நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) விதிகள் 2024 வெளியீடு. பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 18ஆம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான உத்தரவு அக்டோபர் 18ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

21.04.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதுவே ஜனநாயக விரோதமான நடவடிக்கை என்கிற வகையில் கண்டிக்கப்பட வேண்டியது.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய எத்தனையோ மசோதாக்களை கையெழுத்திடாமல் காலம் தாழ்த்திய ஆளுநர், சட்டப்பேரவையில் எவ்வித விவாதமுமின்றி அறிமுகம் செய்யப்பட்ட நாள் அன்றே நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவுக்கு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.

நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஹெக்டேருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்து வாரிக்கொடுக்கவே தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டம் [Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023] உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்படி புதிதாக தொழிற் திட்டம் தொடங்க விரும்புபவர் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு (water storage) குறைக்கப்படமாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் நீரோட்டமானது குறைக்கப்படாது என்கிற உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் அரசு மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமென அதைக் கருதினால் அத்திட்டத்தை சிறப்புத் திட்டமாக அறிவித்து ஒரு நிபுணர் குழுவை உருவாக்கும். நான்கு அரசு அதிகாரி, ஒரு அரசால் பரிந்துரைக்கப்படும் சுற்றுச்சூழல் நிபுணர் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் கொண்ட அக்குழு பொதுமக்கள் கருத்துக் கூட்டம் ஒன்றை நடத்தி, தங்களது உள்ளீடுகளுடன் வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டம் ஒன்றை வெளியிடும். அந்த வரைவு திட்டத்தை அரசு மீண்டும் பரிசீலித்து ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி அரசிதழில் வெளியிடும்.

இந்த நடைமுறை முழுவதும் முழுக்க முழுக்க திட்டங்களுக்குச் சாதகமானதாகவும் சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. திட்டத்தை முன்னெடுப்பவரின் விண்ணப்பத்தை நிபுணர் குழு நினைத்தால் தள்ளுபடி செய்யலாம் என்கிற வாய்ப்பே இங்கு இல்லை. அரசும் ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கேயும் திட்டத்தை சூழல் பாதிப்பு அதிகமிருக்கும் என்றால் நிராகரிக்கலாம் என்கிற சரத்தே இல்லை.

மேலும் இந்த ஒட்டுமொத்த சட்டத்திலும் அரசு ஒரு நீர்நிலையை, ஓடையை, வாய்க்காலை அதன் சூழல் முக்கியத்துவத்துடன் அணுகவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு நீர்நிலை என்பது தனித்த சூழல் அமைவு கிடையாது. அருகிலுள்ள வேளாண் நிலத்தோடோ, மேய்ச்சல் நிலத்தோடோ அல்லது கால்நடைகளுக்கு நீர் ஆதாரமாகவோ எனப் பல பயன்பாடுகளை உள்ளடக்கிய பெரும் சூழல் சங்கிலியின் கண்ணியாக நீர்நிலை உள்ளது. நீர்நிலையை மட்டும் வைத்துவிட்டு அதனைச் சுற்றியுள்ள நிலங்களின் பயன்பாட்டை மாற்றுவது அந்த நீர்நிலையின் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். இது விவசாயிகளின் வேளாண் உரிமையை முற்றிலும் பறிக்கிறது.

நீர்நிலைகள் உள்ளடங்கிய 100 ஹெக்டேர் அதிகமான பரப்பளவில் திட்டமிடப்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் அரசின் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டால், நீர்நிலைகளையும் திட்ட உரிமையாளர் தன் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது இச்சட்டம். இதனால் பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்களை நீர்நிலைகளில் அமைக்க வழிவகை செய்யும் அபாயம் உள்ளது.

2022ல் நடந்த உயிர்ப்பன்மையத்துக்கான உச்சிமாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் 30% நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. நீர்நிலைகளைப் பாதுகாக்க எத்தனையோ உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன. இவை அனைத்திற்கும் எதிராக அமைந்துள்ளது இச்சட்டம்.

அண்மையில் உலக கானுயிர் நிதியம் அண்மையில் The Living Planet 2024 எனும் அறிக்கையை வெளியிட்டது. மிக வேகமான நகரமயமாக்கல் காரணமாக சென்னை அதன் சதுப்பு/ஈர நிலப்பரப்பில் 85 விழுக்காடு பகுதியை இழந்திருப்பதாகக் இவ்வறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. மேலும் சதுப்பு நிலங்கள் அழிந்ததன் காரணமாக, காலநிலை மாற்றத்தால் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் நீர்நிலைகள் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய பிற சட்டங்கள், ஆணைகள் நீர்த்துப்போகும் வாய்ப்புகளையும் இந்த சட்டம் உருவாக்கியுள்ளது. புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தால் குறைந்த கால அளவில் பெருமழையும் பருவமழை பொய்த்துப் போகும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த நிலையில் நீர்நிலைகளை அழித்து அதில் திட்டங்களைக் கொண்டு வருவது மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.

இம்மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறிய பின்னர் பல அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஆனால், அனைத்தையும் தாண்டி இச்சட்டத்திற்கான விதிகளை அரசு வெளியிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு இச்சட்ட விதிகளைத் திரும்பப்பெற வேண்டும் எனக் கோருகிறோம்.

LAND CONSOLIDATION RULES 2024

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments