விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெளி நீர்நிலையின் சூழல் சமநிலையை பாதிக்கும் வகையில் இரண்டு துறைமுகத் திட்டங்களும் பொதுப்பணித்துறையின் தடுப்பணைத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மேற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் என்ற சிறிய கிராமத்திற்கு அலுவல் வேலையாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். வண்டிகள் விரையும் சத்தம், கால்நடைகளின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த நிலையில் திடீரெனக் காதைக் கிழிக்கும் ஒலியாகப் பல்வேறு பறவைகள் சேர்ந்துக் கூச்சலிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினோம். கண்ணுக்கு முன்பு கடலென ஒரு நீர்நிலை விரிந்து கிடந்தது. நாங்கள் வந்து சேர்ந்த இடத்தின் பெயர் வண்டிப்பாளையம் என்பதையும், அந்த நீர்நிலையின் பெயர் கழுவெளி என்பதையும், அங்கு நின்றபடி சிறிய வலையில் மீன்பிடிக்க முயன்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.
கழுவெளியைக் கடந்துசெல்ல வேண்டும் என்றால் இதுதான் ஒரே வழி, இல்லையென்றால் பல கிலோமீட்டர் சுற்றிவர வேண்டும் என்பதால் அந்தச் சாலை ஒரு மதிப்பைப் பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி அந்தச் சாலை மிகவும் தனித்துவமான இடத்தில் அமைந்திருப்பதைத் தெளிவாகக் காண முடிந்தது. ஒருபுறம் கழுவெளி விரிந்து கிடக்க, மற்றொரு புறம் அது ஓடையென வடக்கை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தது. ஆர்வம் தாங்க முடியாமல் கூகுள் வரைபடத்தைக் கண்ட பொழுதுதான், எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு சூழலியல் அமைப்பின் மீது நின்று கொண்டிருக்கிறோம் என்பது விளங்கியது.
கழுவெளி
சதுப்பு நிலங்களில் பலவகைகள் உண்டு; மனிதர்களால் உருவாக்கப்பட்ட குளம், குட்டை, ஏரி போன்றவை மனிதர்களின் நீர்த் தேவை மற்றும் பாசனத் தேவையைப் பூர்த்தி செய்யப் பள்ளமான இடத்தில் உருவாக்கப்படுபவை. இயற்கையாகப் பல ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் பலவகை ஈர நிலங்களும் உண்டு. தொடர்ச்சியாக வண்டல் சேர்வதால் ஒரு தனித்துவமான சேறு போன்ற நீரை உறிஞ்சி வைக்கும் தரையுடன், ஆழமற்று விளங்குவது சதுப்பு நிலம் (Marsh land). காலம் காலமாக இந்தச் சதுப்புநிலங்களை நம்பிப் பல உயிரினங்கள் வாழ்கின்றன. சென்னையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், இன்று மிஞ்சியிருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை விட 10 மடங்குபெரிய (8143 ஹெக்டர்) சதுப்புநிலமான கழுவெளி எந்த ஒரு ஆரவாரமும் இன்றி பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், மனிதர்களுக்கு வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளது. இது பழவேற்காட்டுக்கு அடுத்ததாக, வட தமிழகத்தின் மிகப்பெரிய உவர்நீர் சதுப்புநிலம் (Brackish wetland) ஆகும்.
விஜயவாடாவில் தொடங்கும் பக்கிங்காம் கால்வாய், கழுவெளியில்தான் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு நீர்நிலையானாலும், அதை ஒரு தனித்த பகுதியாகப் பார்க்காமல், பரந்து விரிந்துள்ள அதன் நீர்ப்படுகை (Watershed), அங்கு வாழும் மக்கள், பிற உயிரினங்கள், அதன் தொன்மம் ஆகியவற்றையும் சேர்த்து அறிதல் முழுமையான புரிதலை வழங்கும்.
(நீர்ப்படுகை – ஒரு நீர்நிலைக்கு எந்தெந்த நிலப்பரப்பில் இருந்தெல்லாம் நீர்வடிந்து வருகின்றதோ, அந்த இடங்களை அதன் நீர்படுகை என்கிறோம்)
கழுவெளியின் நீர்ப்படுகை
திண்டிவனம், மரக்காணம், மற்றும் ஆரோவிலுக்கு இடைப்பட்ட 72,329 ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து வடியும் நீர்க் கழுவெளி வழியாக மரக்காணத்தில் உள்ள எடையன்திட்டு உப்பங்கழி சென்று, கடப்பாக்கம் அருகில் கடலை அடைகின்றது. இந்தப் பகுதியில் பாசனநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய நதி இல்லாததால், பெரும் எண்ணிக்கையில் ஏரிகள் அக்காலத்தில் நீர் மேலாண்மைக்காக நிறுவப்பட்டன. மழைக்காலத்தில் சுற்றியுள்ள இடத்திலிருந்து குறிப்பிட்ட ஏரியில் வடியும் நீர், அந்த ஏரி நிரம்பிய பிறகு, கலிங்கு (மறுகால்/ வெள்ளவடிகால் கால்வாய்) வழியாக அடுத்த ஏரிக்குச் செல்லும். இவ்வாறாக, அனைத்து ஏரிகளும், ஒரு சங்கிலித் தொடராக நிரம்பிய பின், அதன் உபரிநீர் கழுவெளியில் வடியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சங்கிலி ஏரித்தொடர் (Chain tank system) என்பர்.
கழுவெளியின் வடக்குப் பகுதியில், அதன் நன்னீர் அளவு குறையும் போது மற்றும் கடலின் ஓதம் உயரும்போது (High tide) கடல் நீர் கலந்து உவர்நீர் உருவாகின்றது. இது அந்த இடத்தில் மிகவும் தனித்துவமான ஒரு உவர்நீர் சூழலியல் அமைப்பை (Brackish Water Ecosystem) உருவாக்குகிறது.
வரலாற்று எச்சங்கள்
கழுவெளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கி.மு.500 முதல் கி.பி. 500 வரையிலான இரும்பு மற்றும் பெருங்கற்காலத்தின் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழிகளும், மண்பாண்டங்களும், ஆபரணங்களும், அடக்கம் செய்யும் இடங்களும் (Megalithic burial sites) இங்கு கண்டறியப்பட்டுள்ளன.பெருமுக்கல் என்ற இடத்தில் உள்ள குகையில் 5000-6000 ஆண்டுகள் பழமையான Petroglyph (பாறைகளில் கற்களை வைத்து வரையும்) ஓவியங்கள் உள்ளன. இங்கு கிடைக்கும் இத்தனைத் தொல்பொருட்களும், வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களும் பல்லாண்டுகளுக்கு முன்பாகவே மக்கள் செழிப்பாக இப்பகுதியில் வாழ்ந்திருப்பதையே குறிக்கிறது’ என்கிறார் கழுவெளி நீர்ப்படுகையில் ஆராய்ச்சி செய்யும் தொல்லியல் ஆய்வாளரான கோபி. சங்க இலக்கியப் பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை (கி.பி. 200) என்ற இலக்கியத்தில், கழுவெளிப்பகுதியை ஒய்மா நாடு என்று குறிப்பிட்டு, அதன் வழியாகச் செல்லும் பாணான் வழியில் தான் கண்ட கழுவெளியின் சிறப்பையும் குறிப்பிடுகிறார். மேலும், மழைக் காலத்தில் நீர் நிரம்பி இருக்கும் கழுவெளி, வெயில் காலத்தில் பாலைவனம் போல மாறுவதையும் குறிப்பிடுகிறார்.
கழுவெளியும், அதன் உயிர்ப்பன்மயமும்
மூன்று தனித்துவமான சூழல் அமைப்புகள் சங்கமிக்கும் இடம் கழுவெளி. அவை: நன்னீர் சதுப்புப் பகுதி, உவர்நீர் சதுப்புப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பசுமை மாறா உலர் வெப்பமண்டலக் காடுகள் (Tropical Dry Evergreen Forests). இது பல்வேறுவகையான நன்னீர்த் தாவரங்களுக்கும், அலையாத்திக் காடுகளுக்கும், விலங்குகளுக்கும் அமைவிடமாக உள்ளது. காட்டுமுயல் (Black naped hare), ஓநாய் போன்ற விலங்குகளும், நீர் நிரம்பிய காலத்தில் வாத்து, கூழைக்கடா (Pelicans) போன்ற பறவைகளும் உலாவுகின்றன. நீரின் அளவு குறைகையில் சேற்றைத் துளாவி உணவுதேடும் பறவைகள் (Waders) ஈர்க்கப்படுகின்றன. நீர்நிலையைச் சுற்றியுள்ள புதர்களும், கதிர்களும், நீர் வற்றும்பொழுது தென்படும் புல்வெளிகளும் கூடு அமைக்க, பதுங்கி இருக்கச் சிறந்த இடமாக விளங்குகின்றன. அதிக அளவில் இங்கிருக்கும் பூச்சிகள், நண்டுகள், நத்தைகள், பலவகை மீன்கள், மேலும் பல சிற்றுயிர்கள் வலசை (Migrant) செல்லும் பறவைகளுக்கு நல்லதொரு தளமாக அமைகிறது. செங்கால்நாரை (White stork), பட்டைத் தலைவாத்து (Bar headed Goose) முதற்கொண்டு கழுவெளியின் நன்னீர்ப் பகுதியில் கிட்டத்தட்ட 225 இனப் பறவைகளும், எடையன்திட்டு உப்பங்கழியில் 160 இனப் பறவைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
( உயிர்ப்பன்மயம்: ஒரு இடத்தில் உள்ள பல்வேறு வகை இனங்களைக் குறிக்கும் சொல்; வலசை: உலகின் வடக்குப் பகுதிகளில் (Northern hemisphere) குளிர் காலத்தில் பனி சூழ்ந்து விடுவதால், உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்கப் பறவைகள் தெற்கில் உள்ள தமிழகம் போன்ற இடங்களுக்குத் தொலை தூரம் பறந்து வருகின்றன. இது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடக்கும் ஒரு நிகழ்வு)
இங்கு காணப்படும் பறவைகளின் பன்மயத்தையும், எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு, ‘Birdlife International’ என்னும் சர்வதேச அளவில் பறவைகள் நலனுக்காகச் செயல்படும் அமைப்பு கழுவெளியைப் பறவைகள் மற்றும் உயிர்ப் பன்மயத்துக்கான முக்கிய இடம் (Important Bird and Bio-diversity area) என்று அறிவித்துள்ளது. இந்தியாவின் காட்டுயிர் நிறுவனம் (Wildlife Institute of India), இதனைக் கடல்சார் உயிர்ப் பன்மயத்துக்கு முக்கியமான பகுதியாக (Important coastal & marine biodiversity area) இனங் கண்டுள்ளது. இதுமட்டுமின்றி, 8,143 ஹெக்டேர் அளவில் பரந்துள்ள கழுவெளியில், 5151.60 ஹெக்டேர் அளவு பறவைகள் சரணாலயமாக அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதுமட்டுமின்றி, கழுவெளி கடலில் சேரும் உப்பங்கழிப் பகுதியில் உள்ள சேற்றுப் பகுதிகள், அலையாத்திக் காடுகள், மணல்மேடுகள் எளிதில் பாதிப்படையக்கூடிய சூழல் அம்சம் (Eco-sensitive Zone) என்பதால் இவை கடலோர ஒழுங்காற்று மண்டலச் சட்டவிதிகளின்படி (Coastal Regulations Zone) 1A பிரிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. உப்பங்கழிப் பகுதியின் அருகில் உள்ள கடற்கரைப் பகுதிகள் பங்குனி ஆமைகள் (Olive ridley turtles) முட்டையிடும் இடமாகவும், கடல் பகுதி ஓங்கில்கள் (dolphins) மற்றும் திமிங்கலங்கள் (Sperm whales) சங்கமிக்கும் இடமாகவும் உள்ளது.
(CRZ 1A- பவள வாழ்விகள் (Coral reefs), அலையாத்திக் காடுகள்(Mangroves) போன்ற மிக முக்கியச் சூழல் அங்கங்கள் இவ்வாறாகப் பிரிக்கப்படும். இங்கு இராணுவ மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் தவிர்த்த எந்தத் திட்டமும் அமைக்கக்கூடாது)
கழுவெளியும் மக்களும்
மக்களுக்கு கழுவெளியிருந்து கிடைக்கும் முக்கியப் பலனானது நிலத்தடி நீர்ப் பெருக்கமே. விவசாயம், சிறிய அளவில் தத்தம் தேவைகளைப் பூர்த்திசெய்ய மீன்பிடித்தல்,இறால் பிடித்தல், கழுவெளியின் புல்வெளியில் கால்நடை மேய்த்தல், விறகு வெட்டுதல், காய்ந்த கதிர்களை வீட்டின் கூரைக்காக அறுவடை செய்தல், சணல் கயிறு செய்தல் போன்ற பல வழிகளில் மக்களின் வாழ்வு கழுவெளியுடன் பிணைந்துள்ளது. இவ்வாறான வேலைகளில் பெண்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உப்பிற்கு பெயர் போன மரக்காணத்தில், கழுவெளி உவர்நீர் நிலையைச் சார்ந்து பெரும் அளவிலான உப்பளங்கள் உள்ளன.
கழுவெளியின் அவல நிலை
உண்மை நிலவரம் பேசப்படாத நிலை
கழுவெளியைப் பறவைகள் சரணாலயமாக அறிவித்தப் பின்பே அது பெரும்பாலான மக்களின் கவனத்திற்கு வந்தது. பிரம்மாண்டமான, (இருப்பினும் பிரபலமற்ற) இச்சதுப்பு-நிலத்தைப் பற்றி அதிக அளவு கட்டுரைகளோ, விழிப்புணர்வோ இல்லாமல் போனதால், இங்கு நடந்தேறும் அவலங்கள் மக்களின் கவனத்திற்குச் செல்வதில்லை. வெளியாகியுள்ள கட்டுரைகளில் பலவும், மக்கள் விலங்குகளை வேட்டையாடுவதையும், ஆக்கிரமிப்புகளையும், கால்நடை மேய்ப்பையும் மட்டுமே கழுவெளி சந்திக்கும் பிரச்சனைகளாகப் பேசுகின்றன. உண்மையில், ஒப்பீட்டளவில் மிகத் தீவிரப் பிரச்சனைகளை இந்த கழுவெளி சந்திக்கின்றது.
இறால் பண்ணைகள்
கடந்த பத்தாண்டு காலங்களில் மட்டும், மீன் வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்புப் பண்ணைகளின் எண்ணிக்கை இங்கு அதிகரித்துள்ளது. சில பண்ணைகள் சட்ட விரோதமான முறையில், நடத்தப்பட்டும், அதன் கழிவுகள் நேரடியாகச் சதுப்பு நிலத்தில் வெளியேற்றப்பட்டும் வருகிறது. இது அருகில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களையும், கழுவெளியின் சூழல் நலனையும் பாதித்து வருகின்றது.
கடல் நீர்த் தடுப்பணை
2020ம் ஆண்டின் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை, கடல் நீர்க் கழுவெளியில் கலப்பது நாசம் விளைவிக்கின்றது என்று கூறி நன்னீரைப் பாதுகாக்க 161 கோடி ரூபாய் செலவில் கடல் நீர்த் தடுப்பு அணை கட்டும் திட்டத்தைக் கொண்டுவந்தது. இத்திட்டத்தின்படி கடல்நீரை முற்றிலுமாகத் தடுத்து, 3.5 ஆயிரம் மில்லியன் கன அடி கூடுதல் நன்னீரைச் சேமிக்கக் கழுவெளி பயன்படுத்தப்பட இருந்தது. எந்த ஒரு அறிவியல் பூர்வமான பின்புலமும் இல்லாத இந்தத் திட்டம் வேகவேகமாகச் செயல்படுத்தப்படத் தொடங்கியது. இந்தப் பணி கழுவெளிப் பறவைகள் சரணாலயத்தின் 10 கிலோமீட்டர் தொலைவினுள் இருந்ததாலும், சுலபமாகப் பாதிப்படையக் கூடிய சூழல் அமைப்புகள் பகுதியாக (eco-sensitive zone) அது அமைந்ததாலும் மாவட்ட வனத்துறை, பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி இப்பணியைப் பாதியில் கைவிட வைத்தது.
மீன்பிடித் துறை முகங்கள்
இது கழுவெளிக்குச் சமீபத்தில் வந்துள்ள மற்றொரு துயரம். எடையன் திட்டு உப்பங்கழியின் முகத்துவாரப்பகுதியில் உள்ள ஆலம்பரைக் குப்பம் மற்றும் அழகங்குப்பம் என்ற இடங்களில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் கட்டும் திட்டத்தை மாநில மீன்வளத்துறை முன் மொழிந்தது. மேலும், உப்பங்கழியின் 5 ஹெக்டேர் பரப்பில் உள்ள மணல் திட்டைத் தோண்டி, 400, 600 மீ அளவில் இருபுறமும் கற்களைக் கொட்டி முகத்துவாரத்தை எந்நேரமும் திறந்திருக்கச் செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. உயர் ஓத காலத்தில் மட்டும் (High tide) உள்வந்து கொண்டிருந்த நீர் இப்பொழுது எந்நேரமும் உட்புகும் நிலை உண்டாகிறது. பெருந்தூண்டில் கொண்ட, இயக்குகருவிகள் கொண்ட படகுகளின் (Mechanized & Motorized boats) உரிமையாளர்களே இதனால் பாதிப்படைவர் என்றும், இந்தத் துறைமுகம் தொடக்கப்பட்டால் எண்ணெய்க்கசிவு, கழிவுகளால் நீர்நிலை பாதிப்படையும் என்றும் சிறுகுறு படகுகள் வைத்து மீன்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். மீன்வளத்துறையின் ஆவணத்திலேயே ஒரு நாளைக்கு 40 ஆயிரம் லிட்டர் திரவக்கழிவும் 50 டன் திடக்கழிவும் வெளியேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பறவைகள் சரணாலயத்தைப் பெரும் அளவில் பாதிக்கும்; மேலும், ஒரு சாராருக்கு மட்டும் இலாபத்தை அளிக்கும் திட்டம். இப்படிப் பல சர்ச்சைகள் இருக்கும் மீன்பிடித் துறைமுகத் திட்டம், சட்ட விரோதமான வகையில் தனது பணிகளைத் தொடங்கியும் விட்டது.
ஏன் இது சட்ட விரோதமானது?
இந்தப் பணி தொடங்கவேண்டும் என்றால், சில ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கத்திடம் இருந்து சில அனுமதிகளையும் (Clearance) இசைவாணைகளையும் (Consent) பெற்றிருக்கவேண்டும். அவை:
யாரிடம் பெறப்படும்? | பெறப்படவேண்டியதுஎன்ன? | நிலை |
மாநிலசுற்றுச்சூழல்
தாக்க மதிப்பீடு ஆணையத்திடம்(State Environmental Impact Assessment Authority SEIAA) |
சுற்றுச்சூழல்அனுமதி(Environmental clearance EC) | ஒழுங்கற்ற, பொய்யான தகவல்கள் கூறி EIA தாக்கல்செய்து EC பெற்றுவிட்டது |
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து(Ministry of Environment, Forest and Climate Change MOEFCC) | கடலோர ஒழுங்காற்று மண்டலம் அனுமதி (CRZ clearance) | பெறவில்லை |
மாநில
மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம்(Tamil Nadu Pollution Control Board) |
திட்டத்தை நிறுவுவதற்கான ஒப்புதல்(Consent to Establish) | பெறவில்லை |
தமிழ்நாடு மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம்(Tamil Nadu State Coastal Zone Management Authority TNSCZMA) | இவர்களால் MOEFF & SEIAA ஆகியவற்றை அனுமதி வழங்கக் கோரிப் பரிந்துரைக்க மட்டுமே முடியும். | TNSCZMA வின்அனுமதி CRZ விதிகளின்படி செல்லுபடி ஆகாது
ஆனால், அதைப் பெற்றுவிட்டதாகக் கூறிப் பணியைத் தொடங்கி விட்டது |
நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இன்னும் CRZ clearance & Consent to Establish இவர்கள் பெறவில்லை என்பதையே!!
(இவர்களுக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை செய்து கொடுத்த நிறுவனமும் பல அப்பட்டமான பொய்களைக் கூறியுள்ளது. உப்பங்கழியில் மிக அரிதான பறவைகள் முதற்கொண்டு 160 இனங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் EIA இல் வெறும் 49 இனங்கள் என்றுள்ளது. இங்கிருக்கும் கடற்புற்களைக் குறிப்பிடவே இல்லை. மேலும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யவே இல்லை. )
மேலும்…
- காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம்(Wildlife Protection Act 1972) பிரிவு 29 படி, பறவைகள் சரணாலயத்திற்குத் தண்ணீர் போக்கைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது.
- 2009 தமிழக மீன்வளத்துறையின் ‘பங்குனி ஆமைகளின் கூடுவைக்கும் பகுதியை (Olive ridley nesting ground) சுற்றியுள்ள 5 கிமீ தொலைவிற்குள் துறைமுகங்கள் கட்டக்கூடாது’ என்ற அரசாணைக்கு இத்திட்டம் எதிரானது.
- கடற்கரையில் ஒரு சின்ன மாற்றம் நடந்தால் கூட அதிகமாகக் கடலரிப்பு நடக்கும் மரக்காணம் பகுதியில் இது அமைந்திருப்பதால், அருகில் உள்ள ஆலம்பரைக் கோட்டை, கடற்கரைப் பகுதி பெரும் அரிப்பிற்குள்ளாகும். ஏற்கனவே இங்கு ஆண்டிற்கு 60 மீட்டர் அளவிற்கு கடலரிப்பு ஏற்படுகிறது.
- மேலும், பாறைகள் கொண்டு செல்ல, கட்டுமானத்தில் உதவ ஒரு புதுச் சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளனர். இது குறித்து சுற்றுச் சூழல் அனுமதியில் குறிப்பிடப்படவில்லை.
இன்று தமிழ்நாட்டில் மீதம் உள்ள சில முக்கியச் சூழலியல் கூறுகளில் ஒன்றான கழுவெளி நம் கண்முன்னே அழிவதை நாம் அனுமதிக்கலாமா? அறிவியல் பூர்வமற்ற, சூழல்-சமூகப் பார்வை இல்லாத எந்த ஒரு திட்டமும் கழுவெளியின் மீது பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு புறம் தனித்துவமான பறவைகள் சரணாலயம், சேற்றுப்பகுதிகள், மணல் திட்டுக்கள், மற்றொருபுறம் பெருந்திரள் மக்கள் நம்பியுள்ள வாழ்வாதாரம். இப்படி மிக முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ள கழுவெளி மீன்பிடித் துறைமுகம் கட்டும் திட்டத்தால் பெரும்பாதிப்பின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (National Green Tribunal) இந்த மீன்பிடித் துறைமுகத் திட்டத்திற்கு எதிராகச் சூழலியல் ஆர்வலர் யுவன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை மார்ச் 4ம் தேதி விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் ஆகியோர் கொண்ட அமர்வு இத்திட்டத்தால் கழுவெளியின் சூழலியல் அமைப்பு பாதிக்கப்படுமா என்பதை ஆராய ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் அதிகாரி, தமிழ்நாடு வனத்துறை அதிகாரி, தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் ஆகியோர் கொண்ட குழு ஒன்றை உருவாக்க உத்தரவிட்டது. இத்திட்டமானது கடற்கரை ஒழுங்காற்று மண்டலப் பகுதி IA விற்குள் வருகிறதா? இந்த மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டால் கழுவெளி மீன்பிடி சரணாலயத்திற்குப் பாதிப்புகள் ஏற்படுமா? இத்திட்ட அமைவிடத்தின் சூழலியல் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. சூழலியல் சிறப்பம்சங்கள் நிறைந்த இடத்தில், இப்படி ஒரு திட்டத்தை எந்தச் சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கொண்டுவர முடியுமென்றால், நம் சுற்றுச் சூழலின் எதிர்காலம் கேள்விக்குறியே என்பதை நாம் உணர வேண்டும்.
இன்னுமோர் சதுப்பு நிலத்தை இழக்கப்போகிறதா தமிழகம் ?
– மேகா சதீஷ்