உலகின் முதலாளித்துவ அரசுகள் தன் நாட்டின் இயற்கை வளங்களை வளர்ச்சி என்ற பேரில் உள்நாட்டு/வெளிநாட்டு முதலாளிகளுக்கு சுரண்டக்கொடுப் பதும் அவர்களைப் பாதுகாத்து அரவணைப்பதும் இன்றைய யதார்த்தத்தில் நாம் கண்டுவருகிறோம். குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் ஆட்சியாளர்கள் சொந்த நாட்டு மக்கள் நலன் மற்றும் இயற்கை நலன்குறித்து கடுகளவும் கரிசனம் கொள்ளாமல் உள்நாட்டு/பன்னாட்டு நிறுவனங் களின் லாப நலன்களுக்காக நாட்டின் அடிப்படை ஆதாரமாகிய இயற்கை வளங்களை தாரைவார்க்கின்றன.
இன்று இந்தியாவின் கனிம வளமிக்க மாநிலங்களான ஒடிஸா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களின் இயற்கை வளங்கள் உள்நாட்டு/பன் னாட்டு நிறுவனங்களால் வேகமாக கொள்ளை யடிக்கப்படுவதும், அங்கு பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிற பூர்வகுடிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருவதும் சாதாரண நிகழ்வாக நடந்துவருகின்றன. இதுபோன்று தமிழகத்தின் மீத்தேன் எரிவாயு எடுப்புத் திட்டமாகட்டும், கெயில் எரிவாவு குழாய் பதிப்புத் திட்டமாகட்டும், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டமாகட்டும், கவுத்தி வேடியப்பன் மலை அபகரிப்புத் திட்டமாகட்டும் அப்பகுதி மக்களின் நலன்களுக்கு எதிரானத் திட்டங்களின் வாயிலாக, அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்தும் அச்சுறுத்தியும் இயற்கையை வளங்களை பெருமுதலாளிகளுக்கு தாரை வார்த்தும் தமிழகத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதாக இருக்கிறது.
இது போதாதென்று, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளை விழுங்குகிற மாபெரும் கொள்ளையாக தாது மணல் கொள்ளை இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அதிகமான அளவில் நடைபெறுகிற தாதுமணல் கொள்ளை குறித்த செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தாலும் இக்கொள்ளையை இடித்துரைத்து விரிவாகப் பேசுவோர் யாருமில்லை..
இவ்வாதங்கத்தைப் போக்கும்விதமாக இம்மாபெரும் இயற்கைவளச் சுரண்டல் குறித்த விரிவான பதிவாக வந்துள்ள நூல்தான் தோழர் முகிலன் எழுதிய தாது மணல் கொள்ளை. தாது மணல் குறித்த அடிப்படை தெரியாதவர்களின் கையைப்பிடித்து அழைத்துச்சென்று இது குறித்தான புரிதலை வழங்குகிறது இந்நூல். தாது மணல் என்பது என்ன? அது எப்படி எங்கு உற்பத்தியாகி கடற்கரையை வந்தடைகிறது? தாதுமணல் கடல் வாழ் உயிரினங்களுக்கு எவ்வாறு வாழ்வளிக்கிறது?அப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்கிறது போன்ற செய்திகளை மிக எளிய நடையில் அறிவியல் மொழியில் விளக்குகிறது இந்நூல்.
கடற்கரை மணலுக்கு எதற்கு இவ்வளவு பெரிய பீடிகை என்று கேட்கலாம். இதற்கொரு காரணம் இருக்கிறது. இது வெறும் மணல் அல்ல! இந்த மணல், இயற்கையாகவே கதிரியக்கத்தன்மைகொண்ட இல்மனைட், கார்னெட், ரூடைல், சிலிகான், மோனோசைட் போன்ற விலைமதிக்க முடியாத தாது உப்புகள் நிறைந்த கனிமப்புதையல் ஆகும். அணுசக்திக்குத் தேவையான இயற்கை கதிர் இயக்கத் தனிமங்கள் அடங்கிய இந்தகைய தாது மணல் உலகத்தில் இந்தியாவில், அதுவும் தமிழகக் கடற்கரைப் பகுதியில்தான் அதிகம் கிடைக்கிறது என இம்மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாக விவரிக்கிறார் நூலாசிரியர். இத்தகவல் தெரிந்த முதலாளிகள் சும்மா இருப்பார்களா?
நாயின் மலத்திற்கு நல்ல விலை கிடைக்கும் என்றால் அதை கையில் எடுத்துப் பையில் அடைத்துச் சந்தைப்படுத்தத் தயங்காத இந்த தனியார் முதலாளிகளுக்கு கோடி கோடியாக இலாபம் கொட்டிக் கொடுக்கும் சொர்ண பூமி என்றால் சும்மா விடுவார்களாஎன்ன? அதுவும் அரசின் பரிபூர்ண ஆசிபெற்றால் கேட்கவே வேண்டாமே. பின் நடந்தவற்றை சொல்லவும் வேண்டுமோ?
இந்தத் தாதுமணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய, போராடுகின்ற மக்கள்மீது அரச மற்றும் தனியார் முதலாளித்துவ பயங்கரவாதம் எத்தனை கொடிய மற்றும் கீழ்த்தரமான அணுகுமுறைகளைக் கையண்டாலும் மக்கள் சக்திதான் மிக வலிமையான ஆயுதம் என்பதை இந்நூலில் வலுவாக உணர்த்துகிறார் நூலாசிரியர்.
இந்நூல், தாது மணல் குறித்தும் அது எவ்வாறு பெரு முதலாளி வைகுண்டராஜனால் கொள்ளையடிக்கப்படுகிறது எனவும் விளக்குகிற கருத்துப் பெட்டகமாகும். பிறர் கூறத்தயங்குகிற சுரண்டலை ஆதாரப்பூர்வமாகப் பதிவுசெய்துள்ள தோழர் முகிலனின் துணிச்சலே அவரது தனித்துவம். மக்கள் புரட்சி மட்டுமே நிலவுகிற சுரண்டலுக்கான தீர்வாக முடியும் என்ற கருத்தாக்கத்தை நூலின் ஒவ் வொரு பக்கங்களிலும் வாசிப்போர் உணர்வார்கள்.
ஆசிரியர்: முகிலன்,
விலை ரூ.160
ஐந்திணை பதிப்பகம்,
முகம்மதியர் தெரு, மந்தக்கரை, விழுப்புரம் (அஞ்சல்), அலைபேசி :9442170011, 7871357575.
- ஒ. கனகராஜ்
பூவுலகு செப்டம்பர் 2014 இதழில் வெளியான கட்டுரை