நினைவு தெரிந்த நாளிலிருந்து கடல் பயணங் களை தீவிரமாக நேசித்து வருபவர் இவான் மாக்ஃபைதன். கடலுக்கும் அவருக்குமான உறவு அதிஅற்புதமானது. கடல் தன்னுடன் உரையாடுவதாக அவர் நம்புகிறார். பல நாட்கள் தொடர்ந்து கடலில் இருந்தாலும் அது தன்னைக் காக்கும் என்று அவர் நம்புகிறார். கடலைத் தோழனாக வரித்துக் கொண்டிருக்கும் அவரது நம்பிக்கையை 2013ல் இவான் மேற்கொண்ட ஒரு பயணம் புரட்டிப் போட்டது. பசிபிக் பெருங்கடலில் 28 நாட்கள் நீடித்த பயணம் அது. பசிபிக் பெருங்கடல் மீது அவரது முதல் பயணம் அல்ல. ஆனால் இனி பசிபிக் பெருங்கடல் தனது தோழன் இல்லை என்று உணர்த்திய பயணம். காரணம், கடல் இறந்துவிட்டிருந்தது. அப்படிதான் இவான் அதை சொல்கிறார். எப்போதுமில்லாத ஒரு மௌனத்தை கடல் இந்தப் பயணத்தின்போது சுமந்திருந்தது. வீசி யெறியப்பட்ட குப்பைகளில் படகு மோதும் ஒலி மட்டுமே அந்த மௌனத்தை குரூரமாக கலைத்துப் போட்டது. அவர் மிக விரும்பும் கடற்பறவைகளின் ஒலிகளை இவானால் கேட்க முடியவில்லை. எப்போதும் அவரது படகை சுற்றி வட்டமிடும் கடற்பறவைகள் காணாமல் போயிருந்தன. கடற்பறவைகள் காணாமல் போனதற்கான காரணத்தை அறிவது கடினமாக இருக்கவில்லை. கடலில் ஒரு மீனும் இல்லை. மீனில்லாத கடலில் கடற்பறவைகளுக்கு என்ன வேலை இருக்க முடியும்? எப்போதும் கடல் பயணத்தில் தினமும் சில மீன்களைப் பிடிக்க முடியும். ஆனால் இந்த முறை ஒட்டு மொத்த பயணத்திலேயே கூட ஒன்றிரண்டு மீன்களுக்கு மேல் இவானுக்கு கிடைக்கவில்லை. வழக்கமாக வரும் டால்பின்களையோ கடல் ஆமைகளையோ பார்க்க முடியவில்லை.
கடல் பயணத்தின் முடிவில் இவான் புரிந்து கொண்டார். எப்போதும் வாழும் என்று நம்பிய பசிபிக் பெருங்கடல் இறந்துவிட்டதென்று. ‘‘அதை மரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மரணித்த கடலின்மீது பயணிப்பதைப் போல துயரமானது வேறொன்றும் இல்லை” என்கிறார் இவான். ஒரு மாலுமிக்கு அதைவிட துயரம் ஏது? உலகிலேயே மிகப்பெரிய பெருங்கடல் என்று நாம் எல்லோரும் படித்துத் தெரிந்துகொண்ட பசிபிக் பெருங்கடலின் இன்றைய நிலைக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? பசிபிக் பெருங்கடலில் கொட்டப்படும் அணு உலைக் கழிவுகள்தான். ஃபுகுஷிமா அணு உலைகளில் 2011ல் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு கழிவுகள் அனைத்தும் பசிபிக் பெருங்கடலில் கொட்டப்பட்டதுதான் பெருங்கடலின் இன்றைய நிலைக்குக் காரணம். அணு உலைக் கழிவுகளால் உலகிலேயே மிகப்பெரிய ஒரு பெருங்கடலை கொன்றுபோட முடியுமென்றால் நாம் எல்லோரும் எம்மாத்திரம்?
பெருங்கடலை உடைத்துப் போட்டிருக்கிறது அணு உலைக் கழிவு.
புகுஷிமா அணு உலையில் இருந்து வந்த கதிர்வீச்சு, பசிபிக் பெருங்கடலை முழுமையாக கதிர்வீச்சு கொண்டதாக மாற்றியுள்ளதாக ஒரு அறிக்கை சொல்கிறது (இணைப்பு). வழக்கம் போல் புகுஷிமாவில் அணு உலைகளை அமைத்த டெப்கோ நிறுவனம் அந்த அறிக்கையை மறுத்திருக்கிறது. எனினும் உண்மை எப்படியும் வெளிவரும் என்பதற்கு இவானின் கண்ணீர் ஒரு சான்று. இன்றைக்கும் நாள் ஒன்றுக்கு 300 டன் கதிர் வீச்சு நீர் பசிபிக் கடலில் சென்று கலக்கிறது. இதை நிறுத்த முடியாததற்கு முக்கியக் காரணம், மனிதர்களோ ரோபோக்களோ நெருங்க முடியாத அளவுக்கு கதிர்வீச்சு அங்கே உள்ளது என்பதுதான். புகுஷிமாவில் விபத்து ஏற்பட்ட அணு உலைகளைக் கொடுத்த நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த GE நிறுவனம். அந்த ஒரு காரணத்திற்காக புகுஷிமா பிரச்னையை பற்றி எந்த ஒரு வார்த்தையும் வெளிவருவதில்லை. 1,400 ஜப்பானியர்கள் GEக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்கள்.
கதிர்வீச்சை கண்ணால் காணமுடியா விட்டாலும் அதன் தாக்கம் அதிகமாகத் தென்பட ஆரம்பித்துள்ளது. கனடாவின் கடலில் உள்ள மீன்களின் கண்களில் இருந்தும் வாயில் இருந்தும் ரத்தம் கசிந்து கொண்டேயிருக்கிறது. இதை அரசு கண்டுகொள்ள மறுத்ததன் விளைவு “நார்த் பசிபிக் ஹெரிங்” (north pacific herring) போன்ற பல நாட்டு மீன் வகைகள் கனடாவில் அழியத் தொடங்கியிருக்கின்றன. 2013ல் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் கிரில் எனப்படும் இறால் வகைகள் கொத்துக் கொத்தாக லட்சக் கணக்கில் இறந்து கிடந்தன. கடல் உணவு சுழற்சியில் இந்த வகை மீன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றைத் தின்றுதான் பெரிய வகை மீன்கள் உயிர் வாழும். கிரில் இன மீன்கள் இறந்ததற்கு இதுவரை காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் கதிரியக்கம்தான் என்று நம்பப்படுகிறது. அதே பகுதியில் கடல் சிங்கங்களும் கூட்டம்கூட்டமாக இறந்து கிடந்ததற்கும் கதிரியக்கம்தான் காரணம் என்று சொல்கிறார்கள். இறந்துகிடந்த ஒரு கடல் சிங்கத்தை சோதனை செய்தபோது அதன் உடலில் அளவுக்கு அதிகமான கதிரியக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பசிபிக் பெருங்கடலின் 98 சதவிகித கடல் பரப்பு இறந்த கடல் வாழ் உயிரினங்களால் மூடப்பட்டிருக்கிறது. இதற்கு பருவநிலை மாற்றம் முக்கிய காரணம் என்று ’வெகுஜன அறிவியலாளர்கள்’ (அவர்களை வேறு எப்படி அழைப்பது?) சொல்கிறார்கள். புகுஷிமாவைப் பற்றி மறந்தும்கூட அவர்கள் பேசுவதில்லை என்பது எவ்வளவு பெரிய முரண்! பருவ நிலை மாற்றம் ஒரு முக்கியமான தீவிரமான பிரச்னை என்றாலும் கதிரியக்கம் போல கடல் வாழ் உயிரினத்தை சில மாதங்களிலேயே அழிக்கும் தன்மை அதற்கு இல்லை என்று வாதிடுகிறார்கள் கதிரியக்கம்தான் காரணம் என்று சொல்பவர்கள். கதிரியக்கம் பரவுவதைத் தடுக்க முடியாத டெப்கோவும் ஜப்பான் அரசும் அவர்களுக்கு தெரிந்த ஒன்றை இப்போது செய்கிறார்கள். கதிரியக்கம் இல்லவே இல்லை என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு வசதியானது! எதையும் பொருட்படுத்த வேண்டாம், எதற்கும் பதில் சொல்ல வேண்டாம், எதன் பொருட்டும் எந்தப் பணியையும் செய்யவேண்டாம். பல அரசுகளும் அதிகார வர்க்கமும் இந்த வழியைக் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் ஒரு பெருங்கடலின் மரணமோ மானுடத்தின் வீழ்ச்சியோ நமக்கு அருகிலேயே நிகழும் போது இதுபோன்ற திட்டமிட்ட பொய்களும் திசை மாற்றும் பரப்புரைகளும் அம்பலப்படுத்தப்படும் என்றும், அப்போது வரலாறு அவர்களை கடுமையாக மதிப்பீடு செய்யும் என்பதையும் உணராதவர்களாகவே இருக்கிறார்கள்.
டெப்கோ மட்டுமல்ல, அமெரிக்க கனடா அரசுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மேற்கு கனடா பகுதியில் கதிர்வீச்சின் அளவு 300% அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இவ்வளவு இருந்தும் அமெரிக்காவும், கனடாவும் அமைதியாக இருப்பதற்குக் காரணம் GE நிறுவனம் என்று சொல்லப்படுகிறது.
இன்னும் தெற்கே ஒரேகான் (Oregon) பகுதிக்குச் சென்றால் நட்சத்திர மீன்கள் (star fish) கால்களை இழந்து உருமாறி வரலாறு காணாத எண்ணிக்கையில் அழிந்து வருகின்றன. 2014 ஆம் ஆண்டு பகுதியில் கலிஃபோர்னியா கடல் பகுதியில் கதிர்வீச்சு அளவு 500% அதிகமாக இருந்தபோது, அரசு சொன்ன பதில், “ நமக்கு புலப்படாத, கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்று இந்தக் கதிர்வீச்சை அதிகப்படுத்துகிறது” என்று. பசிபிக் பெருங்கடல் அதிக அளவில் கதிர்வீச்சு கொண்டதாக மாறிவிட்டது, எந்த அளவுக்கு என்றால், இரண்டாம் உலக போர் சமயத்தில் அமெரிக்கா பசிபிக் கடல் பகுதியில் நிறைய அணு குண்டுகளை வீசி சோதனை செய்த காலத்தில் இருந்த கதிர்வீச்சை விட 4-5 மடங்கு அதிகமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.. மனித வரலாற்றில் மிக மோசமான சூழல் பிரச்னையாக இது இருக்கலாம். ஆனால் இதைப் பற்றி அதிகார வர்க்கமோ, அறிவியலாளர்களோ அரசியல்வாதிகளோ ஊடகங்களோ கூட வாய் திறக்க மறுக்கின்றன. இதற்கான காரணம் புரியாமல் இல்லை.
நீராலானது நம் பூமி. நீரில் கடந்த நான்கு வருடங்களாக கொட்டப்படும் அணுக் கழிவுகள் காரணமாக அதில் உயிரும் வாழ்வும் இல்லாமல் போய்விட்டன. உயிரற்ற கடல் விரைவில் நிலத்தையும் பூமியையும் உயிரற்றதாக்கி விடும் என்பதுதான் இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆபத்து. உணவு சுழற்சி பாதிக்கப்படும்போது அது கடைசியில் மனிதனையும் பாதிக்கும் என்பது மனித குலம் அறியாத உண்மை இல்லை. இதைத்தான் நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்லப் போகிறோம். உயிரற்ற கடல், உயிரற்ற நிலம், உயிரற்ற பூமி. தோல்விகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஒரு போர். வாழ்வின் மீதான் வேட்கையை பலியாகக் கோரும் உயிரற்ற போராட்டம். பேராசையும் அதிகாரத்தின் பெரும் பசியும் கொண்ட ஆளும் வர்க்கத்திடம் நாம் அனைத்தையும் இழந்து நிற்கிறோம். எல்லா உயிரினங்களுக்குமானது இவ்வுலகு. எல்லாவற்றையும் கொன்று நாமும் அழியக் காத்திருக்கிறோம். பல போர்களையும் வெற்றி தோல்விகளையும் சந்தித்திருக்கும் மானுட வரலாற்றின் ஆகப்பெரிய, ஆக மோசமான, அவமானகரமான தோல்வி இது.
பொறியாளர் சுந்தர்ராஜன்