அரபிக்கடல் வெப்ப நிலையால் அதிகரிக்கும் புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும்

 

கடந்த மேமாதத்தில் ஒரு வார இடைவெளியில் அரபிக் கடலில் ஒரு புயலும், வங்கக் கடலில் ஒரு புயலும் உருவாகி இந்திய நிலப்பரப்பில் கரையைக் கடந்துள்ளன. பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்ற இந்தப் புயல்களுள் அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலின் தீவிரம் பற்றி விளக்குவதற்குத் தான் இந்தக் கட்டுரை.

மே 13ஆம் தேதி லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மே 15ஆம் தேதி புயலாக வலுப்பெற்றது. டவ்-தே எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயலானது குஜராஜ் மாநிலத்தின் 15ஆம் தேதி மாலையே தீவிர புயலாகவும் 16ஆம் தேதி காலையில் அதி தீவிர புயலாகவும் 17ஆம் தேதி காலையில் உச்ச உயர் தீவிர புயலாகவும் வலுப்பெற்றது. 17ஆம் தேதி மாலையில் இந்தப் புயலானது குஜராத்தின் சவுராஷ்டிரா கடற்கரையில் டையூவிற்கு  20 கிமீ வடகிழக்கே கரையக் கடந்தது. உச்ச உயர் தீவிர புயலாகவே கரையைக் கடந்ததால் பெரும் பாதிப்பை இந்தப் புயல் ஏற்படுத்தியது.

இந்திய வானிலை அமைப்பின் தரவுகளின்படி உச்ச உயர் தீவிர புயலொன்று மும்பைக்கு மிக அருகாமையில் கடப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் 120 ஆண்டுகளில் மேமாதம் குஜராத்தில் கரையக் கடந்த மூன்றாவது புயல் ட்டவ்-தே புயல் தான் என்றும் கூறப்படுகிறது. முதல் புயல் 1900லும் இரண்டாவது புயல் 1976லும் குஜராத்தில் கரையக் கடந்துள்ளது.

அதிகரிக்கும் புயல்களின் தீவிரத் தன்மை

இந்த டவ்-தே புயலின் பாதையை ஓரளவிற்கு சரியாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்டிருந்தாலும் தீவிரம் குறித்து கணிக்க முடியவில்லை. எதிர்பார்த்ததைவிட புயலின் தீவிரமானது கரையைக் கடந்த பின்னும் அதிகமாகவே இருந்தது. Down to Earth இணையத்திற்கு பேட்டியளித்த மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரகு முதுகுடே “ காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையிலிருந்து தீவிர புயலாக வலுப்பெறுவதற்கு டவ் தே எடுத்துக்கொண்ட நேரமானது 2 நாட்கள்தான். முன்பெல்லாம் இது 5 நாட்களில் நிகழந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் “ ஆனால் இந்த புயலின் தனித்தன்மை என்னவென்றால் கரையைக் கடந்த பின்னரும் இந்த டவ்தே புயல் வலுவானதாகவே இருந்தது என்பதுதான். இதற்கு காரணம் என்னவென்றால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதுதான் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாகவும் குறைந்த கால அளவில் புயல்கள் வேகமாக வலுப்பெற்ற நிகழ்வுகள் இந்திய கடற்பகுதிகளில் நிகழ்ந்ததுண்டு. உதாரணமாக 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒக்கி புயலைக் கூறலாம். இந்தப் புயலானது இந்திய பெருங்கடலில் இயல்பாக உருவாகும் புயல்கள் போலின்றி இலங்கையில் தென் மேற்கு திசையில் உள்ள கடலில் உருவாகி இந்தியாவை அடைந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெரும் சேதத்தை உருவாக்கியது. இந்தப் புயலின் தாக்கம் குறித்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி  நாடாளுமன்ற நிலைக்குழுவானது அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்தது.

நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் இரண்டு அசாதாரன விஷயங்கள் இந்த ஒக்கி புயலை மற்ற புயல்களிலிருந்து வேற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டது. ஒன்று புயலின் தீவிரம் குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகரித்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலையிலிருந்து புயலாக வலுப்பெற வெறும் 6 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டது ஒக்கி. இது முன்பு நிகழாத ஒரு சம்பவம் என்பதால் வானிலை ஆய்வு மையம் மற்றும் பல வானிலை அறிஞர்களே திகைத்து போயினர். இரண்டாவது விஷயம் என்னவென்றால் Gestation எனப்படும் புயல் கடலில் தங்கிய நேரம் அதிகம் என்பதுதான். ஒக்கி புயலானது கரையைக் கடப்பதற்கு முன்னர் 6.75 நாட்கள் கடலில் இருந்தது. அதற்கு முன்பு வரை இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் ஒரு தீவிர புயலானது கடலில் தங்கியிருக்கும் இயல்பான நேரமானது 4.7 நாட்கள்தான். இதன் காரணமாகவே புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒக்கி புயலுக்குப் பின்னர் 2018ஆம் ஆண்டு உருவான திட்லி, கஜா, 2019ஆம் ஆண்டு உருவான ஃபானி புயல், 2020ஆம் ஆண்டு உருவான அம்பான் மற்றும் நிவர்  ஆகிய புயல்களின் தீவிரமும் இதே போலிருந்தது.

 

அரபிக் கடலில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்

காலநிலை மாற்றத்தின் விளைவினால் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை உயர்வது உலகெங்கிலும் நடைபெறுகிறது. அரபிக் கடலில் நடைபெறும் இந்த விளைவு இந்தியாவின் மலபார், கொங்கன், கத்தியவார், கட்ச் கடற்கரை பகுதிகளுக்கு புதிய ஆபத்து ஒன்றை உருவாக்கி வருகிறது. குறிப்பாக அரபிக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையானது அதிகரிப்பதுதான் அந்த ஆபத்தாகும். 2019ஆம் ஆண்டு இந்தியாவில் நிலவிய வெப்பம், பருவமழை, பேரிடர்கள் குறித்த அறிக்கையின் படி  அவ்வாண்டில் மட்டும் இந்திய கடல்பகுதியில் 8 புயல்கள் உருவாகின. அதில் அரபிக்கடலில் 5 புயல்கள் உருவாகியுள்ளன. வழக்கமாக அரபிக்கடலில் ஆண்டிற்கு 1 புயல் மட்டுமே உருவாகி வந்த நிலையில் அந்த ஆண்டு 5 புயல்கள் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இப்படி ஒரு நிகழ்வு 1902ஆம் ஆண்டுதான் நடைபெற்றது. மேலும் 2019ஆம் ஆண்டில் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல்கள் மிகவும் தீவிரத்தன்மையுடன் இருந்துள்ளது.  2020ஆம் ஆண்டு இந்திய கடல் பகுதியில் உருவான 5 புயல்களில் 2 புயல்கள் அரபிக் கடலில் உருவாகியுள்ளன.

 

இதே கருத்தைத் தான் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான இந்தியாவின் முதல் காலநிலை மாற்றம் குறித்து ஒன்றிய புவி அறிவியல் துறை வெளியிட்ட அறிக்கையும் தெரிவித்தது. அரபிக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வால் புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய வானிலை அமைப்பின் தரவுகளின்படி 1891 முதல் 2020 வரையில் அரபிக் கடலில் உருவான மொத்த புயல்கள் மற்றும் தீவிர புயல்களின் எண்ணிக்கையானது 133 ஆகும். இதில் 33 புயல்கள் கடந்த 20 ஆண்டுகளில் உருவாகியுள்ளது. இந்திய கடற்பகுதியின் மேற்பரப்பு வெப்ப நிலை உயர்விற்கும் இந்த நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பை விளக்க பல்வேறு ஆய்வுகளும் தொடர்ந்து  வெளிவந்த வண்ணமே உள்ளன.

ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் உலகின் சராசரி ஆண்டு வெப்பநிலையானது நிச்சயமாக 1டிகிரி செல்சியஸ் உயரும் எனவும் 0.9டிகிரி செல்சியல் முதல் 1.8டிகிரிய செல்சியஸ் வரை இந்த உயர்வு இருக்கும் என கணித்துள்ளது. இந்த வெப்பநிலை உயர்வால் பனிப்பாறைகள் வேகமாக உருகும், கடல் நீர்மட்டம் உயரும், வெப்ப அலைகள் அதிகரிக்கும் மற்றும் அதி தீவிர காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் இது உலகத்தின் உணவு பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த வளர்ச்சியில்  கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என WMO தலைவர் தெரிவித்துள்ளார்.

புயல் போன்ற ஒவ்வொரு தீவிர காலநிலை நிகழ்வும் நடக்கின்ற போதெல்லாம் மீட்பிற்கும், மறுசீரமைப்பிற்கும் என ஒட்டு மொத்த அரச கட்டமைப்பும் தங்கள் உழைப்பையும் நிதியையும் செலவிடுகின்றன. ஏற்கெனவே இந்தியாவில் நடந்து வரும் தீவிர காலநிலை நிகழ்வுகளால் நமது பொருளாதராம் பாதிப்படைந்து வருகின்றது. இந்த நிலையில் கோரோனா போன்ற பெருங்கொள்ளை  நோயுடனும் நாம் போராடுகின்ற நிலையில் மேற்கொண்டு அதிக எண்ணிக்கையில் பேரிடர்கள் நிகழ்ந்தால் சரிசெய்யவும் சமாளிக்கவும் முடியாத ஒரு நிலைக்கு நாம் தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

 

–  நிலன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments