கூடங்குளத்துச் சிக்கல்கள்

கூடங்குளம் அணுமின்னுலை திட்டத்தின் (KKNP-1) சோதனை நிலையில் இருக்கும் 1000 மெகாவாட் ஈனுலைகள் இரண்டில் முதல் உலை, ரோஸாடம் (ROSATOM) எனப்படும் ரஷ்ய அரசின் அணுசக்திக் கழகத்தின் துணை நிறுவனமான (ATOMSTROY EXPORT) வழங்கியதாகும். கூடங்குளம் அணுமின்திட்டம், இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுஆற்றல் கழகத்திற்குச் சொந்தமான திட்டமாகும். இதன் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும், அணுசக்தி ஒழுங்காற்று வாரியமே பொறுப்பு.

கூடங்குளம் திட்டத்தில் இரண்டு உலைகளின் முக்கியமான பாகங்களும், ஈனுலைக் கருவிகளும் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான மெஷின் பில்டிங்பிளாண்ட் Zio-podolsk என்ற நிறுவனத்திடம் வாங்கப்பட்டவை. இந்த நிறுவனமும் ரோஸாடம் அமைப்பின் மற்றொரு துணை நிறுவனமாகும். Zio-podolsk என்னும் இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக ரஷ்யாவின் அனைத்து அணுவுலைகளுக்கு மட்டுமின்றி, இந்தியா, ஈரான், சீனா, மலேசியா போன்ற ரஷ்யாவால் அணுவுலைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுக்கும் உதிரிபாகங்களை வழங்கி வந்தது. இந்த நிறுவனத்திலிருந்து கூடங்குளம் அணுவுலைக்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட உதிரிபாகங்களில் உலைப்பாதுகாப்பு அமைப்புகள், கருவிகள், உட்பாகங்கள் போன்றவையும் அடக்கம்.

KKNP-1 உலை 2010 துவக்கத்தில் உற்பத்தியைத் துவக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றுவரை பரிசோதனைகள்கூட நிறைவு பெறவில்லை. 2013 ஜனவரி யில் அணுசக்தித் துறையின் செயலாளர் அந்தமாதமே அணுவுலை இயங்கத் தொடங்கிவிடும் என உறுதியாகச் சொன்னார். ஆனால் அவர் சொன்னது நடக்க வில்லை.

அறிவிக்கப்பட்டபடி NPCIL நிறுவனம் KKPN-1 உலையினை இயக்கிட இயலவில்லை என்பதிலிருந்து உலையை இயக்கும் பொறுப்பிலுள்ள இதிய ரஷ்ய நிபுணர் குழுவினர், அவர்கள் இதுவரை எதிர்பாராத சில பிரச்சனைகள் சந்திக்கப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.

பிரதமரின் அலுவலகம் மற்றும் அணுசக்தித்துறையின் நிறுவனங்களின் பூடகத்தன்மை என்ற பிறவி நோயின் காரணமாகவே பொதுமக்கள் உண்மை நிலவரத்தை அறிந்து விடாமல் தடுக்கப்பட்டுவருகிறார்கள், அணுசக்தித் துறை (DAE) செயலர் KKPN-1 தாமதமா வதற்கு பொறியாளர்கள் சில வால்வுகளையும் சில் பாகங்களையும் திறந்துவிட்டதுதான் காரணமாம்.

ஆனால் அணுசக்திக்கமிஷன் உறுப்பினர் M.R.சீனிவாசன் ”இந்த உலையில் வால்வுகள் கொண்ட கூடுதல் பாதுகாப்பு ஒன்று தேவையாக உள்ளது அணுவுலையின் (DESIGN) வடிவமைப்பிலேயே சில மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளது. இதுதான் தாமதத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன் வால்வுகள் எல்லாமே இந்தியாவில் பாதி, ரஷ்யாவில் பாதி டிசைன் செய்யப்பட்டவை. அவை அணுவுலை யுடன் சரியாகப் பொருந்தாததே சில சிக்கல்களுக்கு வழிவகுத்து விட்டது’ என்கிறாராம்.

ஒரு விலையுயரந்த, ஆபத்துமிக்க அணுவுலை, அதன் பாகங்களிலும் உட்புறப் பகுதிகளிலும் குறைபாடுகளுடன் இருப்பது, அதுவும் அதன் ஆரம்பநிலையிலேயே இருப்பது என்பது வழக்கத்திற்கு முற்றிலும் மாறானது. இது அணுசக்தித்துறை- அணுசக்தி ஒழுங்காற்று வாரியம்- இந்திய அணு ஆற்றல் கழகம்- (ATOMSTROY EXPORT ஆகிய அமைப்புகளின் கூட்டுச் செயல்பாட்டில் பல நிலைகளில் உள்ள தோல்விகளுக்கான ஆதாரம்.

ஒருவேளை, டிசைன்களை சரியாக ஆய்வுசெய்து பின்பற்றியிருந்தால், தொழில்நுட்பப் பரிந்துரைகளின்படி தளவாடங்களை வாங்கி இணைப்புப்பணிகளை மேற்கொண்டிருந்தால், உற்பத்தியாளரின் இடத்திலேயே தரக்கட்டுப்பாட்டை பரிசோதித்து உறுதி செய்திருந்தால், அணுஉலை வளாகத்தில் தளவாடங்களை ஏற்கும் முன்னால் NPCIL – ல் அணுஆற்றல் தரக்கட்டுப்பாட்டு விதிகள் (QUALITY ASSURANCE) பின்பற்றப்பட்டிருந்தால் இந்தப்பிரச்சனைகள் அணுஉலையின் துவக்கத்திலேயே கிளம்புவதைத் தவிர்த்திருக்கலாம்.

PASSIVE LONG TERM FLOODING SYSTEM என்னும், நீண்டகால நீரிறைக்கும்கலன் (HYDRO ACCUMULATOR SYSTEM STAGE 2)ல் உள்ள ரஷ்யன் செக் வால்வுகள், வாங்கும்போதே பழுதுபட்டிருந்த தாகவும் அதனாலேயே இந்த இறுதிக்கட்டத்தில் அத்தகைய செக்வால்வுகள் ஒன்றிரண்டை செய்ய ஹைதராபாதிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் கசிகின்றன.

ஒன்றிரண்டு புதிய ரஷ்ய வால்வுகள், ஆரம்பநிலை சோதனை ஓட்டங்களின்போதே கீறல் விழுந்திருக்கின்றன. அதுபோலவே வெப்பம் தணிக்கும் கலன் (PASSIVE HEAT REMOVAL SYSTEM- PHRS) காற்றிடை வெப்பமாற்றி( AIR HEAT EXCHANGER) கண்காணிப்புக் கருவி (VANE SYSTEM) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தொடர்பாடாக ரஷ்யாவிலுள்ள தயாரிப்பு நிறுவனத்திலேயே செய்யப்பட்டிருக்கவேண்டிய சோதனைகள் செய்யப்படாததும், சோதனையில் குறைபாடுகள் இருப்பின் அவற்றை அங்கேயே சரிசெய்யப்படாததும் இங்கு முக்கியமான பிழைகள் ஆகும்.

இன்னும் வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனாலும் மேற்குறிப்பிட்டவைதான் அணு உலையை இயங்காமல் நிறுத்திவைத்திருப்பதற்கு முக்கியமான காரணங்கள். இந்தக் குறை பாடுகள் கொண்ட உதிரி பாகங்கள் யாவும் Zio-podolsk நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டவை. அது மட்டுமல்ல இந்த உதிரி பாகங்கள் தான் அணுஉலையின் பாதுகாப்பில் உலையின் டி சன் தொடர் பான சிக்கல் களால் ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்வ தற்காக அணு உலையின் பாது காப்பில் மிக முக்கிய பங்காற்றுபவை

Zio-podolsk நிறுவனத்தின் கொள்முதல் இயக்குனர் செர்கெய் ஷ§டோவ்என்பவரை ரஷ்யாவின் (காவல் துறை அமைப்பான) பெடரல் செக்யூரிடி சர்வீஸ், ஊழல் மற்றும் மோசடி குற்றங்களுக்காக கைது செய்திருக்கும் செய்தியை நார்வேயில் இயங்கும் சர்வதேச புகழ்பெற்ற சூழியல் தன்னார்வ அமைப்பான பெல்லோனா பவுண்டேஷன் 2012 பிப்பிரவரியில் வெளிப்படுத்தியது. ஷடோவ் பல ஆண்டுகளாகவே மிகக்குறைவான விலையில் மூலப்பொருள்களை வாங்கி அதிக விலையில் வாங்கியதாக கணக்கு காட்டி வித்தியாசத் தொகையை சுருட்டிக் கொண்டார் என்பதுதான் அவர் மீதான் குற்றச்சாட்டு.

இந்த மோசடியினால் எத்தனை அணு உலைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற முழு விபரம் தெரியவில்லை, ஆனால் இந்தியா, பல்கேரியா, ஈரான், சீனா, ஆகிய நாடுகளில் ரஷ்யாவால் அமைக்கப்பட்ட அணு உலைகளின் கட்டுமானப் பணிமுடிந்த காலப்பகுதியைக் கவனித்தால், அவை மேற்படி தரம்குறைந்த கருவிகளையும், பாகங்களையும் வாங்கியிருக்கக்கூடும் எனஊகிக்க முடிகிறது.

பல்கேரியா, ஏற்கனவே தங்கள் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் தொடர்பான விபரங்களையும், தரச்சான்றிதழையும் ATOMSTROY EXORT மற்றும் Zio-podolsk நிறுவனங்களிடம் கேட்டுள்ளது. அது போல சீனாவின் தியான்வான் அணுமின் நிலையத்தில் க்ஷிக்ஷிணிஸி- 1000 அணு உலைகள் உள்ளன. அதற்கு வழங்கப்பட்ட கருவிகள் மற்றும் தளவாடங்கள் தொடர்பாக சீனாவும் சில நூறு கேள்விகளைக் கேட்டுள்ளது.

‘INVESTIGATIVE JOURNALISTS’ என்ற ஆர்மீனியத் தொண்டு நிறுவனம், தரம் குறைந்த பாகங்களைப் பயன்படுத்துவது நியுக்லியர் நாசத்துக்குத்தான் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது. Zio-podolsk வழங்கிய கருவிகளைக் கொண்ட அணுஉலைகளை உடனடியாக நிறுத்திவிட்டு, முழுமையாக ஆய்வு செய்வது மிகவும் அவசியம், என்று ரஷ்யாவில் சூழலியல் தன்னார்வ நிறுவனமான ECODEFENCE –ன் தலைவர்களில் ஒருவரான விளாடிமிர் ஸ்லிவியாக் சமீபத்தில் தெரிவித்தார். “தவறினால் மிகப்பெரிய விபத்தை இந்த உலைகள் சந்திக்கும் ஆபத்து உண்டு, அப்படிப்பட்ட விபத்திற்குப் பிறகு அதைச் சுத்தப் படுத்தும் பணிகளுக்காக சில நூறு மில்லியன் டாலர்கள் கூட மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவிட நேரிடும், “என்கிறார் அவர்.

இந்த Zio-podolsk நிறுவனத்தால் கூடங் குளத்தின் KKPN-1 திட்டத்திற்கு வழங்கப்பட்ட பாகங்களில் பிரச்சனைகளை, மேற்படி ஊழல் மற்றும் தரமற்ற கருவிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் பொருத்திப் பார்த்தால், அணு உலை KKPN-1 ன் சிக்கல்களுக்கு தரம்குறைந்த கருவிகளை வழங்கியதுதான் காரணம் என்பது புலனாகிறது.

அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் மற்றும் இந்திய அணுசக்திக் கழகத்திடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தரப் பட்ட பதில்கள், தப்பிக்கும் தன்மையுடனும் மேலோட்ட மானவையாகவும் இருந்தன. Zio-podolsk வழங்கிய பாகங்கள் குறித்துக் கேட்ட கேள்விக்கு, “NCPIL–க்கு பொருள்களையும், உதிரிபாகங்களையும் வினியோகம் செய்யும் கம்பெனியை தேர்வு செய்யும் அதிகாரம் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்திற்கு இல்லை” என்று (பொறுப்பில்லாமல்) பதிலளிக்கப் பட்டிருந்தது. அதே கேள்விக்கு சியோ பொடால்ச்க் நிறுவனத்தின் மீதான விசாரனைகுறித்த தகவல் எதுவும் எங்களிடம் இல்லை என்று NCPIL தெரிவித்துள்ளது ஆனால் அணுசக்தித் துறையில் இந்த இரண்டு அமைப்புகளும் தங்களது பதில்களில் உண்மையை மறைத்து இருக்கின்றன என்பது பின்வரும் தகவல்களிலிருந்து தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

இந்தியப் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்று அணுசக்தித் துறையின் சிறப்புச் செயலாளர் கி.றி ஜோஷியின் தலைமையில் Zio-podolsk நிறுவனத்திற்கு 2012 ல் ஜூலை 15ல் இருந்து 18க்குள் சென்றுவந்தது பற்றி இந்தியாவிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் வலை தளத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது Zio-podolsk ன் கொள்முதல் இயக்குனர் செர்கேய் ஷ¨டோவ், KKPN-1 மற்றும் 2 அணுஉலைகள் உட்பட பல வெளிநாட்டு அணுமின் திட்டங்களுக்கு தரம் குறைந்த பொருட்களை வழங்கியதில் ஊழல் மற்றும் மோசடிக்காகக் கைது செய்யப்பட்டு 5 மாதங்களுக்குப்பிறகு தான் இந்தியக் குழு அங்கு சென்றுள்ளது.

மாஸ்கோவிலுள்ள இந்தியத் தூதரகமும் அங்கு உள்ள NCPIL/ DAE அதிகாரிகளும், ஷ¨டோவின் கைது பற்றிய செய்திகளையும், அவரது மோசடியினால் ரிரிழிறி-1 மற்றும் 2 அணு உலைகளின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள உள்ளுறை அபாயம் பற்றியும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்கள் DAE செயலரிடம் இதுபற்றிச் சொல்லி, அவர்மூலம் பிரதமர் அலுவலகமும் எச்சரிக்கப்பட்டிருக்கக்கூடும்.ஆனாலும் AERB மற்றும் NCPIL இரண்டு நிறுவனங்களுமே Zio-podolsk விவகாரத்தை மிகவும் லேசாகக் கருதுவது போலவும், ஒன்றுமே தெரியாதது போலவும் நடந்து கொள்கின்றன.

பிரதமர் அலுவலகமும் அணுசக்தித் துறையும் உடனேயே பிரச்சனையின் கனத்தைப் புரிந்துகொண்டு, கூடங்குளம் அணுமின் உலைக்கு தரம் குறைந்த பாகங்களை வழங்கிய ஷ¨டோவின் கைதுக்குப்பிறகு, அந்தப்பாகங்களை ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும் அணுமின் உலைகள் இரண்டிற்கும், அதிலும் மின் உற்பத்தி துவங்கப்போகும் அணுஉலை -1 க்கும் நேரிட்டுள்ள ஆபத்தை உணர்ந்து கொண்டு செய லாற்றும் என்றுதான் யாரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் PMO வும் DAE யும் இதனை மூடி மறைக்கும் இந்தோ ரஷ்யா கூட்டுசதித்திட்டத்தை செயல்படுத்தியதுடன் கூடங்குளம் உலையில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்ற நிலையில் மிகவும் பிடிவாதமாக நிற்கின்றன.

ஒரு செயல்தந்திரத் திட்டத்தை இந்தியாவில் வகுத்துக்கொண்டபின் பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறையின் சிறப்புச் செயலாளரையும் அவரது குழுவையும் Zio-podolsk க்கு அனுப்பி, மேற்படி ஊழல் விவகாரங்கள் பற்றிய விவரங்களை இந்தியாவிலுள்ள போராட்டக்காரர்களும் நீதிமன்றங்களும் அறிந்து கொண்டால் ஏற்படக்கூடிய சிக்கலான நிலைமைகளை எப்படியெல்லாம் சமாளிப்பது என்பது குறித்து மூன்று நாட்கள் தங்கி யிருந்து திட்டமிட்டிருப்ப தாகவே தோன்றுகிறது. அனைத்துக்கும் மேலாக, ரஷ்ய பிரதமர் புடினுக்கு, கூடங்குளம் அணு உலை 2013 ஏப்ரலில் இயங்கத் துவங்கும் என்று நமது பிரதமர் அளித்த வாக்குறுதி யைக் காப்பாற்றுவது தான் பிரதமர் அலுவலகத்திற்கு (PMO) மிக மிக முக்கியமானது.

பொது மக்கள் நலன் மற்றும் ஊழலைத் தடுப்பது எல்லாம் அதற்கு இரண்டாம் பட்சம்தான். கூடங்குளம் உலைகள் இரண்டிலும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள Zio-podolsk நிறுவனத்தின் தரம் குறைந்த பாகங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தாலும் ,அவற்றின் குறைபாடுகள் மற்றும் பழுதுகள் இன்று மறக்கப்பட்டு விட்டன. ஆனால் இதே குறைபாடுகள்தான் அணு உலை கொஞ்ச நாள் இயங்கினாலும் அதில் ஏற்படப் போகும் அதிபயங்கரமான பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கப் போகின்றன.

பெரும்பாலான உதிரி பாகங்களும் பகுதிகளும், உலையின் அழுத்தக்கலனில்தான் (PRESSURE VESSEL) ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. இது தற்போது உற்பத்தித் துவக்கத்திற்காக மூடி சீல்வைக்கப்பட்டு விட்டது. அணு உலை இயங்கத்தொடங்கிய பின்னர் இதன் உள்ளே இருக்கும் பெரும்பான்மைப் பாகங்களும் பொருள்களும் கதிர்வீச்சுக்கு உள்ளாகியோ அல்லாமலோ, தர ஆய்வு அல்லது செயல்பாட்டு ஆய்வுக்கு உட்படுத்த இயலாத சூழ்நிலைக்குள் சென்று விடும்.

இத்தகைய சூழ்நிலையில் KKNP-1 ன் உற்பத்தித் துவக்கமோ KKNP- 2 கட்டுமானப்பணிகளோ உடனடி யாக நிறுத்தப்பட வேண்டும். மேற்படி ஊழல் குறித்தும் மேற்படி ஊழலின் விளைவாக தரம் குறைந்த கருவிகளை வழங்கியதால் அணு உலைகளின் பாது காப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் முழுமையான பாரபட்சமற்ற விசாரணை நடத்தப் படாமல் இந்த இரண்டு பணிகளையும் துவங்கும் பேச்சே இருக்கக்கூடாது.

மேற்படி விசாரணைகளை நடத்தும் குழுவில் பெரும்பான்மையாக DAG , NPCIL ,AERB நிறுவனங்களுக்கு பதிலாக இந்நாட்டின் பிற நிறுவனங்களிலிருந்து அணுவியலில் நிபுணத்துவம் பெற்றவர்களை இடம் பெறச் செய்யவேண்டும்.

இந்த ஊழல் மூலம் ஏற்பட்டுள்ள குறிப்பான சிக்கல்கள் குறித்து விசாரிக்க சிறப்பாக அமைக்கப்பட்ட சர்வதேச அணுமின் நிபுணர்களைக் கொண்ட குழுவை (IAEA) வரவழைப்பது குறித்தும் இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

(ஏ. கோபாலகிருஷ்ணன்: முன்னாள் தலைவர், இந்திய அணு ஆற்றல் ஒழுங்காற்று வாரியம்)

தமிழில்காஞ்சனை மணி ,தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

மே 2013 பூவுலகு இதழில் வெளியான கட்டுரை

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments