இந்திய அரசமைப்பு சட்டத்தின் நோக்கங்களை மீட்டெடுக்கவே போராடுகிறோம்…

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு பத்ம விருது ஒன்றை கொடுப்பதற்காக அணுகிய போது, “எனக்கு நேரமில்லை” என்று மறுத்தவர் பெஸ வாடா வில்சன். “இந்த அரசிடமிருந்து எனக்கு எந்தவொரு விருதும் வேண்டாம்” என்று கூறிய வில்சனுக்கு 2016ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது வழங்கப் பட்டுள்ளது. மனித மலம் அள்ளுபவர்களின் விடுதலைக் காகவும் அதைப்போன்ற இழிவான நடை முறைகளை ஒழிப்பதற்காகவும் சஃபாய் கர்மாச் சாரி அந்தோலன் என்ற அமைப்பை நடத்தி வருபவர் பெஸவாடா வில்சன். பிலிப்பைன்ஸ் அதிபராக பதவி வகித்த ரமோன் மகசேசே பெயரால் கடந்த சுமார் 60 ஆண்டுகளாக ரமோன் மகசேசே விருது வழங்கப்படுகிறது. ஆசியாவின் நோபல் பரிசு என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.
“வெறுமென துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்வதுபோல பாசாங்குக் காட்டுவது நிதர் சனத்தை மாற்றிவிடாது” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் வில்சன், “பட்டியல் இனத்தவர்களின் அமைப்பு சார்ந்த ஒதுக்குதலே பிரச்சினைக்குக் காரணம் என்பதை உணர்ந்து கொள்ளாமல் ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கு அரசு கொடுக்கும் ஆடம்பர விளம் பரங்கள் எந்த பலனையும் தராது!” என்கிறார். “நாங்கள் தான் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும்; எம் மக்கள்தான் கழிவு நீர் தொட்டிக்குள் மூச்சடைத்து இறப்பதும். உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை என்றால் தேசத்தில் ஆங்காங்கே பார்க்கப்படும் தலித் எழுச்சி நாடெங்கும் பரவலாகி, தலித்கள் எந்தவித துப்புரவு பணியிலும் ஈடுபடமாட்டார்கள்” என்று எச்சரிக்கிறார் வில்சன். இந்தியாவின் மத்திய அரசு அளிக்க முன் வந்த விருதை வேண்டாம் என்று மறுத்த பெஸ வாடா வில்சன் ரமோன் மகசேசே விருதை ஏற்றிருக்கிறார். இதையட்டி “தி ஹிந்து சென்டர் ஃபார் பாலிடிக்ஸ் அண்ட் பப்ளிக் பாலிஸி” சார்பில் வித்யா சுப்ரமணியன் மேற்கொண்ட நேர் காணலின் ஒரு பகுதி இங்கே.

விருதுகள் உங்களுக்குப் பெரிதில்லை. இருப்பினும், இது உங்களுக்கும் உங்கள் அமைப்புக்கும் கிடைத்த சர்வதேச அங்கீகாரம். உங்கள் போராட்டங்களை இது முன் நகர்த்துகிறதா? 

இந்த விருது எனக்கு முக்கியம்தான். ஏனென்றால், மனித மலம் அள்ளுவது எந்த வகையிலும் சாதி சார்ந்த ஒன்றுதான் என்பதை இந்த விருது ஒப்புக்கொள்கிறது. எனவே இது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விருதின் சான்றிதழில் “மலம் அள்ளுவது இந்தியாவின் மனிதத் தன்மை மீது பீடித்திருக்கும் நோய். கட்டமைக்கப்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகள் மூலம் தலித்கள், இந்தியாவின் ‘தீண்டத்தகாதவர்கள்’ மீது சுமத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சாதிய ரீதியான ஒடுக்குமுறை இருப்பது பதிவு செய்யப்படுகிறது. எனவே இந்த விருது மிகவும் முக்கியமானது.

தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத் தினால் உருவாக்கப்பட்ட சத்தங்களின் மூலம் மூழ்கடிக்கப்பட்ட எங்கள் குரலை இந்த விருதி லிருந்து கண்டெடுத்துள்ளோம். பிரதமர் துடைப் பத்தைக் கையிலெடுத்து மற்றவர்களையும் இணையுமாறு அறைகூவல் விடுத்தார். இதன் மூலம், சுத்தம் செய்வது எல்லோரின் கடமை என்ற செய்தி முன்மொழியப்பட்டது. இது கேலிக்குரிய விஷயம். மலம் அள்ளுவதிலிருந்து கழிவுநீர் தொட்டியில் இறங்குவது, குப்பைகளை அப்புறப்படுத்துவதுவரை, சுத்தம் செய்யும் வேலை என்பது பாரம்பரியமாகவும், பிரத் யேகமாகவும் தலித் சமூகத்தின் ஒரு சாராருக்கே அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு புதிய சுத்தம் செய்யும் திட்டத்தை அறிவிப்பதால் இது மாறி விடுமா? தூய்மை இந்தியா திட்டத்திற்கு எங்கள் எதிர்ப்பு பல நிலைகளில் இருக்கிறது. ஆனால், எல்லா வற்றுக்கும் அடிநாதமாக மிகவும் உணர்வற்ற வகையிலான அணுகுமுறையின் மேலேயே எங்கள் கோபம் அதிகமாக உள்ளது. பிரதமரும் அவருடைய மந்திரிகளும் துடைப்பத்தைக் கையிலெடுத்தபோது, அதை அழகியல் (விளம்பர) தன்மையுடையதாக மாற்றினர். எங்களைப் பொறுத்தவரை, துடைப்பம் ஒடுக்கு முறையின் குறியீடு, இந்தச் சமூகம் எங்கள் மீது திணிக்கும் மனிதத்தன்மையற்றச் செயல். அம்பேத்கர் எங்களுக்கான முழக்கமாக, “துடைப் பத்தை உதறுங்கள், பேனாவை எடுங்கள்” என்று கூறியிருக்கிறார். எங்கள் பெண்கள் அவர்களாகவே மு ன் வ ந் து து ¬ ட ப் ப த் ¬ த உதறினார்கள், மலக்கூடையை எரித்தார்கள். நாங்கள் முன்னேறிக் கொண்டிருந்தோம். பிரதமரின் அறைகூவல் எங்களை முற்றிலுமாக வேறு ஒரு நிலையில் பாதித்தது. என் அனுபவத்தில் கூறுகிறேன், என் அம்மா நான் துடைப்பத்தை எப்போதும் தொடக்கூடாது என்றார். ஆகையால் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு துடைப்பத்தை எடுத்துப் பெருக்குவதென்பதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். அவர், “நாம் எல்லோரும் சுத்தப்படுத்துவோம்” என்று சொல்லியிருக்கக்கூடாது. இதுவரை துப்புரவு பணியில் 5000 வருடங்களாக ஈடுபட்டுவரும் எங்களுக்கான முழக்கம் வேறாக இருந்திருக்க வேண்டும். பிரதமரோ, அவருடைய அதிகாரிகளோ எங்கள் பரிதாபகரமான நிலையைப் பற்றி நினைத்திருப்பார்களா? எங்கள் முன்னேற்றத்தை பற்றிச் சிந்தித்திருப்பார்களா? அவர் தூய்மை இந்தியா திட்டத்திற்கு பெரும் தொகையை ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புடன், அவர் துப்புரவு பணியாளர்களுக்கென்று ஒரு தொகையை ஒதுக்கியிருக்க வேண்டாமா? அதாவது, ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தார் என்பதற் காகவே மலம் அள்ளுதல் மற்றும் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த, ஈடுபட்டிருக்கும் மொத்த சமூகத்தினரையும் இதில் சேர்க்க வேண்டும். அரசாங்க அமைப்புகளின் கீழா அல்லது தனியார் அமைப்புகளின் கீழா என்று பாரபட்சம் பார்க்காமல் சேர்க்க வேண்டும். முரணைப் பாருங்கள், பிரதமரின் அறை கூவலை மதித்து குறைந்தபட்சம் ஆரம்பத் திலாவது அனைவரும் சுத்தப்படுத்துகிறேன் என்று மிகவேகமாக களத்தில் இறங்கினர். இறுதியில், கிராமப்புறங்களிலிருக்கும் பள்ளியில் பால்மிகி (தலித்கள்) மாணவ மாணவிகள்தான் பள்ளியை சுத்தப்படுத்த ஆசிரியர்களால் பணிக்கப்பட்டனர்.

அது எப்படி உங்களுக்குத் தெரியும்?

பால்மிகி சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர் களிடமிருந்து வரும் செய்திகளின் அடிப் படையிலேயே இதைக் கூறுகிறேன் (90 சதவீத துப்புரவு பணியாளர்கள் பால்மிகி சமூகத் திலிருந்தே வருகிறார்கள்). மிக அதிர்ச்சியடைய வைத்த விஷயம் இது. பல பத்தாண்டுகளாக பெற்றோர்களிடம் குழந்தைகளைப் படிக்க வைக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் நடந்ததைப் பாருங்கள்? மக்களின் மனதில், சுத்தம் செய்யும் பணி இவர்களுக்கானது என்று அழுத்தமாகப் பதிந்துள்ளது. குப்பைகளைச் சேகரிப்பது, கழிவறைகளைச் சுத்தம் செய்வது எங்கள் சாதியினருக்கே உரியது என்று நினைக் கிறார்கள்.

பல இடங்களில் தலித் மக்கள் ஒன்றிணைந்து, வீதிக்கு வந்து போராடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சாதி ஏற்றத்தாழ்வுகளை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அரசுக்கு விடும் எச்சரிக்கை இது. சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, நாட்டின் ஒரு சாரார் மற்றவர்களைத் தாக்குவதற்கு யார் உரிமை கொடுத்தது? இது தலித்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. இது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம் மற்றும் சரிசமமாக வாழ்வதற்கான அடிப்படை உரிமையை நிலைநாட்டுதல் பற்றியது. எனவே, தலித்களை சமமானவர்களாக மதிக்க சமூகத்தைச் சீர்திருத்த வேண்டும் என்று கூறுபவர்களின் கூற்றை நான் ஏற்கமாட்டேன். நம் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், சம உரிமையும் நலிவடைந்தப் பிரிவினரைக் காப்பதும் நாட்டின் முக்கிய கடமை. இது எப்போதும் நடைமுறையில் இல்லை என்றாலும், நாட்டை ஆளுபவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக முற்றிலும் அவர்கள் கடமைகளைத் தட்டிக் கழித்திருக்கிறார்கள். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்துத்துவ அடிப்படைவாதிகள் அரசை நிலைகுலைத்துவிட்டு, சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துள்ளனர். இன்று பசு மாட்டுச் சடலங்களை அப்புறப் படுத்த மறுக்கும் தலித்களின் செயல் பல வகைகளில், மலக் கூடையை எரித்த எங்கள் பெண்கள் செயலை ஒத்திருக்கின்றன. வரும் காலங்களில் எங்கள் மக்களின் அதிகமானோர், அவர்கள் பிறந்த சாதியினாலேயே திணிக்கப்படும் துப்புரவுப் பணியை செய்ய மறுப்பார்கள்.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் நோக்கில் கிட்டத்தட்ட 80 இலட்சம் கழிவறைகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. பல தாராளவாதிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் வாதம், இது தேசத்திற்குத் தேவை மற்றும் நன்மை பயப்பவை என்பதாகும். உங்கள் பொது கூட்டங்களில் பலவற்றிலும், உங்கள் சமீபத்திய நேர்காணல்களிலும், அதிக கழிவறை அதிக கழிவு நீர் தொட்டியை உருவாக்கும்; கூடவே அதிக இறப்புகளை உருவாக்கும் என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் அரசாங்கமோ, கிராமப்புறங்களில் கட்டப்படும் இரு தொட்டி கழிவறை முறையானது, மலம் அள்ளுவதற்கான தேவையை முற்றிலுமாகப் போக்கிவிடும் என்று கூறுகிறது. இரு தொட்டி கழிவறை தானாகவே நிர்வகித்துக் கொள்ளும் திறனுடையது, இரண்டாவது தொட்டி நிறைவடையும்போது, முதல் தொட்டியில் இருக்கும் கழிவு-மலம் உரமாக மாறியிருக்கும், இதன் மூலம் அதை நீக்குவதற்கு தேவையில்லை அல்லவா?

கழிவறைக் கட்டுவது எங்களுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை, அது எங்களை இன்னும் பின்னோக்கியே இட்டுச் செல்லும். கழிவகற்றும் மொத்த செயல்பாடும் இயந்திரமயமாக்கப்பட வேண்டும். தெளிவான திட்டமிடல் இல்லையென்றால், பெரிய மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. கிராமப்புறங்களில் கழிவறையை வீட்டுக்குள்ளே கட்டும் பழக்கம் இல்லை. வீட்டு வளாகத்துக்குள் கழிவறை கட்டுவதை அசுத்தம் விளைவிப்பதாகப் மக்கள் பார்க்கிறார்கள். இதன் அபாயம், எங்கள் சாதி மக்களே கழிவறைகளை சுத்தம் செய்யப் பணிக்கப்படுவர். நீங்கள் சொல்வது ஆய்வின் மூலமும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் ஃபார் கம்பேஷ்னேட் எக்கனாமிக்ஸ் செப்டம்பர் 2015-ல் வெளியிட்டுள்ள ஆய்வானது, தீண்டாமைக்கும் திறந்த வெளியில் மலம் கழிப்பதற்கும் உள்ள ஆழமான உறவை சுட்டிக்காட்டுகிறது! யார் தீண்டாமையைக் கடைபிடிக்கிறார்களோ, அவர் களேதான் நேரடியாகவோ மறைமுகமாகவோ, திறந்த வெளியில் மலம் கழிப்பதைச் செய்கிறார்கள். ‘சாதி, தூய்மை, அசுத்தம் மற்றும் திறந்தவெளியில் மலம் கழித்தலின் புதிர்’ என தலைப்பிட்ட அந்த ஆய்வு: “மற்ற நாடுகளில், கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்துவதென்பது விரும்பத்தகாத அல்லது கீழ்நிலை வேலையாகக் கருதப்பட்டாலும், அதை நிர்மாணிக்க சந்தை விதிமுறைகள் உள்ளன. ஆனால், சாதி இந்துக்களுக்கோ கழிவுநீர் தொட்டியைச் சுத்தப்படுத்துவது என்பது நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒரு விஷயமாக உள்ளது, அல்லது ஒரு தலித்தைத் தவிர வேறு யாரும் செய்யக் கூடாதென்றே கருதுகிறார்கள்” மேலும் அந்த ஆய்வில் “பல கிராம வாசிகள், கழிவுநீர் தொட்டி நிரம்புவதற்கு முன்பே அது அசுத்தப்பட்டுவிடுவதாகக் கருதி, அடிக்கடி சுத்தம் செய்கின்றனர். இதன் விளைவாக கிராமப்புறங்களில் கட்டப்படும் கழிவுநீர் தொட்டி பல பத்தாண்டுகளுக்கு நிறை வடையாதபடிக்குப் பெரிதாகக் கட்டப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. அது மிகச்சரியான கருத்து. அடிமட்ட நிலைகளில் மாற்றங்களை உருவாக்காமல், கழிவறை கட்டப்படும் படலம் தொடர்ந்தால், இன்றிருப்பதைவிட எங்கள் நிலைமை இன்னும் மோசமாகவே ஆகும். அவர்கள் வீட்டினுள்ளோ அல்லது வீட்டின் அருகாமை யிலோகூட கழிவறைகளைக் கட்ட அனுமதிக்காத மக்கள், அதைக் கண்டிப்பாக அவர்களே சுத்தம் செய்ய மாட்டார்கள். எனவே நாங்கள் இரண்டு இடங்களில் தேவைப்படுகிறோம்: பல இலட்சம் கழிவறை பான்களை சுத்தம் செய்வதற்கு. ஒரு கழிவறை பலரால் உபயோகப்படுத்தப்படும்போது, துர்நாற்றம் வீசுவதாகவும் கறை படிந்ததாகவும் மாறுவது இயல்புதான். அதுவும், தண்ணீர் பற்றாக்குறையுள்ள நம் நாட்டில் இது அதிகமாக இருக்கும். எங்கள் மக்களைத் தவிர யார் இதைச் சுத்தம் செய்வர்? இரண்டாவதாக, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு எங்களைப் பணிப்பார்கள். நான் கூற வரும் விஷயம், தொட்டியைச் சுத்தம் செய்யும்போது அதிலிருக்கும் மலம் அழுகிவிடும் என்று கூறினாலும், உண்மையில் மக்கள் ‘தூய்மை’ எண்ணம் காரணமாக அதை அடிக்கடி சுத்தம் செய்யவே எத்தனிப்பார்கள். எங்களைத் தவிர யார் இந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வது? மேலும் பெரும்பான்மையான நகர்ப் புறங்களில், நிலத்தடி கழிவுநீர் வடிகால் அமைப்பு இல்லாததால், அதிக கழிவறை, அதிக கழிவு நீர் தொட்டியையே உருவாக்கும். நாங்கள் மேற்கொண்ட மாதிரி கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 1200 பேர் கழிவுநீர் தொட்டிகளிலும் சாக்கடைகளிலும் மூச்சுத் திணறி இறந்திருக் கிறார்கள். நகர்ப்புறங்களில், கழிவுநீர் தொட்டி பெரும்பான்மையாக நிறுவப்பட்டால், இந்த எண்ணிக்கைக் கற்பனைக்கு எட்டாதவாறு அதிகரிக்கும்.

நான் அறிந்தவரை, கழிவுநீர் தொட்டிகள் சக் ஷன் பம்ப் என்ற உறிஞ்சும் கருவி மூலமே காலி செய்யப்படுகிறது, இல்லையா?

ஆம், அது நடக்கிறது. ஆனால், சக் ஷன் பம்ப் பொறுத்தப்பட்ட வண்டியை கூப்பிடுவதற்கு நிறைய செலவாகும். இதைத் தவிர்ப்பதற்காக நாங்களே சுத்தம் செய்ய பணிக்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை. தினந்தினம் கழிவுநீர் தொட்டியின் மூலம் இறப்பு நடக்கிறது என்ற ஆதாரம் போதாதா, நாங்கள்தான் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்ய அமர்த்தப்படுகிறோம் என்பதை நிரூபிப்பதற்கு? எனவே எங்கள் பயமே, தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம்,
நீங்கள் மேலும் நிறைய மக்களுக்கு மரண அழைப்பு விடுக்கிறீர்கள் என்பதே.

பிறகு என்னதான் தீர்வு? திறந்தவெளி மலம் கழித்தலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டாமா, சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டாமா?

கண்டிப்பாக. முதலில் ஒழுங்கான அமைப்பைக் கட்டமையுங்கள். நாட்டைச் சுத்தப்படுத்துகிறேன் எனக் கூறிக்கொண்டு, கடுமையான வேலைகளை எங்களிடமே சுமத்தும் நடைமுறை இல்லாதவாறு உறுதி செய்ய வேண்டும். நகரங்களில் நிலத்தடி கழிவுப்பொருள் வடிகால் அமைப்பை உறுதி செய்யுங்கள். இது சாத்தியமில்லை என்றால், பாதுகாப்புச் சாதனங்களைக் கொடுத்தோ கொடுக்காமலோ, மனிதர்கள் மூலமாக கழிவு நீக்கப்படுவதை முழுவதுமாகத் தடை செய்யுங்கள். 2013 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட “மனிதக் கழிவற்றும் பணியில் ஈடுபடுத்தலை தடுத்தல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வளித்தல் சட்டம்” ((The Prohibition of Employment As Manual Scavengers And Their Rehablitation Act, 2013) மற்றும் விதிகள், எங்கள் தொடர்ச்சியான பணிக்கும், போராட்டங்களுக்குமான விளைவு. இது 1993 ஆம் ஆண்டு சட்டத்தின் பிற்போக்குத் தனங்களையும், செயலற்ற தன்மைகளையும் நீக்கியுள்ளது. ஆனால் 2013 ஆம் வருடச் சட்டத்தின் பலனாக நடந்ததென்னவோ, கழிவுநீர் தொட்டிகளிலும் சாக்கடைகளிலும் இறங்குபவர்களுக்கு பாதுகாப்புச் சாதனங்கள் கொடுப்பது மட்டுமே.

ஏன்? ஏன் ஒருவர் கழிவுநீர் தொட்டிகளிலோ சாக்கடை களிலோ இறங்க வேண்டும்? யார் இந்தப் பாதுகாப்புச் சாதனங்கள் விதிமுறைகளை மதிக்கிறார்கள்?

பிரச்சினை என்னவென்றால் அரசு ஒரு யோசனையிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிக் கொண்டே இருப்பதுதான். நமது நகரங்களில் சரியான வடிகால் அமைப்புகள் இல்லாமல் மோசமாக உள்ளன. ஆனால் இவற்றை சரிசெய்வதற்கு பதிலாக ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க ஆட்சியில் இருப்பவர்கள் ஆசைப்படுகிறார்கள். நமது இரயில்வே துறைக்கு பயோ-டாய்லட்ஸை உருவாக்க 2 0 1 9 வ ¬ ர ய £ வ து ஆ கு ம் . இப்படிச் செய்வதன் மூலமே தண்டவாளத்திலிருந்து மனிதர்கள் மலம் அள்ளுவதை ஒழிக்க முடியும். ஆனால் இதை துரிதப்படுத்துவதற்கு பதில், புல்லட் இரயில்களைக் கொண்டு வர ஆட்சியாளர்கள் அவசரப்படுகிறார்கள்.

2013-ல் இயற்றப்பட்ட புதிய சட்டம் உங்கள் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. அந்தச் சட்டம் வெளிப்படையாகவே சாதிய ஏற்றத்தாழ்வுகள் பற்றியும், மலம் அள்ளுவதில் தலித்களே பணிக்கப் படுகிறார்கள் என்றும் கூறுகிறது. ஆனால் அந்தச் சட்டத்தில் பல குறைகள் இருப்பதாகவும் நீங்கள் திருப்தியடையும் அளவுக்கு அவை தீர்க்கப்படவில்லை என்றும் கூறுகிறீர்கள். ஏன்?

அந்தச் சட்டத்திலேயே குறைகள் இருக்கின்றன. அதை நடைமுறைப் படுத்துவதிலும் மிகப்பெரிய பெரிய சிக்கல் இருக்கிறது. ஆனால் 2013 ஆம் ஆண்டுச் சட்டத்தின் மிகப் பெரிய குறைபாடு, இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போதோ அல்லது அதற்குப் பிற்பாடோ, மலம் அள்ளுபவர்களை (மட்டும்) மலம் அள்ளுதலில் “ஈடுபட்டுள்ள (அ) பணியமர்த்தப்பட்டுள்ள” நபர் என்று வரையறுப்பது தான். இதை உறுதி செய்வதுபோல இச்சட்டத்தின் 10ஆம் பிரிவு, (மனிதக் கழிவகற்றும் வேலைக்கு மனிதர்களை பணியமர்த்தும்) எந்தக் குற்றமும் அது நடைபெற்ற காலத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட்டால்தான் குற்றமாக ஏற்கப்படும் என்று கூறுகிறது. அதாவது இந்தச் சட்டம் அமலுக்கு வரும் முன்பே, இந்த்த் தொழிலில் ஈடுபட்டவர்களை இந்த சட்டம் அங்கீகரிக்கவில்லை. மேலும் இச்சட்டம், வேறு வாழக்கைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மலம் அள்ளும் வேலையிலிருந்து தானாக வெளியேறியவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எங்கள் அமைப்பு மூலமாக மனித வரலாற்றிலேயே மிகவும் இழிவான தொழிலாக கருதப்படும் மலம் அகற்றும் வேலை செய்து வந்தவர்களை அத்தொழிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தினோம். “உங்கள் அவலங்களிலிருந்து விடுதலைப் பெற மற்றவர்களுக்காகக் காத்திருக் காதீர்கள். நீங்களே அதைச் செய்யுங்கள்” என்றோம். எங்களது வலியுறுத்தலை ஏற்று, இந்த தொழிலிருந்து வெளியேறியவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். இப்போது, இந்தப் பெண்களுக்கெல்லாம் என்ன ஆனதென்று பாருங்கள். இந்தச் சட்டத்தின் கீழும் அதன் வி தி மு ¬ ற க ளி ன் கீ ழு ம் ம று வாழ்வுக்காக ரூ. 40,000 கொடுக்கப்படும். இந்த சட்டம் வருவதற்கு முன்பு, தானாக முன்வந்து இந்தப் பணியை விட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கிடையாது. இதைப் பார்க்கும் போது, அவர்களுக்குத் தெரிந்த ஒரே வேலையைத் துறந்தவர்களின் துணிவு மெச்சத்தக்கது. அதுவும், எதிர்காலம் எப்படி இருக்குமென்று துளியும் பயப்படாமல் அதைச் செய்தார்கள். இந்த முரணைப் பாருங்கள்: இந்தச் சட்டத்தின் கீழ் நிவாரணம் மற்றும் மறு வாழ்வுக்கான கணக்கெடுப்பு முடியும்வரை மலம் அள்ளுபவர்கள் அவர்கள் பணியைத் தொடர்ந்தே ஆக வேண்டும். இது நீண்ட காலக் காத்திருப்பாக மாறக்கூடும். ஏனென்றால் அதிகாரத்தில் இருப் பவர்கள் அவ்வளவு சீக்கிரம் மலம் அள்ளுபவர்களை அந்தப் பணியில் இருப்பதாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலமே இதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். அரசு தரப்பு வழக்கறிஞர், மலம் அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்று கூறினார். நாங்கள் சமர்ப்பித்த புகைப்பட ஆதாரங்களையும் அவை பழையது என்று கூறி ஏற்க மறுத்தார். இந்த தொழிலாளர்கள் பொய் சொல்லவில்லை என்பதை நிரூபிக்க, நீதிமன்ற விசாரணை நடந்த நாளன்றே அவர்கள் வேலை செய்த கழிப்பறைகளை பின்புலமாகக் கொண்டு புகைப்படங்கள் எடுத்தனர். ஆதாரத் துக்காக, புகைப்படம் எடுக்கையில் அன்றைய செய்தித் தாளினை சுவரில் ஒட்டி எடுத்தனர். இப்போது புரிகிறதா? நடைமுறைகள் எவ்வளவு கீழ்த்தரமாக, இழிவுடன், உணர்வற்று பின்பற்றப் படுகிறதென்று.

மார்ச் 2014இல் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கழிவுநீர் தொட்டி மற்றும் சாக்கடையைச் சுத்தம் செய்வது மனிதர்களே மலம் அள்ளுவதற்குச் சமம் என்று கூறி, அந்தப் பணியில் ஈடுபட்டு இறந்தவர்களின் குடும்பத்தார்க்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடாகக் கொடுப்பதாகக் கூறியிருந்ததை உங்களுடைய அமைப்பு பிற செயற்பாட்டாளர்களும் வரவேற்றீர்கள். ஆனால், இப்போதோ அது உங்களுக்கு மகிழ்வளிப்பதாக இல்லை, ஏன்?

மலக்கழிவு தொட்டிகளையோ, குழாய் களையோ சுத்தம் செய்யும்போது கொல்லப் பட்டவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது என்று கூறவில்லை. இந்த மரணத்திற்கு காரண மானவர்கள் சிறை செல்லவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. இந்த வழக்கை மூன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் 18 நீதிபதிகள் சுமார் 11 வருடங்கள் விசாரித்தனர். ஆனால் இறுதியில் யாராவது இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக 10 இலட்சம் ரூபாய் கொடுங்கள் என்று மட்டும்தான் கூறினர். மலம் அள்ளுபவர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா? இதன் பெயர் நீதியா? இவ்வாறான இறப்புகளை கொலையாகக் கருதக்கூடாதா? 2013ம் ஆண்டு சட்டம் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. மனிதர்களை மலம் அள்ளுமாறு பணிப்பவர்களுக்கு அது சிறை வாசத்துடன் கூடிய தண்டனையை வழங்க பரிந்துரைத்தது. மேலும் “அபாயகரமான வகையில் மலக்கழிவு தொட்டி மற்றும் குழாய்களை சுத்தம் செய்ய பணிப்பவர்களுக்கு” சிறைவாசத்துடன் கூடிய தண்டனையை வழங்க வழி செய்தது. இந்தத் தீர்ப்பின்படி, இந்த குற்றத்தை செய்ததாக இதுநாள்வரை எந்த ஒரு நபரோ, அதிகாரியோ விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படவில்லை. நாம் அனைவரும் அறிந்ததுபோல, இன்றுவரை சில நகராட்சி அமைப்புகள் மனிதர்களையே மலம் அள்ளுவதற்கு அமர்த்துகின்றன. அதைப்போலத்தான் நகர நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ எங்கள் சமூக மக்களை அபாயகரமான மலக்கழிவு தொட்டிக்களையும், குழாய்களையும் சுத்தம் செய்ய அனுப்புகிறார்கள். மலக்கழிவு தொட்டிக்குள்ளோ, குழாய்க் குள்ளோ ஒருவர் இறந்தால், அதற்கு யார் பொறுப்பு? எனவே, இந்த உயிரிழப்புகளை கொலையாகக் கருதச் சொல்கிறோம். இந்த குற்றம்புரிந்த அதிகாரிகளை 2013ம் ஆண்டுச் சட்டத்தின் கீழும், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989- ன் கீழும் தண்டிக்க வேண்டும் என்கிறோம். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, உச்ச நீதிமன்றம் எங்கள் பெண்கள் மலம் அள்ளுவதாகச் சொல்வது பொய் என்றது. நான் முன்னரே சொன்னதுபோல அவர்களின் குற்றச்சாட்டை மறுக்க, அந்தப் பெண்கள் கழிப்பறையின் சுவரில் அன்றைய செய்தித் தாளை பின்புலமாகக் கொண்டபடி புகைப்படம் எடுத்தனர். ஆனால், நாங்கள் பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டிய அதிகாரி ஏன் தண்டிக்கப்படவில்லை? எந்த உயிரிழப்பையும், எந்த காயத்தையும் இழப்பீடு கொடுத்து முடித்துவிடலாம் என்ற போக்கு நிலவுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை கேட்பதற்காக தங்கள் சொந்த ஊரிலிருந்து டெல்லிக்கு வந்த பெண்கள், இந்தக் குற்றங் களுக்காக எவரொருவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதை அறிந்து கண்ணீர் சிந்தினர்.

2013ம் ஆண்டு சட்டத்தினாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பினாலும் ஏதாவது நேர்மறையான தாக்கம் உண்டாயிற்றா?

2013ம் ஆண்டு சட்டத்தைப் பற்றியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பற்றியும் மாவட்ட நிர்வாகத்தினர் எவ்வளவு அறிந்துள்ளனர் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். 1993ம் ஆண்டு சட்டம், மலம் அகற்றும் வேலைக்கு மனிதர்களை அமர்த்துபவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் ஆகிய இருவரையும் குற்றவாளி என்றது. 2013ம் ஆண்டு சட்டம் பணியாளர்களை நீக்கி, வேலைக்கு அமர்த்துபவர்களை மட்டுமே குற்றவாளிகள் எனக் கூறியது. இது தனிநபர், தனியார் அமைப்பு அல்லது அரசாங்க அமைப்பு ஆகிய அனைவருக்கும் பொருந்தும். ஆயினும், இன்றுவரை பெரும்பான்மையான மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு, 2013ம் ஆண்டு சட்டம் நிறைவேறியது தெரியாது. இந்த சட்டத்தின்கீழ் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்காக மலம் அகற்றும் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிவரத்தை சேகரிக்க வேண்டிய அரசு அமைப்புகள், சட்டத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் மலம் அகற்றும் தொழிலாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்புகின்றன. உதாரணத்திற்கு, ஏப்ரல் 2015இல், உத்தரா கண்ட் உதம்சிங் நகரிலுள்ள ஜஸ்புர் முனிசிபல் கார்ப்பரேஷன், கமலா என்பவருக்கு மனித மலம் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, ஏன் அவர் தண்டிக்கப் படக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. 2013ம் ஆண்டு சட்டத்தையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் கேலி செய்யும் விஷயம் இது. ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக பாவித்து தண்டனை வழங்கப்படும் என்று கூறுவது மேலும் கொடுமை அல்லவா?

நாம் ஆரம்பித்த இடத்திற்கே மறுபடியும் வந்திருக் கிறோம். உனா தாக்குதலுக்குப் பின்பான தலித் எழுச்சி மேலும் பெரிதாகவும் பரவலாகவும் வளருவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அப்படிப் பார்க்கையில், உங்கள் அமைப்பின் பெயரான “சஃபாய் கரம்சாரி அந்தோலன்” (மனிதக் கழிவகற்றும் தொழிலாளர் இயக்கம்) என்பதே முரணாக இல்லையா?

தலித் மக்கள் விழிப்பணர்வு எங்கள் கோரிக் கைகளுக்குக் கண்டிப்பாகத் துணையாக இருக்கும். இந்த சமீபத்திய விருது கூட சர்வதேச கவனத்தை சஃபாய் கரம்சாரி அந்தோலனை நோக்கி திருப்பி இருக்கிறது. துப்பரவு பணியைப் பொருத்தவரை நான் முன்னரே கூறியதுபோல, அந்தப் பணியை நாங்கள் செய்யப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். இந்தப் பணி எங்கள் பிறப்பின் காரணமாகவே திணிக்கப்படுகிறது. நாங்கள் செய்யும் வேலையை நிரந்தரமாக்குங்கள் என்றோ அதிக சம்பளம் கொடுங்கள் என்றோ எங்கள் அமைப்பு என்றுமே கேட்டதில்லை. எங்கள் கோரிக்கை மலம் அள்ளுபவர்களின் விடுதலை மற்றும் உலர் கழிவறைகளை ஒழிப்பது. எங்கள் மக்கள் அபாயகரமான மலக்கழிவு தொட்டிகளையும், குழாய்களையும் சுத்தம் செய்வதிலிருந்தும் அகற்றுவது. அரசுக்கு எங்கள் கோரிக்கை : மன்னிப்புக் கேளுங்கள் இதில் சோகமான அம்சம் என்னவென்றால், உச்ச நீதீமன்றம் உட்பட அனைத்து அமைப்பு களும் எங்களுக்கு பாதுகாப்புச் சாதனங்களைக் கொடுத்து, பணிபுரியும் சூழலை மேம்படுத்த முயற்சிக்கின்றன. இதனால், பால்மிகி சமூகத்தைச் சேர்ந்த நாங்கள், அபாயகரமான மலக்கழிவு தொட்டிகளிலும், குழாய்களிலும் தொடர்ந்து பணிபுரியவே வழிவகை செய்யப்படுகிறது. ஆனால், நாங்கள் தற்போது செய்யும் இந்தப் பணி எந்த விதத்திலும் நிலைத்திருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

உங்கள் இயக்கத்தை மேம்படுத்தவும் உங்கள் கோரிக்கையை அதிகார ரீதியாக செறிவூட்டவும் அரசியலில் நுழைவீர்களா?

தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எங்கள் “சஃபாய் கரம்சாரி அந்தோலன்” (மனிதக் கழிவகற்றும் தொழிலாளர் இயக்கம்) சமூக இயக்கம் அல்ல. எங்கள் மீதான அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுமாறு நாங்கள் மக்களிடம் பிச்சை கேட்கவில்லை. இது ஒரு அரசியல் போராட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள சுயமரியாதை, கௌரவம் மற்றும் சம உரிமைக்கான அரசியல் போராட்டம்.

தமிழில்: திண்டி பரத்

பெஸ்வாடா விஸ்சனுடன் நேர்காணல்

நன்றி: தி இந்து மையம்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments