மோசமாகும் காலநிலை; மூடப்படும் கதவுகள் – ஜோகன் ராக்ஸ்ட்ரோம்

கடந்த 2023ம் ஆண்டில் காலநிலை மாற்றம், கடல் அமிலமாதல் மற்றும் நில அமைப்புகளின் மாற்றம் உள்ளிட்ட ஒன்பது அரண்களை புவியின் இயங்குமுறையை பாதிக்கக்கூடிய காரணிகளாக விஞ்ஞானிகள் வரையறுத்தனர். இவற்றில் ஆறு அரண்களுக்கான வரம்புகள் ஏற்கனவே மீறப்பட்டதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்திருந்தனர். ஜெர்மனியிலிருக்கும் போட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும், போட்ஸ்டாம் பல்கலைகழகத்தின் புவியமைப்பு அறிவியல் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் ஜோகன் ராக்ஸ்ட்ரோம் தலைமையில் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட முன்வடிவு ஒன்றின் அடிப்படையிலேயே மேற்காணும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் பத்திரிகையாளர் ஷாகுனுக்கு அளித்த நேர்காணலில், இப்புவியியல் அரண்கள் அனைத்தும் புவி வெப்பமயமாதலால் கடுமையான நெருக்கடியில் உள்ளதாகவும், அவை உச்ச வரம்புகள்(tipping points) எனப்படும் மீளாநிலைக்கு மிக அருகில் கொண்டு சேர்த்திருப்பதாகவும் ராக்ஸ்ட்ரோம் தெரிவித்திருந்தார். அவருடனான உரையாடலின் சுருக்கமான தமிழாக்கம் பின்வருமாறு;

மனித செயல்பாடுகளால் உந்தப்பட்டு உலகளாவிய வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனை இயற்கை அமைப்புகள் எவ்வாறு எதிர்கொள்கின்றன?

புவி வெப்பமயமாதலானது தொடர்ச்சியாக நேர்கோட்டில் அதிகரித்து வருகிறது. அதிதீவிர வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள், காட்டுத் தீ, நோய்களின் வடிவங்கள் மற்றும் மனித செயல்பாடுகளால் உந்தப்பட்ட புயல்கள் போன்றவற்றின் மூலம் வெப்பநிலை உயர்வை நாம் உணர முடிகிறது. காலநிலை நெருக்கடியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக அடிப்படை காரணங்களாகவும் இவை அமைந்துள்ளன. புவியானது தன் பயணத்தில் ஏற்படும் இத்தகைய கடுமையான அழுத்தங்களைத் தானே சில உயிரியல், வேதியியல்  மற்றும் இயற்பியல் செயல்பாடுகளின் மூலம் கையாண்டு அவற்றைத் தணிக்கிறது. புதைப்படிம எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் அதி  தீவிர வெப்பத்தை பெரும்பாலும் 90 விழுக்காடு அளவிற்கு பெருங்கடல்களே ஈர்த்துகொள்வதோடு, 25 விழுக்காடு அளவிற்கு கார்பன்-டை-ஆக்சைடு வாயுவையும் ஈர்த்துகொள்கின்றன. இது தவிர காடுகளும், இதர நிலம் சார்ந்த புவியியல் சூழல் அமைப்புகளும் 25 விழுக்காடு கார்பன்-டை-ஆக்சைடை ஈர்த்துகொள்கின்றன. மேலும், ஆர்டிக், அண்டார்டிக் மற்றும் இமயமலை பகுதிகளில் உருகிவரும் பனிப்பாறைகள் கூட 4 விழுக்காடு வெப்பத்தை ஈர்த்துகொள்கினறன. நாம் உற்பத்தி செய்யும் வெப்பத்தில் ஒரே ஒரு விழுக்காடு மட்டுமே வளிமண்டலத்தில் காணப்பட்டாலும், அதுவே காலநிலை நெருக்கடியை உந்துகிறது.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில், ஒருவேளை புவியினால் தாங்க முடியாத அளவிற்கு இத்தகைய பாதிப்புகள் அதிகரிக்கும்போது, புவியின் அமைப்புகள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை தணிப்பதற்குப் பதில், மரங்கள் மற்றும் மண்ணிலிருந்து அதிகளவிலான மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் வாயுக்களையும், பெருங்கடல்களிலிருந்து வெப்பத்தினையும் உமிழ்ந்து காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை மேலும் அதிகரித்தால் என்னவாகும் என்பதேயாகும். புவியின் தாங்கு திறன் சார்ந்த எல்லைகள், உச்ச வரம்புகள் (tipping points) எனப்படுகின்றன. அதாவது, புவியானது காலநிலையை சமன்படுத்துவதற்கு பதில் வெப்பமயமாதலை உந்தும் நிலைக்கு மாறும் எல்லையாகும்.

‘அட்லாண்டிக் மெரிடியோனல் ஓவர்டர்னிங் சர்குலேசன்’ (Atlantic Meridional Overturning Circulation – AMOC) எனப்படும் கடல் நீரோட்ட சுழற்சியும், கீரின்லாந்தின் பனித்தகடும், அமேசான் மழைக்காடுகளுமே தற்போது புவியை குளுமைபடுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால், இவை தங்கள் உச்ச வரம்பை அடையும்போது கார்பன் மற்றும் வெப்பத்தை ஈர்ப்பதற்குப் பதில் தங்களிடமுள்ள கார்பன் மற்றும் வெப்பத்தை உமிழ்ந்து காலநிலை மாற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும்.

 

 

Atlantic Meridional Overturning Circulation – AMOC

 

இந்த உச்ச வரம்புகளுக்கு எவ்வளவு அருகில் நாம் உள்ளோம்? ஒருவேளை இவற்றைக் கடந்தால் என்ன நடக்கும்?

கீரின்லாந்தின் பனித்தகட்டினை மீண்டும் உறைய வைப்பதோ அல்லது அமேசான் மழைக்காடுகளை மீண்டும் வளர வைப்பதோ மிகவும் கடினமானது. அதைச் செய்ய முடியும் என்பதற்குப் போதுமான அறிவோ அல்லது ஆதாரமோ நம்மிடம் இல்லை. எனவே இவ்விரு அரண்களும் அவற்றின் வரம்பை கடக்கமாலிருப்பதையே நாம் விரும்புகிறோம். நாம் இப்போது பயணித்து கொண்டிருக்கும் இப்பாதையிலேயே தொடர்ச்சியாக பயணிப்போமேயானால், 1.5 டிகிரி (காலநிலை மாற்றம் சார்ந்த அளவீடு) என்ற நிலையை நிரந்தரமாக எட்டி உச்ச வரம்புகளை கடப்பதற்கான ஆபத்தான நிலை அதிகரிக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

AMOC சுழற்சி இநூற்றாண்டிற்குள் செயலிலப்பதை நம்மால் தடுக்க இயலாது என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒருவேளை AMOC முற்றிலும் நிலை குலைய நூறாண்டுகளுக்கு மேலானாலும், அதன் உச்ச வரம்பை கடந்தபின் அதன் நிலைகுலைவை கட்டுபடுத்துவதென்பது முற்றிலும் இயலாத ஒன்றாகும். அதேபோல் அமேசான் மழைக்காடுகள் தனது உச்ச வரம்பை கடந்துவிட்டால் அவை மழைக்காடுகளாக அல்லாமல் சவன்னா அமைப்புகளாக(மழைக்காட்டிற்கும் வறண்ட நிலத்திற்கும் இடைப்பட்ட நிலை) மாறி மிக அதிக அளவிலான கார்பனை உமிழும் என பல்வேறு அறிவியல் தரவுகள் கூறுகின்றன. இம்மோசமான நிலை ஏற்படாமல் தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருந்தாலும், அவை மிக வேகமாக குறைந்து கொண்டே வருகின்றன. குறிப்பாகச் சொல்லபோனால், இத்தகைய ஆபத்துகளைத் தடுக்க இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளே நம்மிடம் உள்ளதால் நாம் மிகவும் விரைந்து செயல்பட வேண்டும்.

அரசாங்கங்கள் இந்த அவசரகால நடவடிக்கைகள்,  குறிப்பாகப் புவியின் பாதுகாப்பு அரண்கள் குறித்து செயலாற்ற வேண்டிய உடனடித் தேவையை ஒப்புகொள்கின்றனவா?

கவலைகொள்ளும் விதமாக இப்பிரச்சனையில் அரசியல் புறக்கணிப்பு என்பது மிக அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் இந்நிலையே நீடிக்கிறது. ஒரு சில அரசாங்கங்கள் ஆபத்துகளை உணர்ந்திருந்தாலும், காலநிலை சார்ந்த பேச்சுவார்த்தைகளில் அறிவியலாளர்கள் நம்மிடம் கூறுவதற்கும், அவற்றுக்கான அரசியல் தலைவர்களின் பதில்களுக்கும் நடுவில் மிகப்பெரிய இடைவேளி நிலவுவதைக் காண முடிகிறது. ஐரோப்பாவிலுமே கூட தலைவர்கள் காலநிலை மாற்றத்தை ஒப்புக்கொண்டாலும், வேலை வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றங்கள், பாதுகாப்பு போன்ற பிற நிகழ்வுகளில் கவனத்தை அதிகபடுத்தி காலநிலை நெருக்கடியை அரசியல் ரீதியாக சமாளித்து காலநிலை சார்ந்த செயல்பாடுகளை ஒத்திவைக்கலாம் எனத் தவறாகக் கணிக்கின்றனர். ஆனால், உண்மை என்னவெனில் காலநிலை நெருக்கடியே எல்லாவற்றிற்கும் அடிப்படையாகும்.

அதேசமயம்,  இப்பிரச்சனைகள் குறித்துப் போதுமான அளவில் புரிதலை ஏற்படுத்தாமல் தோல்வியடைந்தது அறிவியலாளர்களின் மீதான சுய விமர்சனமாக நான் முன்வைக்கிறேன். உதாரணமாக, AMOC குறித்த ஆய்வுகளை எடுத்துகொள்வோம், AMOC தனது உச்ச வரம்பை எட்டுவதற்கான வாய்ப்புகள் என்பது கணிக்க முடியாததாக உள்ளது. ஒரு சில ஆய்வுகள் அதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகவும், வேறு சில ஆய்வுகள் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் கூறுகின்றன. ஆனால், ஒருவேளை இந்நிகழ்வு நடந்தால் அதன் தாக்கம் மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதால் இது நடப்பதற்கான வாய்ப்புகள் 5 முதல் 10 விழுக்காடு வரையே இருந்தாலும் அது ஏற்றுகொள்ள முடியாத ஒன்றேயாகும். காலநிலை ஆபத்துகள் குறித்த விவாதங்களை நாம் எவ்வாறு மேற்கொள்கிறோம் என்பதை நாம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்து மட்டுமல்லாமல் நம்மால் எதிர்கொள்ள இயலாத அதன் பின் விளைவுகள் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

உலகின் பெரும்பாலான உணவு உற்பத்தி முறைகள் புவியின் பாதுகாப்பு அரண்கள் அவற்றின் வரம்புகளைக் கடக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. இது நாம் நமது உணவு அமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டுமென கூறுகிறதா? இதனை சாத்தியபடுத்துவதில் உள்ள அரசியல் மற்றும் கட்டமைப்பு முறைகள் சார்ந்த தடைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வது ?

நாம் இது சார்ந்த மதிப்பீடுகளைக் காணும்போது, புவியின் ஒன்பது பாதுகாப்பு அரண்களில், ஆறு அரண்கள் ஏற்கனவே அவற்றின் வரம்பை கடந்துவிட்டன. இந்நிகழ்வுகள் அனைத்திலும் உணவுக் கட்டமைப்பே முதன்மையான அல்லது முக்கியமான காரணியாக உள்ளது. உதாரணமாக, காலநிலை மாற்றத்தை எடுத்துக்கொள்ளுங்கள், உலகம் முழுவதும் உமிழப்படும் பசுங்குடில் வாயுக்களின் அளவில் 25 முதல் 30 விழுக்காடு வரை உணவு கட்டமைப்பினாலேயே உமிழப்படுகிறது . இது வெறும் கார்பன்-டை-ஆக்சைடு மட்டுமல்லாமல் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்றவற்றையும் உள்ளடக்கியது. உயிர்மண்டல அமைப்பின்(மரபணு பன்மையம் மற்றும் சூழலியல் அமைப்பில் தற்போதுள்ள ஆற்றல்) உயிர்பன்மைய அழிவிற்கு முதன்மைக் காரணியாக இருப்பது உணவு உற்பத்திக் கட்டமைப்பேயாகும். அதிலும் குறிப்பாக வேளாண்மை சார்ந்த பணிகளுக்காக இயற்கை வளமிக்க இடங்களை அழிப்பதே முக்கியக் காரணியாக உள்ளது. இதன்மூலம் நமக்குத் தெரிய வருவது, புவியியல் அரண்களை சார்ந்து வளங்குன்றாததாகவும், சுழற்சி முறை மிக்கதாகவும் நமது உணவுக் கட்டமைப்பினை மாற்றுவதன் மூலம் நம்மால் ஒட்டுமொத்த புவியையும் உறுதியானதாகவும், நலமானதாகவும் மாற்றும் பாதைக்கு இட்டுச் செல்லமுடியும்.

புவியின் ஒன்பது பாதுகாப்பு அரண்களில், ஆறு பாதுகாப்பு அரண்கள் அவற்றின் வரம்பைக் கடந்ததில் உணவுக் கட்டமைப்பிற்கு மிகப்பெரும் பங்குள்ளது. உணவுக் கட்டமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது  நம் புவியை மீண்டும் நலமான வாழ்விடமாக மாற்றுமா?

உலகின் பொது விவாதங்களில் ஒரு பகுதியாக உணவுக் கட்டமைப்பினை கொண்டு வருவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். உணவுக் கட்டமைப்பு சார்ந்த நடவடிக்கைகளை காலநிலை மற்றும் உயிர்பன்மையம் குறித்த விவாதங்களில் முன்வைப்பதுடன், அவற்றுக்குத் தேவையான முக்கியத்துவத்தையும் அளிக்க வேண்டும். கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் கடைபிடித்து வரும் உணவு உற்பத்தி முறையானது மிகவும் பலவீனமாக இருப்பதுடன் புவிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வறட்சி, வெள்ளம் மற்றும் நோய்களைச் சமாளிப்பதில் உணவு உற்பத்தி முறையானது திறனற்றதாக உள்ளது. உழுதலற்ற(Zero – tillage) மற்றும் ஆழமாக வேரூன்றும், அதிக பயிர் சுழற்சிகள் கொண்ட , நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை குறைவாக தாக்கத்தை ஏற்படுத்த கூடிய நீண்ட கால பயிர்களில் (Perennial crops) கவனம் செலுத்துவதன் மூலம், உறுதியான பாதுகாப்பான வேளாண்மை அமைப்பை உங்களால் கட்டமைக்க முடியும். எனவே, வளங்குன்றா அமைப்பு முறைகளுக்கு மாறுவதென்பது, புவிக்கு நன்மையளிப்பதோடு மட்டுமின்றி, உணவு பாதுகாப்பிற்கும், வேகமாக மாறிவரும் காலநிலையினை மட்டுபடுத்தவும் அடிப்படை தேவையாகும்.

மேற்காணும்  கட்டுரை ‘டவுன் டூ எர்த்’ (Down To Earth) தளத்தில் வெளியான Window to avoid worst climate scenarios is rapidly shutting என்ற நேர்காணலின் தமிழாக்கமாகும்.  

Source :

https://www.downtoearth.org.in/climate-change/window-to-avoid-worst-climate-scenarios-is-rapidly-shutting

 

மொழிபெயர்ப்பு: விக்னேஷ் குமார் கோ

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments