சூழலியல் நீதியில் இந்தியாவிற்கு வழிகாட்டும் தமிழ்நாடு

மனிதகுலம் “காலநிலை நரகத்திற்கான நெடுஞ்சாலையில்” உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அண்மையில் நடந்து முடிந்த C0P-27 மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அதிகரித்துவரும் காலநிலை மாற்றதின் விளைவாக அதிதீவிர காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரத்தன்மையும் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத வறட்சி, கடுமையான வெப்பம் மற்றும் பெரும்  வெள்ளம் போன்ற காலநிலை நிகழ்வுகள் ஏற்கெனவே கோடி கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை அச்சுறுத்திவருகிறது.

இந்த ஆண்டின் முதல் 273 நாட்களில் 242 நாட்கள் இந்தியாவில் அதிதீவிர காலநிலை நிகழ்வுகள் நடந்துள்ளன. காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அறிஞர்களின் குழுவான (IPCC)யின்  அறிக்கையின்படி,  அடுத்த பத்து ஆண்டுகளில் மட்டும், காலநிலை மாற்றத்தால் சுமார் 13.2 கோடி மக்கள் தீவிர வறுமையினால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர நிலையை உணர்ந்து சர்வதேச அளவிலும் உள்நாட்டளவிலும் பல்வேறு காலநிலை குறைப்பு மட்டும் தகவமைப்பு செயல்பாடுகள் அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் தமிழ்நாடு அரசின் காலநிலை நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எப்படி சமூக நீதியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறதோ, அதே போல தற்பொழுது சூழலியல் நீதியிலும் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு அரசின் காலநிலை செயல்பாடுகள் பல வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது.

எதிர்வரும் காலநிலை அவசரத்தை புரிந்துகொண்டு, பல்வேறு காலநிலை தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகள் மூலம் மக்களை பாதுகாக்க முயலும் ஒரு மாநில அரசின் செயல்பாடுகளின் தொகுப்பு இந்த கட்டுரை.

தற்போதைய தமிழ்நாடு அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செயல்படுத்தியிருக்கும் / அறிவித்திருக்கும் 30க்கும் மேற்பட்ட காலநிலை & சூழலியல் பாதுகாப்பு திட்டங்கள் :

  1. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TN Climate Change Mission):

9.12.2022 அன்று தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதல் முறையாக ஒரு மாநில அரசால் காலநிலை மாற்றத்திற்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்ட இயக்கம் இது. இத்திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  1. பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission):

தற்பொழுது தமிழ்நாட்டின் பசுமை போர்வை (tree cover) 23.8% உள்ளது. இதை 33% உயர்த்த வேண்டும் என்ற லட்சிய இலக்குடன் கடந்த செப்டம்பர் 24ம் தேதி தமிழக முதலமைச்சரால் பசுமை தமிழ்நாடு இயக்கம் துவங்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பு அதிகரிப்பதோடு காலநிலை மாற்றத்திற்கு காரணமான கார்பன் உமிழ்வினை கட்டுப்படுத்தவும் உதவும். தமிழ்நாட்டில் தற்போதைய பசுமை பரப்பை கொண்டு 216 மில்லியன் டன் கார்பன் உமிழ்வை குறைக்க முடியும், இது மொத்த இந்திய காடுகளின் கார்பன் சுத்திகரிக்கும் அளவுகளை ஒப்பிடுகையில் 3% ஆகும். வரும் 2030 ஆண்டிற்குள் இதை 270 மில்லியன் டன் அளவிற்கு உயர்த்துவதே இந்த இயக்கத்தின் நோக்கம். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் 12000 சதுர கிமீ பகுதியில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த மூன்று வகையான யுக்திகளை கையாள அரசு திட்டமிட்டுள்ளது.

  • ஏற்கெனவே இருக்கும் காட்டுப்பகுதிகளை பாதுகாத்தல் மற்றும் காட்டுப்பகுதியினை அதிகரித்தல்.
  • விவசாய நிலங்களில் விவசாய பயிர்களுடன் மரங்களையும் நடுவதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஏற்படுத்துதல்
  • பொது இடங்களிலும், பயன்பாட்டிற்கு இல்லாத காலி இடங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் மரங்களை நடுதல்.

ஆகிய மூன்று நடவடிக்கைகள் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 260 கோடி நாட்டு மரங்களை தமிழ்நாட்டில் நடுவதே இந்த பசுமை தமிழ்நாடு இயக்கம்.

  1. தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் (TN Wetland Mission):

தமிழ்நாட்டில் மொத்தம் 9,02,534 ஹெகாட்ர் அளவிலான சதுப்பு நிலங்கள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 100 சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக ரூ.150கோடி தமிழ்நாடு சதுப்புநில திட்டத்திற்கு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது.  இதனையடுத்து கடந்த 25.03.2022 அன்று தமிழ்நாடு சதுப்புநில இயக்கத்திற்கான அரசானை வெளியிடப்பட்டது.

நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு சதுப்பு நிலங்களின் வரைபடங்களை உருவாக்கவும், தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவும், விவரங்களை ஆவணப்படுத்தவும், பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சதுப்பு நிலங்களை மீட்டுருவாக்கம் செய்யவும், சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அப்பகுதி மக்களின் பங்களிப்போடு சதுப்பு நிலங்களை பாதுகாக்கவும் இந்த தமிழ்நாடு சதுப்பு நிலம் இயக்கம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசியன் முயற்சியால் 13 புதிய சதுப்பு நிலங்கள் RAMSAR List என்று சொல்லப்படகூடிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், கூந்தங்குளம், வடுவூர், வெள்ளோடு, வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி ஆகிய இடங்களில் உள்ள பறவைகள் சரணாலயங்கள், சுசீந்திரம், தேரூர், வேம்பன்னூர், பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய சதுப்பு நிலங்கள் மற்றும் மன்னார் வளைகுடா கடல் உயிர்மண்டலக் காப்பகம் ஆகியவை புதிதாக ராம்சார் அட்டவணையில் அறிவிக்கப்பட்ட 13 சதுப்பு நிலங்கள் ஆகும். ஏற்கெனவே கோடியக்கரை சதுப்பு நிலம் ராம்சார் பட்டியலில் உள்ளதால் , தமிழ்நாடு 14 ராம்சார் இடங்களைப் பெற்று நாட்டிலே முதல் இடத்தில உள்ளது.

தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் மூலம் ரூ.1.5கோடி செலவில் வண்டலூரை அடுத்துள்ள ஓட்டேரி ஏரியை மீட்டெடுக்கும் திட்டம் தற்போது நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

  1. தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிவாகக்குழு (Tamil Nadu Governing Council on Climate Change):

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும் காலநிலை மாற்றத்திற்கான தகவல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும் தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல் திட்டத்தினை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவினை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு 21.10.2022 அன்று வெளியிட்டது.  .

தமிழ்நாடு முதலமைச்சரை தலைவராகக் கொண்டு தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள இக்குழுவானது வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வழங்கல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர மேம்பாடு, நீர்வளம், பொதுப்பணி, ஆற்றல், போக்குவரத்து, வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், மருத்துவம், குடும்பநலன், தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இணைந்து தமிழ்நாட்டிற்கான காலநிலை செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்த முடிவுகளை எடுக்கும் குழுவாக செயல்படவுள்ளது. பூவுலகின் நண்பர்கள் சார்பில் பொறியாளர் கோ.சுந்தர்ராஜன் ஒரு உறுப்பினராக இக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

  1. தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (Tamil Nadu Green Climate Company):

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் , தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆகிய இயக்கங்களை நடைமுறைப்படுத்தவும் அதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை பெறவும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. 03.11.2021 இந்த நிறுவத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருங்கால காலநிலை நடவடிக்கைகளுக்கான திட்டமிடல்கள் நடைபெற்று வருகின்றன.

  1. சென்னைக்கான காலநிலை செயல் திட்டம் (Chennai Climate Action Plan):

பெருநகர சென்னை மாநகராட்சியானது, C40 Cities மற்றும் Urban Management Centre ஆகிய  நிறுவனங்களுடன் இணைந்து 426 சதுர கிலோமீட்டர் பரப்புடைய சென்னை மாநகராட்சியை காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் அதன் பாதிப்புகளைத் தணிப்பதற்கான – “சென்னைக்கான காலநிலை மாற்ற செயல்திட்ட” (Chennai Climate Change Action Plan) அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.

2050ம் ஆண்டிற்குள் கார்பன் சமநிலை (Carbon Neutrality) மற்றும் நீர் சுழற்சி பாதிக்காத வகையில் நீர் பயன்பாட்டை நெறிப்படுத்துவது ஆகிய இரண்டு இலக்குகளை அடைய ஆறு முக்கியமான துறைகளில் பல்வேறு செயல்திட்டங்களை இந்த வரைவு அறிக்கை முன்மொழிந்துள்ளது.

  • மின்சார உற்பத்தியில் கார்பன் பயன்பாட்டை அகற்றி புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகப்படுத்த 8 செயல்திட்டத்தையும்;
  • அதிக கார்பன் வழித்தடம் இல்லாத கட்டிடங்களை எழுப்புதல்;
  • குறைவாக மின்சாரம் கொண்டு திறன் மிகு கட்டிடங்களாக அவற்றை மாற்றுவது தொடர்பாக 8 செயல்திட்டங்களையும்;
  • போக்குவரத்துத் துறையில் 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயங்கும் பொதுப் போக்குவரத்தை உருவாக்குவது;
  • நகரின் பயணங்களிலும் 80% பயணங்களை பொதுப்போக்குவரத்து, நடந்து மற்றும் மிதிவண்டியில் மேற்கொள்ளும் வகையில் மாற்றுவது, உள்ளிட்ட 10 செயல்திட்டங்களையும்.
  • வளங்குன்றா கழிவு மேலாண்மையில் 100% கழிவுகளைப் பெறுதல் மற்றும் வகைப் பிரித்தல் மற்றும் 100% பரவலாக்கப்பட்ட/மையப்படுத்தப்படாத கழிவு மேலாண்மை வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட 11 செயல்திட்டங்களையும்.
  • நகர்ப்புர வெள்ளம் மற்றும் நீர்ப் பற்றாக்குறை மேலாண்மையில் 17 செயல்திட்டங்களையும், காலநிலை மாற்றத்தால் பாதிப்படையக்கூடிய நிலையில் உள்ள மக்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் தொடர்பாக 12 செயல்திட்டங்களையும் இந்த வரைவு அறிக்கை விரிவாகப் பேசுகிறது.

இந்தியாவில் இதுவரை மும்பை நகரத்திற்கு மட்டுமே மும்பை காலநிலை மாற்ற செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது சென்னைக்கான காலநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டிருப்பது , காலநிலை மாற்ற செயல்பாடுகளில்  முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

  1. காலநிலை ஆய்வகம் (Climate Studio):

தமிழ்நாட்டில் ஏற்பட இருக்கின்ற காலநிலை மாற்ற பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியும் வகையில் 2019ம் ஆண்டு காலநிலை ஆய்வகம் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக அது செயல் படாமலே இருந்த காரணத்தால், அதை மீண்டும் செயல்படவைக்கும் பொருட்டு ரு.3.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வெப்ப உயர்வு, வறட்சி, வெள்ளம், கடல் மட்ட உயர்வு, உயிர்ப்பன்மய இழப்பு, சுகாதாரம் மற்றும் வேளாண்துறை ஆகியவற்றில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் குறித்து மதிப்பிடுவதற்கான மாதிரிகள் கொண்டு இந்த ஆய்வகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதனால் மாவட்டம், பஞ்சாயத்து அளவிலான பகுதி சார்ந்த காலநிலை மாற்றங்களை கண்டறிய முடியும். உள்நாட்டு மற்றும் சர்வதேச தரவுகளை ஒப்பிட்டு துல்லியமான ஆய்வு முடிவுகளை வழங்க முடியும், தமிழ்நாட்டிற்கு வேண்டிய காலநிலை மாற்ற தரவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலான இணையதளம் இந்த காலநிலை ஆய்வகத்தின் மூலம் உருவாக்கப்படும்.  .

  1. பரந்துபட்ட சூரிய ஆற்றல் உற்பத்தி நிலையங்கள்:

பூவுலகின் நண்பர்களின் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில்   “பரந்துபட்ட மின் உற்பத்தி கொள்கையை நோக்கித் தமிழ்நாடு நகரவேண்டும்” என்கிற கோரிக்கை இடம் பெற்றிருந்தது. தேர்தலுக்கு பிறகு இதனை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரையும் , மின் துறை அமைச்சரையும் பூவுலகின் நண்பர்களின் சார்பில் நேரில் சந்தித்து கோரிக்கையாக வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 07.09.2021 அன்று தமிழக சட்டமன்றத்தில் இதற்கான அறிவுப்புகள் வெளியானதோடு இந்த அறிவிப்பின் மூலம் ரூ.70,000கோடி செலவில் 20,000MW அளவிற்கான பரந்துப்பட்ட சூரிய ஆற்றல் மின் நிலையங்களும், 10,000MW அளவிற்கு பேட்டரி சேமிப்பு வசதிகளும் மாவட்டம் தோறும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  முதல் கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4000MW சூரிய ஆற்றல் நிலையங்களும், 1000MW பேட்டரி சேமிப்பு நிலையங்களும் அமைக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பனி தற்பொழுது நடந்து வருகிறது. ஒரே இடத்தில 600MW, 1000MW என குவிக்கப்டும் மின் நிலையங்களாக இல்லாமல் 10MW, 5MW, 2MW என சிறு சூரிய ஆற்றல் நிலையங்கள் அமைக்கபடும், இதன் மூலம் அந்த அந்த பகுதிகளுக்கு தேவையான .மின்சாரம் அருகாமையிலே தயாரிக்கப்பட்டு அருகாமையிலே விநியோகிக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலமாக :

  1. தமிழ்நாட்டின் மின் தேவை பூர்த்தி அடையும்.
  2. மாசில்லா மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து உற்பத்திசெய்ய முடியும்.

iii.         மின் உற்பத்தி செலவினை பாதியாக குறைக்க முடியும்.

  1. மின்சாரத்தை உற்பத்தி செய்து நுகர்வோரை சென்றடையும் போது ஏற்படும் மின் இழப்பை தவிர்க்க முடியும். (தமிழ்நாட்டில் மின் இழப்பு
  2. ஒரு இடத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படப்போகும் இடங்களும் (மின்வெட்டு) குறைவானதாக இருக்கும்.
  3. ஒருங்கிணைந்த சூழலியல் கண்காணிப்பு ஆய்வகம் (Integrated Environmental Monitoring Studio)

பூவுலகின் நண்பர்களின், “சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில்” கோரப்பட்ட மற்றொரு கோரிக்கையான ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த 27.11.2021 அன்று வெளியிட்டது.

காற்று மாசை கண்காணிப்பதோடு, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரை கண்காணிக்கவும், தொழிற்சாலைகளிலிருந்து வரும் அபாயகரமான கழிவுகள் (hazardous waste), மருத்துவக் கழிவுகள் (bio medical waste) மற்றும் மின் கழிவுகள் (e-waste) ஆகியவை முறையாக கையாளப்படுகிறதா என்பதனையும் இந்த  ஒருங்கிணைந்த மையம் கண்காணிக்கும் என அரசாணையில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின் மூலம் முதற்கட்டமாக 17 மாவட்டங்களில் தலா ஒரு தொடர் சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு மையங்கள் அமைக்கவும், மொத்தமாக தமிழகம் முழுவதும் 52  தொடர் சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு மையங்கள் அமைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

  1. மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்கம்:

காலநிலை மாற்றம் என்பது சர்வதேச பிரச்சனையாக இருந்தாலும் அதைத் தடுக்க மற்றும் தகவமைக்க அந்தந்த பகுதிகளில் செயல்பாடுகள் அவசியமாகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் காலநிலை மாற்ற இயக்கம் உருவாக்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த 11.07.2022 அன்று வெளியிட்டது. இதன் படி தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் காலநிலை இயக்கம் துவங்க ரூ.3.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் மாவட்ட செயல்பாடுகளை இந்த இயக்கம் முன்னெடுக்கும், அதே போல் காலநிலை மாற்ற பாதிப்புகளுக்கு தகவமைத்துக்கொள்ளும் கிராமங்கள், கோயில்கள், பள்ளிகள் ஆகியவற்றை உருவாக்குவது, கடற்கரை பகுதிகளை பலப்படுத்துதல், தற்சார்பான கிராமங்களை உருவாக்குதல், கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல், பேரிடர்களின் பொழுது மக்களை பாதுகாக்கும் கட்டமைப்புகளையும் தகவல் தொழில் நுட்பங்களையும் உருவாக்குதல் ஆகியவை இந்த மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுகள் ஆகும்.

தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் பிற சூழல் பாதுகாப்புத் திட்டங்கள்

  1. சுற்றுச்சூழல் துறைக்கு ‘சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை’ என பெயர் மாற்றம்.
  2. நீர் மேலாண்மைக்கு என தனி அமைச்சகம்.
  3. காலநிலை மாற்ற பதிப்பினை குறைக்க காவேரி டெல்டா பகுதிக்கு 1825கோடி நிதி ஒதுக்கீடு
  4. காலநிலை கல்வி திட்டம்
  5. தமிழ்நாடு வன ஆவணக் காப்பகம் (TNFADC-Tamil Nadu Forest Archives and Data Centre)
  6. பசுமை சாதனையாளர் விருதுகள் (Green Champion Award)
  7. முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்டம் (Chief Minister’s Green Fellowship Programme)
  8. தமிழ்நாடு டிஜிட்டல் காடு திட்டம் (Tamil Nadu Digital Forests)
  9. காடுகளில் உள்ள அயல் தாவரங்கள் அகற்றும் திட்டம்.
  10. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்
  11. 5152 ஹெக்டர் பரப்பளவில் கழுவெளி பறவைகள் சரணாலயம்
  12. புதுக்கோட்டை-தஞ்சாவூர் கடற்பகுதியில் ஆவுளியா காப்பகம்.
  13. தெற்கு காவிரி காட்டுயிர் சரணாலயம்
  14. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் அகத்தியர் யானைகள் காப்பகம்
  15. மதுரை-அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரத்தில் 21 ஹெக்டர் பரப்பளவிலான பகுதியை பாரம்பரிய உயிர்ப்பன்மையம் வாய்ந்த பகுதியாக அறிவிப்பு.
  16. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம்
  17. ரூ.08 கோடி செலவில் சதுப்புநிலக் காடுகள் வளர்க்கும் திட்டம்
  18. முக்கிய ஆறுகளில் நீர் தரக்கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிகழ்நேர கண்காணிப்பு மையம்.
  19. சென்னைக்கு 100 மின்சார பேருந்துகள் மற்றும் CNG பேருந்துகள்.
  20. ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.2கோடி செலவில் பசுமை பூங்கா
  21. மீண்டும் மஞ்சப்பை இயக்கம்
  22. நீர் நிலைகளில் உள்ள நுண் நெகிழியை (Micro Plastic)கண்டறிந்து அகற்றும் திட்டம்
  23. கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, நிலப்பயன்பாடு, வனப்பாதுகாப்பு, சதுப்புநில பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணர் குழு அமைத்தல்.
  24. மாநில பசுமை குழு
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments