கோவிட்-19 பொது முடக்க காலத்திலும் இந்தியாவில் நிலக்கரி சாம்பல் அதிகரித்து காணப்பட்டதாகவும் ஒரே ஆண்டில் 7 மாநிலங்களில் 17 பெரும் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்திய சுகாதாரமான ஆற்றல் முன்முயற்சி ( Healthy Energy Initiative-India) என்ற அமைப்பும், வனம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான சட்ட முன்முயற்சி (Legal Initiative for Forest and Environment -LIFE) என்ற அமைப்பும் இணைந்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவிட்-19 லாக்டவுன் காலத்திலும் இந்தியாவில் நிலக்கரி சாம்பல் மாசுபாடு பரவலாக இருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான ஒரு ஆண்டில், 7 மாநிலங்களில் குறைந்தது 17 பெரும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது. “இந்தியாவில் நிலக்கரி சாம்பல் – தொகுப்பு 2: இந்தியாவில் நிலக்கரி சாம்பலை தவறாக கையாளுவது பற்றிய சுற்றுச்சூழல், சமூக மற்றும் சட்ட சுருக்கச் சாரமான தொகுப்பு 2020- 2021 (Coal Ash in India – Vol II: An environmental, social and legal compendium of coal ash mismanagement in India, 2020-21) என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கையில் இந்தியாவில் நிலக்கரி சாம்பல் மேலாண்மை பற்றியும், அது மனித ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வாறு அச்சுறுத்தலாக உள்ளது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி சாம்பல் விபத்துகள் பற்றிய ஊடக செய்திகளை இந்த அறிக்கை ஆய்வு செய்கிறது. மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, சத்தீஷ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் இந்த அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளன. சாம்பல் குட்டை உடைதல், சாம்பல் குட்டையினால் மாசுபாடு, நிலக்கரி சாம்பல் ஆற்றுக்குள் அல்லது பிற நீரோடைகளில் கொட்டப்படுவது போன்றவைதான் அதிக அளவு நடக்கும் சம்பவங்களாக இருக்கின்றன. இவை நமது நாட்டின் நிலக்கரி சாம்பல் மேலாண்மை எந்த அளவு மோசமானதாக இருக்கிறது என்பதைக் காட்டுபவையாக உள்ளன. நிலக்கரி சாம்பல் பிரச்சனை நீடித்த பிரச்சனையாகவும், கசிவுகள் மற்றும் விபத்துகள் நடப்பது சகஜமானதாகவும் இருக்கின்ற பிராந்தியத்தில்தான் இந்த சம்பவ இடங்கள் பல இருக்கின்றன.
“கோவிட்-19 லாக்டவுனின்போது டெல்லி போன்ற பெரிய நகரங்கள் தெளிவான நீல நிற வானம் கொண்டிருந்ததாகக் கொண்டாடப்பட்டபோது, சத்தீஷ்கரின் கோர்பா, வட சென்னையின் சேப்பாக்கம் போன்ற பகுதிகளில், நிலக்கரி சாம்பலை முறையற்ற வகையில் மேலாண்மை செய்வதோடு தொடர்புள்ள பல்வேறு சம்பவங்களையும், விபத்துகளையும் நாங்கள் கண்டோம். கோவிட்-19 லாக்டவுனைப் பயன்படுத்தி, கண்மூடித்தனமாக நீர்நிலைகளிலும், கிராமங்களிலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் சாம்பலைக் கொட்டி சுற்றுச்சூழலுக்கும், பொது மக்கள் ஆரோக்கியத்திற்கும் சரிசெய்ய முடியாத தீங்கு ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்து, நிலக்கரி சாம்பல் பிரச்சனைகள் நிறைந்த பகுதியின் குடியிருப்பாளர்கள் அளித்த தகவல்களை அறிந்துகொண்டோம்,” என்று இந்தியச் சுகாதாரமான ஆற்றல் முன்முயற்சி அமைப்பின் பூஜா குமார் கூறினார்.
“கடந்த ஓராண்டில் முன்னெப்போதும் கண்டிராத நிலக்கரி சாம்பல் மாசுபாட்டினை கோர்பா கண்டது. நாங்கள் இங்கே பல ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறோம். ஆனால், இதுபோன்ற காட்சியை நாங்கள் இதற்கு முன்பு கண்டதில்லை. எங்கெல்லாம் நிலக்கரி சாம்பலைக்கொட்ட முடியுமோ அங்கெல்லாம் கொட்டுவதற்கு கம்பெனிகளுக்கு கோவிட்-19 கட்டுப்பாடுகள் உதவின. நெடுஞ்சாலைகள் நெடுக்கிலும், சுற்றுச்சாலைகளிலும், கிராமங்களிலும், எல்லா இடத்திலும் நிலக்கரி சாம்பல் குவியலைக் காண முடிகிறது. கோடை காலத்தின் காற்று வீச முழு நகரமும் நிலக்கரி சாம்பலால் மூடப்படுகிறது. நாங்கள் நிலக்கரி சாம்பலைத்தான் சுவாசிக்கிறோம். பல புகார்கள் அளிக்கப்பட்ட போதும், தவறு செய்யும் கம்பெனிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று சத்தீஷ்கரின் கோர்பாவைச் சேர்ந்த செயல்பாட்டாளரான ஸ்ரீ லட்சுமி சௌகான் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சாம்பல் பற்றிய ஊடக செய்திகள் நிலக்கரி சாம்பல் சுற்றுச்சூழல் மீதும், மக்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆழமான செய்திகள் வெளியிடுவதை நோக்கி ஊடகங்கள் நகர்ந்துள்ளதை இந்த அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தொழில் முனைவோர்கள் அடிக்கடி சொல்கின்ற ‘வளர்ச்சி’ என்பதற்கு மாறாக, 2020-21 காலத்தில் ஊடகங்கள் வெளியிட்ட நிலக்கரி சாம்பல் பற்றிய செய்திகள் மக்கள் மற்றும் பல்லுயிர்ச்சூழலை மையப்படுத்துவதாக இருந்தது. “முன்னோடி பல்கலைக்கழகங்களும், கருத்துருவாக்க அமைப்புகளும் (think tanks) வெளியிட்ட ஆய்வு அறிக்கைகள் பற்றிய ஊடக செய்திகள், நிலக்கரி சாம்பலின் தாக்கம் குறித்த பன்முகப்புரிதலை உருவாக்குவதாக இருந்தன. நிலக்கரியைக்கொண்டு செயல்படும் ஆலைகளைச் சுற்றி, மாசுபட்ட பகுதிகளைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோருவது, சுத்தம் செய்யக் கோருவது, மாசுபாட்டை குறைக்கும்படி வேண்டுவது, வாழ்க்கை தர இழப்புக்கும் வாழ்வாதார இழப்புக்கும் இழப்பீடு கோருவது போன்ற மக்கள் போராட்டங்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியிடப்பட்டன.
“நிலக்கரி சாம்பல் சமூகத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் அபாயம் மிகவும் கண்டுகொள்ளப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவரும் இப்பிரச்சனையைக் கையாளுவதில், இந்தியாவின் கட்டுப்பாட்டு அதிகார அமைப்புகள் தோல்வி கண்டுவிட்டன. மின்சார உற்பத்தி கம்பெனிககளின் அலட்சிய அணுகுமுறையினால் சட்டப்படி குற்றமிழைத்தவை என்று அவற்றை நீதிமன்றங்கள் இறுக்கிப் பிடிப்பது இனிதான் நடக்கவேண்டியுள்ளது”, என்று வனம் சுற்றுச்சூழலுக்கான சட்ட முன்முயற்சி அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ரித்விக் தத்தா குறிப்பிட்டார்.
நிலக்கரி சாம்பல் பிரச்சனையில் சுற்றுச்சூழல் விதிமீறல்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் இழப்புக்கு, இழப்பீடு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிடுவதை அமலாக்கம் செய்வதில் உள்ள சட்ட – கொள்கை அமலாக்கம், மற்றும் இடைவெளிகள் குறித்து மிக ஆழமான ஆய்வினை இந்தஅறிக்கை அளிக்கிறது. “நிலக்கரி சாம்பல் பரவுவதற்குத் திட்டத்தை முன்னெடுப்பவர் பொறுப்பானவர் என்ற சட்ட நிலைப்பாடு மிகத் தெளிவானதாக இருக்கிறது. அவர்கள் ஏற்படுத்திய சேதத்துக்கும், மீட்டெடுப்பதற்காக செலவினை திரும்பக் கொடுப்பதற்கும் முழுமையான அளவில் பொறுப்பானவர்கள் ஆவார்கள். இப்படியான சட்ட முன்மாதிரி மிகத் தெளிவாக இருந்தபோதும், நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்களும் குற்றமிழைத்தவர்கள் மீது சேதத்திற்கும், மீட்டெடுப்பதற்குமான செலவீனத்தை சுமத்துவது மிக அரிதாகத்தான் நடக்கிறது. சேதத்தை மதிப்பீடு செய்வதற்கும், மீட்டெடுப்பு நடவடிக்கைக்கான செலவீனத்தை மதிப்பீடு செய்வதற்குமான மூன்றாவது தரப்பை திட்டத்தை முன்மொழிந்தவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எனவே, மத்தியப்பிரதேச சிங்குரௌலியில் உள்ள சாசன் மின்நிலையத்தில் நிலக்கரி சாம்பல் பரவல் நடைபெற்றபோது, மத்தியப்பிரதேசத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பின்வருமாறு உத்தரவிட்டது: “சாம்பல் குளத்தில் ஏற்பட்ட உடைப்பு, நிலக்கரி சாம்பல் அடுத்துள்ள தாழ்வான பகுதிகளுக்கும் பரவியது, மின்னுற்பத்தி நிலைய வளாகத்துக்குள்ளும், விவசாய நிலங்களுக்கும், கிராமங்களுக்கும், ரிகாண்ட் அணை உள்ளிட்டு இயற்கையான நீர்நிலைகளுக்குள்ளும், அவற்றை சுற்றியும் பரவியது, அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்தை மதிப்பீடு செய்யத் தேசிய அளவில் நற்பெயருள்ள ஒரு நிறுவனத்தை பணிக்கு அமர்த்த வேண்டும்.” என்று இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- Healthy Energy Initiative (HEI – India) and Legal Initiative for Forest and Environment (LIFE)