தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் உற்பத்தி – தகவல் கொடுப்போர்க்கு பரிசு அறிவிப்பு

Bannedplastic
Image: TNPCB

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்  குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலில் உள்ளது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகள்,  பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட்டுகள்,  மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதற்கும் சேமித்து வைப்பதற்கும் விநியோகம் விற்பதற்கும் உபயோகிப்பதற்கு இந்தத் தடை பொருந்தும்.

G.O_84_BanPlastic3718

 

ஆனால், தமிழ்நாடு முழுவதும் இந்தத் தடை அமலான காலத்தில் இருந்து தற்போது வரை போதுமான அளவிற்கு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாத காரணத்தால் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டதற்கான அடையாளமே தெரியாத அளவில் இன்றளவும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு இருந்து வருகிறது.
இதனைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை தீவிரமாக கண்காணிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடுமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சென்னையைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் ஆண்டனி ரூபின் கிளமென்ட் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதி நடைபெற்றபோது பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்துவதில் அரசுத்துறைகள் செயல்பாடு போதுமான அளவில் இல்லை என்கிற கருத்தை பசுமை தீர்ப்பாயம் வெளிப்படுத்தியது. மேலும் அன்றைய தினம் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில் “ பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்வதற்கு வெறும் அரசாணைகளும் உத்தரவுகளும் மட்டும் போதாது. அரசுத் துறைகளின் உறுதிப்பாடு அவசியம். தொடர் கண்காணிப்பு மற்றும் அபராதம் விதித்தல் உள்ளிட்ட செயல்பாடுளால் தான் பிளாஸ்டிக் தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்த முடியும். இதில் ஏதாவது தொய்வு இருந்தால் பிளாஸ்டிக் தடை என்பது அரசாணை தாளில் மட்டுமே இருக்கும் என்பதை அரசுத் துறைகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர்கள் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவதற்கு மாநில அளவில் மற்றும் மண்டல அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். ப்ளாஸ்டிக் தடை குறித்த விரிவான அறிக்கையை டிசம்பர் 9ஆம் தேதிக்குள்ள தீர்ப்பாயத்தில் சமர்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

DO 8.11.21 _ OA.85.2020

இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்ட விரோதமாக செயல்படும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது எனவும் இந்த உற்பத்தியாளர்களின் பெரும்பாலானவர்கள் எந்த அரசுத் துறைகளிடம் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் தற்காலிமாக செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் சட்டவிரோதமாக இயங்கும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் களிடம் தெரிவிக்கலாம் எனவும் அப்படி தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

TNPCB- Press Release - Reward to public to identify banned plastic units (Tamil) - Reg

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள் தொடர்பு விவரங்களை இங்கு https://tnpcb.gov.in/contact.php பெறலாம். புகார்களை மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம் எனவும் புகார் அளிப்பவர்கள் தங்கள் பெயர் முகவரி மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றை அளிக்குமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments