அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்டும் பணி: ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம்

கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு 2019ஆம் ஆண்டு ஜூன் 20ஆத் தேதி ஒன்றிய சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தது. இத்திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

கர்நாடகாவில் வறட்சியை சமாளிக்கவும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்காகவும் இந்த அணை அவசியம் என கர்நாடக அரசு தனது விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தது. 9 ஆயிரம் கோடி செலவில் 400 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அணையைக் கட்ட விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கும் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது.

 

இந்த அணை கட்டப்படுவதால் முழுமையாக நீரில் மூழ்கும் 5கிராம மக்களுக்கு வேறு வாழ்விடம் அளிக்கப்படும் என கர்நாடக அரசு கூறியிருந்தது. அணையைக் கட்டுவதற்கு 5252 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதில் 4996ஹெக்டேர் நிலம் நீருக்குள் மூழ்கும். இதில் 3181 ஹெக்டேர் நிலம் காவிரி வன உயிர் சரணாலயத்திற்கு உட்பட்டது. 1869ஹெக்டேர் நிலம் காப்புக் காடுகள் ஆகும். இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கான தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்படும் என்பதால் தமிழக அரசு இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்திருந்தது.

 

 

அதே ஆண்டு ஜூன் 24ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகத்தின் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தில் கர்நாடக அரசின் இந்த முயற்சி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது தமிழக அரசின் ஒப்புதல் இன்றி நடக்கும் இந்த முயற்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டாம் என்று ஒன்றிய சுற்றுச்சூழல் துறைக்கு அறிவுறுத்துமாறும், கர்நாடக அரசானது, ஒன்றிய அரசின் நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க அறிவுறுத்துமாறும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

 

ஆனால், அதையும் மீறி காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதிகோரிய விண்ணப்பத்தை ஜூலை 19ஆம் தேதி ஒன்றிய சுற்றுச்சூழல் துறை பரிசீலித்தது. முடிவில் அணை கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுமானால் தமிழக அரசின் ஒப்புதல் அவசியம் என்ற வாதத்தை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உறுதி செய்தது. இரண்டு தரப்பிற்கும் சுமூக உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியும் என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.

 

கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மேகதாதுவிற்கு நேரில் சென்று அங்கு கட்டுமானப் பணிகளுக்கான கற்கள் கொட்டப்பட்டிருப்பதை பார்த்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் பின்னர் ஒன்றிய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலின்றியும், வன பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின்படி எந்த அனுமதியும் பெறாத நிலையில் அணை கட்டும் பகுதியில் கட்டுமான பொருட்களை  கர்நாடக அரசு குவித்துள்ளதாக அண்மையில் பத்திரிகையில் செய்தி வெளியானது. மேலும் அச்செய்தியில், அணை கட்டுவதால் 5,252 ஹெக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், வன விலங்குகள் சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும்  குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.  வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசும், தமிழக, கர்நாடக அரசுகளும்  பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் பணிகள் நடைபெறுகிறதா என்பதையும், அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மூத்த அதிகாரி, காவிரி நீர் மேலாண்மை ஆணைய மூத்த அதிகாரி, கர்நாடக அரசு நீர்வளத்துறை மூத்த அதிகாரி, வனத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

இக்குழு ஜூலை 5ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

  • சதீஷ் லெட்சுமணன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments