2030ம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை(Sustainable Development Goals), உலக நாடுகள் எட்டியிருக்க வேண்டும் என்ற ஐ.நா.வின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, 2020ம் ஆண்டுக்கு பிந்தைய ஒவ்வொரு தேர்தலும் அப்பகுதி மக்களுக்கு மிக மிக அவசியமானது. அந்த வகையில், 2021ம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள நிகழ்வு இன்றியமையாததாகிறது.
சூழலியல் சிக்கல்கள் அறிவியல் தளத்திலிருந்து எளிய மக்களின் அரசியல் தளத்துக்கு நகரும் போது, அங்கு வாக்கு வங்கி அரசியல் இயல்பாகவே உருவாகும். ஏற்கனவே உள்ள வாக்கு வங்கி அரசியலின் விழுமியங்களோடு அவை வினையாற்றுகின்றன. அப்போது, சூழலியல் அரசியலின் தாக்கம் அந்த தேர்தல் களத்திலும், சமூக தளத்திலும் எத்தகைய வீரியத்தோடு இருக்கின்றனவோ, அதற்கேற்ப தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அதிகார மையமாக சூழலியல் அரசியல் உருப்பெறுகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் சூழலியல் பிரச்சனைகளும், அது சார்ந்த போராட்டங்களும் தீவிரமடைந்து கொண்டு வருகின்றன. இந்த நிலையில் தான், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருப்பது கவனைத்தை ஈர்க்க வைக்கிறது.
திமுகவின் இந்த வரலாற்று வெற்றிக்கு டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளில், 35 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
மத்தியில் ஆளூம் பாஜக அரசின் மீதும், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் மீதும், டெல்டா விவாசயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் கோபத்தில் இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உரக்கப்பேசுகின்றன. ஆனால்,‘பாதுகாப்பட்ட வேளாண் மண்டலமாக’ காவிரி டெல்டா பகுதியை அதிமுக அரசு அறிவித்ததையும் மீறி, இங்கு திமுகவுக்கு பிரம்மாண்ட வெற்றி கிடைத்தது எப்படி என்ற கேள்வி எழலாம்.
அதற்கு, மீத்தேன் – ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அதிமுக அரசு அணுகிய விதம்என்பது எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் இருந்ததே காரணம். மேலும், ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை அதிமுக அரசு ஆதரித்ததும், தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
குறிப்பாக, நெடுவாசல் கிராமமானது பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த இந்த தொகுதி, தற்போது திமுகவிடம் வந்தடைந்துள்ளது. அதைப்போலவே, கதிராமங்கலத்தை உள்ளடக்கிய சீர்காழி சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆண்டுகளுக்கு பின்பு திமுக வெற்றியை ஈட்டியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, 2015ம் ஆண்டு டிசம்பர் வெள்ளப்பெருக்குக்கு பின்னர் அதிமுக அரசின் நிவாரணம் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பணிகள் மீது சென்னை வாசிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகளிலேயே அது வெளிப்பட்டிருந்தது.
ஆனால், இன்றைய சூழலில்,வெள்ளப்பெருக்கு மட்டுமின்றி, அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு சூழலியல் சிக்கல்களை சென்னை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், எண்ணூர் கழிமுகத்தில் தொழில்துறை ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான மீனவர்களின் போராட்டமும் இந்த தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது. இந்த பகுதியானது திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும். 2016 தேர்தலிலேயே திமுக இந்த தொகுதியில் வென்றிருந்தாலும், இம்முறை திமுக வேட்பாளருக்கு அதைவிட அதிகமான வாக்குகள் கிடைக்கப்பெற்று திருவொற்றியூரை மீண்டும் திமுகதக்கவைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து, சென்னையின் அதி தீவிர சூழலியல் சீர்கேடான அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகமானது, பொன்னேரி சட்டமன்ற தொகுதியைச் சார்ந்தது. அதிமுக கோட்டையான இந்த தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் பெருவெற்றி பெற்றுள்ளார். இது சூழலியல் அரசியலில் கவனிக்கத்தக்க ஒரு முன்னேற்றமாகும்.
அடுத்ததாக, யூனிலீவர் பாதரக் கழிவுகளால் சூழலியல் சமத்துவத்தை இழக்கும் கொடைக்கானல் பகுதியானது, பழனி சட்டமன்ற தொகுதியின் வரையறைக்குள் வருகிறது. இந்த தொகுதியில்,சென்ற 2016 தேர்தலை விட அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் திமுக வெற்றியை உறுதிசெய்துள்ளது.
இவை அனைத்தையும் விட, முதலாளித்துவத்தின் கோர முகத்தை சமகால தலைமுறையினருக்கு கண்ணெதிரே வெளிக்காட்டிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என்பது, தமிழக சூழலியல் அரசியலின் திருப்புமுனை எனலாம். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இளைஞர்களின் அதிக கவனத்தை ஈர்த்தது, இந்த சூழலியல் மைய-முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டமே ஆகும்.
இந்த நச்சு ஆலையை உள்ளடக்கிய தூத்துக்குடி தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் வெற்றிபெற்றிருந்தார். எனினும், 13 உயிர்களை காவுவாங்கிய அதிமுக அரசின் துப்பாக்கிச் சூடு, அப்பகுதி மக்களை வெகுண்டெழச் செய்தது. அதன் விளைவாகவே, கீதா ஜீவன் அவர்கள் இம்முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், தமிழக சூழலியல் அரசியலின் ஆணி வேராக இருக்கும் கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடந்த இடிந்தகரை கிராமமானது, ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்டது ஆகும். கடந்த முறை, திமுக வேட்பாளர் அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால், இம்முறை வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்த கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டது போல, சூழலியல் சிக்கல்கள் ஏற்கெனவே உள்ள வாக்கு வங்கி அரசியலின் விழுமியங்களுடன் வினையாற்றும் போது, அதன் வலிமையை பொறுத்து வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படும் என்பது இன்னொரு கோணத்திலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அந்த கோட்பாட்டின் அடிப்படையில்,தமிழகத்தின் பிரதான வாக்கு வங்கி விழுமியங்களான ஜாதி, பண பலம், ஆளுமைத் திறன், புகழ்,கூட்டணி கணக்குகள் போன்றவை சூழலியல் சிக்கல்களை மீறி தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளதையும் நாம் காண முடிகிறது.
பாஜக அரசின் லட்சியத் திட்டமும், முந்தைய அதிமுக அரசின் கனவுத் திட்டமுமான சென்னை – சேலம் 8 வழிச்சாலை அமையவிருக்கும் பகுதிகளில் தேர்தல் முடிவுகள் சூழலியல் அரசியலுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
அதிலும் வனப்பகுதிகள் அடங்கிய தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சேர்வராயன் மலைத் தொடரை உள்ளடக்கிய ஏற்காடு தொகுதியில் அதிமுக பெருவெற்றி பெற்றதோடு, சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக வலம்வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக – பாமக கூட்டணிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பூவம்பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட வனப்பகுதிகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 8 வழிச்சாலையின் அடுத்த பகுதியான திருவண்ணாமலை மாவட்டத்துக்குட்பட்ட 8 தொகுதிகளில், 6 தொகுதிகளை திமுக வென்றெடுத்துள்ளது (நம்பேடு, பிஞ்சூர், சொரகுளத்தூர், அனந்தவடி உள்ளிட்ட வனப்பகுதிகள் இங்கு இருக்கின்றன). இதில், EIA சட்டத்துக்கு தீவிரமான எதிர்ப்புக்குரல் எழுந்த அல்லியாமங்கலம் கிராமத்தை உள்ளடக்கிய போளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது மற்றொரு முரண்.
இறுதியாக, 8 வழிச்சாலையின் கடைப்பகுதியான செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறுவாஞ்சூர் வனப்பகுதியானது செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. இங்கு திமுக வேட்பாளர் வெற்றி வாகை சூடியுள்ளார்.
சாகர் மாலா, பாரத் மாலா போன்றவளச் சுரண்டல் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியவற்றில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், இந்திய நிலப்பரப்பின் பருவநிலையை தீர்மானிக்கும் சக்தியாகவும், கோடிக்கணக்கான உயிர்களையும் அவற்றின் பல்வகைமையையும் பாதுகாக்கும் அரணாகவும் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை உள்ளடக்கிய மாவட்டங்களில் அதிமுக – பாஜக கூட்டணி தனது பலத்தை உறுதிசெய்துள்ளது.
இதுவரை பதிவு செய்யப்பட்ட தமிழக தேர்தல்களிலேயே, காலநிலை மாற்றம் அதீதமான ஆதிக்கம் செலுத்தியது 2021 சட்டமன்ற தேர்தலில் மட்டும் தான்.ஏனெனில், இந்த தேர்தல் என்பதே ‘காலநிலை மாற்றத்தின் குழந்தை கொரோனா’ அலறலுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது.
உண்மையில், இந்த தேர்தல் திமுக, அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகளுக்கோ, அல்லது மாற்று அரசியலை சாத்தியப்படுத்த துடிக்கும் கட்சிகளுக்கோ இடையிலான தேர்தல் அல்ல. முதலாளித்துவ வெறி, அதிகாரக் குவியல், இவற்றோடு பிணைக்கப்பட்ட சமூக அநீதி என காலநிலை மாற்றத்தை வீரியப்படுத்தும் அரசியலுக்கு எதிரானஜனநாயக போராட்டத்தின் தொடக்கப் புள்ளி.
இனி வரும் ஒவ்வொரு தேர்தலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தியே இருக்கும் என்ற நிலையில், திமுகவின் இந்த ஆட்சியானது, தமிழக மக்களுக்கானதாக மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்குமான நல்லாட்சியாக இருந்தால் மட்டுமே காலநிலை மாற்றத்துக்கு எதிரான மனித குலத்தின் நீண்ட நெடிய போரில் நம்முடைய இருத்தியலை உறுதி செய்ய இயலும்.
கடந்த காலங்களில் சூழலியலுக்கு எதிரான திட்டங்களை திமுக மேற்கொண்டிருந்தாலும், இம்முறை திமுக மீது மக்கள் பெருநம்பிக்கையுடன் வாக்களித்து, ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியுள்ளனர். அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, 50 ஆண்டுகளுக்கு பின்னர் பிறக்கவிருக்கும் நமது அடுத்த தலைமுறையின் ஏக்கமும், கண்ணீரும் கூட.
- மணிஷங்கர்