முத்துப்பேட்டை காயலைச் சார்ந்து வாழும் பேட்டை பகுதியைச் சார்ந்த பாரம்பரிய தலித் மீனவர்களின் வாழ்வியல் சூழல், சூழியல் போராட்டங்கள் மற்றும் எதிர்வினைகள்
“இந்திய சமூகத்தில் ஒரு கணிசமான பகுதி சாதிக்கு எதிராக இருக்கிறது என்பது ஒரு மாயை. உண்மையில் மதவாதம், பாலின பேதம், பொதுவான உழைப்பாளிகள், விவசாயிகள் மீதான சுரண்டல் போன்ற பல விஷயங்களில் முற்போக்கான கருத்துகள் கொண்ட மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். எனினும், இந்த தீமைகளுக்கெல்லாம் வேறாக இருக்கக்கூடிய சாதி என்பது வரும்போது, அவர்கள் அதை தலித்துகள் பார்த்துக் கொள்ளட்டும் என்று வசதியாக இருந்து விடுகிறார்கள்”.
- ஆனந்த் தெல்தும்டே (சாதியின் குடியரசு)
தலித் மக்கள் பன்னெடுங்காலமாகத் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும் , ஒட்டுமொத்த சாதிய மனச்சாட்சியின் வாயிலாக தொடுக்கப்படும் வன்முறைகளுக்கும் எதிராக குரலெழுப்புவதன் வாயிலாக இந்திய சமுகத்தின் சமத்துவமின்மைக்கு எதிராக வலுவானப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் பலநூற்றாண்டு காலப் போராட்டமென்பது பிராமணிய சித்தாந்தின் மீதான இருப்பை தலைகீழாக்குகிற சமரசமற்றப் போராட்டம். ஆனால், அதனை தலித்துகளின் இருத்தலியலுக்கானப் போராட்டம் என தலித்துகளின் போராட்ட வரலாறுகளைச் சுருக்கிப் பார்க்கும் குறுகிய மனநிலைப் போக்கே எங்கும் நிலவுகிறது.
தலித் மக்களின் சூழியல் போராட்டங்களையும் இவ்வாறானப் பின்புலத்தில் இருந்தே நாம் அணுக வேண்டியுள்ளது. குறிப்பாக கடலோரங்களில் வாழும் தலித் மற்றும் பழங்குடி மக்களின் சூழியல் போரட்டங்களும், சூழல் பொதுவெளிகள் மீதான அவர்களது உரிமைப்போராட்டங்களும் எங்கும் புலப்படாத வகையிலேயே அணுகப்படுகிறது. அவை வாழ்வுரிமைப் போராட்டங்களாக பார்க்கப்படுகிறதே அன்றி, அதன் அடித்தளமாக உள்ள சூழியல் போராட்டப் பின்புலம் என்பது கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது.
முத்துப்பேட்டை காயலைச் சார்ந்து வாழும் மீனவ மற்றும் தலித் மக்களின் போராட்டங்களும் இவ்வாறாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், அவை முழுக்க முழுக்க முத்துப்பேட்டை காயலின் சூழியல் உரிமைக்கானப் போராட்டமே!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியிலிருந்து 30 கி.மீ தொலைவில் முத்துப்பேட்டை அமைந்துள்ளது. பெருமளவில் இஸ்லாமியர்களையும், இந்துக்களையும் கொண்டுள்ள நகரப்பஞ்சாயத்து(Town Panchayat) பகுதி. தமிழ்நாட்டின் முக்கியத் தர்காகளில் ஒன்றான முத்துப்பேட்டை தர்கா இங்குதான் அமைந்துள்ளது. இந்த சிறப்புமிக்க நகரின் தெற்கேதான் முத்துப்பேட்டை காயல் அமைந்துள்ளது.
