பறவையினங்கள்
180 வகையான நீர்நில வாழ்வி இனங்கள்
6000 வகையான பூச்சியினங்கள்
290 வகையான நன்னீர் மீனினங்கள்
போன்ற உயிரினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்வதாக இது வரை பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவரையில் கண்டறியப்பட்ட உயிரினங்களில் 325க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உலக அளவில் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பட்டியலில் இடம் பெறாத இன்னும் பல வகை உயிரினங்களும் இங்கு வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் உள்ளன.
இத்தனை உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ச்சூழல் மற்றும் புவியியல் உறுதித் தன்மை மனித நடவடிக்கைகளால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடைந்து விழுகிற ஆபத்தில் இருக்கிறது. இனி இந்த வட்டாரத்தில் எந்த விதமான மனித நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மனித இனத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை வரவழைக்கும். இந்த எச்சரிக்கைகள் கேரள வெள்ளம் போன்ற இயற்கை விடுக்கும் ஒவ்வொரு எச்சரிக்கையின் போதும் கவனிக்கப்படுகிற மாதவ் காட்கில் போன்ற சூழலியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்தாகும்.
இந்த அளவுக்கு சூழலியல் மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு மிகப்பெரிய அழிவு வேலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது .
தன்னுடைய மொத்தத் திட்டவரைவில் 90% அடர்ந்த சோலைவனங்கள், சதுப்புநிலப்பகுதிகள் ஒரு புலிகள் சரணாலயம் ஆகியவற்றைக் கபளீகரம் செய்யவுள்ள #ஹூப்ளி_அங்கோலா இருப்புப் பாதைத் திட்டம் தான் அது.
1997ம் ஆண்டு 483 மதிப்பீட்டில் முன்மொழியப்பட்டு தற்போது பல மடங்கு உயர்ந்து 3750 கோடி ரூபாய் மதிப்பீட்டைத் தொட்டு நிற்கிறது இத்திட்டம். எதிர்ப்புகளின் காரணமாகப் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு உலகம் முழுக்கப் பதட்டம் நிலவி வரும் கொரோனா சூழலைப் பயன்படுத்திப் பல்வேறு விதிகளை மீறி ஒப்ப்புதல் அளித்திருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா. மாநில வனத்துறை அமைச்சர் கூடக் கலந்து கொள்ளாத அந்தக் கூட்டத்தில் மாநிலத் தொழில்துறை அமைச்சர் கலந்து கொண்டிருந்திருக்கிறார். இதில் இன்னொரு வேதனையான வேடிக்கை புலம்பெயர் மக்கள் விசயத்திலும், குடிமக்களுக்கான நிவாரணப் பணிகளிலும் ஒருவரை ஒருவர் மிகக் கடுமையாகத் தாக்கிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சித் தலைவரும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவளித்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதுதான்,
இந்தத் திட்டம் தொடர்பாக தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட பல்வேறு அறிக்கைகளை முதலமைச்சர் எடியூரப்பா ஒதுக்கித் தள்ளியிருக்கிறார். அந்த அறிக்கைகளிலும் இந்தத் திட்டத்தால் கிடைக்க உள்ள வருமானத்தைவிட இந்தத் திட்டத்தால் அழிய உள்ள இயற்கை மற்றும் உயிர் வளங்களால் ஏற்படப் போகும் இழப்பு தான் அதிகமாக இருக்கும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது, எடியூரப்பா மற்றும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் அதிகாரிகள் ஆகியோர் இந்தத் திட்டம் தொடர்பாக இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆய்வாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையையே வெகுவாகச் சார்ந்துள்ளனர், ஆனால் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சமாதானங்களை வனத்துறையின் பொறுப்பு அதிகாரிகளுக்குக் கூட ஏற்புடையதாக இல்லை.
தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி
29 வகையான பாலூட்டியினங்கள்,
256 வகையான பறவையினங்கள்,
8 வகையான ஊர்வனயினங்கள்,
50 வகையான வண்ணத்துப் பூச்சியினங்கள்
வாழும் அந்த உயிர்ச்சூழல் மண்டலத்தை ஊடறுத்துச் செல்ல உள்ள திட்டம் இது. மேற்கண்ட 29 வகையான பாலூட்டிகளில் பெரும்பான்மையானவை இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் மிகவும் ஆபத்துக்குள்ளானதான சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. 1972ம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாப்புப் பட்டியலிலும் அவை வைக்கப்பட்டுள்ளன.
இந்த உயிரினங்களின் ஒற்றைப் பாதுகாப்பான அடர்வனத்தில் அரசு அறிவித்துள்ள எண்ணிக்கைப்படி மட்டும் அழிக்கப்பட உள்ள மரங்களின் எண்ணிக்கை 2.34 லட்சம். கண்டிப்பாகக் குறைந்தபட்சம் இதைவிட இருமடங்கு எண்ணிக்கையாவது இருக்கும் என்பதை நமது அரசுகளின் நேர்மை குறித்தான அனுபவம் நமக்கு சொல்லாமல் சொல்கிறது. அழிவுக்குள்ளாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 2.34 லட்சம் மரங்களில் பல மரங்கள் 200லிருந்து 300 வயதுடையவை. பெத்தி தேசியப் பூங்கா, காளி புலிகள் சரணாலயம், தாந்தேலி இருவாச்சிப் பறவைகள் சரணாலயம், அன்சி – தாந்தேலி புலிகள் காப்பகம் என மிகக் கூடுதலான உயிரிச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குமலைத் தொடர்ச்சி மலைக்காடுகளுக்குள் 168 கிலோ மீட்டர் நெடிய ரயில்பாதைகளை அமைக்கப்படுகிற இத்திட்டத்துக்காக 327 பாலங்கள், கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட 34 குகைகளும் இந்தத் திட்டத்திற்காக அமைக்கப்பட உள்ளன. அந்தக் குகைகளுக்காகப் பெருமளவு மலைகள் சிதைக்கப்பட உள்ளன. ஒற்றைச்சொல்லில் சொல்வதானால் மேற்குத் தொடர்ச்சி மலைக்குப் பெருத்த அழிவு நடக்க உள்ளது.
பல லட்சம் வருடங்களாக இயற்கை நெய்து வைத்துள்ள ஒரு அழகிய பட்டாடையான இந்த வனத்தில் 596 ஹெக்டேர் வனத்தை அழிக்கவுள்ள இந்தத் திட்டம் துவங்கப்படுமானால் ஏற்கனவே பெருத்த சிக்கலுக்குள்ளாகியுள்ள மழைப் பொழிவு நடைமுறையில் இன்னும் பெருத்த அடி விழும். பெருமளவிலான மண் சரிவுகளும், சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்பும் நிகழும். சுரங்கத் தொழிலை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தால் வருகிற வருமானத்தை விட இதன் காரணமாக ஏற்படவுள்ள இயற்கைச் சீரழிவுகளால் விளைகிற நஷ்டம் சர்வநிச்சயமாய்ப் பல மடங்கானதாக இருக்கும்.
ராஜு மாரியப்பன்