நெகிழி ஒழிப்பைத் தீவிரப்படுத்த ’மீண்டும் மஞ்சப்பை இயக்கம்’

Image: India climate Dialogue

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ள நெகிழித் தடையை தீவிரப்படுத்த மீண்டும் மஞ்சப்பை எனும் மக்கள் இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது.

தமிழக அரசு சுற்றுச்சூழல் அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நெகிழியைக் கட்டுப்படுத்த வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளுக்கான அரசாணை ஒன்றைத் தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. அரசாணையின் முதல் பக்கத்திலேயே நெகிழியால் ஏற்படும் பாதிப்புகளில் மனிதர்களுக்கு இணையாக மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பிட்டிருப்பது அரசின் முழுமையானச் சூழல் நலன் சார்ந்தப் பார்வையைக் காட்டுகிறது.

நெகிழிக் கட்டுப்பாட்டில் நெகிழிக் குப்பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குக் கடிவாளம் போடுவதும் அதேநேரத்தில் மக்களுக்கு நெகிழி மற்றும் அதன் மாற்றுகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதும் அவசியம். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒரு பக்கம் குறைவுபட்டாலும் முயற்சி செல்லாததாகிவிடும். தமிழக அரசின் அரசாணையில் இந்த இரண்டு பக்கங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிறுவனங்களைத் தம் குப்பைகளுக்குப் பொறுப்பாக்கும் ‘நீடித்த உற்பத்தியாளர் பொறுப்பு’ (Extended Producers Responsibility) குறித்தும் அதே நேரத்தில் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க ‘மீண்டும் மஞ்சப்பை’ என்கிற விழிப்புணர்வூட்டும் இயக்கம் பற்றியும் அரசாணை விவரித்திருப்பது மிகச்சரியான நடவடிக்கையாகத் தெரிகிறது. குறிப்பாக ‘மரபான இயற்கை சார்ந்த தீர்வுகள்’ நோக்கி நகர்வதாக அரசாணைக் குறிப்பிட்டிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.

G.O_NO. 116 27-Nov-2021 6.41 pm

அதே நேரத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பட்டியலில் அதிகத் தீங்கு விளைவிக்கும் மறுசுழற்சி செய்ய இயலாத சாஷேக்கள், பல்லடுக்கு நெகிழிப் பொட்டலங்கள் (Multilayered packaging) போன்றவற்றையும் உள்ளடக்கி இந்த முன்னெடுப்பை  விரிவுபடுத்த வேண்டியது அவசியம். மேலும் சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தும் நெகிழிப் பொட்டலங்கள் போன்றவை தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில் பெருநிறுவனங்களின் நொறுக்குத்தீனிப் பொட்டலங்கள் போன்றவை விடுவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

நெகிழி ஒழிப்பில் மறுசுழற்சி செய்யத்தக்க நெகிழியை மறுசுழற்சி செய்வதும் மற்றவற்றைத் தடைசெய்வதுமே ‘நெகிழிக் கழிவில்லா தமிழகத்தை’ உருவாக்கும். நெகிழியை எரித்து அழிக்கும் சாம்பலாக்கிகள் மற்றும் பைராலிசிஸ் நிலையங்களை அமைப்பது கழிவுகளை அதிகரிக்கவேத் துணைபுரியும். எனவே இத்திட்டங்களையும் முதற்கட்டத்திலேயே மக்களின் உடல்நலன் மற்றும் சூழல் நனல் அடிப்படையில் உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

– ஜீயோ டாமின்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments