செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலிருந்து 3.72 கிலோமீட்டர் தூரத்தில் சன் பார்மா எனும் நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலை செயல்படுகிறது. இந்த ஆலை தனது உற்பத்தி அளவை அதிகரிக்க கடந்த டிசம்பர் 31ம் தேதி சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஒன்றிய அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தது.
இந்த மருந்து உற்பத்தி ஆலையானது 1992ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. தற்போது சன் பார்மா நிறுவனம் தனது உற்பத்தித் திறனை மாதத்திற்கு 25.5 டன்னிலிருந்து 134.082 டன்னாக விரிவுபடுத்துவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தது. இந்த ஆலையானது சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை விதிகள் 1994ம் ஆண்டு உருவாக்கப்படும் முன்பே செயல்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை. தற்போது வரை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்த்தின் இசைவாணையுடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி சன் பார்மா நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஒன்றிய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிசீலித்தது. சில நிபந்தனைகளுடன் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் எனவும் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் இறுதித் தீர்ப்பிற்கு இந்த அனுமதி கட்டுப்பட்டது எனவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இத்திட்டத்திற்கு விரைவில் ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைத்துவிடும்.
ஆனால், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு என்கிற அமைப்பு சன் பார்மா நிறுவனத்தின் ஆலை செயல்படக்கூடிய இடத்திற்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு, நிலம் மற்றும் நிலத்தடியில் உள்ள நீர் என ஐந்து இடங்களில் மாதிரிகளை எடுத்து சோதனைக்குட்படுத்தியது. நான்கு வகையான ரசயானங்கள் அப்பகுதியில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக நீர்ப்பாசனக் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மாதிரி உட்பட மூன்று நீர் மாதிரிகளிலும் டை-புரோமோ-க்ளோரோமீதேன் மற்றும் டை-க்ளோரோமீதேன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், டெட்ரா-க்ளோரோத்திலீன் மற்றும் டோலுயீன் ஆகியவை தொழிற்சாலையின் கீழ்நோக்கி உள்ள ஒரு குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரியிலும், ஆலையில் இருந்து வெளியேறும் மழைநீரை எடுத்துச் செல்லும் நீரோட்டத்திலும் காணப்பட்டதாக சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு தெரிவித்திருந்தது.
Vedanthangal_Water Studyமேலும் இந்த ஆலை சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் ஆலையின் செயல்பாட்டால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் மனுதாரரின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நிபுணர் குழு ஒன்றை 2020ம் ஆண்டில் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்திருந்தது. அந்த நிபுணர் குழு தனது அறிக்கையில் ஆலையின் செயல்பாடுகளால் நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு இழப்பீடாக 58 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் ஆலை நிர்வாகம் தனது விண்ணப்பத்தில் மறைத்து விட்டது. சுற்றுச்சூழல் விதிகளை முறையாக பின்பற்றி வருவதாகக் கூறி ஆலை நிர்வாகமானது தனது விரிவாக்கப் பணிகளுக்கான அனுமதியை நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடமிருந்து பெற்றுள்ளது. இந்த ஆலை தனது உற்பத்தித் திறனை அதிகரித்தால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சூழலியல் அமைப்பு பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
-சதீஷ் லெட்சுமணன்