பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் நீர்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவின் அறிக்கையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளியிட முடியாது என தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 5,476 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்ட அமைவிடமானது 26.54% நீர்நிலைகளையும், 63.81% வேளாண் நிலங்களையும் உள்ளடக்கியது. இதன் காரணமாக திட்டத்தால் பாதிக்கப்படும் கிராம மக்கள் 778 நாட்களாகத் தொடர்ந்து விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
மக்களின் போராட்டத்தையும் தாண்டி, இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவது, தொழில்நுட்ப – பொருளாதார அறிக்கைகள் மற்றும் பெருந்திட்டம் தயாரிப்பது, சுற்றுச்சூழல் மற்றும் பிற அனுமதிகளைப் பெறுவது உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் வேகமாக முன்னெடுத்து வருகிறது.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் அப்போதைய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் “ புதிய விமான நிலைய திட்டப்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்வதற்கும், அதனை தொடர்ந்து பராமரிப்பதற்கும் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கும், புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் மாற்று திட்டங்களை பரிந்துரைக்கவும், ஒரு உயர்மட்ட தொழில் நுட்ப
குழு அமைக்கப்படும். இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் காக்கப்படும். மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும்” என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் உயர் மட்டக்குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. இந்தக் குழுவின் அறிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அளித்த பதிலில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து விட்டதாகவும், ஆனால் அந்த அறிக்கையைப் பகிர முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
இதற்குக் காரணமாக ”மேற்படி தகவலை தற்பொழுது வழங்கும் பட்சத்தில் அது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) (a) கீழ் விதிவிலக்கு பெற்ற தகவல்” எனத் தமிழ் நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், திட்ட அமைவிடத்தில் உள்ள கால்வாய், ஓடைகளை வழிமாற்றம் செய்ய நீர்வளத்துறையின் பரிந்துரைகள் மற்றும் அனுமதியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கேட்டுப் பெற்றுள்ளதாகவும் ஆனால், நீர்வளத்துறை வழங்கிய பரிந்துரைகள் மற்றும் அனுமதியைப் பகிர முடியாது எனவும் RTI மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் பதிலளித்துள்ளது. இதற்கும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தகவலைப் பகிர முடியாது என்றே பதிலளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவின் கதிரேசனிடம் கேட்டபோது “ இந்த அறிக்கை மிகவும் முக்கியமானது என்பதால் இதைப் பொதுவில் வெளியிடக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசு அதை வெளியிட மறுக்கிறது. நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அரசு, ஏன் அறிக்கையை வெளியிட மறுக்கிறது. இத்திட்டத்திற்கான அரசாணையும்கூட அரசு முறையாக வெளியிடவில்லை. பொதுமக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராடிதான் அரசாணையின் நகலையேப் பெற முடிந்தது. இப்போது மச்சேந்திரநாதன் IAS தலைமையிலான அறிக்கையினைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டும்கூட தர மறுப்பது அரசுக்கு இந்த விஷயத்தில் துளியும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதைக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.