நாடாளுமன்றத்தில் இந்திய அளவில் பெரிய வன உயிரினங்கள் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்பாக கேள்வி ஒன்றை திரினாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சொகட்டா ராய் எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ நாடு முழுவதும் உயிரிழந்த பெரிய வன உயிரினங்கள் குறித்த தகவல் தங்கள் அமைச்சகத்தில் இல்லை என்றும் இருப்பினும் புலிகள் மற்றும் யானைகள் மரணங்கள் குறித்த தகவல் இருப்பதாகவும் கூறினார். அவர் அளித்திருந்த பட்டியலில் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மொத்தமாக 312 யானைகள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகபட்சமாக அஸ்ஸாம் மாநிலத்தில் 76 யானைகளும் ஒடிஷா மாநிலத்தில் 60 யானைகளும் தமிழ்நாட்டில் 37 யானைகளும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக
தமிழ்நாட்டில் மட்டும் 2017 மற்றும் 2018ல் தலா 11 யானைகளும் 2019ல் 15 யானைகளும் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய அரசு வழங்கிய இத்தகவல் தமிழ்நாடு அரசு வனத்துறையிடம் இருக்கும் தகவலுடன் முரண்பட்டதாக உள்ளது. வன உயிரின ஆர்வலர் ஆண்டனி ரூபின் கிளமெண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் யானைகள் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மட்டும் 2017ல் 125, 2018ல் 84, 2019ல் 108 யானைகள் என மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 317 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால், இதே மூன்று ஆண்டுகளில் வெறும் 37 யானைகள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது அறியாமையா? அலட்சியமா? என்று தெரியவில்லை.
– சதீஷ் லெட்சுமணன்