நெகிழி மணிகள் மாசுபாடு; ஓர் எளிய விளக்கம்  

நெகிழி

அண்மையில் கேரளக் கடற்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து சில கண்டெய்னர்கள் கடலில் விழுந்து கரை ஒதுங்கின. அக்கண்டெய்னர்களில் – நெகிழி மணிகளைச் (Plastic Pellets/Nurdles) சுமந்து வந்த கண்டெய்னர்களும் அடக்கம். உலக அளவில் சிறிதும் பெரிதுமாக இப்படியான விபத்துகள் மூலமாகவும் வேறு பல்வேறு காரணிகளாலும் நெகிழி மணிகள் சூழலில் கலக்கின்றன. இவற்றில் பல நிகழ்வுகள் வெளி உலகின் கவனத்திற்கு வருவதில்லை. நெகிழி மணிகளால் ஏற்படும் சூழல் மாசு குறித்தும் அவற்றை நீங்கள் காண நேர்ந்தால் செய்ய வேண்டியவை குறித்தும் இக்கட்டுரையில் சுருக்கமாகப் பார்ப்போம்.

நெகிழி மணிகள் என்றால் என்ன?

தங்க ஆபரணங்கள் செய்யப் பயன்படும் தங்க பிஸ்கெட்டுகள் போன்றவைதான் நெகிழிப் பொருட்களை உருவாக்கப் பயன்படும் நெகிழி மணிகள். பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் நெகிழியானது உற்பத்தி செய்யப்படும்போது, அதனை பல்வேறு நுகர்பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற வகையில் தானியங்கள் போன்று சிறிய மணிகளாக உருவாக்குவார்கள். நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இந்த மணிகளை வாங்கி உருக்கி வார்த்து தங்களுக்குத் தேவையான பொருட்களை உருவாக்குவார்கள். ஆகவே, அடிப்படையில் நெகிழி மணிகள் என்பவை நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களாகும்.

இவை அளவில் சிறியவையாக இருப்பதால் எளிதில் சூழலிலும் விலங்குகளின் உடலிலும் கலக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன. நெகிழி மணிகள் பலநேரங்களில் தம்மளவில் நச்சுத்தன்மை உடையவையாகவும் பல்வேறு வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டவையாகவும் இருப்பதால் அவை சிதைவடையும்போது சூழலைக் கடுமையாக மாசுபடுத்துகின்றன.

நெகிழியைப் போலவே நச்சுத்தன்மையுடைய இவை பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடலிலும் நிலத்திலும் நெகிழி மணிகள் (nurdles) விபத்துகள் மூலம் சிந்த நேர்ந்தால், அவற்றைத் தூய்மை செய்வது குறித்து எந்தவொரு பன்னாட்டு ஒப்பந்தங்களும் தற்போது நம்மிடம் இல்லை. இவ்வகை விபத்துகளில் விரைந்து செயல்படத் தேவையான விபரங்களும், வழிகாட்டுதல்களும் சிறந்த நடைமுறைகளும் அமலில் இருக்க வேண்டியது அவசியம். இதற்கு, தெளிவான வழிகாட்டுதலும், சர்வதேச ஒத்துழைப்பும் இன்றியமையாதவை.

நெகிழி மணிகளின் மாசுபாட்டு வகைகள்:

சுற்றுச்சூழலில் கசியும் நெகிழி மணிகள் உயிர்ப்பன்மையத்திற்கும் மற்றும் மனித சமூகங்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். நெகிழி மணிகளின் மாசுபாட்டில் இரண்டு முக்கியமான வகைகள் உள்ளன: ஒன்று தீவிர உடனடி (acute) மாசுபாடு இன்னொன்று நாட்பட்ட (chronic) மாசுபாடு.

நெகிழி மணிகளின் தீவிர உடனடி மாசுபாடு:

இவை ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவில் நெகிழி மணிகள் சிந்தும்  நிகழ்வுகளாகும். இந்த வகை மாசுபாடுகள் பொதுவாக கப்பல்களால் அல்லது சாலை போக்குவரத்தின்போது ஏற்படுகின்றன, அதுமட்டுமின்றி வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களாலும் இவை நிகழலாம்.

உங்கள் சுற்றுப்புறத்தில் கடலலைகளாலோ அல்லது வெள்ளத்தாலோ அடித்து வரப்பட்டப் பைகளில் உள்ள நெகிழி மணிகள் மிகவும் தெளிவாக, பிரகாசமாக, புதியதாக ஒரே வகையினதாக இருந்தால், அவை அண்மையில் நடந்த ஒரே ஏதோவொரு விபத்திலிருந்து வந்திருக்கலாம் என்பதற்கான அடையாளமாகும்.

இவ்வகை மாசுபாட்டை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுப்பது, நெகிழிப் பரவலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்க உதவலாம். இத்தகைய நிகழ்வுகள் குறித்து நம் கவனத்திற்கு வரும்போது, உடனடியாக உங்கள் உள்நாட்டு சுற்றுச்சூழல் கட்டுப்பாடு அமைப்புகள் மற்றும் பிற அரசாங்க முகமைகளுக்கும் உடனடியாக தகவலளிக்க வேண்டும்.

 

நாட்பட்ட மாசுபாடு:

இந்த நீண்டகால அல்லது தொடர்ச்சியான மாசுபாடு அன்றாட உற்பத்தி மற்றும் மற்றைய செயல்பாடுகளில் (எ.கா. உற்பத்தியாளர்கள் மற்றும் மறுசுழற்சி நிறுவனங்கள்) இருந்து நெகிழி மணிகள் ஒழுங்கற்ற முறையில் ஆனால், தொடர்ந்து சூழலில் கசியச் செய்யப்படுவதால் ஏற்படும். பெரும்பாலான நெகிழி மணிகள் சூழலில் இவ்விதமாகவே  நுழைகின்றன.

சூழலில் கலக்கும் இவை, காலப்போக்கில் பிராணவாயு, சூரிய ஒளி, கடலின் அலைகள், காற்று மற்றும் மழை போன்ற பல்வேறு இயற்கைக் காரணிகளால் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைகின்றன.

பிரகாசமான நிறமுள்ள நெகிழி மணிகள் பொலிவிழந்து மங்கலாகின்றன. ஒளி ஊடுருவக்கூடிய தெளிவான நெகிழி மணிகள் மஞ்சள் நிறம் பாவித்து மங்கலாகின்றன. இவ்வாறு பலவிதமான நெகிழி மணிகள் வெவ்வேறு அளவுகள் நிறங்களில் சிதைவடைந்த நிலையில் ஒரே இடத்தில் காணப்படுவது, நாட்பட்ட மாசுபாட்டினால் உண்டானதாக இருக்கலாம்.

இத்தகை நீண்டகால மாசுபாட்டைக் கையாள நீண்டகாலத் திட்டமிடலும், யார் இச்சிந்தலுக்குப் பொறுப்பாளி என்பதைக் கண்டறிய உள்நாட்டு சுற்றுச்சூழல் முகைமைகளின் விசாரணையும் தேவையாகும். இது நீடித்த பொறுப்புணர்வும், கண்காணிப்பும் கொண்ட அணுகுமுறையை நோக்கியுள்ளது.

எங்கேனும் கடற்கரையிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு இயற்கைச் சூழலிலோ நீங்கள் நெகிழி மணிகளைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?

  1. இது சமீபத்தில் நிகழ்ந்த ஒரு தீவிர சம்பவமா அல்லது நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள நாட்பட்ட மாசுபாட்டின் கீழ் அடங்குமா    என்பதைக் கணிக்க முயற்சி செய்யுங்கள்.
  2. மாசுகளை அப்புறப்படுத்த அல்லது அவை மேலும் பரவுவதைத் தடுக்க மாசு கட்டுப்பாடுத் துறை போன்ற இதற்குப் பொறுப்பான அரசுத் துறையைத் தொடர்புகொள்ளுங்கள்.
  3. உங்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையாக இருந்தால், புகைப்படங்கள்  மற்றும் ஒளிப்பதிவின் மூலமாக மாசுபாட்டை ஆவணப்படுத்துங்கள்.
  4. இச்செய்தியைப் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வர ஊடகங்களை அணுகுங்கள். (சமூக வலைதளமும்கூட இதற்கு உதவக்கூடும்).
  5. அருகிலுள்ள பிற சமூக மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் (NGOs) தொடர்புகொண்டு, அவர்கள் இம்மாசுபாட்டை பற்றி ஏற்கனவே அறிந்துள்ளனரா எனவும், அப்பகுதியின் பாதுகாப்பிற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுடைய அனுபவங்கள் உங்கள் செயற்பாடுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம்.
  6. உலகளவில் இப்பிரச்சினையைக் கவனப்படுத்தவும் நிறுவனங்களைப் பொறுப்புக்குள்ளாக்கவும் உலகளாவிய ஆவணப்படுத்தல் அவசியமாக இருக்கிறது. ஆகவே, இதன் ஒரு பகுதியாக நீங்கள் அவதானித்ததை நெகிழி மாசு குறித்த இப்பதிவேட்டில் பகிரவும்: நெகிழி மணிகள் குறித்தத் தகவலை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, Fidra-வின் Global Spills Log -இல் பதிவு செய்யவும்.
உலகளாவிய நெகிழி மணிக் கசிவுகள் (The Global Spills Log)

Fidra நிறுவனம் உலகளாவிய அளவில் நெகிழி மணிகளின் மாசுபாட்டை ஆவணப்படுத்தும் நோக்கில் Great Nurdle Hunt என்ற திட்டத்தை நடத்தி வருகிறது. இது பலவகை நெகிழி மாசுபாடுகளையும், குறிப்பாக தீவிரக் கசிவுகளையும் பதிவு செய்யும் Global Spills Log-ஐ உருவாக்கியுள்ளது.

இப்பதிவு துல்லியமாக இருக்க, கீழ்க்காணும் தகவல்களும் ஆதாரங்களும் தேவைப்படும்:

படக்குறிப்பு: அதானசியோஸ் அவ்டிமோடிஸ்-இல்  (Athanasios Avdimotis) எடுத்த படம் – கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட நெகிழி மணிகள் (nurdles).

பதிவேட்டில் சேர்க்க வேண்டிய தகவல்கள்:

  1. தேதி – கசிவு நிகழ்ந்த தேதி
  2. இடம் – கசிவு நிகழ்ந்த இடம், நெகிழி மணிகள் கரைக்கு அடித்து வரப்பட்ட இடம் (கசிவு நடந்த இடமும் நாம் நெகிழி மணிகளை அவதானித்த இடமும் ஒன்றாக இருப்பதில்லை)
  3. மதிப்பீடு – சிந்தப்பட்ட நெகிழிகளின் எண்ணிக்கை / அளவு (volume)
  4. நெகிழி மணிகளின் உற்பத்தியாளர் மற்றும் அதனை எடுத்துச் சென்ற நிறுவனம்.
  5. சுத்திகரிப்பு தொடர்பான தகவல் – எந்த அமைப்புகள் இதில் ஈடுபட்டுள்ளன மற்றும் சுத்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
  6. பங்கேற்கும் NGO அமைப்புகள் – பெயர்களை வழங்கவும்
  7. உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் – செய்திக் கட்டுரை, அரசு/உள்ளூர் நிர்வாகத்தின் அறிவிப்பு அல்லது சமூகக் குழுக்களின் பதிவுகள்

அனைத்து தகவல்களையும் [email protected] என்ற மின்னஞ்ல் முகவரிக்கு அனுப்பவும்.

 

தேதி இடம் கசிவின் வகை பதிலளிப்பில் ஈடுபட்ட உள்ளூர் தொண்டு அமைப்புகள்
10/01/2024 வட ஸ்பெயின் கடலில் காணாமல் போன கொள்கலன்கள் நோயா லிம்பா, சர்ஃப்ரைடர் எஸ்பானியா, தி குட் கர்மா திட்டம் மற்றும் பல
07/02/2024 பிட்ட்ஸ்டவுன், நியூயார்க், அமெரிக்கா ரயில் தடம் புரண்டது
02/03/2024 பெத்லெஹெம், பென்சில்வேனியா, அமெரிக்கா ரயில் தடம் புரண்டது
10/03/2025 வடக்குக் கடல், ஐக்கிய இராச்சியம் கப்பல் மோதல்
25/05/2025 கேரளக் கடற்கரை, இந்தியா கப்பல் மூழ்கல்

சவால்கள்:

நெகிழி மணிகள் உலகம் முழுவதும் வர்த்தகத்துக்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன, ஆகவே உலகின் எந்த மூலையும் அதன் மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பான தொலைவில் இல்லை. நமது சவால் என்பது முதற்கட்டத்தில் இந்த கசிவுகளைத் தடுக்கச் செய்வதுதான் — அதற்கான வழி சிறப்பான பொட்டலமாக்கல், போக்குவரத்து மற்றும் சேமிப்பு முறைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் இருக்கிறது. இவற்றோடு, விபத்துகள் ஏற்பட்டால் விரைவான நடவடிக்கையும் பொறுப்பேற்பும் இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்பாக வகுக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் தயார்நிலைத் திட்டங்கள் தேவைப்படுகின்றன. இதற்கு சர்வதேச ஒத்துழைப்பும், ஒன்றிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளும் தேவைப்படுகிறது. ஒரு உள்ளூர் நிர்வாகம் இதன் பிரச்சினைகளை நேரடியாக அனுபவிக்கும் வரையில் அதற்கான தயார்நிலை பற்றியும் அதனை உருவாக்க வேண்டியதன் அவசர நிலை குறித்தும் பேசுவது கடினமானதே. ஆனால், இவற்றில் ஏற்படும் தாமதம் நிலமையை இன்னும் மிக மோசமானதாக்கும்.

இருப்பினும், உலகளாவிய பிளாஸ்டிக் விநியோகச் சங்கிலி வரைபட’ (Mapping the Global Plastic Supply Chain) அறிக்கையிலிருந்து கிடைக்கும் ஆதாரங்கள், ‘Global Spills Log’ மற்றும் ‘Nurdle Hunt’ தரவுகள் (வரைபடங்கள், விளக்கப்படங்கள் மற்றும் புகைப்படங்கள்) ஆகியவை, சட்டமியற்றுபவர்களுக்கு அழுத்தம் தரவும், சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organisation) நெகிழி மணிகளின் (plastic pellet) வாணிபத்தில் மாற்றங்களை செய்யத் தூண்டவும் பயனுள்ள கருவிகளாக இருக்கின்றன.

 

தடுப்பு நடவடிக்கைகள்:

நாட்பட்ட மற்றும் உடனடித் தீவிர கசிவால் ஏற்படும் பேரழிவின் அளவைக் குறைப்பது, சட்டபூர்வமான விநியோகச் சங்கிலி அணுகுமுறையை உருவாக்குவதில் தொடங்குகிறது. ஆனால், அதோடு சேர்ந்து, இதற்கு உலகளாவிய ஒப்பந்தங்களான நெகிழி ஒப்பந்தம் (Global Plastic Treaty), OSPAR மற்றும் பன்னாட்டு கடல்சார் அமைப்பு (IMO) போன்றவற்றின் ஒப்புதலும் தேவைப்படும்.

நெகிழி மணிகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன என்பதை முதலில் அங்கீகரிக்க வேண்டும். மேலும், கடுமையான பொட்டலமாக்கலுக்கான நிபந்தனைகள், பாதுகாப்பான போக்குவரத்து (எ.கா. கப்பலின் மேடையில் அல்லாது கீழ் பகுதி (below deck) யில் சேமிப்பது) மற்றும் விபத்து நிகழ்ந்தால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் வகையில் நெறிமுறைகளை கட்டாயமாக்கபட வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் விபத்துகள் நிகழ்ந்தாலும், தீவிரமான பெரிய அளவிலான அளவிலான சுற்றுச்சூழல் பேரழிவைத் தவிர்பதற்கும் ஆபத்துக்களைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதற்கும் உதவும்.

 

– ஆர் தருண்.

குறிப்பு: இக்கட்டுரை நெகிழி மணிகளின் மாசுபாடு குறித்து உலகளாவிய தகவல்களை சேகரித்து அதற்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ‘தி கிரேட் நர்டில் ஹண்ட்’ எனும் தளத்திலிருந்து அவர்களின் அனுமதியுடன் எடுக்கப்பட்டு கூடுதல் விபரங்களோடு வெளியிடப்பட்டிருக்கிறது.

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments