காடுறை உலகம்

அடையாறு பூங்கா நண்பர்கள் சார்பில் சிறு கூட்டம். அதில் அவைநாயகன் என்னும் கவிஞர் பேசினார். அவருடைய கவிதை புத்தகம் ‘காடுறை உலகம்‘ என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது. அவருடைய கவிதைகளில் சிலவற்றை நண்பர் செல்வா வாசித்துக் காட்டினார். அவை நாயகன் கவிதைகள் புனைவின் அலங்காரங்ககள் அற்றவை. அனைத்தும் வாழ்வின் பசுமை அனுபவங்கள். பொதுவாகவே, சுற்றுச்சூழல் குறித்து எழுதுபவர்கள் பெரும்பாலும் கட்டுரைகளைப் படைப்பார்கள். கவிஞர்கள் சுற்றுச்சூழல் குறித்து எழுத முன்வருவதில்லை. ஆனால் இந்தத் தொகுப்பு முழுவதும் சுற்றுச்சூழல் கவிதைகளே நிரம்பிக் கிடக்கின்றன. இயற்கையைப் பாடுபொருளாக கொள்வது என்பது வேறு. சுற்றுச்சூழலைக் கவிதைப் பொருளாக எழுதுவது வேறு என்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்தக் கவிதை,

“காட்டுக் கோழியைத் துரத்தி வந்த

பூனை திகைக்க…

வழித்தடம் மறிபட்டு

யானை ஒதுங்க…

வலசை கிளம்பிய

கதிர்க்குருவி தடுமாற

காட்டின் நெஞ்சை கீறிக்கீறி

எழுகிறது ஒரு தார்ச்சாலை.”

இந்த கவிதை தமிழின் முக்கிய சுற்றுச்சூழல் கவிஞராக இவரை அடையாளம் காட்டுகிறது.

காடுகளின் அழிவை கண்டு இவர் மனம் பதைபதைப்பதை நாம் உணர முடிகிறது.

இன்னும் ஒரு கவிதையில்,

இறுகப் பற்றும்

மரங்களின் இழப்பால்

சரிகிறது மலை மண்

சம தளம் நோக்கி

இந்தக் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் கவிதையின் தீவிரத் தன்மையை அதிகரிக் கிறது.

எதிரி சூழ் புல்பரப்பில்

விழுந்த கணத்திலேயே

எழுந்து, நடந்து

ஓடத் தொடங்கும்

புள்ளிமான் குட்டி

இவரது படைப்புலகம் காடுகளின் இருப்பையும், காட்டுயிர்களின் இருப்பையும் மிக துல்லியமான விவரணங்களாகக் காட்சிப்படுத்துகிறது. தியோடர் பாஸ்கரன் முன்னுரையில் குறிப்பிடுவது போல், “கவிதைத் தொகுப்பிலுள்ள படைப்புகள் அனைத் தும் காட்டுயிர் மீது கரிசனம் ஏற்படுத்தும் தன்மை கொண்ட இலக்கியப் படைப்புகள்”.

மரப்பொந்தினுள் வாழும் இருவாச்சி, மலை அணில், செம்பகம், பனங்காடை, செந்நாய், பஞ்சரட்டை, உண்ணிக் கொக்கு, கீச்சான், பழ வவ்வால், வரையாடு, நீர்க்காகம், கழுதைப்புலி, காட்டுப்பூனை, கடமான், சாம்பல் மந்தி, உள்ளான், அழிந்து விட்ட புள்ளினமான வரகுக்கோழி, கதிர்குருவி, நாகணவாய் போன்ற பல அரிய புள்ளினப் பெயர்களை மீட்டுத் தருகிறார். மேலும் வெடிப்பலா, கோரைப்புல், நுணாச்செடி, பெரணி போன்ற அரிய தாவரங்களின் தமிழ்ப் பெயர்களையும் நமக்கு அறிவிக்கிறார். இந்த நூலை அறிமுகப்படுத்தி பேசும்போது இதன் ஆசிரியர் அவைநாயகன் சின்னஞ்சிறு கதைகளையும் கூறினார். மேலும், வெறும் படைப்பளியாக மட்டும் இல்லாமல் சுற்றுச் சூழல் போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கிறார். நியுட்ரினோ ஆய்வு மைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் அழகைத் தருகிறது.

நேர்த்தியான வடிவமைப்பில் ஓசை வெளியீடாக வந்திருக்கிறது இந்நூல்.

“உங்களைப் போன்ற படைப்பாளர்கள் சுற்றுச்சூழல் பற்றியும் எழுத முன் வாருங்கள்” என்று கவிஞர் அவைநாயகனை ஆற்றுப்படுத்திய பூவுலகின் நண்பன் நெடுஞ்செழியனுக்கு என்று தொடங்கும் இக் கவிதை தொகுப்பு மிக முக்கிய சுற்றுச்சூழல் படைப்பாகும்.

காடுறை உலகம்

கவிதைகளும், புகைப்படங்களும்

விலை: ரூ.120

வெளியீடு :

ஓசை பதிப்பகம்,

70கி, இராஜூ நாயுடு வீதி,

சிவானந்தா காலனி,

கோயம்புத்தூர் 12.

 

  • தென்தயாளன்

பூவுலகு 2011 ஜூலை இதழில் வெளியான கட்டுரை

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments