புவி வெப்பமயமாதலால் உந்தப்படும் காலநிலை மாற்றம், உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்புகளின் தீவிரத்தன்மையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. புயல்களின் எண்ணிக்கை, புயல்களின் தீவிரத்தன்மை, வெப்ப அலைகளின் தாக்கம், வெள்ள பாதிப்பு, பெருமழைப் பொழிவு, வறட்சி, காட்டுத்தீ என இப்பேரிடர்களின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது . இப்பாதிப்புகளின் வரிசையில் கடல் மட்ட உயர்வு 2024-ம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
கடல் மட்டம் உயர்வதற்கு பனிக்கட்டிகள் உருகி பெருங்கடல்களில் கலப்பது ஒரு காரணமாக இருந்தாலும், கடல் பரப்பின் வெப்ப அளவு அதிகரிப்பதும் முக்கியக் காரணமாக இருக்கிறது. எந்தவொரு பொருளும் வெப்பமாகும்போது அவற்றின் மூலக்கூறுகள் விரிவடையும் அல்லது நகரும். இதை வெப்ப விரிவு (Thermal Expansion) என்கிறோம். கடல் பகுதிகள் வெப்பத்தை அதிகமாக உள்வாங்கும் போது, அங்கு வெப்ப விரிவு (Thermal Expansion) ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக நீர் விரிவடைகிறது, கடல் மட்டத்தின் அளவும் உயர்கிறது. பூமியில் உள்ள சுமார் 90% வெப்பத்தைக் கடல் பகுதி உள்வாங்கிக் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக நீரின் மூலக்கூறுகள் விரிந்து கடல் மட்டத்தை உயர்த்துகிறது.
கடல் மட்டத்தின் உயர்வு கடந்த 2024-ம் ஆண்டு கணிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததாக நாசாவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு உலகளவில் கடல் மட்டம் சுமார் 0.59 செ.மீ அளவு உயர்ந்துள்ளது. ஆனால் 2024-ல் கடல் மட்ட உயர்வு 0.43 செ.மீ மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. செயற்கைக் கோள்களின் தரவுகள் 1993-ல் இருந்து உள்ளது. அப்போதிலிருந்து கடந்த ஆண்டு வரை கடல் மட்ட உயர்வின் வேகம் இரு மடங்காகியுள்ளது. 2024 வரை உலகளவில் சுமார் 10 செ.மீ வரை கடல் மட்டம் உயர்ந்துள்ளது.
கடல் மட்டம் உயர்வதற்கு முக்கியக் காரணமாக பனிக்கட்டிகள் உருகுவது மூன்றில் இரண்டு பங்காகவும், வெப்ப விரிவு (Thermal Expansion) ஒரு பங்காகவும் இருந்து வந்தது. ஆனால், கடந்த 2024-ல் இந்த அளவு நேர்மாறாக மாறியுள்ளது. வெப்ப விரிவின் காரணமாக மூன்றில் இரண்டு பங்காகவும், பனிக்கட்டிகள் உருகுவது மூன்றில் ஒரு பங்காகவும் கடல் மட்ட உயர்வுக்குக் காரணமாகியுள்ளது. கடல் பகுதி மிகவும் வெப்பமாகி வருகிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2024-ம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
– லோகேஷ் பார்த்திபன்