நெகிழிக் கட்டுப்பாடு: ஏற்றங்களும் சறுக்கல்களும்

உலகம் கழிவில்லா நிலையை (zero waste) அடைவதானது, உமிழ்வில்லா நிலையை (zero emission) எட்டுவதற்கு ஒப்பானது. பொருட்களின் உற்பத்தியும் அவற்றின் விநியோகமுமே அத்தனை உமிழ்வுக்கும் காரணமாக இருக்கும் நிலையில், பலகோடி மெட்ரிக் டன் நெகிழிப் பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்பட்டு கழிவாக்கப்படுவதைத் தடுப்பது உலகின் ஒட்டுமொத்த உமிழ்வைக் கணிசமாகக் குறைக்குமென்று ஆய்வுகள் சொல்கின்றன.

இன்று, உலகம் முழுதும் கழிவில்லா நிலையை நோக்கிய செயல்பாடுகள் எனப்படுபவை காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்கான செயல்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறியிருக்கின்றன. இந்தப் பின்னணியிலேயே ஐநாவின் சூழல் திட்டமும் (UNEP) கழிவுகளின் முக்கிய அங்கமான நெகிழியைக் கட்டுப்படுத்துவது குறித்த முன்னெடுப்பைச் செய்துவருகிறது.

இவ்வகையில், ‘இமாலய வெற்றி கொடுத்த இம்மியளவு நம்பிக்கை’ என்ற தலைப்பில் நைரோபியில் கடந்த பிப்ரவரி 28 ஆம் நாள் நடந்து முடிந்த உலகளாவிய நெகிழிக் கட்டுப்பாட்டுக்கான மாநாடு குறித்து பூவுலகு இதழில் முன்பு எழுதியிருந்தேன். நெகிழியைக் கட்டுப்படுத்த உலகம் முழுதும் செயல்படும் 700 க்கும் மேற்பட்ட குடிமக்கள் அமைப்புகளின் தொடர் அழுத்தத்தின் பின்னணியில் நடைபெற்ற அந்த மாநாட்டின் ஐந்தாவது அமர்வில் (UNEA 5.2), வெளியான  வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பானது, ‘மூலப் பொருள் அகழ்வு முதல் கழிவு நீக்கம் வரையிலான நெகிழியின் முழு வாழ்க்கை சுழற்சியிலும் அதைக் கட்டுப்படுத்த, சட்டப்பூர்வமான நிர்பந்தத்தை உருவாக்கும் வலுவான’ ஒப்பந்தத்தை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஏற்படுத்த அனைத்து நாடுகளும் உறுதியளித்திருப்பதாக தெரிவித்தது. இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, விரிவான ஒப்பந்தத்தை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உருவாக்குவதற்காக ‘INC’ (intergovernmental negotiating committee) என்ற பல்தரப்புகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக் குழு ஐநாவால் அமைக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் திட்டமிடப்பட்டிருக்கும் ஐந்து கூட்டங்களில் முதல் கூட்டமானது (INC – 1) மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே  உருகுவே நாட்டில் நவம்பர் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதிவரை நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த கூட்டத்தில், உலகமுழுதுமிருந்து 150 நாடுகளின் பிரதிநிதிகளும், குப்பை சேகரிப்போரையும் உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும், தொழிற்துறைப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

நெகிழியில் சேர்க்கப்படும் நச்சுப் பொருட்களைத் தடுப்பது, அதன்மூலம் மறுசுழற்சியை பாதுகாப்பானதாகவும் எளிதானதாகவும் மாற்றுவது, ஒட்டுமொத்த நெகிழியின் உற்பத்தியைக் குறைப்பதன்மூலம் ஏற்கனெவே பயன்பாட்டில் இருக்கும் நெகிழிப் பொருட்களின் மறுபயன்பாட்டை அதிகரிப்பது போன்றவை இந்த அமர்வின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. வாழ்வாதாரத்துக்காக குப்பை சேகரிப்பு, மறுசுழற்சி போன்றவற்றைச் சார்ந்திருக்கும் உலகின் தென் அரைக்கோள நாடுகளின் பல இலட்சம் தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளும் ‘நியாயமான மாற்றமும்’ (Just Transition) இந்த அமர்வின் முக்கிய பேசுபொருளாக இருந்தது.

 

 

உலகம் முழுதும் செயல்படும் நெகிழிக்கு எதிரான குடிமைச் சமூக அமைப்புகளை ஒருங்கிணைக்கும் ‘Break Free From Plastic’ (BFFP) அமைப்பானது, INC இன் முதல் கூட்டமானது ‘ஏற்றங்களும் சறுக்கல்களும்’ கலந்த ஒன்றாக நிறைவுற்றிருப்பதாகவும், அடுத்த இரண்டுவருட பேச்சுவார்த்தைகளின் இறுதியில், சூழலியல்  வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க பலதரப்பு ஒப்பந்தத்தை உருவாக்க இது வழிவகை செய்யுமென்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

INC – 1 ன் ஏற்றமிகு நடவடிக்கைகளாக, நெகிழி உற்பத்தியையும் பயன்பாட்டையும் குறைத்தல், நெகிழியின் வாழ்க்கை சுழற்சியோடு தொடர்புடைய நச்சுக்களை நீக்குதல், மனித நலனைப் பாதுகாத்தல், நியாயமான மாற்றத்தை உறுதிசெய்தல் போன்றவை, பெருநிறுவன மாசுறுத்திகள் (Large Corporate Polluters) உட்படப்  பெரும்பாலான உறுப்பு நாடுகளால் வலியுறுத்தப்பட்டிருப்பதை BFFP குறிப்பிடுகிறது.

உலகின் மிகப்பெரும் நெகிழி மாசுறுத்திகளான நெஸ்லே மற்றும் யுனிலீவர் போன்ற நிறுவனங்கள், முதல் தலைமுறை நெகிழி (Virgin Plastics) பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க ஒத்துக்கொண்டிருப்பதையும், (தானாகவே முன்வந்து செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு மாறாக) ‘கட்டாயமான’ நெகிழிக் குறைப்பு ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதையும், பிரச்சினைக்குரிய நெகிழிகளைக் (Problemetic plastics) கைவிட முன்வந்திருப்பதையும் வெற்றிகரமான நகர்வுகளாக BFFP கூட்டமைப்பின் அகில உலக ஒருங்கிணைப்பாளரான ‘வான் ஹெர்னெண்ட்ஸ்’ குறிப்பிடுகிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகள், கரீபிய, ஆப்பிரிக்க, பசிபிக் நாடுகளும், ஏராளமான சிறுதீவு நாடுகளும் தம் ‘உயர்ந்த நோக்கங்களை’ ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் வெளிப்படுத்தியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டு கோடி குப்பை சேகரிக்கும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘நியாயமான மாற்றத்துக்கான முன்னெடுப்பு’ (Just Transition Initiative) போன்றவற்றின் பங்களிப்பு இந்த முதல் கூட்டத்தில் முக்கித்துவம் பெற்றிருக்கிறது.

கெடுவாய்ப்பாக, விவாதத்துக்குரிய தலைப்பான, எவ்வாறு அரசுகளும் அமைப்புகளும் இனிவரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது என்பதற்கான வழிமுறைகளையும் விதிகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஏற்கப்படுவது, முடிவுசெய்யப்படாமல் 2023 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வாக்குரிமையானது, ஒன்றியத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியான வாக்குரிமையாக இருக்குமா அல்லது கூட்டமைப்புக்கான ஒட்டுமொத்த ஒரே ஓட்டாக என்பதும், அமர்வின் தீர்மானங்கள் முழுமையான கருத்தொற்றுமையின்படி (கருத்தொற்றுமை இருந்தால் மட்டுமே என்று புரிந்துகொள்ளாலாம்) முடிவுசெய்யப்படுமா அல்லது சரியான நடவடிக்கைகள் என்பதன் அடிப்படையில் முடிவு செய்யப்படுமா என்ற பிரச்சினைகளில் தீர்மானங்கள் எட்டப்படவில்லை. பெரும்பாலான பார்வையாளர்கள், பிந்தையது நெகிழிக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை   நீர்த்துப் போகச்செய்யும் வல்லரசுகள் மற்றும் பெருநிறுவனங்களின் சூழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கருதுகின்றனர்.

கட்டாயமல்லாத முன்கூட்டியே திட்டமிடப்படாத வட்டமேசை விவாதங்கள் முதல்நாள் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு பேச்சுவார்த்தைக்கான மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப்பட்டதானது, குடிமைச் சமூகத்தின் குரலை ஒடுக்கி, திசைதிருப்பி, அவர்களை அர்த்தமுள்ள பங்கேற்பைச் செய்யவிடாமல் இருக்க முன்னெடுக்கப்பட்ட யுக்தியாகக் கருதப்படுகிறது.

இதை எதிர்த்து BFFP  குடிமைச் சமூக அமைப்புகள், மாசுறுத்தும் பெருநிறுவனங்களை ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேற்றவும், அறிவியலாளர்கள், காலநிலை மற்றும் நெகிழி மாசால் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்கள், முறைசாராத் தொழிலாளர்கள், தொழிலாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்புகளின் குரலையும் அங்கீகரித்து அவற்றையும் உள்ளடக்கும்படியாக பயனுள்ள பேச்சுவார்த்தையை வடிவமைக்கவும் INC க்குக் கோரிக்கை விடுத்தது.

முதல் சில நாள் பேச்சுவார்த்தைகளின்போது, பெருநிறுவன மாசுறுத்திகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதையும், என்ஜிஓக்களின் போர்வையில் பெருநிறுவன மாசுறுத்திகள் மறைந்திருப்பது குறித்தும், UNEP வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ளவில்லையென தங்கள் கவலைகளைப் பல செயல்பாட்டாளர்கள் பதிவு செய்தனர். உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாடு திட்ட வரைவுக்குழுவைச் சார்ந்தவர்கள், புகையிலை தொழிற்துறையை தமது முந்தையப் பேச்சுவார்த்தையிலிருந்து விலக்கியதன்மூலம் எட்டப்பட்ட வெற்றிகரமான ஒப்பந்தத்தைப்போலவே, பெருநிறுவன மாசுறுத்திகளை நெகிழி ஒப்பந்த பேச்சுவார்த்தியயிலிருந்தும் வெளியேற்ற வேண்டுமெனக் கடுமையான அழுத்தம் கொடுத்தனர்.

நேர்மறையான சிறு நகர்வுக்கு முன்னேறியிருக்கும் நெஸ்லே மற்றும் யுனிலீவர் போன்ற நிறுவனங்கள், நீடித்த தொடர் பயன்பாட்டுக்கான (Reuse systems) நெகிழியில் முதலீடு செய்வது, ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியைக் கைவிடுவது, சேஷேக்கள் போன்ற பிரச்சனைக்குரிய நெகிழி உற்பத்தியைத் தவிர்ப்பது, ஒட்டுமொத்த நெகிழி பயன்பாட்டைக் குறைப்பது போன்ற தம் செயல்பாடுகள்மூலம்  மற்ற நிறுவனங்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரி நிறுவனங்களாக மாறவேண்டுமென்று வான் ஹெர்னெண்ட்ஸ் தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.

நெகிழி மாசை குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தும் கட்டாய ஒப்பந்தம் அவசியமானது என்றும் நெகிழி மாசுக்குக் காரணமான பெருநிறுவனங்களை பொறுப்பாக்குவது உலக அரசுகளின் கடமையென்றும் குறிப்பிடும் BFFP இன் ஆசிய பசிபிக் ஒருங்கிணைப்பாளரான சத்யரூபா சேகர், “உலகமுழுதும் சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்ட நீடித்த தொடர் பயன்பாட்டுப் பொருட்களே நமக்குத் தேவை” என்கிறார். உருகுவே பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த அவர், இந்த நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, (மட்கும் நெகிழிபோன்ற) சூழலுக்கு ஒவ்வாத ஆபத்தான தொழில்நுட்பத் தீர்வுகளை நெகிழிக்கு மாற்றாக பெருநிறுவனங்கள் முன்னிறுத்திவிடக்கூடாது என்ற சூழல் அமைப்புகளின் அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.

சர்வதேச குப்பை சேகரிப்போர் கூட்டமைப்போடு சேர்ந்து தனது நாடான தென்னாப்பிரிக்காவும், கென்யாவும் ‘நியாயமான மாற்றத்துக்கான முன்னெடுப்பை’த் தொடங்கியிருப்பது தனக்கு தனிப்பட்ட விதத்தில் மகிழ்ச்சியைத் தருவதாக தென்னாப்பிரிக்க செயல்பாட்டாளர் ஒருவர் குறிப்பிடுகிறார். BFFP குறிப்பிட்டதுபோலவே இது ஏற்றங்களும் சறுக்கல்களும்மிக்கதொரு நிகழ்வுதான்.

தனிப்பட்ட விதத்தில் இங்கு எனது இரு அனுபவங்களை நான் இங்கு நினைவுகூர்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு உலகமுழுதும் யுனிலீவரின் நெகிழி சேஷேக்களுக்கு எதிரான பெரும்பிரச்சாரம் ‘Quitsachets’ என்ற பெயரில் குடிமைச் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டது. பூவுலகின் நண்பர்களும்கூட அதில் தன்னை இணைத்துக்கொண்டிருந்தது. சமூக வலைதளங்களின் மூலமாக மட்டுமின்றி மறுசுழற்சி செய்யமுடியாத நெகிழிக் குப்பைகளை பொட்டலமாக்கி உற்பத்தியாளருக்கே திருப்பி அனுப்பிவைப்பதுவரை நீண்டது அந்த முயற்சிகள். அப்போது தீவிரச் சூழல் செயல்பாட்டாளரான ஒரு நண்பரொருவர், “என்னதான் நாம கத்தினாலும்  அவங்க காதுக்கு எட்டவே செய்யாது” என்று விரக்தியோடு குறிப்பிட்டார். எனக்கு நெகிழி விஷயத்தில் அத்தகைய விரக்தி இல்லையென்றாலும்கூட நல்லது நடக்குமென்று அவரை நம்பவைக்குமளவுக்கு என்னால் எதையும் சொல்ல முடியவில்லை.

இன்னொரு நிகழ்வு: சமீபத்தில் நான் கலந்துகொண்டிருந்த தொலைக்காட்சி நிகழ்வொன்றுக்குப்பின்னர் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நெகிழி தொழிற்துறையின் பிரதிநிதி ஒருவர் “என்ன கத்துனாலும் அவங்களால எங்களை அசைக்க முடியாது” என்று தனிப்பட்ட விதத்தில் தன்னிடம் சவால்விட்டதாக அந்தத் தொலைக்காட்சியின் ஊடக நண்பரொருவர் பின்னர் தெரிவித்தார். அப்போதும்கூட அந்த நண்பரிடம் தொழிற்துறை ஜாம்பவானுக்கு எதிராகச் சவால்விட எனக்கு எந்த ஆயுதங்களும் கையிலில்லை. நான் அவநம்பிக்கையில் இல்லையென்றாலும்கூட எவரையும் நம்பிக்கைகொள்ளச் செய்ய என்னிடம் எதுவுமில்லை.

இவை நடந்து சில மாதங்கள்தான் ஆகிவிட்டிருக்கிறது.

இப்போது உலகின் நெகிழிப் பேரரசின் சக்கரவர்த்திகளில் ஒன்றான யுனிலீவரும் நெஸ்லேவும் தாம் ஏற்படுத்தியிருக்கும் சேதங்களை ஒத்துக்கொண்டு அவற்றைச் சரிசெய்ய ஒரு அடி முன்னகர்ந்திருக்கிருக்கிறன. நகர்ந்திருக்கின்றன என்று சொல்வதைவிட நகர்த்தப்பட்டிருக்கின்றன என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன். நாளை இவர்களின் சக சக்கரவர்த்திகளும் இத்தகைய நெருக்கடிக்கு ஆட்படக்கூடும். எனினும், நாம் எதிர்பார்க்கும் புரட்சிகரமான மாற்றங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படலாம். களத்தில் எதுவும் இன்னும் மாறிவிடாத நிலையில் இப்போதும்கூட எவருக்கும் நம்பிக்கையூட்டிவிட என்னிடம் எதுவுமில்லை.

ஆனால், எது இந்தத் தொழில்சாம்ராஜ்யங்களைப் சரியான திசையில் நகர்த்துகிறது என்பதை நான் உணர்கிறேன். நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். அந்த ஆயுதத்தை இன்னும் வீரியமாய் கையிலேந்தி, வெல்லும்வரைப் போராடுவதைவிட நமக்கு வேறு வாய்ப்புகளில்லை. ஒருவேளை இறுதி வெற்றி எட்டப்படும்போது நாம் அதைக்காண முடியாது போகலாம்; ஆகவே, சிறுசிறு வெற்றிகளைக் கொண்டாடியபடியே சறுக்கல்களிலிருந்து மேலெழுந்து தொடர்ந்து பயணிப்போம்.

நம் பிள்ளைகளின் உலகமேனும் நெகிழி நச்சற்ற ஒன்றாக மலரட்டும்!

[email protected]

  • ஜீயோ டாமின்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments