சென்னை நன்மங்கலம் காப்புக் காட்டில் மெட்ரோ ரயில் வழித்தடம். ஆபத்தில் அரிய வகை உயிரினங்கள்

 

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளால் நன்மங்கலம் காப்புக் காட்டிற்கும் அங்கு வசிக்கும் அரிய வகை உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதற் கட்டமாக 45 கிலோமீட்டர் தொலைவில் வழித்தடம் அமைத்து ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்டத்தில் 61834 கோடி செலவில்  மொத்தமாக 118 கிலோமீட்டரில் ரயிலை இயக்குவதற்கான வழித்தடம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த 118 கிமீ தொலைவில் ஒரு வழித்தடமானது மாதவரம் தொடங்கி ரெட்டேரி, வில்லிவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், ராமாபுரம், ஆலந்தூர், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், எல்காட், சோழிங்கநல்லூர் வரையில் 47 கிலோமீட்டருக்கு அமையவுள்ளது.

இதில் கோவிலம்பாக்கம் முதல் மேடவாக்கம் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள நன்மங்கலம் காப்புக்காடு வனப்பகுதி வழியாக மெட்ரோ வழித்தடம் அமையவுள்ளது. இதற்காக நன்மங்கலம் காப்புக் காட்டின் 3.8 ஏக்கர் பரப்பளவிலான பகுதியை 99 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதிகோரி மத்திய வனத்துறையிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

நன்மங்கலம் காப்புகாடானது 321 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும். 449 தாவர வகைகள், 100 முதல் 120 வகையிலான பறவை இனங்கள், 40 வகையிலான பட்டாம்பூச்சி இனங்கள், பாம்புகள், தவளைகள் போன்றவற்றிற்கு வீடாக உள்ளது. குறிப்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த The Indian Eagle owl எனப்படும் கழுகு ஆந்தை இங்கு வசிக்கிறது. சென்னையில் வேறு எந்த வனப்பகுதியிலு ம் கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஆந்தை காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்மங்கலம் காப்புக் காட்டை சுற்றி வந்த வீடுகள், சாலைகள் போன்ற மனித நடவடிக்கைகளால் ஏற்கெனவே  அங்கு வசிக்கும் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக காப்புக் காட்டை அழிப்பது சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரின ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-Satheesh Lakshmanan

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments