வடசென்னை அனல்மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வில் உறுதி

வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி  சாந்த ஷீலா நாயர் தலைமையிலான குழு பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

வட சென்னையில் 9.20 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 40கி,மீ சுற்றளவில் அமைந்துள்ளது எண்ணூர் உப்பங்கழிமுகம். ஒட்டுமொத்த பரப்பளவில் 43% பக்கிங்காம் கால்வாயினையும் 19% கொசஸ்தலை ஆற்றையும், 19% அரசு நிலத்தையும் உள்ளடக்கியுள்ளது.  இந்தக் கழிமுகம் வடசென்னை , வல்லூர், எண்ணூர் அனல்மின் நிலையங்களால் கடுமையாக மாசடைந்து அதன் மீன்வளம் முற்றிலுமாக அழிந்த்துள்ளது.

எண்ணூரைச் சேர்ந்த ரவிமாறன் என்பவரும் மீனவர் நல சங்கத்தைச் சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ் குமார் என்பவரும் எண்ணூர் கழிமுகத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் சாம்பல் கொட்டுவதை தடுக்கக் கோரி 2016ல் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆய்வு செய்ய பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில், நரசிம்மன், பாலாஜி நரசிம்மன் ஆகிய மூன்று நிபுணர்களை தீர்ப்பாயம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்தது. இந்தக் குழுவானது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு அறிக்கையை பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது. ஆனால், அந்த அறிக்கையின் அடிப்படையில் எந்தவித மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து சாம்பல் கழிவுகள் எடுத்துச் செல்லும் குழாய்களில் கசிவு ஏற்பட்டு கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்தபோது,  இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் பல்வேறு அரசுப் பதவிகளை வகித்து ஓய்வு பெற்றிருந்த சாந்த ஷீலா நாயர் IAS தலைமையில், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன் மற்றும் இந்துமதி நம்பி, மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் நரசிம்மன், கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெயஸ்ரீ வெங்கடேசன் மற்றும் ஒரு கடல் சார் உயிரியல் நிபுணர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரிய பிரதிநிதிகள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை உருவாக்குவதாக தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இக்குழுவானது, எண்ணூர் உப்பங்கழிமுகத்தில் சாம்பல் கழிவுகளால் நீர், மண், தாவரங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்வதற்கு TANGEDCO எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு குறித்தும் மேற்கொண்டு அப்பகுதிக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அறிக்கையின் முக்கியமான கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:

 • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் நடத்தி வரும் வடசென்னை அனல்மின் நிலையம் ஸ்டேஜ் 1 ஆனது 2015ம் ஆண்டில் இருந்து நீர் மற்றும் காற்று மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இசைவாணையின்றியும், ஏப்ரல் 2020ல் இருந்து அபாயகரமான கழிவுகளை கையாள்வதற்கான அனுமதியின்றியும் செயல்பட்டு வந்துள்ளது.
 • வடசென்னை அனல்மின் நிலையம் ஸ்டேஜ் 2 ஆனது மார்ச் 2019ல் இருந்து நீர் மற்றும் காற்று மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இசைவாணையின்றி செயல்பட்டு வந்துள்ளது.
 • வடசென்னை அனல்மின் நிலையம் தனது நிகழ்நேர தொடர் காற்றுத்த தர கண்காணிப்பு அமைப்பு மூலம் உண்மையான அளவீடுகளை வழங்காமல் தெரிந்தே தவறான தரவுகளை வாரியங்களுக்கு அளித்துள்ளது.
 • அனல்மின் நிலையத்தில் உருவாகும் சாம்பல் கழிவுகளை 100% முழுமையாக வேறு பயன்பாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்கிற விதிக்கு மாறாக 2020-2021 ஆண்டில் 50 விழுக்காடிற்கும் குறைவான அளவில் மட்டுமே சாம்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • நிகழ்நேர காற்றுத்தர கண்காணிப்பு அமைப்பின் வாயிலாக 01.04.2019 மற்றும் 07.03.2022 வரை அதாவது 1071 நாட்களுக்குத் தவறான தரவுகளை அளித்தும்கூட வடசென்னை அனல்மின் நிலையம் ஸ்டேஜ் 1ல் Particulate Matter எனப்படும் நுண்துகள் மாசின் வெளியேற்றம் 481 நாட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்துள்ளது.
 • இதேகாலத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் ஸ்டேஜ் 2ல் 791 நாட்கள் Particulate Matter எனப்படும் நுண்துகள் மாசின் வெளியேற்றம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்துள்ளது.
 • இசைவானையில் கூறப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பசுமை வளையம் உண்டாக்கப்படவில்லை.
 • சாம்பல் குட்டைகளை முறையான பாதுகாப்புடன் அமைக்காததால் நிலத்தடி நீர் நச்சாகியுள்ளது.
 • 2019ம் ஆண்டு பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் 13.58 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கான நிலக்கரி சாம்பல் வெளியில் கொட்டப்பட்டத்துள்ளது. இதில் நீர்நிலையில் 7.93 லட்சம் மெட்ரின் டன்னும், சுற்று வட்டாரத்தில் 3.95 லட்சம் மெட்ரிக் டன்னும் அடங்கும்.
 • மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் அண்மைக் கணக்கின்படி 65.96 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி சாம்பல் கணக்கில் வராமல் உள்ளது. இதில் பெரும்பாலான பகுதி ஆற்றிலும், கழிமுகத்திலும் அதைச்சுற்றியும் கொட்டப்பட்டுள்ளது.
 • கொட்டப்பட்ட நிலக்கரி சாம்பல் 1 அடி முதல் 8 அடி ஆழம் வரை உள்ளது.
 • மொத்தமாக 3.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி சாம்பல் கொட்டப்பட்டுள்ளது. இதில் 1.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நீர் நிலையாகும்.
 • காட்மியம், குரோமியம்,ஆர்சனிக்,ஈயம்,துத்தநாகம் போன்ற கன உலோகங்கள் அளவுக்கு அதிகமாக மேற்பரப்பிலும், நீர் நிலையிலும், நிலத்தடி நீரிலும் கண்டறிப்பட்டன.

இப்பாதிப்புகளை எல்லாம் சரிசெய்ய அரசு அல்லாத ஒரு நிறுவனத்தை நியமித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும் எனவும், வடசென்னை அனல்மின் நிலையத்தைக் கண்காணிக்க மட்டும் ஒரு மாசுக் கட்டுப்பாடு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வடசென்னை அனல்மின் நிலையம் நிலக்கரி சாம்பலை முறையாகக் கையாளாமல் விதிகளை மீறியதற்கு இதுவரை 61.9 கோடி ரூபாய் அபராதமாக மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ளது. காற்று மாசுபாடு விதிகளை மீறியதற்காக மட்டும் இதுவரை ஏற்த்தாழ 6.6 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வடசென்னை அனல்மின் நிலையம் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக விதிகளை மதிக்காமல் சூழலையும் பொது சுகாதரத்தையும் கெடுத்து வருகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் அபராதம் விதிக்கிறது, அதையும் தமிழ்நாடு மின்னுற்பத்திக் கழகம் செலுத்திவிட்டு மீண்டும் விதிகளை மீறுகிறது. ஆனால், அப்பகுதியில் வாழும் மக்களும், வடசென்னையில் நீரும், மண்ணும், நிலத்தடி நீரும், காற்றும், உயிரினங்களும், தாவரங்களும் மிகவும் மோசமாக பாதிப்படைந்து விட்டன. அபராதங்கள் விதிப்பதால் அவர்கள் வாழ்வு எந்த வகையிலும் மேம்படவில்லை. அந்தப்பணம் எதுவும் அவர்களுக்கு சுத்தமான காற்றை வழங்கிடவில்லை.

மாறாக மேலும் மேலும் சுகாதார சீர்கேட்டையே ஏற்படுத்தி வருகிறது. நிலக்கரி சாம்பலால் ஏற்பட்ட பாதிப்புகளால் குறிப்பாக காட்மியம் மற்றும் ஈயத்தால் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் புற்றுநோய் மற்றும் புற்றுநோய் அல்லாத பிற நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் இந்த அபாயம் இளைஞர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி சாம்பலால் கொற்றலை ஆறு பாதிக்கப்பட்டு மீன்வளம் குறைந்துள்ளது. இது அங்கு மீன்பிடித் தொழிலில் குறிப்பாக கைகளால் நண்டு மற்றும் இறால் பிடித்து வரும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும் வாழ்வாதார மற்றும் சுகாதார பாதிப்பால் வருமான இழப்பும், வேலை நேர இழப்பும் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்படியான ஒரு சூழலியல் அநீதி வடசென்னை மக்களுக்கு மட்டும் ஏன் நிகழ வேண்டும். வருகிற 12ம் தேதி எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைத் துளியும் மதிக்காத தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம்தான் இத்திட்டத்தையும் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, ஆய்விற்காக மேற்கொள்ளப்பட்ட பகுதியில், சுமார் 37% பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஏற்கெனவே மாசுபட்ட காற்றை சுவாசித்தும், நஞ்சான நிலத்தடி நீரை பருகியும் வாழும் மக்கள் மீது மேலும் சில மெகாவாட் அனல்மின் நிலையங்களை அரசு திணிக்கப் போகிறது. சமூக நீதி அரசு என்பது பேச்சில் மட்டுமல்ல செயலிலும்தான் என்றால் வடசென்னையில் புதிய அனல்மின் நிலையங்களை அரசு அனுமதிக்கக் கூடாது.

கடந்த ஏப்ரல் 4ம் தேதி வெளியான ஐ.பி.சி.சி. அறிக்கை 2030ம் ஆண்டிற்குள் அனைத்து நிலக்கரி அனல்மின் நிலையங்களையும் மூடினால மட்டுமே புவி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியசிற்குள் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் தமிழ்நாட்டையும் தீவிரமாக பாதித்து வரும் நிலையில் அனல்மின் நிலையங்களை கைவிட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 • சதீஷ் லெட்சுமணன்
Ennore ash report 2022 _compressed

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments