சில அம்மாக்கள் வேற மாதிரி

தாய்ப் பாசத்தைப் பற்றி சொல்வ தானால் மனிதர்கள் முதல் விலங்குகள்வரை கதை கதையாய் சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக (சில விதிவிலக்குகளைத் தவிர்த்தால்) எல்லா பாலூட்டிகளும், பறவைகளும் நம் அனை வருடைய அம்மா மாதிரி பாசமாய் பிள்ளைகளை வளர்க்கிறவர்கள்தான். உதாரணமாக மிகவும் சாதுவான பறவையான கோழி எப்போது தாயாகிறதோ அப்போது அந்த சீற்றம் கொண்ட தாய்க்கோழியின் பக்கத்தில் நெருங்க எவ்வளவு பெரிய வீரனும் அஞ்சுவான். கோழிகள் பெரிய அளவில் பறக்கும் திறனற்றதாய் இருந்தாலும் தன் குஞ்சுகளுக்கு கழுகுகள் போன்ற பறவைகளால் ஆபத்து என்றால் “எங்கிருந்துவந்ததோ இந்த வீரம்?” என்று எண்ணுமளவு அசுர சக்தியோடு எம்பிக் குதித்து கழுகுகளை விரட்டுவது பார்ப்போருக்கு பிரமிப்பைத் தருவது. ஆனாலும் கோழிகளுக்குத்தான் எத்தனை எதிரிகள். எப்படித்தான் இந்தம்மா பொத்திப் பொத்தி பாதுகாத்தாலும் பத்துக்கும் மேற்பட்ட குஞ்சுகளில் கடைசியில் மிஞ்சுவது இரண்டோ மூன்றோதான். ஆனால் இன்னொரு பக்கம் பார்த்தால் இந்த வேட்டையாடி கழுகு அம்மா ரெண்டோ அல்லது மூணோ முட்டைதான் போடுவாங்களாம். ஒருவேளை கோழி பத்துக்கும் மேலே குஞ்சுகள் பொரிப்பதே இந்த கழுகுகளுக்கும் வல்லூறுகளுக்கும் உணவளிக்கத்தானோ?. இன்னொரு கேள்வி, (மனிதர்களைத்தவிர) பெரிய அளவில் எதிரிகள் இல்லாத இந்த கழுகுகள் ஒவ்வொன்றும் கோழியைப்போல 10-12 குஞ்சு பொரிச்சா கோழி மாதிரியான பறவைகளின் கதி என்ன ஆகும்? எல்லாத்துக்கும் சமநிலையை இயற்கை உறுதி செஞ்சாக வேண்டுமே? அதான் இந்த மூணு முட்டைக்கும் பத்து முட்டைக்கும் உள்ள வித்தியாசம். அடுத்து பாலூட்டிகளுக்கு வருவோம். ஒவ்வொரு விலங்கும் எல்லா காலத்திலும் பெரும்பாலும் ஒரே எண்ணிக்கையிலேயே குட்டிகளை ஈனுகின்றன. ஆனால் சென்ற தலைமுறைவரை 10க்கும் மேல் பிள்ளைகள் பெற்று சமீபத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கு சரிந்திருக்கும் (சரிக்கப்பட்டிருக்கும்) மனிதர்களின் செயல்பாடு இயற்கையா அல்லது செயற்கையா என்பதில் நமக்கு குழப்பம் இருப்பதால் அவர்களைப்பற்றி நாம் இப்போது விவாதிக்க வேண்டாம்.

பாலூட்டிகளில் மனித முன்னோடிகளான குரங்குகளையோ அல்லது ஓங்கில்கள் (Dolphin) திமிங்கலங்கள் போன்ற கடல்வாழ் பாலூட்டி களையோ எடுத்துக் கொண்டால் “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” பாலிசியில்தான் குழந்தையைப் பெற்று பராமரிக்கின்றன. இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால் ஒரே குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் இந்த அம்மாக்களின் பிள்ளைகளுக்கு இயற்கையில் பெரிய அளவில் எதிரிகள் இல்லை. இன்னொரு விதத்தில் பார்த்தால் பெரும்பாலான கடல்வாழ் விலங்குகளை உணவாகக்கொள்ளும் டால்பின், திமிங்கலம் போன்ற பெரிய விலங்குகள் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கவேண்டிய அவசியமும் இந்த “ஒற்றைப் பிள்ளை” முறையால் சமன்செய்யப்படுகிறது.

அதேப்போன்று பெருமளவில் இறைச்சி உண்ணும் காட்டுவிலங்குகளின் முக்கிய உணவான காட்டுப்பன்றியோ அல்லது மருத நிலத்து இரவாடிகளான பாம்புகள், ஆந்தைகள் போன்றவற்றின் முக்கிய உணவான எலிகளோ அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. எவ்வளவு எண்ணிக்கையில் அவை அதிகம் அதிகமாய் இரையாகின்றனவோ அவ்வளவு வேகமாய் பெருகுகின்றன அல்லது பெருக வேண்டியிருக்கிறது. ஒரு ஆப்பிரிக்க யானை வளரும் காலத்துக்குள் ஒரு வீட்டு எலி தனது முப்பது தலைமுறைகளைக் கடந்து விடுகிறது. எப்படிப் பார்த்தாலும் பிள்ளைகள் ஒன்றோ இல்லை பத்தோ அல்லது அதற்கும் மேலாகவோ இருந்தாலும் பறவைகளிலும் பாலூட்டிகளிலும் இயற்கையில் தாய்க்கு குழந்தைகளை பராமரிக்கும் பணியில் விலக்கு இல்லை. இன்னொரு கோணத்தில் சொல்வதானால் இந்த பாலூட்டிகள் அல்லது பறவைகளின் பிள்ளை களுக்கு தாயின் பராமரிப்பு இல்லாமல் உயிர்வாழ இயலாது. பாலூட்டிகளின் குட்டிகளோ அல்லது பறவைகளின் குஞ்சுகளோ சுயமாய் உணவு தேடிக்கொள்வதுவரை (மனிதன் தவிர்த்து) தாயின் பாசமிகு பராமரிப்பு தொடர்கிறது.

ஆனால் எல்லா அம்மாக்களும் அப்படியல்ல. சில அம்மாக்கள் வேறமாதிரி. ஆமாங்க சில அம்மாக்கள் இருக்குறாங்க. அவங்க வேலை பெத்து போடுறதோட சரி. அப்புறம் திரும்பிகூட பாக்காம வேற வேலைய பாக்கப் போயிடுவாங்க. ஆனால் இயற்கைக்கு எல்லாவற்றையும் சமன்படுத்தும் பொறுப்பு இருக்கிறதே. ஒற்றைப் பிள்ளையை பெற்றுப் போட்டுவிட்டு தாய் போய்விட்டால் அப்புறம் ஒன்று நடக்க ஒன்று ஆனால் எப்படி அவள் இனம் தழைக்கும்? அதற்கான உபாயம்தான் வியக்கவைக்கும் எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான சிலநேரங்களில் இலட்சக்கணக்கான பிள்ளைகள். எப்படியாகிலும் ஒன்றிரெண்டு தழைக்கக்கூடுமே என்ற நம்பிக்கையில். தான் பிறந்து கடலுக்குள் சென்றபின் பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் முட்டையிட முதல்முதலாய் மண்ணில் கால்பதிக்கிறாள் ஒருபெண். “வந்தோமா, முட்டையப் போட் டோமா, நடைய கட்டுனோமா” என்ற வேகத்தில் இல்லையென்றாலும் ஆமை வேகத்தில் வருகிறாள். ஆம் ஆமை வேகத்திலேதான். வருகிறாள். ஒரே இடத்தில் நூறு முட்டைகள்வரை இடுகிறாள். கடற்கரை மணலில் அடைகாப்பது உயிருக்கு ஆபத்தாயிற்றே. அதனால் விரைவாய் மணலால் முட்டைகளை மூடிவிட்டு அலைகளோடு புகுந்து கடலில் மறைகிறாள். சில வாரங்களில் மணலை விலக்கிக்கொண்டு வெளிவருகின்றன ஆமைக் குஞ்சுகள். அவர்கள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் வெளிவர வேண்டுமென்பது இயற்கை அவர்கள் மரபணுக்களில் சங்கேத மொழியில் எழுதி வைத்திருக்கும் பரம இரகசியமான குறிப்பு. இவை ஒவ்வொன்றாய் வெளிவந்தால் வெளியே கடற்கரையில் விருந்துக்காய் காத்திருக்கும் விலங்குகள் பறவைகளும் அப்புறம் குறிப்பிட்ட தூரத்தில் கடலினுள் அவற்றின் வருகைக்காய் முகாமிட்டிருக்கும் விலங்குகளும் மிக எளிதாய் அத்தனைக் குஞ்சுகளையும் ஒவ்வொன்றாய் சாப்பிட்டுவிடும். எனவே எல்லாரும் ஒரே நேரத்தில்தான் கடலை நோக்கிச் செல்ல வேண்டும் என அவர்களுக்குச் கண்டிப்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனாலும் அவ்வளவுபேரும் பிழைத்துவிட்டால் காத்திருக்கும் விருந்தினர் களை வெறும் இலையோடு அனுப்பமுடியுமா என்ன? அதற்காகத்தான் இந்த வியக்கவைக்கும் எண்ணிக்கையில் குஞ்சுகள். விருந்து முடியும்போது விருந்தினர்களுக்கு வயிறும் நிறைந்தது. ஒரு இனமும் பிழைத்தது. தன் குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று என்று திரும்பிப்பார்க்க கடற்கரைக்கு வந்தால் தாய் ஆமையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி அதைத் தவிர்த்த இயற்கை, இதைப்போன்றே முட்டையிடும் பண்பு கொண்ட தன் வாழிடத்தின் முடிசூடா மன்னனாகத் திகழும் முதலைகளின் குட்டிகளை தானாய் நீருக்குள் செல்ல இயலாததாகவும் தாயின் உதவி தேவைப்படுவதாகவும் வைத்திருக்கிறது. அதாவது பிள்ளைகளை வாயில் கவ்வி நீர்நிலைக்குச் செல்லும் தாய்முதலையைத் தாக்கும் உயிரினம் எதுவும் இல்லை.

தவளைகள், பாம்புகள் (சில வகைகள் தவிர்த்து), பல்லிகள் இன்னும் எண்ணற்ற பூச்சியினங்கள் எவற்றிற்கும் அடைகாக்கும் பண்போ அள்லது தம் பிள்ளைகளை பராமரிக்கும் பண்போ இல்லை. இவை ஆமைகளைப் போல எண்ணற்ற பிள்ளைகளைப் பெறுவதுடன் அவற்றின் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் சுயமாய் உணவு தேடக் கூடியவையாகவும் உள்ளன. உதாரணமாக பார்ப்பதற்கு வான் கோழியைப் போன்று தோற்றமளிக்கும் மெகாபோட் (Megapode) என்ற பறவைகளின் குஞ்சுகளைத் தாய் பராமரிப்பதில்லை. அதே நேரத்தில் இவைதான் பறவையினங்களிலேயே முட்டையிலிருந்து வெளிவந்த உடன் பறக்கும் திறன்பெற்றவை. இப்படியான வினோதங்களுக்கிடையில் தன் கூட்டதைச்சார்ந்த மற்ற தாய்மாரின் குட்டிகளைப் பராமரிக்கும் அம்மாக்களும் இருக்கிறார்கள். ஒருவகை ஆப்பிரிக்க நாய்கள் வேட்டையாடி இருப்பிடத்துக்கு வந்ததும் அங்கே தாய்க்காக காத்திருக்கும் குட்டிகள் அந்த கூட்டத்திலிருக்கும் எல்லா தாய்களிடமும் பால் குடிக்கின்றன. சில குட்டிகள் மூன்று நான்கு அம்மாக்களிடம் பால்குடிக்கின்றன. மொத்தத்தில் ஒவ்வொரு அம்மாவுக்கும், தான் என்ன செய்யவேண்டும் என்பது தன் மரபணுக்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. எல்லா அம்மாவும் ஒன்றல்ல. சில அம்மாக்கள் வேறமாதிரி.

 

ஜியோ டாமின்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments