கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க கருத்து கேட்கும் ஒன்றிய அரசு.

அணுக் கனிம
அணுக் கனிம

 

அணுவுலையைத் தொடர்ந்து அணுக் கனிம சுரங்களை அமைக்க ஒன்றிய அரசு முடிவு

 கன்னியாகுமரியில் கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு.

 கதிரியக்க அபாயமிக்க திட்டத்தைக் கைவிட பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்.

மக்களின் தொடர் எதிர்ப்பிற்கு மாறாக கூடங்குளத்தில் அணுஉலைகள் இயங்கி வரும் நிலையில், அணுக்கதிரியிக்க தன்மை உள்ள அணுக்கனிம சுரங்களை அமைக்க ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கருத்து கேட்புக் கூட்டத்திற்கான நாளையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் இயங்கிவரும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் (indian Rare Earths Limited) கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதிகோரி ஏற்னெவே விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சட்டங்கள் கனிமங்களை பலவகையில் வகைப்படுத்துகின்றன. அணுக்கதிரியிக்க தன்மையுடைய கனிமங்கள் தொடர்பான செயல்பாடுகளை அணுசக்தி சட்டவிதிகள், 1984, [Atomic Energy (Working of the Mines, Minerals, and Handling of Prescribed Substances) Rules,1984] கட்டுப்படுத்துகின்றன. அதன்படி, மோனசைட், சிர்கான், இல்மனைட், ரூட்டைல், சிலிமனைட், லூகாக்ஸின் மற்றும் கார்னெட் ஆகிய அணுக்கதிரியிக்க கனிமங்களை இச்சட்டம் கட்டுப்படுத்துகிறது.

இதில், மோனசைட் என்பது மேற்கூறிய அணுசக்தி சட்டவிதிகள்படி Prescribed Substance ஆகும்.  மோனசைட் உள்ளடக்கிய கனிம படிமத்தினை அகழ்வு செய்வதற்கும், அதனைக் கையாள்வதற்கும், மத்திய பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.இ.எல்-க்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணு சக்தித்துறை கன்னியாகுமரி மாவட்டத்தில் மோனசைட் கனிமம் மிகுந்த 1144.0618 எக்டர் பரப்பிலான பகுதிகளில் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசின் இசைவையும், மத்திய சுரங்க அமைச்சக அனுமதியினையும் பெற்றுள்ளது.  கிள்ளியூர் தாலுகாவில்  உள்ள கீழ்மிடலாம், மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லன்கோடு ஆகிய பகுதிகளில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் அமைய இருக்கும் மொத்தப் பரப்பளவான 1144.0618 எக்டேரில் 353.4876 எக்டேர் பாதுகாக்கப்பட்ட கடலோர மண்டலத்தின் கீழ் வருகிறது. சுமார் 59.88 மில்லியன் டன் அளவிலான அணுக் கனிமங்கள் வெட்டியெடுக்கப்படலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது.  அகழ்விக்கக்கூடிய கனிம படிமத்தில், அணுக் கனிமங்களின் அளவு 10% முதல் 22% வரை உள்ளது. இதனடிப்படையில், புதிய சுரங்க குத்தகை மூலம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன்கள் என்ற விதத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மணவாளக்குறிச்சி ஆலைக்குத் தேவையான மூலப்பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்படும் என ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புகள்

இத்திட்டம் அமையவிருக்கும் இடம் இயற்கையாகவே அதிக கதிரியக்கதன்மையுடைய பகுதிகளாகும். இந்த நிலையில் அணுக் கனிமங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டால், அணுக்கதிரியிக்க பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ள 75 கடலோரக் கிராமங்களில் ஏறத்தாழ 50 கிராமங்கள் ஏற்கெனவே தாதுமணல் கொள்ளையால் பாதிப்படைந்துள்ளன. குமரி முதல் தூத்துக்குடி வரை நடந்தே செல்லக்கூடியதாக இருந்த கடற்கரையின் நிலை மாறி, இன்று பல கிராமங்களில் கடற்கரையே இல்லாமல் போய்விட்டது. கடலோரங்களில் இருந்த மணற்குன்றுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் கடலரிப்பு அதிகமாகிவிட்டது.

கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாகிவிட்டது. கடற்கரையும் கடலோரத் தாவரங்களும் அழிக்கப்பட்டதால் இனப்பெருக்கத்திற்காக நிலத்தையும் உணவிற்காகக் கடலையும் நம்பி வாழும் இருவாழ்விகளான ஆமைகள் இக்கடலோரத்தின் பல பகுதிகளுக்கு வந்து முட்டையிடுவதை நிறுத்திவிட்டன. கடற்கரையின் வளம் அழிக்கப்பட்டால் அது ஆழமற்ற கடல்பகுதியின் வளத்தையும் அழித்துவிடும்.

இந்த நிலையில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் பாதிப்புகள் இன்னும் பன்மடங்கு உயர கூடும்.

மக்கள் உடல்நலம் மீதான தாக்கம்

 கன்னியாகுமரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே நடைபெற்ற தாதுமணல் கொள்ளையால் மீனவ கிராமங்களில் வசிக்கும் பலருக்கும் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு, மலட்டுத் தன்மை, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முழுக்க முழுக்க கடற்கரையிலேயே அமர்ந்து கொண்டும், நடந்து கொண்டும் வேலை பார்க்கும் மீனவர்களுக்கு கதிரியக்கம் நிறைந்த மணற்பகுதியை அகழ்வதால் கதிரியக்க பாதிப்பு அதிகம் நேர்கிறது. கூத்தன்குழி, மனவாளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அதிகம்பேர் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடல் அரிப்பு

தென்மாவட்ட கடற்கரைப் பகுதிகள் புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தாலும் அறிவியலுக்குப் புறம்பான மனித செயல்பாடுகளாலும் வேகமாக அரிப்புக்குள்ளாகி வருகிறது. ஒன்றிய புவி அறிவியல் துறையின் ஆய்வறிக்கையின்படி கன்னியாகுமரி மாவட்டத்தின் 69.06 கி.மீ. கடற்கரை நீளத்தில் 44.56 கி.மீ. கடற்கரை அரிப்புக்குள்ளாகி வருவதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக இனயம், புத்தன்துறை, மிடாலம், மனவாளக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களின் கடற்கரைகளில் கடலரிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இப்படியான பகுதிகளில் அணுக் கனிம சுரங்கம் அமைப்பது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு ஏற்கெனவே அணுக்கழிவுக் குப்பைத் தொட்டிபோல பாவித்து, பல்வேறு அணுமின் திட்டங்களை செயல்படுத்த முனைகிறது. அணுக்கழிவுகளையும்கூட கூடங்குளத்திலேய வைக்க முடிவெடுத்துள்ளது. தற்போது அணுக் கனிம தாதுக்களை அகழ்ந்தெடுக்க சுரங்கம் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

 

கோரிக்கைகள்

  1. தமிழக கடலோரப் பகுதிகளில் தாது மணல் உள்ளிட்ட அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்கள் முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும்.
  2. தென் மாவட்டங்களில் ஐ.ஆர்.இ.எல். ஆலை செயல்பாடுகள் மற்றும் தாதுமணல் கொள்ளை நடந்த இடங்களில் பொதுமக்களின் உடல்நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய விரிவான மருத்துவ ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
  3. மேற்கூறிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
  4. இந்த ஆய்வுகளை மேற்கொள்ளாமல் எவ்வித அணுக் கனிம சுரங்கங்களையும் திறக்கக்கூடாது.
  5. அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும்போது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  6. மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும். இதையும் தாண்டி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகளும் இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

EIARptEngIREL30824
ExeSumEngIREL30824
ExeSumTamIREL30824

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments