மனித இனம் தன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்தே உயிரினங்களை புரிந்துக் கொள்கிறது. மனித அம்சங்களை ஒத்திருக்கும், பிரதிபலிக்கும் உயிரினங்கள் நம்மை ஈர்க்கின்றன. அதேநேரம் சில உயிரினங்கள் மீது மனித இனத்தின் உடல், மனரீதியான பண்புகளை ஏற்றிவைக்கவும் செய்கிறோம். இது மனிதப் பண்பேற்றம் (Anthropomorphism) எனப்படுகிறது. மனிதப் பண்பேற்றம் செய்வது இன்று நேற்று நடப்பதல்ல; மிகப் பழமையானது. எல்லா நாட்டு நாட்டார் கதைகளிலும் மனிதப் பண்பேற்றம் செய்யப்பட்ட உயிரினங்களைப் பார்க்கலாம். ஓநாய்கள் குரூரமானவை, நரிகள் தந்திரமானவை, சிங்கம் அரச பண்புகளை கொண்டது என்பது போன்ற பல கற்பிதங்கள் கதைகளிலிருந்து தோன்றியவை.
‘முதலைக் கண்ணீர்’ என்கிற உருவகம் பல இடங்களில் பயன்படுத்தப்படுவதை பார்த்திருக்கலாம். ‘ஊனுண்ணியான முதலை போலியாகக் கண்ணீர் விடுகிறது’ என்கிற அடிப்படையில் உருவான உருவகம் இது. உண்மையில் முதலை அழுவதில்லை. உடலில் அதிகப்படியாக இருக்கும் உப்பை வெளியேற்றும் உத்தி அது என்பது அறிவியல் ரீதியாக பின்னால் விளக்கப்பட்டது. மனிதர்கள் அழுதால் சோகமாக இருக்கிறார்கள் என்று பொருள். அந்தப் புரிதலை முதலைகளின் மீதும் ஏற்றி வைத்துவிட்டோம். இப்படி நாட்டார் கதைகளிலும், பழமொழிகளிலும் வெளிப்பட்ட பண்பேற்றம், அறிவியல் நாகரிகம் வளர்ந்த பின்னும் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இதில் துரதிர்ஷ்டமான செய்தி என்னவென்றால் நவீன நாகரித்தின் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளான புகைப்படக் கருவியும், அச்சுக் கருவியும் கூட இயற்கை அறிவியலுக்கு மாறான சித்தரிப்புகளை தொடர்ந்து தெரிந்தோ தெரியாமலோ ஊக்குவித்து வருவது தான்.
நம் பழங்கதைகளிலும், சமூக நம்பிக்கைகளிலும் இருப்பதை தான் ஊடகங்கள் பிரதிபலிப்பதாக இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்ட சில தகவல்களுக்கு வியாக்கியானம் சொல்லப்பட்டாலும், அவை ஊடகங்களுக்கு இருக்கும் பொறுப்பை புறக்கணிப்பதாகவே நான் கருதுகிறேன். இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தையும் ஊடகங்கள் தான் அறிமுகப்படுத்தி, பொய் பரப்பியதாக சொல்ல முடியாவிடினும், பிரச்னையை மட்டுப்படுத்த எந்த வகையிலும் பேரு செய்யாமல், நாம் நம்பி வந்த இயற்கை அறிவியலுக்கு புறம்பான காட்டுயிர்கள் பற்றிய கருத்துக்களை உளவியல் ரீதியாக திடப்படுத்தியதில் ஊடகங்களுக்கு கணிசமான பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. அப்படி காட்டுயிர்கள் பற்றி ஊடகங்கள் எம்மாதிரியான சித்தரிப்புகளை பிரதிபலிக்கிறது, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை என்பதை விளக்க முயற்சிக்கிறது இக்கட்டுரை.
ஊடகங்களும் காட்டுயிர்களும் என்ற தலைப்பினூடாக பயணிப்பதற்கு முன், எது ஊடகம்? எது காட்டுயிர்? என்ற தெளிவை பெற்றுக் கொள்வது அடிப்படை. ஏனெனில், காட்டுயிர் என்ற சொல்லையே கூட ஊடகங்கள் ‘பயங்கரமான காட்டில் வாழும் கொடூரமான வன விலங்குகளாகிய சிங்கமும் புலியும் தான் காட்டுயிர்’ போன்ற சித்தரிப்புகளாகவே நமக்கு கொடுத்துள்ளன.
காட்டுயிர் – இந்தச் சொல்லே ஒரு மனித மைய சொல்லாடல் தான். நியாயப்படி அனைத்து உயிரினங்களும் தோன்றிய பிறகு ஆகக் கடைசியாக தோன்றியது தான் மனித இனம். ஆனால் நாம் அவைகளிடமிருந்து இப்புவியை பிடுங்கி கொண்டு நகரம், நாடு என அமைத்துக் கொண்டு அவைகளுக்கு காடு என்று ஓர் இடத்தை ஒதுக்கீடு செய்து காட்டுயிர் என்று பெயரும் சூட்டிவிட்டோம். ஆனால், காட்டுயிர் என்றால் ‘இயற்கையாக உருவாகி தன்னிச்சையாக வாழும் உயிரினங்கள்’ என்றே புரிந்துக் கொள்ளலாம். அப்படியானால் பல்லி, சிலந்தி, எறும்பு, குளவி, தவளை, எலி, வண்ணத்துப்பூச்சி என நம்மை சுற்றி இருக்கும் இவை அனைத்தும் காட்டுயிர் தான்.
ஊடகங்கள் – அச்சு ஊடகம், காணொளி ஊடகம், சினிமா மற்றும் சமூக ஊடகம் ஆகிய அனைத்து ஊடகங்களும் தான் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகங்களில் பறவைகள் :
- குயில் – பின்னணி இசைப்பாடகர் ‘சின்னக்குயில்’ சித்ரா அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவர் மட்டுமல்ல, நம் வீட்டிலும், நம் நண்பர்கள் வட்டத்திலும் கூட, ஒரு பெண்ணின் குரல் இனிமையாக இருந்தால் ‘குயில் மாதிரி பாடுற’ என்று தான் சொல்லுவோம். குயிலின் இனிமையான குரலை எப்பொழுதும் பெண்களின் குரலுக்கான உவமையாகவே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், உண்மை என்ன? ஆண், பெண் ஆகிய இரண்டு குயில்களும் கூவினாலும், இனப்பெருக்க காலத்தில் ஆண் குயில் சப்திக்கும் இனிமையை தான் நாம் பெண் குயில் சப்தமாக நினைத்துக் கொள்கிறோம்.
- ஆந்தை – ‘வெளிநாட்டைச் சேர்ந்த அபூர்வ ஆந்தை தமிழ்நாட்டில் சிக்கியது’ போன்ற செய்தியை நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்க நேரிடும். ஆனால், உண்மையில் அது வெளிநாட்டு ஆந்தை அல்ல, அது நம்மூரில் மனிதர்கள் வசிக்கும் இடத்தில் சாதாரணமாக காணப்படும் கூகை (Barn Owl). ஏனெனில், பெரும்பாலான ஆந்தைகள் வலசை போவதில்லை.
- புறா – புறாத் தபால் அல்லது புறா மூலம் தூது அனுப்புவது நம் சினிமாக்கள் மூலம் பரிட்சயமான ஒன்று. புறாக்கள் மனிதர்கள் இருப்பிடத்தை தேடிப் பிடித்து தங்கள் கால்களில் கட்டிய சீட்டுகளை அவர்களிடம் சேர்த்து இருந்து, பதிலையும் திரும்பிக் கொண்டுதருமென்று நம்பும் மனிதர்களாக தான் நாம் இருக்கிறோம். ஆனால் ‘இப்படி ஒரு புறாவும் செய்யாதென்றும் தபாலைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமென்ற கவலை புறாவுக்கு கிடையாதென்றும் விடுவித்த இடத்திலிருந்து விரைந்து தன் கூண்டுக்கு வந்தடையும் இயல்பே அதற்குண்டென்றும் சொல்லிவிட விரும்புகிறேன்’ என்கிறார் நமக்கெல்லாம் முன்னோடியான இயற்கை ஆர்வலர் மா.கிருஷ்ணன் அவர்கள். பந்தயப் புறாக்களை வளர்த்து வந்த இவர் ஓரிடத்தில் அடைபட்டு பழக்கிய புறாக்கள் அவ்விடத்திற்கே திரும்பும். இதுவே புறாத் தபாலின் அடிப்படை என்கிறார்.
ஊடகங்களில் விலங்குகள் :
- யானை – ‘மதம் கொண்ட யானை’ பற்றி அச்சிடாத ஊடகங்களும் இல்லை, காட்சிப்படுத்தாத சினிமாக்களும் இல்லை. யானைகளுக்கு மதம் பிடித்திருக்கிறது என்பதை கொடுமையானதாகவும், மனிதரை தொலைத்துக் கட்டவே அதற்கு மதம் பிடிப்பதாகவுமே இதுவரை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், யானைகள் மதநிலைக்கு வருவது அவற்றின் வளர்ச்சியமைப்பில் ஒரு முக்கியக் கட்டம். மத யானையின் இயற்கையான வாழ்க்கை முறையில் அது ஒரு இன்றியமையாத காலம். காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு, கட்டிவைத்து அடித்து, உதைத்து, பட்டினி போட்டு பழக்கப்படுத்தப்பட்ட யானையானாலும், மதநிலைக் காலத்தில் இயற்கையின் உந்துதலால் கட்டுப்பாட்டுக்கு அடங்காது என்பதையும், அதிலுள்ள நியாயத்தையும் புரிந்துக் கொள்வது பொறுப்புள்ள மனிதரின் கடமையாகும்.
- பல்லி – நமது பாரம்பரியத்தின் ஒரு அங்கமான பல்லிக்கு அண்மைக் காலத்தில் சிலர் அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். மதிய உணவு பரிமாறப்படும் பள்ளிக்கூடங்களில், ஈயமில்லாத பாத்திரத்தில் சமைப்பதாலும், ஊசிப்போன பதார்த்தங்களை உண்ணுவதாலும், சாப்பாடு நஞ்சாகி நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிருக்கு போராடும் நிலை ஏற்படும்போது சாம்பாரில் பல்லி விழுந்துவிட்டதால் தான் இப்படியாகிவிட்டது என்று காண்டிராக்டர்கள் கதைக் கட்டி விடுகிறார்கள். அதையும் நம்பி பத்திரிக்கையாளர்களும் கட்டம் கட்டி செய்தியாக அச்சேற்றிவிடுகிறார்கள். உண்மை என்னவென்றால் பல்லிக்கு நஞ்சு கிடையாது. அது உணவில் விழுந்தால் உயிரை பாதிக்கும் அளவிலான எந்த விளைவையும் ஏற்படுத்தாது. உடும்புக் கறி சாப்பிட்டவர்களை கேட்டுப் பாருங்கள் என்று எழுதுகிறார் தியோடர் பாஸ்கரன். நம்மை சுற்றியுள்ள சிற்றுயிர் பற்றி நாம் ஆர்வம் காட்டாததால் நாம் எவ்வளவு எளிதாக ஏமாற்றப்படுகிறோம் என்று பார்த்தீர்களா?
- பாம்புகள் – அநேகமாக ஊடகங்கள் அதிக புரட்டுகளும், வன்மமும் கக்கியது பாம்புகளை பற்றித்தான் என்பதில் சூழல் ஆர்வலர்கள் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவ்வளவு ஏன், இந்தக் கட்டுரையை நான் எழுத யத்தனித்த இரண்டு சம்பவங்களும் பாம்புகளை பற்றித் தான். அவை :
சம்பவம் 1 : அன்று காலை ஒரு பதினோரு மணி. வெய்யில் மங்கி இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது. கடைக்கு செல்ல வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தேன். தெரு முனையில் இருக்கும் வீட்டில் வசிக்கும் அம்மா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் (பள்ளிக்கல்வி முடித்திருப்பார்கள்) ஏதோ ஒன்றை எரித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களை நெருங்குவதற்குள், அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த அப்பா அதன்மீது பால் அல்லது தயிர் போன்ற திரவத்தை மேலே ஊற்றினார். நான் அருகில் சென்றபோது பாதி உடல் எரிந்து கருகி போயிருந்தது அந்த முக்கால் அடி நீளமே உள்ள நஞ்சற்ற பாம்பு. அதீத விஷமுள்ள பாம்புகள் வெறும் நான்கு வகைகள் தான் நம் நாட்டில் உள்ளது என்ற உண்மை தெரிந்திருந்தால், ஒரு குடும்பம் இப்படி அநியாயமாக அந்த பாம்பை எரித்துக் கொன்றிருப்பார்களா?
சம்பவம் 2 : கொரோனா எந்த வகையிலும் கொண்டாடப்பட முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், திருமண முறையை எளிமையாக்கி இருப்பதை எண்ணி என்னைப் போன்ற மினிமலிஸ்ட்டாக (Minimalist) இருப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியே. அப்படி வீட்டிலேயே நடந்த ஒரு நெருங்கிய நண்பனின் திருமணத்திற்கு நானும் என் நண்பர்களும் சென்றிருந்தோம். வீட்டின் தாழ்வாரத்தில் (verandah) இருந்த நாற்காலியில் அமர்ந்து அலுவலக சலிப்புகள் குறித்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். திடீரென நான் அமர்ந்திருந்த நாற்காலியின் கீழே ஊர்ந்து செல்வதை பார்த்து ‘பாம்பு’ என்று அலறினாள் என் தோழி, என் மூளையில் இருந்து ஏற்பட்ட அணிச்சை செயலால் சடாரென்று நாற்காலியை விட்டு எழுந்தேன். பாம்பை கண்டால் நாம் 10 மடங்கு பயப்படுவோம் என்றால், அது நம்மை கண்டால் 100 மடங்கு பயந்து முதலில் தப்பிக்கவே பார்க்கும் என்ற அறிவியல் உண்மை தெரிந்திருந்தும், ஊடகங்கள் பாம்பை பற்றி ஏற்படுத்தி வைத்திருக்கும் அச்சமே உளவியலாக நம்மை முதலில் ஆட்கொள்கிறது.
இந்தத் தொகுப்பு காட்டுயிர் பற்றி ஊடகங்கள் நமக்கு தவறாக கற்பித்தவற்றில் ஒரு சதவீதத்திற்கும் குறைவே. இவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்துவது இன்னும் பல விழிப்புணர்வை வெளிக்கொணரும்.
ஊடகங்கள் திடப்படுத்திய பொதுப்புத்திகள் :
யானைகளின் அட்டகாசம், காட்டெருதின் தாக்குதல், காட்டு தர்பார், நரி புத்தி, ஆமை புகுந்த வீடு, கொடிய வன விலங்குகள், வினோத மிருகம் என்று ஊடகங்களில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் காட்டுயிர் பேணலுக்கு இயைந்து இருக்கின்றனவா? நிச்சயம் இல்லை. ஊடக மொழியை வடிகட்டிப் புதுப்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இவை மட்டுமல்லாமல் யானையும் பாம்பும் எத்தனை பிறவி எடுத்தாலும் பழித் தீர்க்கும், பாம்பு கடித்தால் வாயை வைத்து உறிஞ்சு விஷத்தை எடுக்க வேண்டும், மாடு சிகப்பு நிறத்தை கண்டால் மிரளும், பாம்பு பால் குடிக்கும், நாய் ஊளையிடுவது அழுகை அல்லது பேய் வருவதற்கான அறிகுறி என இன்னும் ஏராளமான அறிவியலுக்கு புறம்பான உயிர்களை பற்றிய செய்திகளை சினிமாவும், சின்னத்திரையும் மற்ற ஊடகங்களும் நமக்கு கற்பித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
ஊடகங்களுக்கு காட்டுயிர் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன ?
‘அறிவியல் கத்தி போன்றது’ என்று என் கல்லூரி ஆசிரியர் ஒருவர் அடிக்கடி குறிப்பிடுவார். காய்கறி நறுக்கவும் பயன்படுத்தலாம், கையை துண்டிக்கவும் பயன்படுத்தலாம். பயன்படுத்துபவரை பொறுத்து தான் ஆக்கமும், அழிவும். அதே போலத் தான், அருமையான அறிவியல் கண்டுபிடிப்பான புகைப்படக் கருவியை (Camera) சேகர் தத்தாத்திரி போன்ற புகைப்பட கலைஞர்கள் இயற்கை அறிவியலை புரிந்துக் கொள்ள, விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தும் போது, அதே அறிவியல் கண்டுபிடிப்பை பல ஊடகங்கள் இயற்கை அறிவியலுக்கு எதிராகவே பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறது.
பிரச்சனையை புரிந்துக் கொள்ள இந்த அணுகுமுறை உதவுவதில்லை. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மோதல் ஏற்படுவது போலவும், அத்தகைய நிகழ்வுகள் விலங்குகளின் தவறே என்று கூறுவது போலவும் அவை அமைந்து விடுகிறது. காட்டுயிருக்கோ அல்லது காட்டுயிர் பேணலுக்கோ இவை நல்லதில்லை. புதிய அக்கறைகள் உருவாகும்போது, மொழி வழக்கும் அதற்கேற்ப மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக பெண்களையும், ஊனமுற்றோரையும், குறிப்பிட்ட சாதிகளையும் இழிவுப்படுத்தும் பழமொழிகளையும், மரபுத் தொடர்களையும் இன்று நாம் தவிர்க்கிறோம். இத்தகைய மாற்றம், அப்புதிய அக்கறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பரவ உதவுகின்றது. அதுபோலவே விலங்குகளையும், பறவைகளையும், காட்டை பற்றியும் ஊடகங்களில் பேசும்போதும், எழுதும்போதும் கவனமாக இருப்பது மக்களிடையே ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருமல்லவா?
சுற்றுச்சூழல் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்களால் முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சாமானிய மக்கள் இணைய துறைச்சொற்கள் உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ, அதே போன்று சாமானிய மக்களை சென்றடையக் கூடிய எல்லா ஊடகங்களும் காட்டுயிர் பற்றிய பிரக்ஞையோடு செயல்படுவதும் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. அதை நோக்கி ஊடகங்களை நகர்த்துவது, தக்க சமயங்களில் எதிர்வினை ஆற்றுவதும் ஒவ்வொரு சூழல் ஆர்வலரின் கடமை என்றே நான் கருதுகிறேன்.
-சரவணன், விசை