கடந்த 5 ஆண்டுகளில் 95 ஆயிரம் எக்டர் அளவிலான வனப்பகுதியை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்தியா இழந்திருப்பது மக்களவையில் ஒன்றிய இணை அமைச்சர் அளித்த தவவலின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, இந்தியாவின் வனப்பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அனுமதிக்கப்படும் திட்டங்கள் குறித்து மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார்.
இந்தியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்த வேண்டுமெனில் இந்திய வனச் சட்டம் 1980ன் கீழ் உரிய முன் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். ஒன்றிய இணை அமைச்சர் அளித்த பதிலின்படி, ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2024 வரையிலான காலத்தில் மட்டும் வனப்பாதுகாப்பு சாராத திட்டங்களுக்காக 95,724.99 எக்டர் வனப்பகுதி, நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தேசிய பூங்காக்கள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களில் 854 திட்டங்களைச் செயல்படுத்த ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. இதிலும் குறிப்பாக, 2023-24ல் மட்டும் 421 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய பூங்காக்கள், காட்டுயிர் சரணாலயங்களில் கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக்குழுவினுடைய பரிந்துரை அவசியம். அண்மைக் காலமாக இந்த நிலைக்குழு அதிக எண்ணிக்கையிலான திட்டங்களுக்கான ஒப்புதலை போதிய பரிசீலனையின்றி விரைவாக வழங்கி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஒரே ஆண்டில் 421 திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது அதிர்ச்சியளுக்கக் கூடிய தரவாக உள்ளது.
மாநில அளவில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 22614.74 எக்டர் பரப்பளவிலான வனப்பகுதி 909 திட்டங்களுக்காக நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஒடிஷா (13,622 ha), அருணாச்சலப் பிரதேசம் (8,745 ha), குஜராத் (7,403 ha) அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 86 திட்டங்களுக்காக வெறும் 126.66 எக்டர் வனப்பகுதி மற்றுமே நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறைவாக வன நிலங்களை நிலப்பயன்பாடு வகை மாற்றம் செய்த மாநிலங்களின் பட்டியலில் மேகாலயா (33.99 ha), தமிழ்நாடு (126.66 ha), கேரளா (156.15 ha), சிக்கிம் (212.55 ha) கோவா (280.45 ha) ஆகியன முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.
Forest Diversion