முத்துப்பேட்டை காயலானது, வேதாரண்யம் சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரை பறவைகள் மற்றும் காட்டுயிர் சரணாலயத்தைக் கிழக்கு எல்லையாகவும், முத்துப்பேட்டை காயலை மேற்கு எல்லையாகவும் (திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டம்) கொண்டுள்ளது. முத்துப்பேட்டை காயல், கோடியக்கரை பறவைகள் சரணாலயம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைஞாயிறு காப்புக்காடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 38,500 ஹெக்டேர் பகுதி, கடந்த 2௦௦2 ஆம் ஆண்டு கோடியக்கரை சதுப்புநில பல்லுயிர் கூட்டமைப்பு (wetland complex) பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் சதுப்புநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சதுப்புநிலமானது நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்கள் வரை பரந்து விரிந்துள்ளது. இப்பகுதிகள் இரண்டு சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகவும் (Point Calimere Sanctuary Eco sensitive Zone (Block-A & Block B)) அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடியக்கரை ராம்சார் சதுப்புநிலப்பகுதி(in Hectare) | |
கோடியக்கரை காட்டுயிர் மற்றும் பறவைகள் சரணாலயம் | 2250.17 |
முத்துபேட்டை அலையாத்திக் காடுகள் | 11885.91 |
பஞ்சநதிக்குளம் சதுப்புநிலம் | 8096.96 |
நில அளவை மேற்கொள்ளப்படாத உவர் சதுப்பு | 15030.19 |
தலைஞாயிறு காப்புக்காடுகள் | 1236.77 |
மொத்தம் | 38500.00 |
இந்த ராம்சார் சதுப்புநிலத்தின் மிகமுக்கிய அங்கமாக முத்துபேட்டை காயலும் அதனைச் சார்ந்துள்ள கடலோர சதுப்பு பகுதிகளும், சேற்று மேடுகளும், உவர் சதுப்பு பகுதிகளும், அலையாத்திக் காடுகளும் அமைந்துள்ளது.
முத்துபேட்டை காயல் பகுதியில் 5 வகை கடற்பாசி இனங்களும், 76 வகை பைடோபிளாக்டன் வகைகளும், 9௦ வகை ஜூபிளாக்டன் வகைகளும், 113 வகை பூச்சியினங்களும், 3 வகை இருவாழ்விகளும் , 7 வகை ஊர்வனவும், 13 வகை பாலூட்டிகளும் வாழ்கின்றன, (Kalidasan, 1991; Oswin, 1998). மேலும், முத்துபேட்டை காயல் பகுதி நரிகண்டல், வெண்கண்டல் மற்றும் தில்லை ஆகிய அலையாத்தி வகைகளையும் கொண்டுள்ளது. மேலும், நீர் உமுறி, கல் உமுறி மற்றும் பூ உமுறி போன்ற உவர் பகுதியைச் சார்ந்த தாவரங்களையும் கொண்டுள்ள உயிர்ப்பன்மயம் செழித்த பகுதியாக விளங்குகிறது.
இக்காயல் பகுதியில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 13 மீனவக்கிராமங்களைச் சார்ந்த சுமார் 3௦௦௦ க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் முத்துபேட்டை காயலில் கலக்கும் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான நசுவினியாறு, பட்டுவனாச்சியாறு, பாமணியாறு, கோரையாறு, கந்தப்பரிச்சானாறு, கிளைதாங்கியாறு, மரைக்காயர் கோரையாறு, வளவனாறு உள்ளிட்ட ஆறுகளின் வழியாக கடலை அடைகின்றனர். பெரும்பாலான படகு நிறுத்தும் இடங்கள் ஆறுகளை ஒட்டியே அமைந்துள்ளன.

இவ்வாறு முத்துப்பேட்டை நகரின் வழியாக பாய்ந்து முத்துபேட்டை காயலில் கலக்கும் முக்கிய ஆறான கோரையாற்றின் கரையில் அமைந்துள்ளது பாரம்பரிய தலித் (கிறித்தவர்) மீனவர்கள் வசிக்கும் பேட்டை பகுதி. இது முத்துப்பேட்டை நகர்ப்பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
சுமார் 1௦௦ க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த மீனவர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் பல தலைமுறைகளாக முத்துப்பேட்டைக் காயலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். முன்னர் “வத்தை” எனப்படும் Dug-Out Canoe பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது மோட்டார் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியைச் சார்ந்த தலித் பெண்கள் நேரடியாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பெண்கள் மட்டி எடுத்தல், கைகளால் இறால் தடவுதல், மீன்பிடியில் ஈடுபடுதல், தலைசுமடாக மீன் விற்றல், மீன்பிடிக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாளொன்றுக்கு சுமார் 8 முதல் 1௦ மணிநேரம் வரை உழைக்கின்றனர். சராசரியாக 2௦௦ – 3௦௦ வருமானம் ஈட்டுகின்றனர்.

இந்நிலையில், முத்துப்பேட்டை காயலை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் இறால் பண்ணைகளின் ஆதிக்கத்தாலும், வனத்துறையின் கெடுபிடிகளாலும், சாதியக் கொடுமைகளாலும் தலித் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், புவி வெப்பமயமாதலால் அதிகரிக்கும் தீவிர காலநிலை மாற்றப் பாதிப்புகளாலும், காயல் பகுதிகளில் நன்னீரின் அளவு குறைந்து உவர்நீரின் தாக்கம் அதிகரிப்பதும் முத்துப்பேட்டை பகுதியின் சூழியல் அமைவைச் சிதைத்து, அதனை சார்ந்துள்ள தலித் மற்றும் பிற மீனவ மக்களை விளிம்புநிலைக்குத் தள்ளியுள்ளது.
தலித்துகளின் நிலவுரிமையும், இறால் பண்ணைகளின் ஆதிக்கமும்:
சுமார் 15-20 ஆண்டுகளுக்கு முன்புவரை, தலித்துகள் பகுதி நேரமாக விவசாயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இப்பகுதியைச் சார்ந்த ஏறத்தாழ அனைவருக்குமே சொந்தமாக பட்டா (விவசாய)நிலம் இருந்துள்ளது. ஆனால், இறால் பண்ணைகள் வந்ததற்குப் பிறகு, சிலர் இறால் பண்ணைகளுக்கு தங்களின் நிலத்தை விற்றுள்ளனர். இந்த நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்ட பிறகு அருகில் இருந்த விவசாய நிலங்கள் உவர்நீரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதன் காரணமாக, தலித்துகள் தங்கள் நிலங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த அனைவரின் நிலமும் தற்போது இறால் பண்ணை உரிமையாளர்களே சொந்தமாகக் கொண்டுள்ளதாகவும், மொத்தமாக நூறு ஏக்கருக்கும் அதிகமான நிலம் இறால் பண்ணை உரிமையாளர்களிடம் சென்றுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
1 குழி நிலமானது(9 sq. Ft) வெறும் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இறால் பண்ணைகளின் ஆதிக்கம் தலித்துகளை நிலமற்றவர்களாக மாற்றியதோடு, பகுதி அளவில் விவசாயத்தை நம்பி இருந்த அவர்களின் வாழ்க்கையைச் சிதைத்துள்ளது. தலித்துகளின் நில இழப்பை இரண்டு வகையில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஒன்று இந்நிலங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசால் நிலமற்ற மக்களுக்குக் கையளிக்கப்பட்டவை, மற்றொன்று விவசாய நிலங்களில் இறால் பண்ணைகள் அமைக்கக்கூடாது என்கிற கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டத்தின்(2005) வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இந்நிலையில், தலித்துகள் நிலவுரிமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது என்கிற வாழ்வுரிமைச் சிதைவு வேறொரு வகையில் சூழியல் சிதைவின் அடித்தளமாகவும் உருமாறியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய பேட்டை பகுதி மக்கள், ‘கடல் கொந்தளிப்பாக இருக்கும்போது காயல் மற்றும் உப்பங்கழி பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடுவோம். அதிராம்பட்டினத்திற்கு மேற்கேயும் மணல், கோடியக்கரைக்கு தெற்கேயும் மணல், கோடியக்கரைக்கும் அதிராம்பட்டினத்திற்கும் இடையில் ஆறுகளிலிருந்து வரும் வண்டல் சேறுகளால் இப்பகுதியில் சதுப்பு நிலக்காடுகள் முளைக்கின்றன. ஆனால், இறால் பண்ணைகளால் இப்பகுதியின் சூழியலுக்கு பாதகமான சூழல் நிலவுகிறது. மேலும், இப்பகுதியின் சூழலை இறால் பண்ணை உரிமையாளர்கள் தங்களுக்குச் சாதகமாக சுரண்டி வருகின்றனர். இறால் பண்ணைகள் ஆற்றின் கரையில்தான் இயங்கி வருகிறது. இறால் பண்ணைக் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் மீன்கள் இறக்கிறது. இறால் பண்ணைக் கழிவுகளால் ஆறு மற்றும் அளம்(marsh) பகுதிகளில் மீன்கள் முட்டையிட வருவதில்லை. எஞ்சி இருக்கும் மீன்களும், இறால் வகைகளும் கூட இறால் பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் அழிந்து விடுகிறது’. என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இறால் பண்ணைகள்:
தலித் மக்கள் படகுகள் வருவதற்கு முன்னர் மண் பானையை தலையில் வைத்துக் கொண்டு காயல் பகுதியின் வழியாகவும், ஆற்றின் கரைகளிலும் சுமார் 9 கி.மீ தூரம் நடந்தே கடற்பகுதியை அடைந்துள்ளனர். இரவு 12 மணிக்கு நடக்கத்தொடங்கினால், விடியல் காலையில் பொழுது புலரும்போது கடலை அடைந்துள்ளனர். அவ்வாறு நடந்து சென்ற பாதைகள், தற்போது பெரும்பாலும் இறால் பண்ணைகளால் நிரம்பியுள்ளது. அப்பகுதிகளில் இறால் பண்ணை உரிமையாளர்கள் நடந்து செல்ல அனுமதிப்பதில்லை எனவும், இறால்களுக்கு நோய் வரும் என்று கூறி இறால் பண்ணை உரிமையாளர்கள் பாரம்பரிய வழித்தடங்களை மறுத்து வருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கூறிய தலித் பெண்கள், ‘நாங்கள் இயற்கையாகத் தானே மீன்பிடித்து வருகிறோம்? இல்லை இறால் பண்ணைகளைப் போல இறாலை வளர்க்கிறோமா?’ என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில், இறால் பண்ணைகளின் தாக்கம் தலித் மீனவர்களை மட்டுமல்லாது முத்துப்பேட்டைக் காயலை நம்பியுள்ள அனைவரையும் பாதித்துள்ளது.
கேள்விக்குள்ளாகும் மீனவ மக்களின் உணவு இறையாண்மை:
இதே வேளையில் தலித் மக்களின் ஆரோக்கியமான உணவு உரிமையும் வனத்துறையால் வனப்பாதுகாப்பு என்கிற பெயரில் மறுக்கப்பட்டு வருகிறது. 40க்கும் மேற்பட்ட தலித் மீனவப் பெண்கள் முத்துபேட்டை காயல் பகுதியில் இறால் தடவுதல் மற்றும் மட்டி எடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, காயலில் நன்னீர் வரத்து குறைவாக உள்ள மாதங்களில் கடலலைகளின் தாக்கத்தால் உவர் நீர் அளவு அதிகமாக உள்ள உள்ள ஆடி (Mid July To Mid-August)- ஐப்பசி (Mid-October To Mid-November) வரை மட்டி சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வரி மட்டி எனப்படும் Ribbed Clam மற்றும் பச்சை மட்டி எனப்படும் Asian Green Mussel ஆகிய இரண்டு மட்டிகளை பல தலைமுறைகளாக சேகரித்து வருகின்றனர். இது மீனவப்பெண்களின் வாழ்வாதாரத்திற்கு மிகமுக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
இந்நிலையில், கடந்த 6 அல்லது 7 ஆண்டுகளாக வனத்துறை மட்டி எடுப்பதற்கு கடுமையான கெடுபிடிகளை விதித்து வருகிறது. காயல் பகுதியில் மட்டி எடுப்பவர்கள் மீது வனவிதிகளை மீறியதாக அபராதங்களையும், சட்டரீதியான நடவடிக்கைகளையும் விதித்து வருகிறது. கரையில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் கடலிலும் மட்டி சேகரிக்க அனுமதிப்பதில்லை எனவும், கடலில் எடுத்துக்கொண்டு காயலுக்குள் வந்தாலும் பாதுகாக்கப்பட்ட பகுதி எனக்கூறி வனத்துறை வழக்கு பதிவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், உண்மையிலேயே சூழியல் பாதுகாப்பிற்காக இந்த தடை விதிக்கப்படுகிறதா என தலித் மீனவப்பெண்களிடம் கேள்வி எழுப்பியபோது, சமீபகாலமாக மட்டிகளுக்கு கிடைக்கும் ஏற்றுமதி மதிப்பே இதற்கு காரணம் என்று தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக இப்பகுதி காப்புக்காடுகளாக இருந்த வருகிறபோது, அப்போதெல்லாம் எந்த கெடுபிடிகளையும் வனத்துறை விதிக்காதநிலையில் தற்போது சமீப ஆண்டுகளாக மக்கள் மட்டி எடுக்க வனத்துறை தடைவித்துள்ளது. ஆனால், ஆதிக்க சாதியும், அரசியல் பின்புலமும் கொண்ட பெரும் முதலாளிகள் மட்டிக்கான ஏற்றுமதியை கைக்கொள்ள தலையிட்ட பிறகுதான் வனத்துறை இக்கெடுபிடிகளை விதிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். இதேவேளையில், வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும் முதலாளிகளுக்காக, இங்கு வந்து மட்டி சேகரிப்பதை வனத்துறை அனுமதிப்பதாகவும், தங்கள் மீது தொடுக்கும் நடவடிக்கைகளை அவர்கள் மீது காட்டுவதில்லை என்றும் மக்கள் குறிப்பிட்டனர். இந்நிலையில், மட்டிக்காக போட்டியிடும் பெரும் முதலாளிகளின் சாதி மற்றும் பொருளாதார பின்புலத்தால் எளிய நிலையில் வசிக்கும் தலித் மக்கள் கேள்வியெழுப்ப முடியாத சூழலே நிலவுகிறது. நேர்காணலின்போது இந்த உண்மைகளை உரக்கக் கூறுவதைக் கூட மக்கள் தவிர்த்ததையும் வைத்து தலித் மக்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் ஒடுக்குதலுக்கு உள்ளாகிய நிலையிலேயே வசித்து வருவதை நம்மால் அறிய முடிந்தது.
மட்டி சேகரிப்பது என்பது மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரை ஆதாரமான பணியாக உள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 1௦௦ – 300 வரை வருமானம் ஈட்ட முடிகிறது. இவையெல்லாம் விட தலித் மக்களின் ஆரோக்கியமான உணவுக்கு இது முதன்மையாக விளங்குகிறது. வரி மட்டி இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் என்று மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சேகரித்து வந்த மட்டியை அருகில் உள்ள இஸ்லாமியர் வீடுகளுக்கும், உள்ளூர் பகுதிகளில் கிலோ 1௦௦ ரூபாய்க்கு விற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீப ஆண்டுகளில் மட்டியின் சந்தைமதிப்பை அறிந்த பெரும் முதலாளிகளின் லாப வெறிக்கு தலித் மக்களும், காயலின் சூழியல் வளமும் வேட்டைக்காடாக மாறியுள்ளது. மேலும், வேறு ஏற்றுமதியாளர்களிடம் மட்டியை விற்க தலித் மக்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பதையும் கூட ஆதிக்க சாதி பெரும் முதலாளிகள் அனைத்து வகையிலும் தடுகப்பதாக அம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மட்டி எடுக்க அவர்களின் அனுமதி வேண்டும் என்கிற சூழலை உருவாக்குகின்றனர். சாதியும், சட்டமும் ஒரு சேர பாரம்பரிய மக்களை அதன் சூழல் வெளியில் இருந்து அந்நியமாக்கி வருகிறது.
இது பாரம்பரியமாக வள ங்குன்றா வகையில் மீன்பிடியில் ஈடுபடும் தலித் மக்களின் பாரம்பரிய உரிமைகளையும், வாழ்வாதார உரிமைகளையும் நசுக்குவதோடு, அவர்களின் உணவுப் பழக்கவழக்கம், சமூக கூட்டிணைவு, வாழ்வியல் ஆகியவற்றின் மீதும் தாக்கம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து பேட்டை பகுதி மக்கள், “எங்களின் அடுத்த தலைமுறை இளைஞர்கள் பெரும்பாலானோர் மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்காலத்திலும் மீன்பிடியை வாழ்வியலாக நம்பி வாழ முடியாத சூழல் நிலவுகிறது. கடலில் மீன்பிடிக்கும் எங்களுக்கு அரசு எந்த உதவியும் வழங்குவதில்லை. ஆனால், மீன், நண்டு, இறால் வளர்ப்பவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. எங்களிடம் நிலமும் இல்லை, சாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள். அரசியலிலும் எங்களுக்கு வாய்ப்பில்லை; அரசும் எங்களைக் கண்டுகொள்வதில்லை” என்கிறார்கள்.
இந்நிலையில், தங்களின் உரிமைகளை மீட்டெடுக்க சட்டப்போராட்டத்தை துவங்கி இருக்கிறார்கள் தலித் கிறித்தவ மக்கள். பழங்குடிகள் மற்றும் வனம் சார்ந்த மக்களின் வனத்தின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும் வனஉரிமை அங்கீகாரச் சட்டம், 2௦௦6 ன் கீழ் தங்களது உரிமைகளைக் கோரியுள்ளனர். இதனைக் குறிப்பிட்டு ஊரின் மையத்தில் பதாகையும் வைத்துள்ளனர். இதற்கு இப்பகுதியில் பணிசெய்யும் அமைப்பு ஒன்று துணைநின்றுள்ளது.
சட்டத்தின் வாயிலாகவும், சாதி அதிகராத்தின் வாயிலாகவும் ஒடுக்கப்பட்டு வந்த தலித் மீனவ மக்கள் தங்களின் உரிமைகளுக்காக, முத்துப்பேட்டை சூழியல் அமைவின் ஆரோக்கியத்திற்கான தங்களது போராட்டத்தைத் துவக்கி இருக்கிறார்கள். இது சாதி மற்றும் வர்க்க அதிகாரத்தின் மீதான முதல் அடி என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
உலகெங்கிலும் பாரம்பரிய சூழியல் சார் சமூகங்களின் வாழ்வுரிமைக்கானப் போரட்டங்கள் என்பது சூழியல் அமைவின் நலனையும், வளங்குன்றா பயன்பாட்டினை, பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பதற்கான உள்ளடக்கிய போராட்டமே என்பதை பேட்டை தலித் கிறித்தவ மக்கள் நமக்கு உணர்த்துகின்றனர். தலித் மக்கள் ஏற்றிய இந்த ஒளியைத் தொடர்ந்து, இப்பகுதியில் பாரம்பரிய மீன்பிடியில் ஈடுபடும் இஸ்லாமிய மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மீனவமக்களும் தங்கள் உரிமைகளைக் கோருவது குறித்து சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். பாரம்பரிய உரிமைகளை வென்றேடுப்பதற்கான காலம் இது!
ஆதாரம்:
- Ecosystem Modeling for Muthupet Lagoon along Vedaranyam coast (Tamilnadu)
- Spatial Temporal analysis of Muthupet Lagoon using geomatics techniques
- Assemblages of phytoplankton diversity in different zonation of Muthupet mangroves
- Role of marginal fisherfolks in sustaining mangroves: Experience from Point Calimere Wetlands
-பிரதீப் இளங்கோவன்.
குறிப்பு: இக்கட்டுரை 2024 ஏப்ரல் மாத பூவுலகு இதழில் வெளியானது.