புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மட்டுமே காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான ஒரே தீர்வல்ல

அருகி வரும் பறவையான கானமயிலின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அவற்றின் வசிப்பிடங்களில் தலைக்கு மேல் செல்லும் உயரழுத்த மின்தடங்களுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை உச்ச நீதிமன்றம் தளர்த்தியிருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திராசூட் மற்றும் நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஷ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு மார்ச் 21, 2024ல் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அந்த உத்தரவில் கானமயில்களுக்காக புதைவடக் கம்பிகளை மாற்றினால் இந்தியாவின் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தடைபடும், எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் விட்டால் கானமயில் போன்ற அழியும் தருவாயில் இருக்கும் உயிரினங்களை இழக்க நேரிடும் என்கிற இரண்டையும் சமநிலையில் நிறுத்திப் பார்த்தது உச்ச நீதிமன்றம்.

இத்தீர்ப்பின் மற்றொரு அம்சம் என்னவென்றால் காலநிலை மாற்றம் மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவாக அலசப்பட்டிருப்பதுதான். குறிப்பாக சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் உயிருக்கும் உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 21 ஆகிய இரண்டின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளில் இருந்து விடுபட அனைவருக்கும் உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ட்தொடர்பான விரிவான கட்டுரை ஏப்ரல் மாத பூவுலகு இதழில் “கானமயிலும் இந்தியாவின் உமிழ்வில்லா நிலை இலக்கும்” எனும் தலைப்பில் வெளியாகியிருந்தது.

இத்தீர்ப்பு குறித்து அசர் அமைப்பு ஒரு இணையக் கருத்தரங்கை மே 23ஆம் தேதி ஒருங்கிணைத்திருந்தது. அதில், சூழலியல் சட்டம் மற்றும் கொள்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் காஞ்சி கோலி, வழக்கறிஞர்கள் ரித்விக் தத்தா, மனு சேஷாத்ரி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர். அக்கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகளின் சுருக்கம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

காஞ்சி கோலி:

”உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு காலநிலை மாற்றம் குறித்து நாம் விவாதிக்க வேண்டிய பல கோணங்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வெறும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்கிற வரையறைக்குள் சுருக்குகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மட்டுமே காலநிலை மாற்றத்திற்கான ஒரே நிவாரணி என நிறுவ முயல்கிறது. உணவு, சுகாதாரம், நீர் என காலநிலை மாற்றம் தொடர்பான பல பிரச்சனைகள் மற்றூம் தீர்வுகள் உள்ளன என்பதை நாம் உணர வேண்டும்.”

மனு சேஷாத்ரி:

” காலநிலை மாற்றம் என்பது நாம் சமகாலத்தில் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனையாகும். இதை ஒரு முக்கியப் பிரச்சனை என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அங்கீகரித்துள்ள வகையில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். இந்திய அரசு தேசிய அளவிலான காலநிலை இயக்கம் ஒன்றைக் கொண்டுள்ளது. ஆனால், அவை அனைத்தும் வெறும் கொள்கை வடிவிலேயே மேலோட்டமாக உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் இல்லை. கொள்கைகள் அனைத்தும் சட்டமாக மாற்றப்பட்டால்தான் அது சாத்தியமாகும். கார்பன் வரி, கார்பன் வணிகம் போன்றவை நமக்கு அவசியம், இவை மூலம்தான் நாம் 2070ஆம் ஆண்டுக்குள் உமிழ்வில்லா நிலை எனும் இலக்கை அடைய முடியும். இந்த இலக்கை அடைவதற்கான முயற்சிகளில் பல துறைசார் நடவடிக்கைகள் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் உள்ளன. அவை தேசிய செயல்திட்டத்தோடு ஒத்துப்போக வேண்டும். மற்ற நாடுகளில் இது செயல்பாட்டில் உள்ளது. நம் நாட்டிலும் இது வேண்டும்.”

ரித்விக் தத்தா:

”உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பெரும் பகுதிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க மற்றும் புதிய எரிசக்தி, சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் ஆகிய மூன்றும் இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பதிலில் இருந்து எடுத்தாளப்பட்டது. இம்மூன்று துறைகளுமே இப்பிரச்சனையை கானமயில்களின் பாதுகாப்பு எனும் கோணத்தில் அணுகாமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனும் கோணத்தில் இருந்து அணுக வேண்டும் எனக் கூறுகின்றனர். அரசியலமைப்பின் பிரிவு 14 சமத்துவம் குறித்துப் பேசுகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் அனைவரையும் சமமாகப் பாதிப்பதில்லை என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விரிவாக அணுகியுள்ளது. ஆனால், இந்த வழக்கில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கும் கானமயில்களின் பாதுகாப்புக்கும் இடையே ஒரு சமன்செய்யும் வேலையை உச்சநீதிமன்றம் பார்த்துள்ளது. இந்த சமன்செய்தல் உச்ச நீதிமன்றத்தின் வேலை இல்லை. இந்த வழக்கில் வாதிட்ட  ஒன்றிய அரசின் எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க மற்றும் புதிய எரிசக்தி, சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் ஆகிய மூன்று அமைச்சகங்களும் நாம் நிலக்கரி பயன்பாட்டை கைவிட வேண்டும் எனக் கூறுகின்றன. ஆனால், நம் அரசு ஒரே ஒரு அனல்மின் நிலையத்தைக்கூட மூடுவதற்குத் தயாராக இல்லை என்பதே உண்மை. ஆனால், இந்த வழக்குதான் நிலக்கரியை ஒரு அசுத்தமான எரிசக்தி எனக் கூறும் முதல் சட்டப்பூர்வமான வாக்குமூலமாகும்.

கானமயில்களைப் பாதுகாப்பதற்கான வழக்கானது, ஒரு காலநிலை வழக்காக மாறியுள்ளது. இது அடிப்படையிலேயே காலநிலை வழக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். காலநிலை சட்டம் நம்மிடம் இல்லை; ஆனால் இத்தீர்ப்பின் வாயிலாக அரசியலமைப்பின் பிரிவு 12 மற்று 14 மீறப்பட்டுள்ளதாக ஒரு காலநிலை சார்ந்த பிரச்சனையை நாம் பசுமைத் தீர்ப்பாயத்துக்கோ, நீதிமன்றத்துக்கோ கொண்டு செல்ல முடியும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் இதற்கான சாத்தியங்கள் கூடியுள்ளது. TERI அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் 2030ஆம் ஆண்டுக்குள் புனேவில் 37% மழைப்பொழிவு அதிகரிக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து ஆறுகளில் நடக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை எதிர்த்து பலரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அலையாத்திகள் என்னை கடல்மட்ட உயர்வு மற்றும் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும். ஆகையால் அதை அழிக்கக் கூடாதென நான் நீதிமன்றத்தை நாட முடியாது. ஆனால், அதே அலையாத்திகள் CRZ மண்டலத்திற்குள் இருந்தால் நான் சட்டப்பூர்வமாக அதன் அழிவைத் தடுக்க முடியும். இந்த இடைவெளியை நாம் குறைய வேண்டும்.”

 

இக்கலந்துரையாடலைக் காண:

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments