முதலியார்குப்பம் முகத்துவாரத்தில் நடந்துவரும் சுற்றுலா கட்டுமானங்களை நிறுத்த பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

செங்கல்பட்டு மாவட்டம் முதலியார் குப்பத்தில் அமைந்துள்ள முகத்துவராத்திற்கு அருகே கடற்கரையொட்டிய பகுதிகளில் CRZ அனுமதியின்றி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளை நிறுத்த பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள முதலியார்குப்பத்தில் ஓதியூர் காயல் கடலில் கலக்கும் பொழியில்(முகத்துவாரம்) 2003ஆம் ஆண்டு முதல் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம் ஒன்றை நடத்தி வருகிறது. சென்னை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் இம்முகத்துவாரத்தில் காயலுக்கு அருகில் அமைந்துள்ள தழுதாளி குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13.01.2023 அன்று தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அப்புகார் மனுவில் தழுதாளி குப்பத்திற்கு அருகில் ஓதியூர் காயல் கடலில் கலக்கும் இடத்திற்கருகிலுள்ள கடற்கரையில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையின்கீழ் அனுமதி பெறாமல் சுற்றுலாத்துறை சில கட்டுமானங்களை எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

சுற்றுலாத்துறை மேற்கொண்டு வரும் கட்டுமானப் பகுதிகள் அலைத்தாக்கத்திற்கு ஆளாகக் கூடிய மண்டலம்(CRZ IB), வளர்ச்சி தடைசெய்யப்பட்ட மண்டலம்(CRZ-III NDZ) ஆகிய பகுதிக்குள் வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்பணி நடக்குமிடமானது தழுதாளிகுப்பம் மீனவர்கள் பெரிய வலை இழுக்கக் கூடிய இடமாகவும், கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் இடமாகவும் இருப்பதால் சுற்றுலாத்துறை மேற்கொண்டு வரும் பணிகளுக்கு தடை விதித்து, சம்பந்தப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இப்புகார் மனுமீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தழுதாளிக் குப்பத்தைச் சேர்ந்த மீணவர்கள் கண்ணப்பன், பன்னீர் ஆகியோர் அனுமதியின்றி எழுப்பப்பட்ட கட்டுமானங்களை இடிக்கவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீட்டுத்தொகை வசூலிக்கவும் உத்தரவிடக்கோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனுவானது நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணர்த்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த தீர்ப்பாய உறுப்பினர்கள் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை தற்போதுள்ள நிலையே தொடரவேண்டும் எனவும் கட்டுமானப் பணிகள் எதுவும் நடக்கக்கூடாதெனவும் உத்தரவிட்டனர். வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும்  பதிலளிக்க உத்தரவிட்ட தீர்ப்பாயம் மனுவை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அலையாத்தித் தாவரங்கள் நிறைந்த, ஆமைகள் முட்டையிடும் பகுதியில் CRZ அனுமதியின்றி கழிப்பிடங்கள், கான்க்ரீட் தூண்கள், குடில்கள், சுற்றுச்சுவர்கள் எழுப்படுவதைத் தடுக்கக்கோரி கண்ணப்பன், பன்னீர் ஆகிய மீனவர்கள் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இம்மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் எனவும் மேற்கொண்டு பணிகள் நடக்கக் கூடாதெனவும் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments