“உலக ஏற்றத் தாழ்வு அறிக்கை 2022” (world inequality report – 2022) சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. உலகளாவியல் அளவில் புகழ்பெற்ற பல பொருளியல் அறிஞர்கள் ஏராளமான முக்கிய ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர். இந்த உலக ஏற்றத் தாழ்வு அறிக்கை குறிப்பிடும் சில முக்கியப் புள்ளிவிவரங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் 50 விழுக்காடு மக்கள் உலகின் மொத்த உலக வருவாயில் வெறும் 8.5 விழுக்காட்டை மட்டுமே பங்கிட்டுக் கொள்கின்றனர். இன்னொருபுறம் உலகின் மொத்த வருவாயில் சரிபாதிக்கும் மேலான செல்வத்தை (52 விழுக்காடு) வெறும் 10 விழுக்காடு மக்கள் அனுபவிக்கின்றனர். சொத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் இது இன்னும் படு மோசமாக இருக்கிறது. அதாவது 50 விழுக்காடு வறியவர்கள் உலகின் வெறும் 2 விழுக்காடு சொத்துக்களைத்தான் பகிர்ந்துகொள்கின்றனர். நாடுகளின் அடிப்படையில் பார்த்தால் இந்த முரண் வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளில் மிக அதிகமாக இருக்கிறது. இந்தியா தன்னை வளரும் நாடு என்று சொல்லிக் கொண்டாலும் இந்தியாவை மிகவும் ஏழ்மை நிறைந்த நாடாகவும் மிக மோசமான ஏற்றத் தாழ்வு மிகுந்த நாடாகவும்தான் இந்த அறிக்கை அடையாளப்படுத்துகிறது. குறிப்பாக இந்தியாவில் உயர்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த 1 விழுக்காடு நபர்களிடம் நாட்டின் மொத்த வருவாயில் 22 விழுக்காடு குவிகிறது என்கிறது அறிக்கை.
முக்கியமாக இந்த அறிக்கையானது பொருளாதார ஏற்றத் தாழ்வையும் கார்பன் உமிழ்வையும் அழகாக ஒப்பிட்டிருக்கிறது. நாடுகளுக்கிடையேயான பொருளாதார அடுக்குக்கும் கார்பன் உமிழ்வுக்கும் தொடர்பிருப்பதைப் போலவே நாட்டுக்குள்ளேயும் உயர் வகுப்பினருடைய கார்பன் உமிழ்வு அதிகமானதாகவும் பொருளாதாரத்தில் அடித்தட்டில் இருப்பவர்களின் கார்பன் உமிழ்வு குறைவாகவும் இருக்கிறது. உலகின் மொத்த கார்பன் உமிழ்வில் 50 விழுக்காட்டுக்கு வெறும் 10 விழுக்காடு மக்களே காரணமாக இருக்கின்றர் என்பது, இந்த முரண் எத்தனை ஆழமானதாக இருக்கிறது என்பதை உணர்த்தும்.
எது இங்கு பாலாறும் தேனாறும் ஓடக் காரணமாகவும் உலகம் முழுவதையும் வறுமையிலிருந்து மீட்கக் காரணமாகவும் சொல்லப்படுகிறதோ அந்த ‘நவதாராளப் பொருளாதாரக் கொள்கை’தான் இத்தனைக் கூரிய முரண்பாடுகளுக்குக் காரணம் என்று இந்த அறிக்கைச் சொல்கிறது. குறிப்பாக 1980களுக்குப் பிறகான பொருளாதார உறவுகள் அதற்கு முன்பு இருந்த சில நேர்மறையான விளைவுகளையும்கூட சிதைத்துச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது என்கிறது அறிக்கை.
“ஒரு சாமானிய விவசாயியை அழைத்து அவனது விலா எலும்புகளை எண்ணிப்பாருங்கள். பின்னர் நீங்கள் விரும்பிய வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தியபின் மீண்டும் அவரை அழைத்து அவனது விலா எலும்புள் மூடும்படியாக சதை ஏதும் தென்படுகிறதா எனப்பாருங்கள். அப்படியேதும் இல்லையெனில் அது உண்மையான வளர்ச்சித்திட்டம் அல்ல” என்று பொருளியல் அறிஞரான ஜெ.சி. குமரப்பா குறிப்பிடுகின்றார். எதற்கெடுத்தாலும் ‘வளர்ச்சி – வளர்ச்சி’ என்று கூப்பாடுபோட்டு சுற்றுச்சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கெடுக்கும் இன்றைய அரசுகளின் முகத்திரையை இதைவிட நுட்பமாய் யாரும் கிழித்தெறிய முடியாது.
“உலக ஏற்றத் தாழ்வு அறிக்கை 2022” அரசுகளின் வருவாய் குறைந்து தனிநபர்களின் வருவாய் தொடர்ந்து உயர்ந்துவருவதாகச் சொல்கிறது. அப்படியானால் இன்னொருபுறம் இந்தியா பொருளாதாரரீதியாக வளர்கிறது என்பது எதைக் குறிக்கிறது என்பதை யாரும் விளக்க வேண்டியதில்லை. தொடர்ந்து தனியாருக்கு தாரைவார்க்கப்படும் அரசு நிறுவனங்கள், தனி நபர்களின் (பொருளாதார) வளர்ச்சியை மட்டும் கருத்தில்கொண்டு மக்கள்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் திட்டங்கள் போன்றவற்றை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எளிய மக்களுக்கு சிறு பொருளாதார நலன்களைக் கொடுக்கும் அரசின் சின்னச் சின்ன முன்னெடுப்புகளைக்கூட ‘இலவசங்கள்’ என்று கொக்கரித்து ஏளனம் செய்பவர்கள் இந்தப் பெருநிறுவனங்களின் அதிபர்களுக்கு வழங்கப்படும் பல்லாயிரம் கோடி சலுகைகள், மானியங்களைப் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அதுமட்டுமின்றி உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி, ஏராளமான பொருளாதாரக் குற்றங்கள் செய்து, சட்டங்களைத் தனக்கு ஏற்றபடி வளைத்து நெளித்து கோடிகளைச் சேர்த்து வைத்திருக்கும் கோமான்கள், பெருவாரியான மக்கள் வியந்து பார்க்கும் ஹீரோக்களாகவே இங்கு கொண்டாடப்படுகின்றனர்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே போதுமான பொருளாதார வலுவில்லாத ஒரு நாட்டில்தான் உலகின் பெரும் பணக்காரர்களான அம்பானியும் (ஒரு நாள் வருவாய் ரூ. 163 கோடி), அதானியும் (ஒரு நாள் வருவாய் ரூ. 1000 கோடி), ஷிவ் நாடாரும் (ஒருநாள் வருவாய் 260 கோடி) அரசர்களாய் வலம் வருகின்றனர். இந்த அரசர்களுக்காகவே இங்கு அரசு என்று ஒன்று இயங்குகிறது. இவர்களின் வளமான வாழ்வைக் கருத்தில்கொண்டே நாட்டின் பொருளாதாரத் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. வளர்ச்சித் திட்டங்கள் முன்மொழியப்படுகின்றன. அடிப்படையில் வளர்ச்சி என்ற வார்த்தையையே நாம் அறுத்து ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
‘வளர்ச்சித் திட்டங்கள்’ அப்பகுதிவாழ் மக்களுக்கு சில நேரங்களில் உடனடிப் பொருளாதார நலன்களைக் கொடுத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நீண்டகால அளவில் பெரும் துயரங்களையும் சமயத்தில் மரணத்தையும்கூட பரிசளித்திருக்கிறது என்பதே உண்மை.
ஒரு உதாரணமாக இங்கு கொடைக்கானல் யுனிலீவர் பாதரச வெப்பமானி (Thermometer) ஆலையை எடுத்துக்கொள்வோம். பாதரசம் கடும் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு கனவுலோகம் என்பதை நாம் அறிவோம். தொடர்ந்து பாதரசத்தை பயன்படுத்துபவர்கள் கடுமையான நரம்புக்கோளாறுகளுக்கு ஆட்பட்டு உயிரிழப்பர் என்பது அறிவியல் உண்மை. அப்படியிருக்க வெளிநாட்டு நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் தமிழக ஜீவ நதிகளின் பிறப்பிடமும் தாயுமான மேற்குத்தொடர்ச்சி மலையின் கொடைக்கானலில் ‘பாதரச வெப்பமானி’ ஆலையை அமைத்தது. தொடக்கத்தில் எல்லாம் நன்றாகவே இருந்ததுபோலத் தெரிந்தது. ஆனால் சில காலங்களில் கடுமையான உடல்நலப்பாதிப்புகள், தொழிலாளர்களின் தொடர் மரணங்கள், சூழல் இயக்கங்களின் தொடர் அழுத்தம், எளிய மக்களின் சமரசமற்ற நீண்ட தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு பலநூறு டன் பாதரசக் கழிவுகளை பல்லுயிரின வளமிக்கச் சோலைக்காட்டில் கைவிட்டுவிட்டு ஆலையை மூடிவிட்டு வெளியேறுகிறது நிறுவனம். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் அந்தக் கழிவுகள் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
தெர்மாமீட்டர் தயாரிக்கும் நிறுவனம் தனக்குத் தேவையான பொருளை தன் ஊரிலேயே தயாரித்திருந்தால் இன்னும் எளிதாக இருக்குமே? ஏன் அது இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் கொடைக்கானல் மலையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அந்த நிறுவனத்தால் எளிய மக்கள் வேலைவாய்ப்பு பெற்றார்கள் என்பது உண்மை. அந்தக் குடும்பங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றதும் உண்மை. ஆனால் அந்த வளர்ச்சி எத்தனை ஆண்டுகள் நீடித்தது? உண்மையில் “நீடித்த வளர்ச்சியை” அடைந்தது யார்? இது இங்கு கொண்டுவரப்படும் ஒவ்வொரு சூழல்விரோதத் திட்டத்துக்கும் பொருந்தும்!
உலகையே ஆட்டிப்படைக்கும் சர்வவல்லமை கொண்ட தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஏன் ஜட்டி பனியனுக்கு திருப்பூரை எதிர்பார்த்திருக்கின்றன? ஏன் ஆம்பூரின் தோல் பொருட்கள்? ஏன் நம் மண்ணில் உற்பத்தியாகும் கார்கள்? அவனுக்கு அவற்றை உற்பத்திச் செய்யும் தொழில்நுட்பம் வசப்படவில்லையா? தெர்மா மீட்டர் கம்பெனியாகட்டும் இல்லை ஜட்டி பனியன் கம்பெனிகளாகட்டும் ஏன் இந்தியா போன்ற நாடுகள் குறிவைக்கப்படுகின்றன? இந்தியர்கள் என்ன மிகச்சிறப்பான வேலைக்காரர்களா இல்லை இங்கு கிடைக்கும் மூலப்பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையா? என்ன காரணமாக இருக்கும்?
எதுவும் இல்லை. கடுமையான சுற்றுச்சூழல் விதிகளை கைக்கொள்ளும் வளர்ந்த நாடுகள் தம் நீரையும் நிலத்தையும் சாயத் தொழிற்சாலைகளாலும் வேதிக்கழிவுகளாலும் மாசுபடுத்த அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கடும் நச்சுக்கழிவுகளை அப்படியே ஆற்றிலோ குளத்திலோ கலந்துவிட்டு எத்தனை நூற்றாண்டானாலும் அலட்டிக்கொள்ளாமல் இலாபத்தைப் பெருக்கலாம். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு போபால் போன்ற பேரழிவு ஏற்பட்டால்கூட நட்டமில்லை கிடைத்தவரை சுருட்டிக்கொண்டு பிணங்களைப் புதைக்குமுன்பே தப்பி ஓடிவிடலாம் என்ற எண்ணம்தான் ஒரே காரணம்.
நண்பர் ஒருவரைப் பார்த்து “நல்லாயிருக்கீங்களா?” என்று நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவரும் “நல்லாயிருக்கின்றேன். நல்ல சம்பளம் கிடைக்கிறது, நினைத்ததை வாங்க முடிகிறது” என்று மகிழ்ச்சியோடு உங்களுக்குப் பதிலளிக்கிறார். உடனே “குடும்பத்தோட எங்க கிழம்பிட்டீங்க?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். “மனைவிக்கு கேன்சர் அப்புறம் பையனுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு இருக்குது. அதான் டாக்டர கன்சல்ட் பண்ணிட்டு வரலாம்ணு கிழம்புறோம்” என்று அவர் பதிலளித்தால் அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ஒரு நாட்டின் பெருவாரியான குடிமக்கள் சூழல் சீர்கேடுகளால் செத்துக் கொண்டிருக்கும்போது அவர்களின் பாக்கெட்டிலிருக்கும் சில பணத் தாள்களை மட்டும் எண்ணிப் பார்த்து விட்டு அவர்கள் சுபிட்சமாக இருப்பதாகவும் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
நல்லாட்சி, அமைதியான, பாதுகாப்பான சமூகச் சூழல், நல்ல வேலை, கல்வி, உடல்நலம், சூழல் நலம், சத்தான உணவு, சுகாதாரம், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இவை எதையும் கணக்கில் கொள்ளாத வெறும் பொருளாதார வளர்ச்சி எப்படி உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். இங்கு உற்பத்தியும் சமூக – சூழல் சீர்கேடும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாய் இருக்க, வெறும் (ஒரு சிறுபான்மை மேல்தட்டு வர்க்கத்தின்) பொருளாதார ஏற்றத்தை மட்டும் நாட்டின் வளர்ச்சியாக மதிப்பீடு செய்யும் சூழல் உலக அளவில் மாறவேண்டும்.
சூழல் நலனைக் கெடுக்கும் திட்டங்கள் / தொழில்கள் முடக்கப்படும்போது பெருவாரியான எளிய மக்கள் பாதிக்கப்படுவர் – வேலைவாய்ப்பை இழப்பர் என்பது உண்மை. ஆனால் வலுவான ஒரு அரசு நினைத்தால் இதைத் திறம்பட பாதிப்புகளின்றிக் கையாள முடியும். முதலில் அரசு ஒருசாராரின் மிதமிஞ்சியப் பொருளாதார வீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உதாரணமாக நில உச்சவரம்பு போன்று வருமான உச்சவரம்பு, ஆடம்பரப் பொருட்களின் வரிகளை அதிகரிப்பது, குறிப்பிட்ட அளவுக்கு மேலான சொத்துக்களின் வரியை அதிகரிப்பது போன்றவற்றின்மூலம் அரசு தன் வருமானத்தைப் பெருக்கிக்கொண்டு எளிய மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். ஒருபுறம் மட்டும் குவிந்துகொண்டிருக்கும் செல்வத்தை மடைமாற்றி எல்லாருக்குமானதாக்கிப் பொருளாதார சமத்துவத்தை உறுதிசெய்தாலே இங்கு பெரும்பாலான சிக்கல்கள் காணாமல் போய்விடும்.
உதாரணமாக சூழல் நலன் கருதி பட்டாசு உற்பத்தியை அரசு முடக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் தொழில் தடை செய்யப்படுவதன்மூலம் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கான இழப்பீடுகள், அந்தத் தொழிலுக்கான மானியங்கள், கடனுதவிகள், தீபாவளி காலங்களில் காற்று மாசைக் கட்டுப்படுத்தச் செய்யும் நடவடிக்கைகள், அவற்றுக்கான கண்காணிப்புகள், விபத்துக்கள் / உடல்நலப் பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் போன்றவற்றுக்கான செலவீனங்கள் போன்றவை அரசுக்கு குறுகியகால மற்றும் நீண்ட கால அளவில் சேமிப்பாகின்றன. இந்த சேமிக்கப்பட்ட தொகையை அந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சூழலுக்கு இசைந்த தொழில்களை முன்னெடுத்து அரசு மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்க முடியும். அரசே மாற்றுத் தொழில்களை ஏற்று நடத்தும்போது முன்பு பட்டாசுத் தொழிலில் இருந்ததுபோல அல்லாமல் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே வருவாய் இடைவெளியையும் வெகுவாகக் குறைக்க முடியும்.
மக்களின் உடல்நலன், சூழல் நலன், மகிழ்ச்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சியை அளவிடும் பல்வேறு அளவீடுகள் உலகெங்கும் முன்மொழியப்பட்டு அவற்றில் சில பயன்பாட்டிலும் இருக்கின்றன. Fordham Index of Social Health (FISH), Genuine Progress Indicator (GPI), United Nations Human Development Index (UNHDI), Gross Sustainable Development Product (GSDP), Gross Environmental Sustainable Development Index (GESDI) போன்ற குறியீடுகள் அவற்றில் அடங்கும்.
இவற்றோடு ஒரு நாட்டின் நிலைத்த வளர்ச்சியை (Sustainable Development) அளவிடும் 17 குறிக்கோள்களை உள்ளடக்கிய SDG (Sustainable Development Goals) என்ற அளவீடும் ஐநாவால் பரிந்துரைக்கப்பட்டு நாடுகளின் வளர்ச்சி அதனடிப்படையில் மதிப்பிடப்படுகின்றது. இந்த 17 இலக்குகள் முறையே (1) வறுமை ஒழிப்பு, (2) பட்டினியின்மை, (3) உடல் நலம் மற்றும் நலமான வாழ்வு, (4) தரமான கல்வி, (5) பாலின சமத்துவம், (6) தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரம், (7) அனைவருக்குமான தூய்மையான எரிசக்தி, (8) நல்ல வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, (9) தொழில்துறை – புதுமைகள் – உட்கட்டுமானம், (10) குறைக்கப்பட்ட ஏற்றத் தாழ்வுகள், (11) நிலைத்த நகரங்களும் சமூகங்களும், (12) நிலைத்த நுகர்வும் உற்பத்தியும், (13) காலநிலை மாற்றத்திற்கான செயல்பாடுகள், (14) கடல்வாழ் உயிரினங்கள், (15) தரைவாழ் உயிரினங்கள், (16) அமைதி – நீதி மற்றும் உறுதியான நிறுவனங்கள், (17) குறிக்கோள்களை எட்டுவதற்கான கூட்டு என்பவை ஆகும். இவற்றை 2030க்குள் எட்டுவதற்கான தெளிவான வரையறைகள் அடங்கிய 17 குறிக்கோள்களைக் கொண்டு நாட்டின் நிலைத்த வளர்ச்சி அளவிடப்படுகிறது.
இவற்றை அளவிடும் வழிகாட்டிகளாக பள்ளிக் கல்வி பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை, வேலையின்மை விழுக்காடு, சேரிகளில் வாழும் மக்கட்தொகை, மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை, சிசு மரணங்கள், கழிவு மேலாண்மை போன்ற அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அடிப்படையில் 2020ஆம் ஆண்டுத் தரவுகளின்படி 192 நாடுகளை உள்ளடக்கிய தரவரிசைப் பட்டியலில் 60 மதிப்பெண்களுடன் 117ஆவது இடத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தவிர்த்த அத்தனை தெற்காசிய நாடுகளும் இந்தியாவைவிட அதிகப் புள்ளிகள் பெற்று முன்வரிசையில் இருக்கின்றன என்பதையும் இங்கு சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்த SDG குறியீட்டின் 17 குறிக்கோள்களில் ஒன்றாக மட்டுமே பொருளாதார வளர்ச்சி இருப்பது பொருளாதாரம் மட்டுமே வளர்ச்சியல்ல என்பதையும் அது வளர்ச்சியின் பத்தோடு ஒன்று பதினொன்றான அங்கம்தான் என்பதையும் உணர்த்தும். எப்போதும் பேசுபொருளாயிருக்கும் ‘முதலாளிகளுக்கான வளர்ச்சி’யை விடுத்து நாட்டின் குடிமக்களை மட்டுமல்ல அத்தனை உயிரினங்களின் நலனையும் வளர்ச்சியையும் ஒற்றைக் குடையினுள் கொண்டுவரும் ‘ஒருங்கிணைந்த நலன்’ (One health) குறித்துப் பேசுவதற்கான அவசியத்தையும் நிர்பந்தத்தையும் இந்தப் பெருந்தொற்று நமக்குத் தந்திருக்கிறது. நம் முன்னிருக்கும் பாதை இரண்டு வழிகளைக் கொண்டது. அவை பொருளாதார வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்குமான இருவேறு பாதைகள் அல்ல. மாறாக வாழ்வுக்கும் அழிவுக்குமான பாதைகள்.
நாம் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?
- ஜீயோ டாமின்