மாநகராட்சியின் திடக்கழிவுகளுடன் சேரும் மருத்துவக் கழிவுகளால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது;

மாநகராட்சியின் திடக்கழிவுகளுடன் சேரும் மருத்துவக் கழிவுகளால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது; அதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

 

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகள், கொரோனா தனிமைப்படுத்துதல் முகாம்கள்  (quarantine Centers, isolation Centers),கொரோனா பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும்  மருத்துவக் கழிவுகளின் மூலம் கொரோனா நோய் பரவுவதை தடுக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) கடந்த ஏப்ரல் 19ம் தேதி மறுஆய்வு செய்யப்பட்ட விரிவான வரைமுறையினை வெளியிட்டது:- அதன்படி,

 1. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகளின் (Bio Medical Waste Management Rules 2016ன்) படி மருத்துவ கழிவுகள் மற்ற மாநகராட்சி திடக் கழிவுகளுடன் சேராமல் இருக்க ஐந்து வெவ்வேறு நிற சேகரிப்பு பைகளை கொண்டு பிரித்தெடுக்கவும் அதோடு சேர்த்து கூடுதலாக கழிவை கையாளும் போது கசிவு ஏற்படுவதை தடுக்க, அக்கழிவுகளை இரண்டடுக்கு பாதுகாப்புள்ள பைகளில் எடுத்துசெல்ல வலியுறுத்துகின்றன புதிய விதிமுறைகள்.
 1. கொரோனா வார்டுகளில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை எளிதில் அடையாளப்படுத்தும் விதத்திலும், அதை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காகவும் கொரோனா கழிவுகள் சேகரிக்கப்பட்ட பைகளில் “Covid-19 waste” என எழுதி அடையாளப்படுத்த வேண்டும்.
 1. கொரோனா கழிவு மற்ற மருத்துவ கழிவுகளுடன் கலக்காமல் இருப்பதற்கு மருத்துவமனைகள் கொரோனா கழிவுகளை தனியாக ஒரு அறையில் சேகரித்து வைக்க வேண்டும், அல்லது சம்மந்தபட்ட வார்டில் இருந்தபடியே நேரடியாக சம்மந்தப்பட்ட Treatment Facility க்கு அனுப்பி வைக்கவேண்டும்.
 1. மருத்துவமனையில்/சுகாதார மையத்தில் இருந்து வெளியேறும் கொரோனா கழிவுகள் தனியாக பதிவு செய்யப்பட வேண்டும்.
 1. 1 % Sodium Hypochlorite கொண்டு கழிவுகளை அகற்ற பயன்படும் பைகள், தொட்டிகள், தள்ளுவண்டிகள், வாகனங்கள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

இவையெல்லாம் மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் கொரோனா கழிவுகளை கையாளுவதற்காக பிரத்தியோகமாக வெளியிட்டிருக்கும் விதிமுறைகளின் சாராம்சங்கள்.

ஆனால் இதையும் தாண்டி கொரோனா கழிவுகளை கையாள்வதில் தமிழ்நாடு அரசாங்கம் பிரத்தியேகமாக கருத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை இந்த அறிக்கையின் மூலம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்துகிறது.

 1. CBMWTF (Common Bio Medical Waste Treatment Facility) பற்றாக்குறை:-

தமிழ்நாட்டில் நாள் ஒன்றிற்கு 47 டன் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாவதாக தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தகவல் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 34 டன் மருத்துவ கழிவுகளை கையாளக்கூடிய 11 CBMWTF கள் மட்டுமே உள்ளன.

சென்னையில் உற்பத்தியாகும் மருத்துவக்கழிவுகளில் வெறும் 25 சதவிகிதத்தை மட்டுமே பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த கட்டமைப்புகள் உள்ளன. மீதமுள்ள மருத்துவ கழிவுகள் முறையாக கையாளப்படாமல், எந்தவிதமான பாதுகாப்புமில்லாமல் குழி தோண்டி புதைக்கப்படுவதும், மாநகராட்சி திடக்கழிவுகளுடன் இந்த மருத்துவக் கழிவுகள் கலப்பதும் இயல்பாக நடைபெறுவதால்தான், தொடர்ந்து நீர்நிலைகளில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் என்ற செய்தியினை அவ்வப்பொழுது தொலைகாட்சிகளில் பார்த்து வருகிறோம். (சமீபத்தில் சென்னை அனைகாப்புத்தூர், மண்ணிவாக்கம், புழல் உள்ள நீர்நிலைகளில் டன்  கணக்கில் கண்டெடுக்கப்பட்ட மருத்துவ கழிவுகள் இதற்கு ஒரு உதாரணம்).

இப்படி ஏற்கனவே மருத்துவக் கழிவு மேலாண்மை தமிழகத்தில் கேள்விக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் தற்போது கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் அதிகரித்துவரும் மருத்துவ கழிவுகளை முறையாக கையாளாமல், கொரோனா தொற்று மேலும் அதிகரித்து தமிழகம் எங்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மருத்துவ கழிவுகளில் 15% மட்டுமே மிகவும் அபாயகரமானதாக (infectious, toxic and radio active) இருக்கும், ஆனால் தற்போது கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் நிரம்பி வழிவதால், அவர்களிடமிருந்து  உற்பத்தியாகும் கழிவுகள் பெரும்பான்மையானவை நோய் தொற்றை பரப்பக்கூடையவை, அதனால் மருத்துவ கழிவுகளில் இருக்கும் அபாயகரமான கழிவுகளின் அளவு அதிக அளவில் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் போதிய Treatment Facility கள் இல்லாமல் இயங்குவது என்பது தமிழ்நாட்டின் சுகாதாரத்திற்கே ஆபத்தாகிவிடும்.

மதுரை மாவட்டத்தில் மருதுவக்கழிவுகளை கையாளக்கூடிய வசதிகள் இல்லாத காரணத்தால்தான் மதுரை வீர பாஞ்சானில் உள்ள கண்மாயில் டன் கணக்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு பின்னர் கண்டெடுக்கப்பட்டன.

எனவே பூவுலகின் நண்பர்கள் ஏற்கனவே கூறியது போல மாவட்டத்திற்கு ஒரு CBMWTF யை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.

 1. கொரோனா வார்டுகள் மற்றும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை:

மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், பரிசோதனை கூடங்கள் ஆகியவற்றில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை பிரத்தியேகமாக Treatment Facility களுக்கு அனுப்பபட்டு எவ்வாறு கண்காணிக்கப்படுகிறதோ, அதைப்போலவே கொரோனா மையங்களிலும் (Corona Centres), தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் (quarantined homes) உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகளை Treatment facility களுக்கு எடுத்து சென்று பாதுகாப்பான முறையில் கையாளப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிபடுத்த வேண்டும்.

 1. சாம்பலாக்கிகளைத் தரமுயர்த்துதல் (Upgrading Incinerators):

மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் செயல்பாட்டிற்கு, கழிவுகளை அதீத வெப்பத்தில் எரிக்கும் சாம்பலாக்கிகள் (incinerators) என்று சொல்லப்படும்  கருவி மிக முக்கியமானது. இந்த சாம்பலாக்கிகளின் கட்டுமானம் மற்றும் பயன்பாட்டிற்கென மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் விதிகளை வகுத்துள்ளது. அதில் வெப்பம் 1000 டிகிரி யில் இருந்து 1200டிகிரி வரை இருக்க வேண்டும். காற்று மாசைக் கட்டுப்படுத்தும் கருவி பொருத்தபட்டிருக்க வேண்டும் மேலும் பாதரசம், சல்பர், HCL, நைட்ரோஜன் வாயு, மீதேன் வாயு ஆகிய நச்சு வாயுக்களை கண்காணிக்கும் கருவிகளும் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும் போன்றவை மிகவும் முக்கியமான நிபந்தனைகள்.

தற்போது இயங்கும் பல மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிறுவனங்கள் மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் பரிந்துரைத்திருக்கும் தரத்திற்கு தங்களது சாம்பலாக்கிகளை (incinerators) மேம்படுத்தாமல், விதிகளை பின்பற்றாமல்  இயங்கிக்கொண்டிருகின்றன.

தற்போது கொரோனா காலத்தில் அபாயகரமான மருத்துவக்கழிவுகள் அதிகம் உற்பத்தியாகும் நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை சுத்திகரிக்கும் நிறுவனங்களில் உள்ள incinerator கள் கழிவுகளை உரிய வெப்பத்தில் எரிக்கவும், வெளியேறும் மாசுக்களை கட்டுப்படுத்தவும், புகையை பாதுகாப்பான வகையில் 30மீட்டர் க்கு மேல் உயரத்தில் உள்ள புகைபோக்கியை கொண்டு வெளியேற்றும் வகையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

 1. மருத்துவக் கழிவுகளை அளவிடுதல் (Quantification of Medical Waste):

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்துவ கழிவுகள் எந்த எந்த இடங்களிலிருந்து இருந்து எடுக்கப்படுகிறது எவ்வளவு அகற்றப்படுகிறது என்பதை தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். (2016 க்கு பிறகு இந்த தகவல் வெளியிடப்படவில்லை).

 1. மருத்துவ ஊழியர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் பாதுகாப்பு :

கொரோனா மருத்துவ கழிவுகளை கையாளும் பணியாளர்களுக்கு தற்கவச உடைகள் (PPE), முக கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், Nitrile-கை உரைகள், Splash proof Apron, Hazmat suit போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும், பயன்படுத்தப்பட்ட பிறகு அவற்றை முறையாக அகற்றி கையாளப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.

 1. மருத்துவ கழிவுகளை கையாள்வது குறித்த பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும் (2017ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 4192 சுகாதார மையங்களுக்கு மொத்தமாக வெறும் 88 பயிற்சிகளே வழங்கப்பட்டுள்ளன). மருத்துவ கழிவுகளை கையாள்வதற்கு பயிற்சிகள் அளிப்பது போலவே கொரோனா கழிவுகளை எப்படி பாதுகாப்பாக கையாளுவதென மருத்துவ ஊழியர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பயிற்சி அளிப்பதின் மூலம் அவர்களிடம் நோய் பரவுவதை பெருமளவு தவிர்க்க முடியும்.
 1. கடந்த 70 நாட்களாக தமிழக மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட PCR கிட்கள், Rapid கிட்கள், ஊசிகள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவரும் பயன்படுத்திய PPEகள், கை உரைகள், முக கவசங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும், அவை எவ்வாறு கையாளப்பட்டன என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
 1. மருத்துவ கழிவுகளை முறையாக கண்காணிக்க மத்திய அரசால் ஏற்கனவே பரிந்துரைக்கபட்ட மருத்துவ கழிவுகளுக்கான Bar code system முறையை அமல்படுத்த வேண்டும்.
 1. நிதிநிலை அறிக்கையில் திடக்கழிவு மேலாண்மைக்கென 7,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது, அதில் மருத்துவக்கழிவு மேலாண்மை கட்டமைப்புகளை ஏற்படுத்த கணிசமான தொகையை ஒதுக்கவேண்டும்.
 1. மருத்துவ கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்கவேண்டும், தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு உத்தரவிடவேண்டும்.

(பி.கு: தமிழகத்தில் மருதுவக்கழிவுகள் எவ்வளவு உற்பத்தியாகின்றன என்ற தகவல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுகாதார துறை இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது, அதில் வேறுபாடு இருக்கலாம்.)

மேற்சொன்ன நடவடிக்கைகளை உடனே எடுத்து மருத்துவ கழிவுகளின் மூலம் கொரோனா பரவுவதை  தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.- பூவுலகின் நண்பர்கள்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments