ஆரோக்கியத்தின் மறுபிறப்பு: The Plastic Detox ஆவணப்பட அறிமுகம் 

plastic

இன்று நவீன மனித வாழ்க்கையின் அத்தியாவசிய அங்கமாக நெகிழி மாறியிருக்கிறது. ஆனால், அதன் பின்னால் மறைந்திருக்கும் பேராபத்துகளை அறிவியல் ஆதாரங்களுடன் வெளிச்சமிட்டுக்காட்டுகிறது  “தி பிளாஸ்டிக் டிடாக்ஸ்” (The Plastic Detox) எனும் ஆவணப்படம்.

மார்ச் 16ஆம் நாள் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம், சுமார் ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்கள் நீளமுடையதாகும். லூயி சைஹோயோஸ் (Louie Psihoyos) மற்றும் ஜோஷ் மர்பி (Josh Murphy) ஆகியோர் இயக்கியுள்ள இப்படம், உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை ஒருங்கிணைத்து, நெகிழி சேர்மானங்களின் (additives) மறைமுக விளைவுகளை ஆழமாக ஆராய்கிறது.

நெகிழி தொடர்பான சிக்கல் என்பது வெறும் சுற்றுச்சூழல் சீர்கேடு மட்டுமல்ல; அது மனித உடலுக்குள் நுழைந்து, குறிப்பாக இனப்பெருக்க அமைப்பைப் பாதிக்கும் ஆழமான சுகாதார நெருக்கடியாக மாறியிருப்பதை இப்படம் ஆதாரப்பூர்வமாகக் காட்டுகிறது. புகழ்பெற்ற தொற்றுநோயியல் மருத்துவ நிபுணரான  ஷானா எச். ஸ்வான் அவர்களின் பல ஆண்டுகால ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத நெகிழி   வேதி நச்சுகளின் மறைமுக ஆபத்துகளை நுணுக்கமாகத் தெளிவுப்படுத்துகிறது.

இந்த அறிவியல் கருத்துகளை நடைமுறையில் புரியவைக்க, படம் “விளக்கமளிக்க முடியாத மலட்டுத்தன்மை” (Unexplained Infertility) சிக்கலால் பல ஆண்டுகளாகத் தவித்துக் கொண்டிருக்கும் ஆறு தம்பதிகளின் கதையோடு தொடங்குகிறது ஆவணப்படம். மருத்துவ அடிப்படையில் எந்தக் குறைபாடும் கண்டறியப்படாத நிலையிலும், பத்தாண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைப்பேறு தள்ளிப்போகும் அத்தம்பதிகளுக்கு மருத்துவர் ஷானா ஸ்வான் ஒரு மூன்று மாத கால “நெகிழி நச்சு நீக்கச் சவால்”ஐ முன்வைக்கிறார். இச்சவாலின் நோக்கம், அன்றாட வாழ்க்கையில் நாம் அறியாமலேயே புழங்கும் நெகிழியின் வேதி நச்சுக்களின் வெளிப்பாடுகளை (Exposure) முழுமையாகக் குறைப்பதாகும்.

மருத்துவர் ஷானா ஸ்வான் தனது “கவுண்ட் டவுன்” (Count Down) ஆய்வு புத்தகத்தில் எச்சரித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள், இந்த ஆவணப்படத்தில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில், உலகளவில், ஆண்களின் விந்தணு எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்துள்ளது என்கிற தகவல் அறிவியல் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்போக்கு தொடர்ந்தால், 2045ஆம் ஆண்டிற்குள் பல தம்பதிகள் இயற்கையாகக் கருத்தரிக்கும் திறனை இழக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு மிக முக்கியக் காரணம் நாளமில்லாச் சுரப்பியைச் சீர்குலைக்கும் வேதிப்பொருட்கள்  (Endocrine Disrupting Chemicals – EDCs) எனப்படும் ஹார்மோன் சீர்குலைப்பான்கள் ஆகும். நாளமில்லாச் சுரப்பி மண்டலம் என்பது உடலின் ‘தலைமைச் செயலகம்’ போலச் செயல்பட்டு, இயக்குநீர்களான ஹார்மோன்களை உருவாக்கி, அவற்றைச் சமிக்ஞைகளாக இரத்தத்தின் வழியாக உடலின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறது. அந்த ஹார்மோன்கள் குறிப்பிட்ட உறுப்புகள் மற்றும் உயிரணுக்களைச் சென்றடைந்து, அவற்றுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நுணுக்கமான சமிக்ஞைகளின் மூலம் வழிநடத்துகின்றன. இதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றம், இனப்பெருக்கம், உடல் வெப்பநிலை, மனநிலை, எலும்பு வலிமை மற்றும் இரத்த சர்க்கரை அளவு போன்ற முக்கியச் செயல்கள் அனைத்தும் துல்லியமாக ஒழுங்குப்படுத்தப்படுகின்றன. வெளிப்புற வேதியியல் குறுக்கீடுகளால் இச்சமிக்ஞை பொறிமுறையின் (signaling mechanism) ஒருமைப்பாடு பாதிக்கப்படும்போது, பல்வேறு உடல் அமைப்புகளுக்கு இடையிலான அத்தியாவசிய ஒருங்கிணைப்பு சீர்குலைந்து  ஆரோக்கிய சமநிலை சிதைவடைகிறது

இத்தகைய பாதிப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் கலந்திருக்கும் வேதிப்பொருட்களாகும். எடுத்துக்காட்டாக, தேலேட்டுகள் (Phthalates) இரு முக்கியமான காரணங்களுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. சோப்பு, ஷாம்பு மற்றும் வாசனைத் திரவியங்கள் போன்ற சுய பராமரிப்புப் பொருட்களின் நறுமணத்தை, நீண்ட நேரம் நிலைத்திருக்க உதவும் நிலைநிறுத்திகளாகவும்(Fixatives), கடினமான நெகிழிப் பொருட்களின் வளையும் தன்மையைப் பெறுவதற்காக  நெகிழ்வூட்டிகளாகவும் (Plasticizers), தேலேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதேபோல், நெகிழி பாட்டில்களுக்குத் தேவையான கடினத்தன்மையையும் உறுதியையும் வழங்கப் பிஸ்பெனால் (BPA) பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தேலேட்டுகள் மற்றும் பிஸ்பெனால் (BPA) போன்ற வேதிச்சேர்மானங்கள்,  நேரடியாகச் சுவாசத்தின் மூலமும் தோல் வழியாகவும், நம் உடலுக்குள் நுழைகின்றன. உடலுக்குள் சென்றதும் இவை இனப்பெருக்க இயற்கை ஹார்மோன்களின் செயல்பாட்டைப் போலவே இயங்கி, சில  நேரங்களில் அவற்றின் சமிக்ஞைகளை மிகைப்படுத்தியோ அல்லது முழுமையாகத் தடுத்தோ செயல்படுகின்றன. இதனால் உடலின் இயல்பான வேதியியல் சமநிலை குலைந்து, இனப்பெருக்கக் குறைபாடுகள் முதல் உடல் பருமன் வரை பல்வேறு தீவிரமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இக்கோட்பாடுகளை சோதனை செய்து பார்க்கும் வகையில், அத்தம்பதிகள், தங்கள் வாழ்க்கை முறையில் நெகிழி நச்சு நீக்கச்சவாலை, மருத்துவர்  ஸ்வான் பரிந்துரைத்தபடி மேற்கொண்டனர். அப்போது அத்தம்பதிகள் தங்கள் வீட்டில் உள்ள நெகிழிப் பொருட்களை முழுமையாக அகற்றுகின்றனர். உணவு சேமிப்புக்காகக் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். நெகிழி பல் துலக்கிக்கு பதிலாக மூங்கில் அல்லது மரத்தாலான பல் துலக்கிகள், செயற்கை வாசனை திரவியங்களுக்குப் பதிலாக இயற்கை நறுமண பொருட்கள் மற்றும் 100 சதவிகிதம் பருத்தித் துணிகள் என அனைத்தையும் மாற்றுகின்றனர். தூய்மைப் பணிகளுக்கு, நச்சுத்தன்மை கொண்ட நெகிழி வேதிச்சேர்மானங்களுக்கு பதிலாக வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற எளிய இயற்கை மாற்றுகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

மூன்று மாத கால, கடுமையான நெகிழி நச்சு நீக்க நடைமுறைக்குப் பிறகு, அத்தம்பதிகளின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் வியக்கத்தக்கவை. அவர்களின் உடலைப் பரிசோதித்தபோது  தேலேட்கள் மற்றும் பிஸ்பெனால் அளவுகள் கணிசமாகக் குறைந்து காணப்பட்டது. சிலருக்கு பிஸ்பெனால் அளவு கண்டறிய முடியாத அளவுக்கு (Undetectable levels) குறைந்திருந்தது. மிக முக்கியமாக, ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் விந்தணு இயக்கம் (Sperm Motility) 50% வரை அதிகரித்திருந்தது. நெகிழி நச்சு நீக்கச் சவாலின் முடிவில் மூன்று பெண்கள் இயற்கையாகவே கருத்தரித்த செய்தி, நெகிழி நச்சுக்களிலிருந்து விலகி இருப்பதன் மூலம், உடல் தன்னைத்தானே சீரமைத்துக் கொள்ளும் (Regenerative capacity) வல்லமை கொண்டது என்பதை உலகுக்கு உணர்த்துகிறது.

ஆனால், நாம் தவிர்க்க முயலும் நெகிழி வேதிநச்சுகளின் தாக்கம் இத்தோடு முடிவதில்லை; நெகிழி நுண்-துகள்கள் இன்று உணவு, நீர், காற்று அனைத்திலும் பரவி உள்ளன. இவை இரத்த ஓட்டத்திற்குள் நுழைந்து, மூளை வரை சென்று சேரும் திறன் கொண்டவை. நீண்டகால அழற்சி மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளுடன் அவை தொடர்புடையதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தாய்ப்பாலிலும் நஞ்சுக்கொடியிலும் கூட இத்துகள்கள் கண்டறியப்பட்டிருப்பது, இந்தச் சிக்கலின் தீவிரத்தைக் காட்டுகிறது.

மேலும், இந்த ஆவணப்படத்தில் காட்டப்படும்  அறிவியல் பரிசோதனையில்,   தேலேட்டுகள் மற்றும் பிஸ்பெனால் போன்ற நெகிழி சேர்மானங்களை,   கோழி முட்டையின் கருவிற்குள்ளாக உட்படுத்தப்பட்டபோது அவை கடுமையான வளர்ச்சி குறைபாடுகளை ஏற்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற பாதிப்புகள் மனிதக் கருக்களுக்கும் ஏற்படும் வாய்ப்பு இருப்பதை மருத்துவர் ஷானா ஸ்வான் மிகத்தெளிவாக எச்சரிக்கிறார்.

மேலும், அவர்  ‘தேலேட்டு சிண்ட்ரோம்’ என்ற கருத்தை முன்வைக்கிறார். அதாவது  குறிப்பாக ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில் அவருக்கு ஏற்படும் நெகிழி வேதிச்சேர்மானங்களின்  வெளிப்பாடு, கருவில் வளரும் ஆண் குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது ஆசனவாய்-பிறப்புறுப்பு இடைவெளி (AnoGenital Distance – AGD) குறைவதற்கு வழிவகுக்கிறது, இதுவே அந்த ஆண் குழந்தை வளர்ந்து பெரியவனாகும்போது அவனது விந்தணு எண்ணிக்கை குறைவதற்கும், மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கும், முக்கியக் காரணமாகிறது.

இம்மாற்றங்கள் இயற்கையான மரபணு காரணங்களால் ஏற்படுபவை அல்ல, மாறாக நாம் வாழும் சூழலில் நெகிழியில் பயன்படுத்தப்படும் வேதிச் சேர்மானங்களினால் உருவான செயற்கையான பாதிப்புகள் என்பதைத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், நாம் எதிர்பாராத இடங்களிலும் இந்த நச்சுகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாள்தோறும் பயன்படுத்தப்படும் வெப்ப ரசீது காகிதங்களில் கூடப் பிஸ்பெனால் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவற்றைத் தொடுவதன் மூலமே அவை உடலுக்குள் செல்லக்கூடும். இது போன்ற சிறிய, ஆனால் தொடர்ந்து நடைபெறும் வெளிப்பாடுகள், காலப்போக்கில் உடலில் தேங்கி ஒரு மறைமுக விஷச்சுமையாக மாறுகின்றன

இப்படத்தில் ஒரு முக்கியமான உண்மை வலியுறுத்தப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெகிழி பொருட்கள், அழகு சாதனங்கள், ஹேர் ஸ்ப்ரே போன்ற தயாரிப்புகளில், அவற்றின் நிறம், மணம், நீடிப்பு, மென்மை போன்ற கூறுகளை மேம்படுத்தப் பல்வேறு வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்தும்போது அதில் உள்ள சேர்மானங்கள், நுகர்வோர் எதிர்பார்த்த உடனடியான விளைவுகளைத் தருகிறது. ஆனால் அதன் விளைவுகள் அதே புள்ளியில் நின்று விடுவதில்லை. அவை மெதுவாக மனித உடலுக்குள் புகுந்து ஹார்மோன் சமநிலையை குலைப்பதோடு, இனப்பெருக்க திறனைப் பாதிக்கவும், உடல் பருமன், மற்றும் சில நேரங்களில் புற்றுநோய் போன்ற நீண்டகால நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன.

குறிப்பாக, ஒரு அழகு சாதனப் பொருளைத் தினசரி வழக்கமாக்கி, தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது அப்பொருளில் உள்ள  நச்சு சேர்மானங்கள், குறைந்த அளவிலேயே இருந்தாலும், காலப்போக்கில் உடலில் தேங்கி ஒரு மறைமுக விஷச்சுமையாக மாறுகின்றன என்பதை இந்த ஆவணப்படம் எச்சரிக்கை செய்கிறது.

“தி பிளாஸ்டிக் டிடாக்ஸ்”  ஆவணப்படமாகத் தொடங்கி, விழிப்புணர்வு இயக்கமாக முடிகிறது. இது இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் குடும்பப் பொறுப்பாளர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. ஏனெனில் நமது அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியமும் இப்பூமியின் எதிர்காலமும், நாம் இன்று எடுக்கும் முடிவுகளில்தான் இருக்கிறது. நெகிழி இல்லாத உலகம் என்பது ஒரு கனவு அல்ல, அது உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவை. இத்திருப்புமுனைப் படத்தைப் பார்த்தபிறகு, நமது வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் நாம் பார்க்கும் விதம் மாறும்; அம்மாற்றமே ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான முதல் படியாகும்.

இம்மாற்றத்திற்கான வழிகள் இந்தியரான நமக்குப் புதியவை அல்ல என்பதே முக்கியமான உண்மை. அவை நம் கலாச்சார மற்றும் வாழ்க்கை மரபுகளிலேயே ஆழமாக வேரூன்றியுள்ளன. கண்ணாடி, எஃகு, மண் போன்ற இயற்கையைச் சார்ந்த பொருட்களின் பயன்பாடு முதல், வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரிக்கக்கூடிய சுய பராமரிப்பு முறைகள்வரை, நம் பாரம்பரிய அறிவு ஒரு முழுமையான மற்றும் நிலையான மாற்றுத் தீர்வாகவே இன்றும் விளங்குகிறது.

அதனால் இங்கு உண்மையான சவாலாக இருப்பது, மாற்று வழிகளைப் பற்றிய அறிவின்மையல்ல; மாறாக, இன்றைய வேகமான நவீன வாழ்க்கை முறையும் அதனுடன் பின்னிப் பிணைந்துள்ள சௌகரியமான பழக்கங்களும்தான். இந்நவீன நுகர்வு மோகம், நம்மை மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய, ஆனால் நச்சுத்தன்மை கொண்ட நெகிழிப் பொருட்களின் பக்கம் தள்ளுகிறது. இருப்பினும், முறையான விழிப்புணர்வுடனும், தொடர்ச்சியான அர்ப்பணிப்புடனும் அணுகினால், இயற்கையான மாற்றுகளை நம் அன்றாட வாழ்க்கையில் மீண்டும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமான ஒன்றுதான். நாம் இன்று மேற்கொள்ளத் தொடங்கும்  மிகச்சிறிய அன்றாடப் பழக்கங்கள் கூட

காலப்போக்கில் நமது குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, ஒட்டுமொத்த சமூகத்திற்கும், எதிர்காலச் சுற்றுச்சூழலுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் நன்மைகளை விளைவிக்கும்.  நமது பாரம்பரியத்தை நவீனத் தேவையோடு இணைப்பதன் மூலமே நாம் நெகிழி மாசற்ற வளமான இந்தியாவை உருவாக்க முடியும்.

கட்டுரையாளர்: ஆனந்தி ஆரூரன்

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted