உலகை அச்சுறுத்தும் விலங்கியல் நோய்கள்… காரணம் விலங்குகளா! மனிதர்களா!

வண்ணத்துப்பூச்சி விளைவு (Butterfly effect) என்றொரு பதம் கேள்விப்பட்டிருப்போம். எங்கோ ஏற்படும் ஒரு சிறிய மாற்றம், சேதம் அல்லது இழப்பு, பல்வேறு பின்விளைவுகளுக்கு வழிவகுத்து, பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணலாம். சர்வதேச அளவில் நாம் தற்போது எதிர்கொள்ளும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலும் அப்படித்தான் நிகழ்ந்தது. வூஹானிலிருந்த விலங்குச் சந்தையில் யாரோ ஒரு மனிதருக்குப் பரவிய கொரோனா இன்று உலகளவில் லட்சக்கணக்கான மக்களைப் பலி வாங்கியுள்ளது. கொரோனா போன்ற விலங்கியல் நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவுவது புதிதல்ல. இதற்கு முன்பும்கூட பல்வேறு வைரஸ் தொற்றுகள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ளன.

காங்கோ குடியரசில் அமைந்துள்ள மாயிபௌட் என்ற கிராமத்தில் 1996-ம் ஆண்டு இபோலா என்ற கொடிய தொற்று நோய் பரவத் தொடங்கியது. மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை போன்றவை சுமார் 150 மக்களே வாழக்கூடிய அந்தச் சிறிய கிராமத்தில் அவ்வப்போது வந்து ஓரளவுக்குப் பாதிப்புகளை ஏற்கெனவே ஏற்படுத்திச் சென்றுள்ளன. அவற்றை அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால், 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம், மனித உயிரைப் பறிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தான வைரஸ் தொற்று, மிங்கிபே (Mingebe) என்ற அடர்ந்த வனப்பகுதியிலிருந்து அவர்கள் மத்தியில் பரவியது.  37 பேர் அந்தத் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டனர். அதில் 21 பேர் மரணமடைந்தனர். மரணமடைந்தவர்களில், ஒருமுறை இவிண்டே நதியோரத்தில் சிம்பன்சி குரங்கைக் கொன்று தோலுரித்து சாப்பிட்டவர்களும் அடக்கம்.

லண்டனைச் சேர்ந்த சூழலியல் பத்திரிகையாளர் ஜான் வைடல், 2004-ம் ஆண்டு இந்தப் புதிய தொற்று குறித்து விசாரிக்க அந்தக் கிராமத்திற்குச் சென்றார். வெப்பமண்டல மழைக்காடுகளைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியில், விலங்குகளின் மாமிசம் விற்கப்படும் ஆப்பிரிக்க மற்றும் ஆசியச் சந்தைகளில் பரவிக் கொண்டிருந்த இதுபோன்ற புதிய நோய்கள் குறித்த ஆய்வின்போது, அதன் ஒரு பகுதியாக அவருடைய பயணம் அமைந்தது. சிறிய படகில் ஒருநாள் முழுக்கப் பயணித்து, அழுகிய இலைகள் மூடிய சாலையின் வழியே பாகா என்ற கிராமத்தையும் ஒரு சிறிய தங்கச் சுரங்கத்தையும் சில மணிநேரம் நடந்தே கடந்தபிறகு அவர் மாயிபௌட் கிராமத்தை அடைந்தார். அங்குச் சென்று அவர் பார்த்தபோது, 1996-ம் ஆண்டு அவர்கள் எதிர்கொண்ட ஆபத்தான தொற்று மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு அப்போதும் இருந்ததாகப் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேரைக் கொன்றுவிடும் வைரஸ் குறித்து யாருக்குத்தான் மிரட்சி இருக்காது.

அப்போது அங்கு அவர் சந்தித்த கிராம மக்கள், அவர்களுடைய குழந்தைகள் எப்படி நாய்களோடு காட்டுக்குள் சென்று சிம்பன்சியை வேட்டையாடிச் சாப்பிட்டார்கள் என்பதை விவரித்தனர். சிம்பன்சியை வேட்டையாடிச் சாப்பிட்ட அடுத்த சில மணிநேரத்திலேயே, அவர்களுக்குக் கடுமையான காய்ச்சல் வந்தது. சிலர் உடனே இறந்துவிட்டார்கள். மேலும் சிலர் இவிண்டே (Ivinde River) ஆற்றைக் கடந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற வழியில் மரணமடைந்தனர். வெகுசிலரே குணமடைந்தனர். அந்த வனப்பகுதி மீது அலாதிப் பிரியத்தோடு இருந்த அந்த மக்கள், அதன்பிறகு அதைக் கண்டாலே அஞ்சுவதாக அவரிடம் பதிவு செய்துள்ளனர். அவர்களை அப்படி அஞ்ச வைத்த வைரஸ் தான் இபோலா. சிம்பன்சிகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றியது.

1997-ம் ஆண்டின் ஒருநாளில் இந்தோனேசியாவின் மழைக்காடுகளுக்கு மேலே புகைமூட்டம் திரளத் தொடங்கியது. கிட்டத்தட்ட பென்சில்வேனியாவின் பரப்பளவுக்கு நிகராக வானுயர எழுந்த அந்தப் புகைத்திரளை உருவாக்கிய காட்டுத்தீ, பெருநிறுவன விவசாய நிலங்களின் பரப்பளவை விரிவுபடுத்துவதற்காக வைக்கப்பட்டது. அதற்கடுத்து வந்த சில மாதங்களில் ஏற்பட்ட வறட்சியால் அந்தக் காட்டுத்தீ மேலும் அதிகரித்தது.

காட்டு மரங்கள் நெருப்பில் கருகிக் கொண்டிருந்தன. அங்கு வாழ்ந்துகொண்டிருந்த பழந்தின்னி வௌவால்கள் வேறுவழியின்றி உணவுக்காக அருகிலிருக்கும் பழ மரங்களைத் தேடி மனிதர்களின் தோட்டங்களுக்கு வந்தன. கூடவே அவற்றின் உடலில் ஒட்டி வாழ்ந்துகொண்டிருந்த ஆபத்தான அந்த வைரஸும் வந்தது. பழத்தோட்டங்களுக்கு வந்தவை, பழங்களைச் சாப்பிட, அவை சாப்பிட்டுவிட்டுக் கீழே போட்ட மீதியை விவசாயிகள் வளர்த்த பன்றிகள் சாப்பிட, அவற்றிடமிருந்து அவற்றை வளர்த்த விவசாயிகளுக்கும் ஒட்டியது அந்த வைரஸ். 1999-ம் ஆண்டு, அங்கு 265 பேருக்குக் கடுமையான மூளைக் கட்டி வளர்ந்தது. 105 பேர் உயிரிழந்தனர். நிபா என்றொரு வைரஸ் இருப்பதே மனிதர்களுக்கு அப்போதுதான் தெரிய ஆரம்பித்தது. காலப்போக்கில் அது தென்கிழக்கு ஆசியா முழுக்கப் பரவி இன்றுவரையிலுமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக அந்தப் பெயர் இருந்துவருகிறது.

கடந்த முப்பது முதல் இருபது ஆண்டுகளில்தான் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோய்கள் குறித்து அதிகம் பேசப்படுகிறது. தொடக்கத்தில், வெப்பமண்டலக் காடுகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அயல் உயிரினங்களிடமிருந்து (Exotic Wildlife) இபோலா, நிபா, எச்.ஐ.வி போன்ற தொற்றுகள் பரவுவதாக நம்பப்பட்டது. ஆனால், இன்று பரவலாகக் காட்டுயிர் ஆய்வாளர்களும் வைலாஜி நிபுணர்களும் அதைவிட முக்கியக் காரணம் ஒன்று இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். மனிதர்கள் பல்லுயிர்ச்சூழலைத் தொடர்ந்து அழிப்பதே புதுப்புது வைரஸ்கள் தோன்றுவதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

காடுகளை ஊடுருவிச் சாலை போடுதல், சுரங்க வேலை, வேட்டை ஆகியவையே மாயிபௌட்டில் இபோலா பிரச்னை உருவெடுக்கக் காரணமாக அமைந்தது. அதேபோலத்தான் இந்தோனேசியாவிலும் காடழிப்பு நிபா வைரஸ் பரவக் காரணமாக அமைந்தது. இவை அடிப்படையில் நமக்கு ஒன்றைப் புரிய வைக்கின்றது. பல்வேறு மனித ஊடுருவல்களால் காடழிப்பு நிகழ்வதும் விலங்குகளின் இயற்கையான வாழ்விடங்களைத் தொந்தரவு செய்வதும் புதுப்புது வைரஸ் தொற்றுகள் மனிதர்கள் மத்தியில் பரவக் காரணமாக அமைகின்றது.

வெப்பமண்டலக் காடுகளே பூமியின் பல்லுயிரிய வளத்தை அபரிதமாகக் கொண்டுள்ள பகுதி. மனிதக் கால்தடம் படாத பகுதிகளில் பல்வேறு வகையான சிற்றுயிர்கள், விலங்குகள் வாழ்ந்துகொண்டிருக்கும் அத்தகைய பகுதிகளை நாம் ஆக்கிரமிக்கிறோம். அந்த உயிரினங்களைச் சார்ந்து பல வகையான வைரஸ், பேக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளும் வாழ்ந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட பகுதியை ஊடுருவி நாம் மரங்களை வெட்டுகிறோம், விலங்குகளை வேட்டையாடுகிறோம், அவற்றைப் பிடித்து விலங்குச் சந்தைகளுக்குக் கடத்துகிறோம். அப்பகுதியின் சூழலியல் சமநிலையைச் சிதைக்கிறோம். இதன்மூலம் அங்கு இத்தனை நாள்களாக இருந்த சமநிலை உடைகிறது. அங்கு விலங்குகளைச் சார்ந்து வாழ்ந்துகொண்டிருந்த வைரஸ்களோடு மனிதர்களுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. பொதுவாகவே, வைரஸ் தொற்றுகள் ஓர் உயிரினத்திடமிருந்து மற்றோர் உயிரினத்திற்குப் பரவும். அவை சில ஆயிரங்களிலிருந்து சில லட்சங்களாகப் பெருகி அடுத்தடுத்து அருகிலிருக்கும் உயிரினங்களிடம் வெகு விரைவாகவே பரவிவிடும். நாம் விலங்குகளின் வாழிடத்தை உடைத்துவிட்டாலோ அல்லது அங்கிருக்கும் விலங்கோடு தொடர்பு வைத்துக்கொண்டாலோ, அதைச் சார்ந்து வாழும் வைரஸ் தொற்று மனிதர்களிடமும் ஒட்டிக்கொள்கிறது. காடுகளில் வாழும் விலங்குகளுக்கு இயற்கையாகவே இந்த வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்கும். உதாரணத்திற்கு வௌவால்களை எடுத்துக்கொண்டால், அவைமீது பல்வேறு வைரஸ் தொற்றுகள் ஒட்டுகின்றன. ஆனால், அவற்றால் வௌவால்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதற்குக் காரணம், அவற்றின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் அந்தத் தொற்று அவற்றைப் பாதிக்காமல் தடுக்கின்றன. அதே வைரஸ் மனிதர்களுக்குப் பரவினால் நாம் அதனால் பாதிக்கப்படுகிறோம். ஏனென்றால், நம் உடலில் அந்த வைரஸை எதிர்த்துச் செயல்படத் தேவையான ஆற்றல் இல்லை. இதற்குப் பரிணாமவியல்தான் காரணமே தவிர, வௌவால்கள் அல்ல.

மனிதர்கள் காடுகளிலிருந்து விலகி தனிப்பட்ட வாழிடங்களை அமைத்து வாழத்தொடங்கிச் சில ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், நமக்கும் காடுகளுக்கும் இடையே இருந்த தொடர்பு உணர்வுரீதியாக மட்டுமின்றி உடலியல்ரீதியாகவும் அறுபட்டுவிட்டது. நம்முடைய உடலியல் அமைப்பிலும்கூட பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. நாம் வாழும் பகுதிகளில் மேற்குறிப்பிட்ட தொற்றுகள் இல்லாததால், நம் உடலுக்கு அதை எதிர்த்துச் செயலாற்றத் தேவையான ஆற்றல் இல்லை. ஆனால், காட்டில் விலங்குகள் இந்த வைரஸ்களின் மத்தியிலேயே வாழ்வதால் அவற்றுக்கு அந்த ஆற்றல் அவசியமாகின்றது.

கடந்த நூற்றாண்டிலிருந்தே காட்டை ஊடுருவிச் செல்லும் மனித நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இத்தனை ஆண்டுகளாகத் தொந்தரவு செய்யப்படாத பகுதிகள் மீது நாம் கை வைப்பதால், அங்கிருந்த பல்வேறு நுண்ணுயிரிகளுக்கு வெளியுலகத் தொடர்பு கிடைக்கிறது. அது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கிறது. என்னைப் பொறுத்தவரை, சார்ஸ், இபோலா, கொரோனா, நிபா போன்றவை நோய்த் தொற்றுகள் அல்ல. அவை அடிப்படையில் இயற்கையின் பரிணாமப் பாதையில் தோன்றிய நுண்ணுயிரிகள். அவை வாழ்ந்துகொண்டிருந்த பகுதியில் மற்ற உயிரினங்களோடு இணைத்திற உறவுக்காரர்களாக வாழ்ந்துகொண்டிருந்தன. இன்னும் பல பகுதிகளில், ஓர் உயிரினத்தின் செல்லை உணவாகக் கொண்டு பல்கிப் பெருகி வாழும் நுண்ணுயிரிய வேட்டையாடிகளாக வாழ்ந்துகொண்டிருந்தன. இந்த வேட்டையாடி, இணைத்திற உறவுக்காரராய் வாழும் ஓர் உயிரினம் மனிதர்களோடு தொடர்புகொள்ளத் தொடங்கியதால் அவற்றின் தாக்கம் நம்மீது தெரியத் தொடங்கியுள்ளது, அவ்வளவே. அவற்றோடு இணைந்து வாழும் திறன் நமக்கு இல்லாத காரணத்தால், அவற்றை நாம் நோய்களாக அடையாளம் காண்கிறோம். இன்று இந்த நுண்ணுயிரிய வேட்டையாடிகள், தொற்று நோய்களாக அடையாளம் காணப்படுகின்றன. அடிப்படையில் பார்த்தால் தாமுண்டு தம் வாழ்விடமுண்டு என்று வாழ்ந்துகொண்டிருந்தனவற்றைத் தொந்தரவு செய்து நம் மத்தியில் கொண்டுவந்து விட்ட பெருமையும்கூட மனிதர்களையே சேரும்.

இப்படி, விலங்குகள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த நுண்ணுயிரிகள் மனிதர்கள் மத்தியில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தினால், அவற்றை விலங்கியல் தொற்று நோய் என்றழைக்கிறோம். சிம்பன்சியிலிருந்து பரவிய இபோலா, வௌவால்களிடமிருந்து பரவிய நிபா, வௌவால்களிடமிருந்து எறும்புத்தின்னிகளிடம் பரவி அவற்றிடமிருந்து மனிதர்களுக்குப் பரவிய கோவிட் 19 என்று அனைத்துமே விலங்கியல் தொற்றுகளாக அறியப்படுகின்றன. இப்படி விலங்குகளிடமிருந்து மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுகளின் பரவல் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாகவும் அவை விரைவாகப் பரவுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான அமெரிக்க ஆய்வு மையம் (U.S. Centers for Disease Control and Prevention) சமீபத்தில் மனிதர்கள் மத்தியில் பரவுகின்ற தொற்றுகளில் 75 சதவிகிதம் மனிதரற்ற மற்ற உயிரினங்களிடமிருந்தே பரவுகின்றன என்று அறிவித்துள்ளது.

இத்தகைய விலங்கியல் நோய்த் தொற்றுகள் நமக்குப் புதிதல்ல. பிளேக் என்ற கொடிய நோய், சிறிய பாலூட்டிகளான கொறி உயிரினங்களிடமிருந்து உண்ணிகளுக்குப் பரவி அவற்றிடமிருந்து மனிதர்களுக்குப் பல நூற்றாண்டுகள் முன்னமே பரவியது. அதேபோலத்தான் ரேபிஸ் நோயும் பரவியது. அவற்றைப் போலவே, நைஜீரியாவில் தொடங்கிய லஸ்ஸா காய்ச்சல், இந்தோனேசியாவில் தொடங்கிய நிபா, சீனாவில் 700-க்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கி, 2002-03 ஆண்டுகளில் 30 நாடுகளுக்குப் பரவிய சார்ஸ், ஆப்பிரிக்காவில் ஸிக்கா, வெஸ்ட் நைல் வைரஸ் ஆகியவை விலங்குகளிடமிருந்து தோன்றி மனிதர்களுக்குப் பரவி, நம் உடலியல் அமைப்புக்கு ஏற்பப் பல்வேறு வளர்சிதை மாற்றங்களைச் சந்தித்துள்ளன. சூழலியல் மற்றும் பல்லுயிரிய வள ஆய்வாளர்கள், “இத்தகைய விலங்கியல் நோய்கள் உலகளவில் தற்போது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. கொரோனா மட்டுமே ஆபத்தில்லை. எதிர்காலத்தில் நாம் இன்னும் பல தொற்று ஆபத்துகளைச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும்” என்று எச்சரிக்கின்றனர்.

கேட் ஜோன்ஸ் என்ற ஆய்வாளரும் அவருடைய குழுவும் 2008-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், 1960 முதல் 2004-ம் ஆண்டுக்குள் உருவான 335 தொற்று நோய்களை அடையாளம் கண்டனர். அதில், 60 சதவிகித நோய்கள் விலங்குகளிடமிருந்து பரவியனவாக அடையாளம் காணப்பட்டன. வேகமான நகரமயமாக்கல், மக்கள் தொகைப் பெருக்கம், சுரங்கம், சாலைகள், தொடர் கட்டுமானங்கள் போன்றவை மனிதர்களையும் விலங்குகளையும் நெருக்கமாகத் தொடர்புகொள்ள வைக்கின்றன. இதனால் நம் மத்தியில் பரவுகின்ற வைரஸ் தொற்றுகள், நம் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நம் பொருளாதாரத்தையும் பலி கேட்கின்றன.

நாம் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டே போகப் போக, நாம் சீரழித்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த உயிரினங்களே அதிகமான விலங்கியல் தொற்றுகளை நம் மத்தியில் பரப்புகின்றன. அப்படிப் பரவும் தொற்றுகளைப் பொறுத்தவரை இப்போதைய சூழலுக்கும் சில பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்தத் தொற்றுகள் முன்பிருந்ததைவிட இப்போது அதிகமாகக் கிளர்ந்தெழுகின்றன. அதுவும் இயற்கையான சூழலில் மட்டுமில்லை, அவற்றின் தாக்கம் நகர்ப்புறங்களிலும் அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் நாம் சூழலியல் சமநிலையை மேன்மேலும் சிதைத்துக்கொண்டேயிருப்பதுதான். நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாகிக் கொண்டே போவதால், நம் வாழிடங்களும் விரிவடைந்து கொண்டேயிருக்கின்றது. அதன் விளைவாக நம்மைச் சுற்றி வாழும் எலிகள், பறவைகள் மற்றும் இதர உயிரினங்களும் நெருக்கியடித்துக்கொண்டு வாழ்கின்றன. அவற்றைச் சார்ந்து பல நுண்ணுயிரிகளும் வாழ்கின்றன. இப்படி நெருங்கியே வாழ்வதால், மனிதர்கள் உட்பட அனைத்து வகையான உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்ளும் வாய்ப்புகள் மற்றும் அவற்றிடமிருந்து நோய் பரவும் வாய்ப்புகள் அதிகமாகவே ஏற்படுகின்றன.

இந்த கோவிட்-19 தொற்று பரவியதற்கும்கூட சீனாவில் வாழ்கின்ற ஹார்ஸ்ஷூ என்ற வகை வௌவால்களின் வாழ்விடம் அழிக்கப்பட்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. அவற்றின் வாழ்விடம் அழிக்கப்பட்டதால்தான் உணவு தேடி அவை நகரங்களை நோக்கி வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அப்படி வந்த வௌவால்களிடமிருந்து வூஹானின் விலங்குச் சந்தையில் வைக்கப்பட்டிருந்த விலங்குகளிடம் பரவி, அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு அவை பரவியதாக கூறப்படுகின்றன. நாம் தொடக்கத்தில் பேசிய இபோலா வைரஸ் பரவியதற்கும்கூட சிம்பன்சிகளின் வாழ்விடம் அழிக்கப்பட்டதும் அவற்றை வேட்டையாடி உணவாக உட்கொண்டதுமே காரணம் என்று கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு வெளியான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வறிக்கைப்படி, ஒரு மில்லியன் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன. அவை அனைத்துமே தத்தம் வாழிடங்களை இழந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் உடலில் நமக்குத் தெரியாத வைரஸ் தொற்றுகளைச் சுமந்துகொண்டிருக்கின்றன. அதுபோக, வேட்டையாடுதல், விலங்குகளைக் கடத்துதல், இரை உயிரினங்களை வேட்டையாடக்கூடிய வேட்டையாடிகளின் எண்ணிக்கை சமநிலையின் இல்லாமல் போகுதல் போன்றவை காட்டுயிர்கள் மத்தியிலிருந்து பல்வேறு நுண்ணுயிரிகளை மனிதர்கள் மத்தியில் பரப்புகின்றன. அவை அடுத்தகட்டமாக நோய்த் தொற்றுகளாக சமுதாயத்தில் உருவெடுத்துப் பல சேதங்களை விளைவிக்கின்றன.

இவையனைத்துமே, புவி வெப்பமயமாதல் காரணமாக மேலும் துரிதமடைகின்றன. அதன்விளைவாக மீதமிருக்கின்ற காடுகளும் அதீத வெப்பத்தால் வறட்சியைச் சந்திக்கின்றன, இருக்கின்ற வளமான பகுதிகளும் மனித ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. ஆகவே, காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் நடைபெறுகின்றது. அத்தகைய சூழ்நிலைகளின்போது, காட்டுயிர்களிடமிருந்து பல நோய்கள் கால்நடைகளுக்கும் அவற்றிடமிருந்தும் மனிதர்களுக்கும் பரவுகின்றன. இந்த ஆபத்துகளிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால், இவற்றால் ஏற்படக்கூடிய சேதங்களை மட்டுப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு முதலில் காடுகள் பாதுகாப்பு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

பூமியின் வனப்பகுதிகளில் குறைந்தபட்சம் 50 சதவிகிதப் பகுதியையாவது மனிதக் கால்தடம் படாமல் பாதுகாக்கவேண்டும். அதில் பழங்குடிகளையும் ஈடுபடுத்தவேண்டியது மிகவும் அவசியம். இதுதான் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர் பேரழிவுகளிலிருந்து தப்பிக்க நாம் செய்யவேண்டியது முதலுதவி. துரதிர்ஷ்டவசமாக, இப்படிப்பட்ட பாதுகாப்பு முறையை நடைமுறைச் சாத்தியமற்றதாகப் பல்வேறு தரப்பினர் கருதுகின்றனர். ஆனால், அத்தகைய பாதுகாப்பு முறையைக் கையாண்டால் உலக நாடுகளுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்களே செலவாகும். இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடருக்காக உலக நாடுகள் இதுவரை டிரில்லியன் கணக்கில் செலவு செய்துவிட்டன. இந்த முறையைக் கையாண்டால், விலங்கியல் தொற்றுகளை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, காலநிலை அவசரத்தையும் நாம் கட்டுப்படுத்த முடியும். கரிம வெளியீடு முதல் புவி வெப்பமயமாதல் வரை அனைத்திலுமே இது நல்ல விளைவுகளை உண்டாக்கும்.

ஆனால், உயிரிழப்புகளையும் மிகப்பெரிய பொருளாதார இழப்புகளையும் சந்தித்த பிறகும்கூட அரசுகள் அதற்குரிய கரிசனத்தைக்கூட காட்டவில்லை. பிரேசில் எல்லைக்குட்பட்ட அமேசான் வனப்பகுதியில் சுமார் 97,979.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை தொழில் நிறுவனங்களுக்கும் பழங்குடியினப் பயன்பாடுகளற்ற இதர பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் திருப்பிவிடப் போவதாக பொல்சனாரோ அரசு அறிவித்துள்ளது. பிரேசிலுக்குச் சற்றும் சளைக்காத இந்திய அரசு, காட்டை அழித்து மேற்கொள்ளக்கூடிய திட்டங்களுக்கு வீடியோ கான்ஃபரசிங் மூலம் அனுமதி கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஜூன் 2014 முதல் மார்ச் 2020 வரை மட்டுமே 2,256 திட்டங்கள் காட்டை அழித்து மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகச் சூழலியலாளர்கள் எதிர்த்துக்கொண்டிருந்த, ஹூபலி-அங்கோலா திட்டத்திற்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக, சுமார் 2,20,000 மரங்கள் வெட்டப்படும். மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆந்திர எல்லைக்குள் அமைந்துள்ள சுமார் 595.64 ஹெக்டேர் வனப்பகுதியும் 184.6 ஹெக்டேர் சதுப்பு நிலமும் இதற்காக அழிக்கப்படும். இதன்மூலம் காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் அதிகமாவதோடு, மனிதர்கள் ஊடுருவாத பல்வேறு பகுதிகள் தொந்தரவு செய்யப்படும். இவை இதுபோன்ற வேறு ஏதாவதொரு விலங்கியல் தொற்று நோயை மனிதர்களிடம் பரப்பாது என்று நம்மால் உறுதியளிக்க முடியாது. தற்போது பிரேசிலும் இந்தியாவும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிப்பதோடு அவர்களுக்கும் காடுகளுக்கும் இருக்கும் தொடர்பையும் இதன்மூலம் துண்டிக்கின்றனர். இது காடழிப்பைப் போலவே மோசமான எதிர்வினைகளைக் கொண்டுவரும்.

காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாப்பதோடு, காடுகள் பாதுகாப்பு குறித்த மரபு அறிவைத் தன்னுள் கொண்டுள்ள பழங்குடிகளின் உரிமைகளையும் நாம் அங்கீகரிக்கவேண்டும். அவர்களுடைய வன உரிமைகளை அங்கீகரிப்பது, இதுபோன்ற தொற்று நோய்ப் பரவலை மட்டும் தடுப்பதில்லை. இத்தகைய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலகளவில் பயன்படுத்தப்படுகின்ற மருந்துகளில் 25 சதவிகிதம் காடுகளிலிருந்தே, அதுவும் பூர்வகுடிகளின் உதவியுடனே நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இழப்பது எதிர்காலத்தில் நமக்கான மருத்துவ நன்மைகளை நாமே அழிப்பதற்குச் சமம். இன்றுவரை அவர்களுடைய மரபு அறிவை, நிலங்களை, பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே புகுந்து அபகரித்துச் சென்றுவிடுகின்றன என்பதே நிதர்சனம். இந்த நிதர்சனத்தைச் சரிசெய்து, பழங்குடிகள் உரிமை, காடுகள் மற்றும் காட்டுயிர் ஆகிய அனைத்திற்கும் இருக்கும் உறவைப் பாதுகாப்பதே எதிர்காலத்தில் இபோலா, நிபா, கொரோனா, சார்ஸ், லஸ்ஸா போன்று மேலும் புதுப்புது விலங்கியல் தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்க நம்மிடம் இருக்கின்ற ஒரே நீடித்த நிலையான தீர்வு.

சார்ஸ் சீனாவிலிருந்து வந்தது. நிபா இந்தோனேசியாவிலிருந்து வந்தது. இபோலா காங்கோவிலிருந்து வந்தது. தற்போது கோவிட் 19 சீனாவிலிருந்து வந்துள்ளது. அடுத்தது என்ன விலங்கியல் நோய், எங்கிருந்து, எப்போது வருமென்று நம்மால் உறுதியாகச் சொல்லமுடியாது. அந்த அளவுக்கு நாம் நிலைமையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறோம். அடர்ந்த காடுகளுக்கு உள்ளேயும் உரைந்துகிடக்கும் பனிப்பாறைகளுக்கு உள்ளேயும் பல்லாண்டுக்கால வைரஸ் தொற்றுகள் உறங்கிக் கொண்டிருக்கலாம். நாம் கைவைத்தால் போதும், வண்ணத்துப்பூச்சி விளைவு தொடங்கிவிடும். நாம் செய்யவேண்டியதெல்லாம் இயற்கையை அதன் இயல்பிலேயே மனிதக் கால்தடம் பாதுகாப்பது மட்டுமே.

 

பயன்பட்ட தரவுகள்:

Ebola: The Natural and Human History, By David Quammen

https://www.scientificamerican.com/article/destroyed-habitat-creates-the-perfect-conditions-for-coronavirus-to-emerge/

https://www.wysscampaign.org/news/2019/1/22/fact-sheet-a-plan-to-protect-at-least-30-percent-of-our-planet-by-2030

https://www.washingtonpost.com/science/2020/04/03/coronavirus-wildlife-environment/

https://ipbes.net/news/how-did-ipbes-estimate-1-million-species-risk-extinction-globalassessment-report

https://www.cdc.gov/poxvirus/monkeypox/outbreak.html

 

–சின்ன கண்ணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments