எண்ணூர் சாம்பல் கழிவு பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு.

ennorecreek-pollution-july2021-

வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா நாயர் IAS தலைமையில் குழு அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

வட சென்னையில் 9.20 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 40கி,மீ சுற்றளவில் அமைந்துள்ளது எண்ணூர் உப்பங்கழிமுகம். ஒட்டுமொத்த பரப்பளவில் 43% பக்கிங்காம் கால்வாயினையும் 19% கொசஸ்தலை ஆற்றையும், 19% அரசு நிலத்தையும் உள்ளடக்கியுள்ளது.  இந்தக் கழிமுகம் வடசென்னை , வல்லூர், எண்ணூர் அனல்மின் நிலையங்களால் கடுமையாக மாசடைந்தது அதன் மீன்வளம் முற்றிலுமாக அழிந்த்துள்ளது.

எண்ணூரைச் சேர்ந்த ரவிமாறன் என்பவரும் மீனவர் நல சங்கத்தைச் சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ் குமார் என்பவரும் எண்ணூர் கழிமுகத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் சாம்பல் கொட்டுவதை தடுக்கக் கோரி 2016ல் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆய்வு செய்ய பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில், நரசிம்மன், பாலாஜி நரசிம்மன் ஆகிய மூன்று நிபுணர்களை தீர்ப்பாயம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்தது. இந்தக் குழுவானது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு அறிக்கையை பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.

ஆனால், அந்த அறிக்கையின் அடிப்படையில் எந்தவித மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து சாம்பல் கழிவுகள் எடுத்துச் செல்லும் குழாய்களில் கசிவு ஏற்பட்டு கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 30ஆம் தேதி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்தபோது, கழிமுகத்தில் கொட்டப்பட்ட சாம்பல் கழிவுகளை அகற்றுவது மட்டும் போதாது, முழுமையாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடந்து தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு விரிவான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

ennore

அந்த உத்தரவில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் பல்வேறு அரசுப் பதவிகளை வகித்து ஓய்வு பெற்றிருந்த சாந்த ஷீலா நாயர் IAS தலைமையில், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன் மற்றும் இந்துமதி நம்பி, மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் நரசிம்மன், கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெயஸ்ரீ வெங்கடேசன் மற்றும் ஒரு கடல் சார் உயிரியல் நிபுணர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரிய பிரதிநிதிகள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குழுவிற்குத் தலைவராக சாந்த ஷீலா நாயரும், உறுப்பினர் செயலராக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனரும் செயல்படுவார்கள் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இக்குழுவானது, எண்ணூர் உப்பங்கழிமுகத்தில் சாம்பல் கழிவுகளால் நீர், மண், தாவரங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்வதற்கு TANGEDCO எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு குறித்தும் மேற்கொண்டு அப்பகுதிக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்து ஆராயவும் மற்றும் மறுசீரமைப்பிற்கான விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து நான்கு மாதங்களுக்குள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எண்ணூர் சாம்பல் குழு பாதிப்புகள் குறித்து 2017ஆம் ஆண்டு பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கை:

interim report

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments