வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா மருந்து ஆலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததால் ரூ.10கோடி அபராதம் விதித்தது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு EIA NOTIFICATION 1994ன் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் விரிவாக்கம் செய்தது சட்டவிரோதம் எனவும் தீர்ப்பு.
ஆலை செயல்பாட்டால் உண்டான சேதம் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய ஆய்வு செய்து முழுமையான இழப்பீட்டை சன் பார்மாவிடம் இருந்து பெற வேண்டும் எனவும் அந்தத் தொகையை வைத்து பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்க செயல் திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் தீர்ப்பு.
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சன் பார்மா ஆலை இயங்கி வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம் ஆர் தியாகராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 2020ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் இன்று தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்கியது.
ஆலையின் விரிவாக்கத்திற்கு மார்ச் 2022ம் ஆண்டில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராகத் தொடரப்பட்ட மனு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வில் நிலுவையில் இருப்பதால் ஆலையை மூடுவது குறித்து இந்த மனுவில் உத்தரவிடவில்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா எனும் மருந்து உற்பத்தி ஆலையானது ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும் இவ்வளவு ஆண்டுகளாக இந்த ஆலையை செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மருந்து ஆலையால் நீர்நிலைகளுக்கு மாசு ஏற்பட்டுள்ளதால் வேடந்தாங்கல் ஏரியை பராமரிக்க நிரந்தரமாக நிபுணர் குழுவை ஏற்படுத்த வேண்டும். மருந்து ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு உரிய இழப்பீட்டை பெற வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம் ஆர் தியாகராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 2020ம் ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரரின் குற்றச்சாட்டின்படி மருந்து ஆலை உரிய அனுமதி பெறாமல் இயங்கி வருகிறதா என்பதையும் ஆலையை சுற்றியுள்ள நீர்நிலைகளுக்கு மாசு ஏற்பட்டு உள்ளதா என்பதையும் உரிய சட்டங்களின்படி விரிவாக்கம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு வனத்துறை, ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் தென் மண்டல பிரிவு அதிகாரி ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் பேரில் நிபுணர் குழுவானது தனது அறிக்கையினையும் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்திருந்தது.
இவ்வறிக்கைகளையும் மனுதாரர் தரப்பு வாதத்தையும் பரிசீலித்த பின்னர் இன்று வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் சன் பார்மா ஆலைக்கு ரூ.10கோடி அபராதம் விதிக்கப்பட்டது.