பட்டினச்சேரி சி.பி.சி.எல் எண்ணெய் குழாய் கசிவு – மறுக்கப்படும் சூழியல் நீதி?

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடந்த மார்ச் 2 அன்று ஏற்பட்ட  சி.பி.சி.எல் நிறுவனத்தின்  கச்சா எண்ணெய் குழாய் கசிவு, அந்தப்பகுதி மீனவமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டு தீவிபத்து ஏற்படுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள்.

தற்போது சி.பி.சி.எல் நிறுவனத்தின் எண்ணெய் கசிவு தடுத்து நிறுத்தப்பட்டு, வரும் மே 31 க்குள் குழாய் அகற்றப்படுமென மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டிருந்தாலும், இந்த எண்ணெய் கசிவிற்கான காரணம் என்ன? அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன?  சி.பி.சி.எல் நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட சட்ட ரீதியான நடவடிக்கை என்ன? என்பவை கேள்விக்குறியாகவே உள்ளது. எண்ணெய் குழாயை அகற்ற வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கை வென்றிருந்தாலும், ஒட்டுமொத்தமாக சூழியல் நீதி மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றே இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

பட்டினம், சேரி, குப்பம் என இன்றளவும் தென்படும் நெய்தல் நில ஊர்கள் தனித்துவமிக்க  நெய்தல் குடிகளின் மரபை தாங்கிநிற்கும் தமிழ் நில வரலாற்றின் தொடர்ச்சி! ஆனால், அவை இன்று கடும் இடரைச் சந்தித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள பல கடலோர கிராமங்கள் மெல்ல மெல்ல சுவடற்று  அழிவை நோக்கி  தள்ளப்பட்டு வருகின்றன.

தொழிற்புரட்சிக்குப் பிறகான காலகட்டத்தில் முதலாளித்துவப் பொருளாதார முறையால் ஏற்பட்டக் காலநிலை மாற்றப்  பேரிடர்களின் தாக்கம் உச்சத்தை எட்டிவரும் நிலையில், இன்று அதனால் ஏற்படும்  பாதிப்புகளுக்கு மத்தியில்,  வளர்ச்சித்திட்டங்கள் எனும் போர்வையில் கடலோரங்களில் முன்னெடுக்கப்படும் திட்டங்களால் நெய்தல் நில மக்களின் பொதுப்பயன்பாட்டு நிலங்கள் பிடுங்கப்படுவதும், கடலில் எழுப்பப்படும் கட்டுமானங்களால் கடலரிப்பு அதிகரித்து வருவதும் வாடிக்கையாகியுள்ளது.

இவ்வாறான பேரிடர்களில் ஒன்று தான், கடந்த மார்ச் 2 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவகிராமத்தில் நிகழ்ந்த கச்சா எண்ணெய் குழாய் கசிவு..

 

சி.பி.சி.எல் எண்ணெய் குழாய் – பின்னணி

1993 ஆம் ஆண்டு, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்) நிறுவனம், காவிரி பேசின் ரீபைனரி எனப்படும்  தனது  இரண்டாவது கச்சா  எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம் பகுதியில் நிறுவியது.

தொடக்கத்தில் 0.5 MMTPA திறன் கொண்டதாக உருவாக்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையம், பின்னர்,  1.0 MMTPA எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த சுத்திகரிப்பு நிலையம்,  காவிரிப் படுகையில் ONGC நிறுவனத்தின் கிணறுகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. எனினும், தொழிநுட்பக் காரணங்களால்  கடந்த 1/04/2019 அன்றோடு   எண்ணெய் சுத்திகரிப்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளையில், நரிமணம் சுத்திகரிப்பு நிலையத்தை 9 MMTPA  திறன் கொண்டதாக விரிவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதேவேளையில்,எண்ணெய் சுத்திகரிப்பு பணி நிறுத்தப்பட்டு இருந்தாலும் கூட,  ONGC நிறுவனத்திற்கு சொந்தமான கிணறுகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயானது  நரிமணம் சுத்திகரிப்பு நிறுவனத்தின் கொள்கலன்களில் சேகரிக்கப்பட்டு , 45 நாட்களுக்கு ஒருமுறை மணலியில் உள்ள சி.பி.சி.எல் நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்படுவதற்காக,  9KM நீளமுடைய 20’’ குழாயின் வழியாக நரிமணத்திலிருந்து, காரைக்கால் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகூர் பட்டினச்சேரி கடற்கரை வழியாக காரைக்கால் துறைமுகம் நோக்கிச் செல்லும் இந்த குழாயில் தான்,   கடந்த மார்ச் 2 அன்று எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இந்த எண்ணெய் குழாய் உயிர்ச்சூழல் மிக்க அலைகளின் தாக்கம் கொண்டப் பகுதியில்,  குறிப்பாக தாழ்வலை கோட்டிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

எண்ணெய் கசிவினால்  ஏற்பட்ட பாதிப்புகள்

எண்ணெய் கசிவு கடலில் கலந்ததன் காரணமாக மீன் இனங்கள், இறால் வகைகள் செத்து மிதந்தன. மேலும், அருகிலேயே வெட்டாறு ஆற்றிலும் இதன்  பாதிப்புகள் தென்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதோடு மட்டுமல்லாது, எண்ணெய் கசிவின்போது வெளியாகிய நச்சு வாயுக்களால் பட்டினச்சேரி மீனவ மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு கண்ணெரிச்சல், தலை சுற்றல் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது காற்று தெற்கு நோக்கி வீசிக்கொண்டிருந்ததன் காரணமாக அருகில் உள்ள மீனவக் கிராமங்களான சாமந்தான்பேட்டை, நம்பியார் நகர், ஆரியநாட்டுத் தெரு மற்றும் அக்கறைப்பேட்டை, கீச்சான்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள்வரை இதன் பாதிப்பு உணரப்பட்டதாகவும், மீன்களில் பெட்ரோல் வாடை வந்ததாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக, 10 நாட்களுக்கும் மேலாக மீன்பிடியும், விற்பனையும் பாதிப்படைந்தது. குறிப்பாக நாகை மாவட்டப் பகுதியில் அதிகளவில் பெண்கள் மீன்விற்பனையிலும், தலைசுமட்டுப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மீன் விற்பனை முழுவதுமாக பாதிக்கப்பட்டதன் காரணமாக பெண்கள், குறிப்பாக தனித்து வாழும் பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும், இடம்பெயர் மீனவக் குடும்பங்களையும் சார்ந்தப் பெண்களும் கடுமையான அளவிற்கு பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கூறிய மீனவப்பெண்மணி ஒயிலம்மா, “குழாயிலிருந்து வெளியேறிய வாயுவினால் பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிப்படைந்தனர்.  குழாயை அகற்றினால் மட்டுமே மீனவர்கள் பிழைக்க முடியும். எங்கள் மீனவப் பெண்கள் கொண்டு சென்ற மீன்களில் ‘மண்ணெண்ணெய் வாடை வீசுவதாகக்கூறி’ வாடிக்கையாளர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதன் காரணமாக மீனவப் பெண்களின் வாழ்வே பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுக்கு முன்னர் இந்த குழாயைப் பதித்தனர்.  அதற்கு முன்பு வரை கடற்கரைப் பகுதியில்தான் கட்டுமரத்தை நிறுத்தி வந்தோம். இந்த குழாய் அமைக்கப்பட்ட பிறகே, எங்கள் ஊரின் கடற்கரைக்கு வடக்கே வெட்டாற்றின்  கரையில் படகுகளை நிறுத்தத்தொடங்கினோம். அப்போது, எங்கள் ஊரின் கடற்கரைக்கும் கடலுக்கும் மிகுந்த தூரம் இருந்தது. ஆனால் தற்போது கடலரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். புயல் காலங்களில் எங்கள் கிராமம் கடுமையான பாதிப்பைச சந்திக்கிறது” என்று கூறினார்.

மேலும், எண்ணெய் குழாயினால் ஏற்பட்ட சூழியல் பாதிப்புகள் குறித்து தெரிவித்த மீனவசமூக இளைஞர் ஒருவர், “கச்சா எண்ணெயால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் நிலத்துக்குக்கீழ் வாழக்கூடிய மட்டி உள்ளிட்ட உயிரினங்களுக்கு வாழத்தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. இதேபோன்று, கடல் பரப்புக்கு மேல் உள்ள மீன்களும் கடலில் செத்து மிதந்தன. கச்சா எண்ணெய் ,கசிவால் காற்றில் கலந்த வாயுக்களால் ஊர்மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. பெரியவர்கள் பரவாயில்லை, ஆனால், சிறிய குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் விளைவுகள் இதன் பின்னரே தெரிய வரும்.. சிபிசிஎல் நிர்வாகம் எங்களுக்கு எவ்வித நஷ்ட ஈடும் கொடுக்கவில்லை, நாங்களும் அதனைக் கோரவில்லை. இந்த குழாய் அகற்றப்படவேண்டும் என்பதே  எங்கள் போரட்டத்தின் முதன்மை இலக்கு” என்றும் குறிப்பிட்டார்.

இந்த விபத்து குறித்து சந்திக்க நேர்ந்த மீனவமக்கள் அனைவரும், பட்டினச்சேரி கிராமத்தின் கடற்கரை கடலரிப்பினால் பாதிக்கப்படுவது குறித்து குறிப்பிட்டனர்.

காணாமல் போன பட்டினச்சேரி மீனவர்களின் பொதுவளம் – கடலரிப்பின் நிலை

கடந்த 20 ஆண்டுகளாக பட்டினச்சேரி கிராமத்தின் கடலோரமானது கடுமையான கடலரிப்பினைச் சந்தித்து வருகின்றது.

குறிப்பாக, இந்தப் பகுதியில் மிகப்பெரும் மணல் மேடு ஒன்றில்,  சட்ட விரோதக் கடத்தலைத் தடுக்கும் வண்ணம் பெரிய கண்காணிப்பு கோபுரம் ஒன்று இருந்ததாகவும், 1977 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் போது இந்த கட்டிடத்தில் இருந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்தாகவும் இப்பகுதி மீனவமக்கள் குறிப்பிடுகின்றனர். இதனை அவர்கள் ‘பங்கு மோடு’ என்றும் அழைத்துவந்துள்ளனர். ஆனால், தற்போது அந்த பெரிய கட்டிடமே கடலரிப்பின் காரணமாக கடலுக்குள் மூழ்கிவிட்டதாகவும் இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், இவ்விடம் பங்குனி ஆமைகள் எனப்படும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தாகவும், காலப்போக்கில் ஏற்பட்ட கடலரிப்பினால் மணற்பாங்கான பகுதிகளின் இழப்பாலும் ஆமை முட்டையிடுவது படிப்படியாக குறைந்து ஆமைகள் வருவதே நின்றுள்ளது. தற்போது அவ்வப்போது ஆமைகள் இறந்து இப்பகுதியில் கரை ஒதுங்குவது தொடர்கதை ஆகிவருவதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் பேரவையைச் சேர்ந்த விஜயலட்சுமி குறிப்பிட்டார்.

இந்நிலையில், இவ்வாறான பாதிப்புகளுக்கு, இப்பகுதியின்  கடற்கரையில் அமைந்துள்ள சி.பி.சி.எல் நிறுவனத்தின் தூண்டில் வளைவும், 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட காரைக்கால்  மார்க் துறைமுகமே முதன்மைக் காரணம் என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்விரண்டு கட்டமைப்புகளும் நாகூர் பட்டினச்சேரி கிராமத்திற்கு மிக அருகில் வட பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பட்டினச்சேரி கிராம கடலோரப் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களால் கைவிடப்பட்ட 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் இருந்ததுள்ளது. ஆனால், தற்போது அவையும் கடலரிப்பின் காரணமாக சுவடின்றி கடலால் அரிக்கப்பட்டு விட்டதாகவும் இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளையில், எண்ணெய் கசிவு குறித்த களஆய்வின் போது வனத்துறையால் சுனாமிக்கு பிறகான காலங்களில்  நடப்பட்ட சவுக்கு மரங்களும் கடலரிப்பினால் விழுந்து கிடப்பதையும், கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட  சில தென்னை மரங்களையும்  காண முடிந்தது.   அதோடு, சுமார் 20 வருடங்களுக்கு முன்னர், இந்த குழாய் கடற்கரையில் இருந்து தொலைவில் பதியக்கப்பட்டிருந்தாக அப்பகுதி மக்கள் கூறியிருந்த நிலையில், எண்ணெய் கசிவு ஏற்பட்டிருந்த குழாய் தாழ்வலை கோட்டில் கிடந்ததையும் நம்மால் காணமுடிந்ததது. அதாவது, அலை தாக்கமுள்ள தாழ்வலைக் கோட்டிற்கும் – உயரலைக் கோட்டிற்கும்  இடைப்பட்ட கடற்பகுதியில் கிடந்ததையும் காண  முடிந்தது.

இந்நிலையில், மீனவமக்கள் கூறியதன் அடிப்படையில் தாழ்வலைக் கோட்டிலிருந்து குறிப்பிட்ட துரத்தில் பதிக்கப்பட்ட குழாய் கடல் அலைகள் துவங்கும் தாழ்வலைக் கோட்டிற்கு வந்தது எவ்வாறு? இதிலிருந்து இந்தப் பகுதியில் சி.பி.சி.எல் மற்றும் மார்க் துறைமுகத்தின் கட்டுமானங்கள் ஏற்படுத்திய கடலரிப்பின் காரணமாக குழாய் வரை கடலரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை யூகிக்க முடிகிறது.

இதுகுறித்து கூறிய பட்டினச்சேரி மீனவ கிராமத்தின் தலைவர் கனகராஜ், “நாகூர் பட்டினசேரி கடற்கரையோரம் இரண்டு எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது 30 அடி ஆழத்தில்தான் பதிக்கப்படுகிறது. எவ்வித பாதிப்பும் வராது என சி.பி.சி.எல் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், நாங்கள் கடலுக்கு சென்றிருந்த சமயத்தில்  2 அடி ஆழத்தில் பதித்து விட்டனர். மேலும், கடலிலிருந்து 100மீ மேற்கே பதிக்கப்பட்ட குழாய், கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு, இன்று அந்த  குழாய் 50மீ தூரத்தில்  கடலில் உள்ளது. கடல் அலையினால்  அந்த குழாய் பாதிக்கப்பட்டதன் காரணமாக இன்று கச்சா எண்ணெய் கசிவு நிகழ்ந்துள்ளது”. என்று கூறினார்.

இந்தப் பகுதியில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பினால்  குழாய் பாதிக்கப்பட்டது குறித்து சி.பி.சி.எல் நிறுவனம் கவனம் செலுத்தாது அலட்சியப்போக்குடன் செயல்பட்டது இந்த விபத்திற்கான காரணம் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.

அநீதியின் உச்சம்

இந்நிலையில், கடந்த மார்ச் 16 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், வரும் மே 31 ஆம் தேதிக்குள் சி.பி.சி.எல் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் அகற்றப்படும் என முடிவு எட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த எண்ணெய் குழாய் கசிவிற்கான காரணமென்ன? இதுகுறித்து மாசுக்கட்டுபாட்டு வாரியம் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் என்ன? சிபிசிஎல் நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா? வெட்டாறு ஆற்றின் கழிமுகத்திற்குள்ளும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? மக்களுக்கு ஏற்பட்டுள்ள சூழியல் பாதிப்பு குறித்து தொடர் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதா என்பவை குறித்த வெளிப்படத்தன்மை இல்லை. இது பாரபட்ச நீதி வழங்கப்பட்டுள்ளதை வெளிப்படையாகச் உணர்த்துகிறது.

ஒருபுறம் கடலரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் தங்களின் கடலோர பொதுவள ஆதாரங்களை இழந்துள்ள மீனவமக்கள், இதுபோன்ற வளர்ச்சியின் போர்வையில் முன்னெடுக்கப்படும் நிறுவனங்களால் ஏற்படும் பேரிடர்களாலும் மிகவும் விளிம்புநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

 

  • பிரதீப் இளங்கோவன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments