மஹான் காடுகளின் கதை

சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு வெற்றி விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கமான வெற்றி விழாக்களைப் போல அது இல்லை. எளிய மக்களின் வெற்றி விழா. எதேச்சதிகார நிறுவனத்தை, அதிகார வர்க்கத்தை எதிர்த்து அந்த மக்கள் தமது காடுகளைக் காப்பாற்றிக் கொண்டதன் வெற்றி விழா. மஹான் இந்தியாவின் மிகப் பழமையான அழகான காடு. மத்திய பிரதேசத்தில் சிங்க்ரௌலிக்கு அருகில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பழங்குடியினர் மஹான் காடுகளை நம்பி வாழ்கிறார்கள். மஹான் காடுகளைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் கோண்ட், பனிகா, கைர்வார், கோல் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காடுகளைச் சார்ந்துதான் அவர்களுடைய வாழ்வாதாரமே.

இந்தியாவின் மிக முக்கியமான காடுகளில் ஒன்று மஹான். மஹான் காடுகளுக்கு மிக அருகில் சஞ்சய் துப்ரி புலிகள் சரணாலயம் இருக்கிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் மூன்று உயிரினங்கள் உள்ளிட்ட எண்ணற்ற உயிரன்ங்கள் இந்த காடுகளில் வாழ்கின்றன. இப்படியரு பிரதேசத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் விட்டு வைக்குமா என்ன?மஹான் காடுகள் இருந்த பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்சி எடுத்தது எஸ்ஸார் நிறுவனம். எஸ்ஸார் நிறுவனத்துக்கு எதிரான அந்த பகுதி எளிய மக்களின் நீண்ட போராட்டம் கடந்த 2015ல் வெற்றி போராட்டமாக முடிந்தது. எஸ்ஸார் நிறுவனம் அதன் திட்டத்தை பின்வாங்கிக்கொண்டது.
அதிகார வர்க்க எதேச்சதிகாரத்துக்கு முன்னால் மஹான் காடுகளின் வெற்றி சிறியதுதான் ஆனால் முக்கியமானது. ஒருவேளை அங்கு காடுகள் கையகப்படுத்தப்பட்டு நிலச்சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தால் அதற்கு கொடுக்கப்பட்டிருக்க கூடிய விலை மிக அதிகம். நன்கு வளர்ந்த மரங்கள் சுமார் ஐந்து லட்சமாவது வெட்டப்பட்டிருக்கும். அதன் மதிப்பு மட்டுமே 250 கோடி முதல் 500கோடி வரை இருக்கலாம் என்று சொல்கிறது ஒரு ஆய்வு. தவிர அந்த மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இரு நதிகளை அந்த சுரங்கம் முற்றிலும் அழித்திருக்கும்.20,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டிருக்கும் என்று சொல்கிறது க்ரீன்பீஸ் அமைப்பு. ஆனால் இந்த நிலச்சுரங்கம் அமைப்பதில் உள்ள ஆபத்துகள் பற்றி எடுத்துச் சொல்ல க்ரீன் பீஸ் அமைப்பினர் சென்ற போது அங்கு அவர்கள் கடுமையான எதிர்ப்பையே சந்திக்க வேண்டியிருந்தது. தம் பகுதிகளுக்கு வரும் வளர்ச்சித் திட்டத்தை தடுக்க அமைப்பு முயற்சி செய்வதாகவே அந்த மக்கள் நம்பினார்கள். ”அவர்கள் மட்டும் பணக்காரர்களாக இருக்க வேண்டும், எங்கள் பிள்ளைகள் மட்டும் காடுகளை நம்பி வாழ வேண்டுமா?” என்கிற கேள்வியை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.2010ல் தொடங்கிய க்ரீன்பீஸின் முயற்சிகள் 2013 வரை பெரிதாக பலனளிக்கவில்லை. எஸ்ஸார் அவர்களது வளர்ச்சிக்கு அல்ல அழிவுக்கு வழி வகுக்கிறது என்று. 2013ல் மஹான் சங்க்ரஷ் சமிதி என்கிற போராட்டக் குழு அமைக்கப்பட்டது. தமது காடுகளை, வாழ்வாதாரங்களை, உரிமைகளைக் காக்க அந்தக் குழு போராடத் தொடங்கியது. ஜங்கிலிஸ்தான் என்கிற அகில இந்திய அளவிலான அமைப்பும் அவர்களோடு இணைந்து போராடியது. இந்தக் குழு சந்தித்த நெருக்கடிகள் சாதாரணமானவை அல்ல. கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அந்தப் பகுதிக்கு வந்த பத்திரிக்கையாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். ஆனால் இது எதுவும் அந்த மக்களை அச்சுறுத்தவில்லை. தமது காடுகள் மீதான அவர்களது உரிமையும் அதன் பாதுகாப்பும் அவர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.

புதேர் கிராமத்தில் தந்தையுடன் வசித்து வந்த அனிதா, தந்தைக்கு வந்த மிரட்டல்களை பார்த்துப் பயந்துதான் போராட்டத்திற்கு எதிராக இருந்தார் என்பது அவருடன் பேசும்போது புரிந்தது. “அப்பாவுக்கு நிறைய மிரட்டல்கள் வரும். பல ரௌடிகள் வீட்டுக்கே வந்து மிரட்டு வார்கள். அப்போதெல்லாம் கிரீன் பீஸ் அமைப்பினர் மீது கோபம் கோபமாய் வரும்” என்கிறார் அவர். வீட்டுக்கு வந்தால் கிரின்பீஸ் அமைப்பினருக்கு தண்ணீர் கூட தர மறுத்த காலகட்டம் அது என்று சிரிக்கிறார் அனிதா.சில மாதங்கள் கழித்து, கிரீன்பீஸ் அமைப்பினர், அந்த பகுதியில் வாழக்கூடிய சில இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தார்கள். அப்போது பஜன் தாரி அவர்கள் தன்னுடைய மகள் அனிதாவும் வருவாள் என்று சொல்லிவிட்டார். குறிப்பிட்ட நாளில் அவர்கள் கிராமத்திற்கு சென்று கூப்பிட சென்ற போது, அனிதா வரமாட்டேன் என்று அழுது அடம்பிடித்துள்ளார். (அனிதாவிற்கு திருமணம் நடைபெற்று இருந்தாலும் கணவருடன் ஏற்பட்ட சின்னச் சின்ன பிரச்சனைகளால் அப்பா வீட்டில்தான் இருந்துள்ளார்). அனிதா அழுது அடம்பிடித்ததைக் கண்டுகொள்ளாமல், பஜன் தாரி ‘‘கண்டிப்பாக போக வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். அந்தப் பயணம்தான் அனிதாவின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் தங்களைப் போல் பூர்வகுடி மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், தன்னைப்போன்ற இளைஞர்கள் அந்த தூசியிலும் புழிதியிலும் எப்படி நிலக்கரி அள்ளி சுமக்கிறார்கள் என்பதையும் பார்த்து கொஞ்சம் அரண்டு போய் ஊர் திரும்பியுள்ளார். அதன் பிறகு போராட்டத்தில் கொஞ்சம் கொஞ் சமாக தன்னை இணைத்துக் கொண்டார். மஹான் சங்காரான் சமிதி அவருடைய குடும்ப வாழ்வையும் இணைத்து வைத்தது, அவருக்கு இதில் மிகப்பெரிய மகிழ்ச்சி. புதேர் கிராமத்திற்கு கம்பெனியைச் சேர்ந்தவர்கள் யார் வந்தாலும் அனிதா தான் தடுத்து நிறுத்தியுள்ளார், பல்வேறு பெரிய போராட்டங்களை முன்னின்று தலைமை யேற்று நடத்தியுள்ளார்.

‘‘இது எங்கள் மண், எங்கள் காடு, யாருக்காகவும் நாங்கள் விட்டுத் தரமாட்டோம் என்று உரக்க ஒலிக்கிறது அவருடைய குரல். அந்தக் குரல் இன்று மஹான் காடுகளின் எல்லா இடங்களிலும் பட்டுத் தெறிக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு அவரது மிகப்பெரிய பங்களிப்பு, அதிக அளவிலான பெண்களைக் கொண்டுவந்தது, ஆண்கள் மட்டுமே போராட்டங்களில் கலந்து கொள்ளமுடியும் என்பதையும் மாற்றி பெண்கள் முன்னணிக்கு வந்து போராடினால் வெற்றி பெற முடியும் என்பதை அனிதா நிரூபித்திருக்கிறார். அவரைப் பார்த்து அதிகமான பெண்கள் கலந்து கொண்டார்கள் போராடினார்கள் வெற்றிபெற்றார்கள். இப்படி தீப்பற்றி எரிந்த போராட்ட்த்தின் முடிவில் வேறு வழியின்றிதான் மத்திய அரசு மஹான் காடுகளை “நிலக்கரி ஏலத்தில்” இருந்து வெளியெடுத்தது. ‘அவுட்லுக்’ இதழ் அனிதாவை அட்டைப்படத்தில் போட்டு “மேரா பாரத் மகான்” என்று கட்டுரை வெளியிட்டது. முகம் முழுவதும் வெற்றிப் புன்னகையோடு பேசுகிறார், காடுகளும் நதிகளும் ‘‘நீரும் எங்களுக்குச் சொந்தம் அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது’’ என்கிறார். அங்கு இருந்த எல்லோரும் அந்தக் குரலுக்கு உரியவர்கள். அந்த வெற்றிக்கு உரியவர்கள். வளர்ச்சி என்கிற மாயைக்குள் எளிய மக்களை விழ வைக்கும் கார்ப்பரேட் எதேச்சதிகாரங்களுக்கு மஹான் போராட்டம் ஒரு மகத்தான பாடத்தைப் புகட்டியிருக்கிறது. இன்று இந்தியா முழுவதும் வலிமையாக எழுந்து நிற்கும் கார்ப் பரேட் எதேச்சதிகாரத்துக்கு எதிராக நாம் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய நினைவுறுத்தலும் கூட. மஹானின் வெளிச்சம் இந்தியாவெங்கிலும் பரவட்டும்.

சுந்தர்ராஜன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments