65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள்.
இவை அத்தனையும் ஒரே இடத்தில் பார்க்க முடியுமென்றால் நம்பமுடிகிறதா? அதுவும் இந்தியாவின் மாசுபட்ட பெருநகரங்களிலொன்றின் அதிக மாசுபட்ட நீர்நிலையில் குறிப்பாகத் தினமும் 5,000 மெட்ரிக் டன்களுக்குமேல் மாநகராட்சிக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் இவ்வுயிர்கள் இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? அந்த இடம் வேறு எதுவுமல்ல சென்னை மாநகரின் பள்ளிக்கரனை சதுப்புநிலம்தான். எந்த ஒரு உயிரியல் பூங்காவிலும்கூட இத்தனை அதிகப் பல்லுயிரின வளத்தைப் பார்க்க இயலாது. அதுமட்டுமின்றி சென்னையின் பெரும் நிலப்பரப்புக்கு வெள்ள வடிகாலாகவும் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கும் ஆதாரமாகவும் பள்ளிக்கரனை சதுப்புநிலம் திகழ்ந்து வருகிறது.
இந்தியா முழுதும் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட பல்லுயிரினவளமிக்க 94 சதுப்புநிலங்களில் தமிழகத்தின் மூன்று இடங்களில் ஒன்றாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் சிறப்பு பெறுகிறது.
இத்தனைச் சிறப்புடையப் பள்ளிக்கரனை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தி நீர்த் தேக்கமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பல்லாயிரம் உயிரினங்களைத் தாங்கி நிற்கும் பெரும் மழைக்காடுகளை வெறும் மரத்தோட்டங்கள் போன்று பாவிக்கும் மனித மைய சிந்தனையின் (Anthropocene) நீட்சியாகவே இதைப் பார்க்க முடிகிறது. ஆழப்படுத்தி, காம்பவுண்ட் சுவர் எழுப்பி, மதகுகள் அமைத்துத் தண்ணீர் நிரப்ப பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னைக் கார்ப்பரேஷனின் தண்ணீர்த் தொட்டியல்ல. அது மனிதரால் அமைக்கப்பட்ட ஏரியோ நீர்நிலையோ அல்ல. மாறாக ஒரு செழிப்புமிக்க வாழிடம்.
நீர் இருப்பு நிச்சயமற்ற சூழலில் ஏரி குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் பள்ளிக்கரணையின் முக்கியத்துவம் அதன் இயற்கையான சதுப்புநிலச் சூழலியேயே இருக்கிறது. அதை மனிதர்கள் அமைத்த சாதாரண ஏரிகுளங்களோடு ஒப்பிட முடியாது.
பள்ளிக்கரணையில் பார்க்கக்கூடிய பலவிதமான உயிரினங்களைப் பள்ளிக்கரணையைவிட அதிக நீருள்ள அதிகத் தூய்மையான அதன் அருகாமை ஏரிகளிலோ நீர்நிலைகளிலோகூடக் காண முடியாது. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நிலவமைப்பு, மண்ணின் தன்மை, ஆழம், பருவகாலங்களுக்கேற்ற தண்ணீர் இருப்பு, உணவு போன்றவையே அதற்கு ஏற்ற தகவமைப்புகொண்ட ஏராளமான உயிரினங்களை அப்பகுதியை நோக்கி ஈர்த்திருக்கிறது. இயல் உயிரினங்கள் மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட வலசை செல்லும் பறவையினங்களை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து ஒவ்வொருவருடமும் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறது. இவற்றில் அழிவின் விழிம்பில் இருக்கும் உயிரினங்களும் அடங்கும். இந்த சதுப்புநிலத்தின் இயற்கைத் தன்மையை சிதைப்பது அதை நம்பியிருக்கும் எண்ணெற்ற உயிரினங்களின் அழிவுக்கே இட்டுச் செல்லும்.
உதாரணத்துக்குச் சொல்வதானால் பள்ளிக்கரணையிலிருக்கும் அளவில் பெரிய உள்ளூர்ப் பறவையான சங்குவளை நாரை (Painted Stork) மற்றும் வலசைப் பறவையான நெடுங்கால் உள்ளான் (Black winged stilt) போன்றவை நீந்த இயலாதவை; ஆழம் குறைவான நீரில் மட்டுமே வாழும் தகவமைப்பு பெற்றவை. சதுப்புநிலத்தை ஆழப்படுத்துவது இவ்வுயிரினங்களின் அழிவுக்கே வழிவகுக்கும். இதுபோன்ற எண்ணெற்ற இந்த வாழிடத்துக்கேயானத் தகவமைப்பு பெற்ற உயிரினங்களின் இருப்பை தூர்வாரி ஆழப்படுத்துதல் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும்.
ஒரு காலத்தில் 6000 ஹெக்டேருக்குமேல் பரந்து விரிந்து பல்லுயிரின வளத்தின் உச்சமாகத் திகழ்ந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம் அரசின் அலட்சியத்தாலும் தனியாரின் ஆக்கிரமிப்பாலும் இன்று வெறும் 600 ஹெக்டேர்களாகச் சுருங்கிப்போயிருக்கிறது. இங்கு அரசே ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்ற்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுகூடப் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒரு பகுதியான பெரும்பாக்கத்தில் (சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் இடையே) சாலை விரிவாக்கத்துக்காக சதுப்புநிலத்தின் பெரும்பகுதி மண் நிரப்பப்பட்டு மூடப்பட்டு வருகிறது. இன்னொருபுறம் தனியாரின் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்காக தொடர்ந்து சதுப்புநிலம் சாலைகளாலும் கட்டிடங்களாலும் நிரப்பப்பட்டு வருகிறது. ஒரு புறம் ஆக்கிரமிப்பு இன்னொருபுறம் தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகள், ஒலி, ஒளி மாசு, வரத்துக்கால்வாய்களின் சாக்கடை நீர் என இத்தனையும் தாண்டி உயிர்த்திருக்கும் இந்தப் பல்லுயிர் வளத்தைக் காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
பெரிய அளவில் சுற்றுச்சூழல் பார்வையில்லாத காலகட்டங்களில் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு நீர்நிலைகளும் காடுகளும் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று உலகம் முழுதும் சுற்றுச்சூழலும் நீடித்த வளர்ச்சியும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில் தமிழக அரசின் பள்ளிக்கரணையை ஆழப்படுத்தும் சூழல்விரோத முடிவு அயற்சியடையச் செய்கிறது. நம்மை மட்டுமல்ல இச்செயல் பள்ளிக்கரணையைப் பாதுகாக்கப்பட்டப் பகுதியாக 2005 – ஆம் ஆண்டு அறிவித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னெடுப்பையும் சர்வ நாசமாக்கவிருக்கிறது.
அனைத்தையும் ஒருவரியில் சொல்வதானால் பள்ளிக்கரனை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக்க முயல்வது அதன் பல்லுயிரின வளத்துக்கு சமாதிகட்டுவதற்கு ஒப்பானது. இந்த முயற்சியை உடனடியாகக் கைவிட்டு அதைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கைக்கொள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அரசை வலியுறுத்துகிறது. பள்ளிக்கரணையைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் Care Earth போன்ற அமைப்புகள் ஆய்வுகளையும் பங்களிப்பையும் செய்துவருகின்றன. அவற்றோடு தமிழகமெங்கும் தனித்தும் குழுவாகவும் இயங்கும் சூழல் நலன் விரும்பும் ஒவ்வொரு உள்ளங்களையும் மற்றும் அரசியல் கட்சிகளையும் இவ்விஷயத்தில் கவனம்கொள்ள பூவுலகின் நண்பர்கள் கோருகிறது.
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாக்க தமிழக அரசிற்கு கீழ்கண்ட கோரிக்கைகளை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முன்வைக்கிறது.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் கீழாக இயற்றப்பட்டடுள்ள 2017 ம் ஆண்டு சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு சட்டவிதிகள் படி பள்ளிகரனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பட வேண்டும்.
- உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற ஈரநிலங்களைப் பாதுகாக்க ராம்சார் (Ramsar) மாநாட்டு ஒப்பந்தத்தில் நம் அரசு கையெழுத்திட்டுள்ளது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட சூழல் முக்கியத்துவம் கொண்ட ஈரநிலங்கள் தமிழகத்தில் இருந்தும் கோடியக்கரை மட்டுமே ராம்சார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாதுக்காக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கரனை உட்பட முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களைக் காக்க அவற்றை Ramsar Site ஆக அறிவிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- பள்ளிக்கரணைக்கு நீர் வளங்கும் கால்வாய்களில் மாநகரச் சாக்கடை கலப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். (வேளச்சேரி 100 அடிச் சாலைவழியாக வரும் சாக்கடை நீர் நேரடியாக பள்ளிக்கரணையிலேயே கலப்பது குறிப்பிடத்தக்கது)
- பள்ளிக்கரணையில் தொடர்ந்து திடக்கழிவுகள் கொட்டப்படுவதை உடனடியாகக் கைவிட்டு பாதுகாப்பான, சூழலுக்குத் தீங்கற்ற திடக்கழிவு மேலாண்மையை வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். உயிரினங்களை அச்சுறுத்தும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் ஒலி, ஒளி மாசைக் கட்டுப்படுத்தக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும்.
- பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் எல்லைகளைத் தெளிவாக வரையறுத்து எதிர்கால ஆக்கிரமிப்புகளையும் ஊடுருவல்களையும் தடுக்க வேண்டும்.
- பரந்து விரிந்த பள்ளிக்கரணைப் பகுதியை வேட்டை, ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபாட்டிலிருந்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் வனக்காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் வழங்க வேண்டும்.
- பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் பல்லுயிர்த் தன்மையையும் சூழலையும் பாதுகாக்க அப்பகுதி குறித்த ஆழ்ந்த புரிதல்கொண்ட நிபுணர்களையும் சூழல் வல்லுநர்களையும் உள்ளடக்கியக் குழு ஒன்றை அமைத்து அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்படி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
- பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கில் அடிக்கடித் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதியின் உயிர்வளமும் அருகாமை மக்களும் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- பெருகும் தெரு நாய்களால் சதுப்புநிலப் பறவைகள் தொடர்ந்து கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும்.
- சதுப்புநிலத்தில் பெருகியிருக்கும் அயல்தாவரங்கள், அயல் உயிரினங்களை அடையாளம் கண்டு அவற்றை கட்டுப்படுத்த நிபுணர்கள் ஆலோசனைபெற்று செயல்படுத்தப்பட வேண்டும்.
- சதுப்புநில சுற்றுவட்டாரச் சாலைகளில் பாம்புகள், ஆமைகள் போன்ற உயிரினங்கள் வாகனங்களால் அதிகம் கொல்லப்படுவதைத் தவிர்க்க வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடுகளைக் கைக்கொள்ள வேண்டும்.
- வருங்காலங்களில் எந்த சூழலிலும் எஞ்சியிருக்கும் சதுப்புநிலப்பகுதிகள் குறுகியகாலப் பொருளாதார வளர்ச்சிக்காக மடைமாற்றப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.