நிலன்
சதுப்புநிலமாகக் கண்டறியப்பட்ட இடத்தில் ஆர்.டி.ஓ அலுவலகம் கட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 7 ஏக்கர் பகுதியில் ஆர்.டி.ஓ. அலுவலகம் கட்டிக் கொள்ளலாம் என தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயமே உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட பெருமழையின்போது ஒட்டுமொத்த நகரமே மழை நீரில் மூழ்கியதற்கு சென்னையின் வெள்ளநீர் வடிநிலப்பகுதிகளான பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள், எண்ணூர் கழிமுகங்கள் ஆகியவற்றை நாம் முறையாகப் பராமரிக்காதது தான் முக்கியக் காரணம். இந்த சதுப்புநிலங்கள் மற்றும் கழிமுகங்கள் அனைத்திலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றிற்கு செல்லக் கூடிய கால்வாய்கள், நீர்வழித் தடங்கள் பல ஆண்டுகள் தூர்வாரப்படாமல் உள்ளன. சில இடங்களில் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன. வெள்ளத்திலிருந்து மீண்ட பிறகு தமிழக அரசு பெயருக்காக சில ஆக்கிரமிப்புகளை அகற்றியது. அதிலும் கூட அகற்றப்பட்டவை என்னவோ ஏழைமக்களின் குடிசைகள்தான். சமீபத்தில்கூட மதுரவாயல் பகுதி கூவம் கரையோரம் உள்ள 347 குடும்பங்கள் மற்றும் அமிஞ்ஜிக்கரையில் உள்ள ஆற்றங்கரையோரம் உள்ள 220 குடும்பங்களும் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள திருமழிசைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அதற்கு அருகிலேயே ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள ஷான்ராயல் என்ற விடுதி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நம் அரசாங்கத்தின் அதிரடி நடவ்டிக்கைகள் இந்த அளவில்தான் உள்ள நிலையில் தற்போது தமிழக அரசின் போக்குவரத்துத்துறையே சோழிங்கநல்லூரில் சதுப்புநிலமாக அறியப்பட்ட இடத்தில் மிகப்பெரும் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகிறது. சோழிங்கநல்லூரை அடுத்த அக்கரை கிராமத்தில் 7ஏக்கர் பரப்பளவில் 186.46 லட்சம் செலவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்காக 2013ஆம் ஆண்டில் தமிழக அரசு இடம் ஒதுக்கியிருந்தது. இந்த இடமானது 1911ஆம் ஆண்டு வருவாய்துறை ஆவணத்தின் படி சதுப்புநிலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை அதுப்புநிலத்தைப் பாதுக்காக்க கடந்த ஆட்சியின்போது ஒதுக்கப்பட்ட நிதியானது அக்கரை கிராமத்தில் உள்ள இந்த சதுப்புநிலத்திற்கும் சேர்த்தே வ ழ ங் க ப் ப ட் டு ள் ள து . இந்த சதுப்புநிலத்தில் பல ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் நடந்து வருவ தாலும் இந்த இடத்தில் ஆர்.டி.ஓ அலுவலகம் அமைக்கக்கூடாதென சேகர் என்ற மீனவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றைக் கடந்த ஆண்டு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தீர்ப்பாயத்தில் பதில் மனுத் தாக்கல் செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பு “இந்த இடம் சதுப்புநிலமாக அறியப்பட்டாலும் ஆண்டு முழுவதும் இந்த இடத்தில் தண்ணீர் நிலையாகத் தேங்கியிருப்பது கிடையாது” என்ற காரணத்தைக் கூறிஆர்.டி.ஓ. அலுவலகம் அமைக்கலாம் என்று தனது கருத்தை வெளிப்படுத்தியது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி எம்.எஸ்.நம்பியார் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ். ராவ் அடங்கிய அமர்வு இந்த 7ஏக்கர் பகுதி சதுப்புநில பாதுகாப்பு விதிகள் 2010ன் படி சதுப்புநிலமாக வரையறுக்கப்படாததாலும், அந்தப் பகுதியில் நிரந்தரமாக நீர்த்தேக்கம் இல்லையென்பதாலும் அங்கு ஆர்.டி.ஓ அலுவலகம் கட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இதன் உண்மைத்தன்மையை அறிய நாம் நேரிடையாகவே அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது ஏறத்தாழ 66 ஏக்கருக்கு நீர் நிரம்பி ஏரி போல காட்சியளித்தது. இந்த நிலப்பகுதிக்கு பக்கிங்காம் கால் வாயிலிருந்து தண்ணீர் வரக் கூடாது என்பதற்காக பல இடங்களில் அடைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததையும் நம்மால் காணமுடிந்தன. மேலும் இந்த இடந்தில் பரந்துகிடந்த புற்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கட்டிடக்கழிவுகள் அனைத்தும் அந்தப் பகுதியில் கொட்டப்பட்டு மேடாக்கப்பட்டிருந்தது, இப்படி பல்வேறு வழியில் அந்த இடத்தின் இயற்கைத்தன்மையை மாற்றுவதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகம் கட்டுவதற்கு ஒப்பந்தம் பெற்றுள்ள கட்டுமான நிறுவனம் முயற்சி செய்திருப்பதை நம்மால் பார்க்கமுடிந்தது. இந்த இடம் சதுப்புநிலம்தான் என்பதற்கு மேலும் ஓர்ஆதாரமாக 2016ஆம் ஆண்டு அப் பகுதியில் சதுப்புநிலத்தில் மட்டுமே வளரக்கூடிய 63 புல், கோரை உள்ளிட்ட தாவரவகைகள் அங்கு இருப்பதாகக் கூறுகிறது மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி தாவரவியல் ஆய்வாளர்கள் நரசிம்மன் மற்றும் தேவநாதன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு. இப்படி பல்வேறு ஆதாரங்கள் இருந்தும் இந்த அழகான இயற்கை எழில்மிக்க சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம் கட்டுவதற்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி சட்டத்தின் மேல் வைத்துள்ள கடைசி நம்பிக்கையினையும் பொய்யாக்கியுள்ளது. அனுமதி வழங்கிய ஆணையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தைத் தவிர்த்து மீதியுள்ள இடங்களை போக்கு வரத்துத்துறை பராமரிக்க வேண்டும் எனவும் தீர்ப்பாயம் கூறியிருப்பது திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல் உள்ளது. பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பனையூர் போன்ற பகுதிகளின் வெள்ள வடிநிலப் பகுதியில் இந்த ஆக்கிரமிப்பு நிகழ்வது கடந்த 2015ல் நாம் பட்ட துயரங்களில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது.