காலநிலை மாற்றத்தின் பாதிப்பில் 360 கோடி மக்கள்: எச்சரிக்கும் ஐ.பி.சி.சி. அறிக்கை

காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு பெர்லினில் காலநிலை மாற்றத்தால் சமூக – பொருளாதார மற்றும்  இயற்கை அமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தகவமைப்பதற்கான வழிகள் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

தற்போது ஐ.பி.சி.சி. தன்னுடைய ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் காலகட்டத்தில் உள்ளது. இந்த ஆறாவது அறிக்கை காலமான 2015 முதல் 2023 வரை மொத்தமாக 8 அறிக்கைகள் வெளியிடப்படும். ஏற்கெனவே இதில் 5 அறிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன. தற்போது ஐ.பி.சி.சியின் இரண்டாவது பணிக் குழு காலநிலை மாற்றத்தின் காலநிலை மாற்றத்தின் தாக்கம், தகவமைத்தல் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது

  • கடுமையான மற்றும் தீவிர காலநிலை நிகழ்வுகள் உள்ளிட்ட மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை நிலை மாற்றத்தால் இயற்கைக்கு அப்பாற்பட்ட அளவிற்கு உலகம் முழுவதும் இயற்கைக்கும் மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
  • காலநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு பிராந்தியங்களிலும் ஏற்கனவே விளிம்பு நிலையிலும் அபாய கட்டத்திலும் இருக்கும் மக்களும் இயற்கை அமைப்புகளும் அளவுக்கு மீறிய வகையில் பாதிப்படைந்துள்ளன.
  • உலகம் முழுவதும் 330 முதல் 360 கோடி மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிப்படையும் நிலையில் வாழ்கின்றனர்.
  • தீவிர காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் புவி வெப்பநிலை உயர்வால் மீள முடியாத பாதிப்புகள் ஏற்பட்டு இயற்கை மற்றும் மனித அமைப்புகள் இனிமேல் தகவமைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • தற்போது நிலவக் கூடிய சூழலியலுக்கு எதிரான வளர்ச்சிக் கொள்கைகள் மனிதர்களையும் சூழல் அமைப்புகளையும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை அதிகம் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
  • சமூக பொருளாதார மேம்பாடு, நிலையான கடல் மற்றும் நிலப்பயன்பாடு இல்லாத, சமத்துவமின்மை நிலவும், விளிம்பு நிலையில் அதிகம் பேர் வசிக்கும் மற்றும் காலனியாதிக்கம் நிலவுகிற பிராந்தியங்களில் கணிசமான அளவில் மனிதர்களும் சூழல் அமைப்புகளும் காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிப்படைகின்றனர்.
  • இன்னும் சில ஆண்டுகளில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரும் பட்சத்தில் தவிர்க்க முடியாத வேகத்தில் தீவிர காலநிலை பேரிடர்களும், மனிதர்கள் மற்றும் சூழல் அமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
  • புவி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்த முழுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏற்படப் போகும் பாதிப்புகளை முற்றிலுமாக தடுக்க முடியாது.
  • காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும் நாளுக்கு நாள் சிக்கலானதாகவும் கையாள்வதற்கு மிகவும் கடினமானதாகவும் மாறக்கூடும்.
  • ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தீவிர காலநிலை பேரிடர்கள் நிகழும் எண்ணிக்கை அதிகரிக்கும் மேலும் காலநிலை மாற்றம் அல்லாத பிரச்சனைகளும் சேர்ந்தே நிகழும்போது சமாளிக்க முடியாத பிரச்சனையாக மாறக்கூடும். அத்தகைய சமயங்களில் காலநிலை மாற்றத்தை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வேறு சில புதிய பிரச்சனைகலை உருவாக்கும்.
  • வரும் தசாப்தங்களில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசை விட அதிகரித்தால் பல மனித மற்றும் சூழல் அமைப்புகள் 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உள்ளாக வெப்பநிலை இருக்கும்போது ஏற்படும் பாதிப்புகளைவிட கூடுதல் பாதிப்புகளையும் அபாயங்களையும் சந்திக்கும்.

 

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரசால் உண்டான கோவிட் – 19 என்கிற பெருந்தொற்று மக்களையும் பொருளாதாரத்தையும் ஆட்டிப் படைத்து வருகிறது. வழக்கமாக நடைபெறும் எல்லாப் பேரிடர்களையும் போலவே  இதிலும் விளிம்பு நிலையில் வாழும் மக்களே அதிகம் பாதிப்படைந்துள்ளனர். இதற்கிடையில்தான் பெரு வெள்ளம், அதி தீவிர கனமழை, காட்டுத்தீ, ஆழிப்பேரலை, வெப்ப அலைகள், கடுமையான பனிப்பொழிவு, வறட்சி, கடல் நீர் மட்ட உயர்வு, கடல் நீர் உட்புகுதல், நிலச்சரிவு, நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு தீவிர காலநிலை நிகழ்வுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில்தான் ஐ.பி.சி.சி. அமைப்பின் சார்பில் அதன் இரண்டாவது பணிக்குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. இவ்வறிக்கையில் அறிவியலாளர்கள் குறிப்பிடும்   முக்கியமான செய்தியானது புவி வெப்பமடைதலைக் குறைக்க நாம்  கடந்த காலங்களில் எடுத்த மற்றும் தற்போது எடுத்துக் கொண்டிருக்கிற எந்த நடவடிக்கையும் நிலையான வளர்ச்சியை வலுப்படுத்துகிற வளர்ச்சிப் பாதையில் நம்மை நிலை நிறுத்தவில்லை என்பதுதான்.

அடுத்த சில ஆண்டுகளில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைத்து புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்தாவிட்டால் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள நாம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் வீணாய்ப் போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் தகவமைப்பு நடவடிக்கைகளின் சமத்துவமின்மை நிலவுவதை அறிவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த, சமத்துவமிக்க நடவடிக்கைகளால் மட்டுமே நீடித்த மற்றும் நிலையான தகவமைப்பிற்கு உதவும் என இவ்வறிக்கை கூறுகிறது.

மேலும் இப்புவியின் உயிர்ப்பன்மையம் மற்றும் சூழல் அமைப்புகளை காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமானால் ஏற்கெனவே சீர்கெட்ட இப்பூமியின் 30 முதல் 50 விழுக்காடு நிலம், நன்னீர் மற்றும் கடற்பகுதியை மறுசீரமைப்பு செய்வது அவசியம் என இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

அதி வேக நடவடிக்கைகள் எடுத்தால்கூட பழைய நிலைக்குத் திரும்புவது சந்தேகமே என்கிறது ஐ.பி.சி.சியின் இவ்வறிக்கை. ஆனால், இந்தியாவில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கணக்கில் கொண்டால் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நம் நாட்டை காப்பது கடினம் என்றே தோன்றுகிறது. கடந்த ஆண்டு கார்பன் சமநிலை என்கிற இலக்கை இந்தியா அடைவதற்கான பஞ்சமிர்தக் கொள்கைகளை கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். ஆனால், மாதங்கள் பல கடந்தும் அந்த அறிக்கைக்கு செயல் வடிவம் வழங்குவதற்கான ஒரு நடவடிக்கையை கூட ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை.

பூமியை நாமும் பிற தாவர, உயிரின வகைகளும் வாழத் தகுந்த இடமாக நீடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மிகக் குறைவான நேரம் மட்டுமே உள்ளது. ஆனால், இப்படியான நிலையில்தான் இந்தியாவில் திட்டமிடப்படாத நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியைத் தராத  நாசகாரத் திட்டங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் நீர்த்துப் போகச் செய்யப்படுகின்றன.

இந்த நிலை தொடர்ந்தால் பேரிடர்களும் பெருந்தொற்றுமே நம் புதிய இயல்பு நிலையாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

முழு அறிக்கைக்கு: https://report.ipcc.ch/ar6wg2/pdf/IPCC_AR6_WGII_FinalDraft_FullReport.pdf

 

தொடர்புக்கு

சுந்தர்ராஜன்

9841031730

வெற்றிச்செல்வன்

8220703909.

 

 

 

பிற்சேர்க்கைகள்

ஐ.பி.சி.சி. என்றால் என்ன?

Intergovernmental Panel on Climate Change என்றழைக்கப்படும் இந்த அமைப்பு 1988ம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மற்றும்  ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தால் தொடங்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையிலான கொள்கைகளை உருவாக்க அரசாங்கங்களுக்கு அறிவியல் ரீதியிலான தகவல்களை வழங்குவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

 

ஐ.பி.சி.சி. செயல்பாடுகள்

இந்த ஐ.பி.சி.சி. மூன்று பணிக்குழுக்களாக செயல்படுகிறது. முதல் பணிக்குழு (Working Group I) காலநிலை மாற்றத்திற்கான அறிவியல் அடிப்படை குறித்தும் இரண்டாவது பணிக்குழு (Working Group II) காலநிலை மாற்றத்தின் தாக்கம், தகவமைத்தல் குறித்தும் மூன்றாவது பணிக்குழு (Working Group III) காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்துவது குறித்தும் ஆராய்கிறது.

 

ஐ.பி.சி.சி. இதுவரை 5 மதிப்பீட்டு அறிக்கைகளை (Assesment Report) வெளியிட்டுள்ளது.

முதல் மதிப்பீட்டு அறிக்கை

1990-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த முதல் மதிப்பீட்டு அறிக்கையானது காலநிலை மாற்றத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் குறித்த ஒரு பரந்த கண்ணோட்டத்தை வழங்கியது. மேலும், உலக வெப்பமயமாதலின் ஆதாரங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்தும் இவ்வறிக்கையில் பேசப்பட்டிருந்தது.

இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை

1995-ம் ஆண்டு வெளியான இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையானது உலகளவில் காலநிலை மாற்றத்திற்கு தெளிவாக கண்டறியக் கூடிய அளவில் மனித செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தது.

மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை

2001-ம் ஆண்டு வெளியான மூன்றாவது அறிக்கை கடந்த 50 ஆண்டுகளில் உலகம் சந்தித்த வெப்பநிலை உயர்வுக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம் என்பதற்கான புதிய மற்றும் வலுவான ஆதாரங்களை முன்வைத்தது.

 

நான்காவது மதிப்பீட்டு அறிக்கை

2007-ம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் உலகளவில் சராசரி காற்று மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் உயருதல் போன்றவற்றைக் கண்காணித்ததன் அடிப்படையில் உலக வெப்பமயமாதல் என்பது சந்ததேகத்திற்கு இடமின்றி தெளிவாகியதாகக் கூறப்பட்டிருந்தது.

ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை

2014-ம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் அனைத்து கண்டங்கள் மற்றும் கடல்களில் காலநிலை அமைப்பில் மனிதச் செயல்பாடுகளின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 95% மனிதர்கள் மட்டுமே உலக வெப்பமயமாதலுக்குக் காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

தற்போது ஐ.பி.சி.சி. தன்னுடைய ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் காலகட்டத்தில் உள்ளது. இந்த ஆறாவது அறிக்கை காலமான 2015 முதல் 2023 வரை மொத்தமாக 8 அறிக்கைகள் வெளியிடப்படும். ஏற்கெனவே இதில் 5 அறிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன. தற்போது ஐ.பி.சி.சியின் இரண்டாவது பணிக் குழு காலநிலை மாற்றத்தின் காலநிலை மாற்றத்தின் தாக்கம், தகவமைத்தல் குறித்த தனது அறிக்கையைத்தான் இன்று வெளியிட்டுள்ளது.

 

Working Group II Report

ஐ.பி.சி.சியின் இரண்டாவது பணிக்குழுவானது காலநிலை மாற்றத்தால் சமூக – பொருளாதார மற்றும்  இயற்கை அமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது பணிக்குழுவின் அறிக்கை உருவான விதம்

How this latest report (Working group II) was built?

இந்த அறிக்கையானது பல நாடுகளால் பரிந்துரை செய்யப்பட்ட 270 அறிவியலாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக 34,00 ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பீடு செய்ட்யப்பட்டு உறுப்பு நாடுகள் அனைவராலும் மறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பல அறிவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசாங்க பிரதிநிதிகள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட 60,000 கருத்துக்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments