தமிழ்நாட்டின் நீர்நிலைகளில் நுண் நெகிழிகளின் தாக்கம்

நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது வளங்குன்றா வளர்ச்சிக் கொள்கைகளில் ஒன்றாகும். நம் நகரங்களைப் பாதுகாப்பானதாக, நெகிழ்திறன் மற்றும் நிலையானதாக மாற்றுதல், நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி முறைகளை ஊக்குவித்தல், கடல்கள் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் வளங்குன்றாமல் பயன்படுத்துதல் போன்ற வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளில் கடல் சார்ந்த நெகிழிகளையும், நுண் நெகிழிகளையும் ஒழிப்பது முக்கிய செயல்திட்டமாக உள்ளது.

இந்த நெகிழி மாசுபாட்டை ஒழிப்பதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு, நம் மாநிலத்தில் கடலோரப் பகுதிகள், கழிமுகங்கள் மற்றும் ஏரிகளில் நுண் நெகிழிகளை மதிப்பீடு செய்ய மூன்றாண்டு ஆய்வுத் திட்டமொன்றைத் தொடங்கியது. மார்ச் 2020இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட முதல் விரிவான நுண் நெகிழி ஆய்வுத்திட்டமாகும். இது தமிழ்நாட்டின் வெவ்வேறு நீர்நிலைகளிலும், முழு கடலோரப் பகுதிகளிலும்  நுண் நெகிழிகளின் அளவை மதிப்பீடு செய்கிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நிதியுதவில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமையால் தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல்சார் ஆராய்ச்சி நிலையம் (SDMRI) மூலம் இவ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

marine pollution

தமிழ்நாட்டின் கடற்கரை 1076 கி.மீ நீளம் கொண்ட பகுதியாகும். இதில் 88% மணற்பாங்கான கடற்கரைப் பகுதியாகவும், 6% சேற்றுப் பகுதி கொண்ட  கடற்கரை பகுதியாகவும், 6% பாறைகள் கொண்ட கடற்கரைப் பகுதியாகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த கடற்கரை நீளத்தில் 19% தமிழ்நாட்டில் உள்ளது. தொழில்துறை நடவடிக்கைகள், சுற்றுலா மற்றும் மீன்பிடித்தல்  போன்ற  நடவடிக்கைகள் கடற்கரைப் பகுதிகளில் பெருமளவில் நடக்கின்றன. இதன் விளைவாக நெகிழி மாசுபாடு ஏற்படுகிறது.

 • கடற்கரைகள், கழிமுகங்கள், ஆறுகள், தீவுகள், நன்னீர் ஏரிகள், கடலோர வாழ்விடங்கள் (பவளப்பாறைகள், கடற்புல் படுக்கைகள் மற்றும் சதுப்புநிலக் காடுகள்), நிலத்தடி நீர் மற்றும் மீன்கள், உப்பு போன்றவற்றில் நுண்நெகிழிகளை அளவிடுதல்.
 • தமிழ்நாட்டில் நுண் நெகிழிகள் பிறப்பிடத்தை அடையாளம் காணுதல்
 • பல்வேறு சுற்றுப்புறச் சூழல்களில் இந்த நுண்நெகிழிகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்தல்

போன்றவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நெகிழிகளின் அழியாத தன்மை மற்றும் அவற்றின் நுண்ணிய அளவின் காரணமாக மாமிச, தாவர உணவு வழியாகவும், நீராகரங்கள், ஒப்பனைப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள் வழியாகவும் நுண் நெகிழிகள் மனித உடலில் கலக்கின்றன. இது மனித உடல் நலத்திற்குக் கடும் தீங்கு விளைவிப்பதை பல்வேறு ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன.  கடந்த பத்தாண்டுகளில், நுண்நெகிழி மாசுபாடு உலகளவில் மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

நுண் நெகிழி என்பது 5 மில்லி மீட்டருக்கும் குறைவான  நெகிழித் துகள்களைக் குறிக்கிறது.  நுண் நெகிழியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நுகர்வோர் பயன்பாட்டில் உள்ள பல்வேறு பொருட்களிலிருந்து உருவாகுபவை முதன்மை நுண் நெகிழிகள் ஆகும்.  பெரிய நெகிழிப் பொருட்கள் சிதைந்து உருவாகுபவை இரண்டாம் நிலை நுண் நெகிழிகள் ஆகும். நுண்நெகிழிகள் பல இரசாயனங்களைக் கொண்டிருக்கும். அளவில் சிறியதாக இருப்பதால், நுண்ணுயிரிகள் அவற்றை எளிதில் உட்கொள்கின்றன, இது உயிரினங்களின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் வண்டல்களில் அதிகளவில் நுண் நெகிழிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீரிலும்,  மீன்களின் திசுக்களிலும் மற்றும் உப்பு மாதிரிகளிலும் இவை கண்டறியட்டன. பல்வேறு நுண் நெகிழிகளின் புவியியல் வேறுபாடுகளைக் கண்டறிய, தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதி சோழமண்டலக் கடற்கரை, பாக் வளைகுடா, மன்னார் வளைகுடா மற்றும் மேற்குக் கடற்கரை என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.  ஆய்வின் முடிவுகள் சோழமண்டலக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள நீர், வண்டல் மற்றும் உயிரினங்களில் நுண் நெகிழிகள் மிகுதி யாகவும் தெற்குத் திசையில் கீழேயுள்ள கடல் பகுதிகளில் நுண் நெகிழிகள் குறைவாக இருப்பதாகவும் கூறுகின்றன. சோழமண்டலக் கடற்கரையில் அதிக செறிவில் நுண்நெகிழி துகள்கள் இருப்பதற்கு முக்கியக் காரணம் பெரிய ஆறுகளின் வழியாகக் அவை கலந்ததே என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, இந்தியாவில் 7வது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும். மக்கள் தொகையில் பாதி பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். சோழமண்டலக் கடற்கரையில் தான் சென்னை அமைந்துள்ளது. சென்னையின் அடர்த்தி மற்றும் அதிவேக மக்கள்தொகைப் பெருக்கத்தினால், கடலோர பகுதியில் வாழக்கூடிய மக்கள் காலநிலை பாதிப்புகளாலும், கடலோரக் கழிவுகளாலும் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர்.

 

இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சூழல் அமைவுகளிலும், கடற்கரை வண்டல்களில்தான் அதிக நுண்நெகிழிகள் கண்டறியப்பட்டுள்ளன. கடலின் நீரோட்டம் மற்றும் காற்று வீசும் திசையின் அடிப்படையிலும் நுண்நெகிழிகள் வெவ்வேறு கடற்கரைகளுக்குப் பரவியுள்ளன. நிலப்பகுதிக்கு அருகிலுள்ள தீவுகளில் அதிக நுண் நெகிழிகள் இருப்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. பவளப்பாறைகள், கடற்புல், சதுப்புநிலக் காடுகள் மற்றும் அவற்றில் வாழும் பல உயிரினங்களுக்கு நுண் நெகிழிகளால் பாதிப்பு  அதிகரித்து வருவதையும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நன்னீர் அமைவுகளைப் பொறுத்தவரை, ஆற்று வண்டலுடன் ஒப்பிடும்போது கழிமுகங்களின் வண்டலில் அதிக அளவில் நுண் நெகிழிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. முகத்துவாரங்களில் அதிக செறிவில் நுண் நெகிழிகள் கண்டறியப்பட்டுள்ளன. கழிமுகங்கள் மூலம் நுண் நெகிழிகள் நன்னீரிலிருந்து கடலுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. ஆறுகள் நகரங்களில் பாயும்போது, தொழிற்சாலைக் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர், மற்றும் கரைகளில் கொட்டப்படும் திடக்கழிவுகளிலிருந்து நுண் நெகிழிகள் ஆறுகளில் கலக்கின்றன.

ஏரிகளில் நீர் தேங்கியே இருப்பதால் நுண் நெகிழிகளின் செறிவு அங்கு அதிகம். மேலும், ஏரிகளில் இருக்கும் நுண் நெகிழிகள் மழைக்காலங்களில் வடிகால்கள், ஆறுகள், நீரோடைகள் வழியாக இறுதியில் கடலுக்குள் கலக்கின்றன. நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நுண் நெகிழிகள் நிலத்தடி நீரில் கலக்கின்றன. மேலும் நிலத்தடி நீரில் நுண் நெகிழிகள் காணப்படுவதற்கு நுண்நெகிழிகள் கொண்ட கடல் நீரும், நன்னீரும் நிலத்தடி நீரில் கலப்பதும் காரணமாக உள்ளது. ஆழ்துளை கிணறு நீர் மற்றும் கடல் நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட உப்பு மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில், கடல் நீர் மற்றும் ஆழ்துளைக் கிணற்று நீர் இரண்டிலும் நுண்நெகிழிகள் உள்ளது தெரியவந்துள்ளது.

நுண் நெகிழிகளுக்கான மூலாதாரம் பலவாகவும் பலதரப்பாகவும் உள்ளன. ஆடைகள், ஒற்றைப் பயன்பாட்டு பொருட்கள், சுத்திகரிக்கப்படாத கழிவுகள், ஒப்பனைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், வீட்டுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், உணவு மற்றும் நீராகாரங்களின் பொட்டலங்கள், கப்பல் கட்டுதல், மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலிருந்து உருவாகும் கழிவுகள் ஆகியன நெகிழியின் மிக முக்கியமான பிறப்பிடங்களில் சில. கடல் சார்ந்த நெகிழியின் பிறப்பிடமாக கடலோர சுற்றுலா, வணிக மீன்பிடித்தல், கப்பல் மற்றும் கடல் தொழில்கள் ஆகியவை உள்ளன. ஆய்வில் அடையாளம் காணப்பட்ட 23 நுண் நெகிழி பாலிமர் வகைகளும் (PE, PP, PET, PEU, PA, PVC, PVA போன்றவை). மேற்கூறிய கடல் மற்றும் நிலம் சார் நடவடிக்கைகளில் இருந்தே நுண் அவை உருவாகிறது என்பதைக் காட்டுகின்றன.

நுண் நெகிழிகள் மாசுபாட்டிற்கு கடல் சார்ந்த மூலாதாரங்களின் பங்களிப்பு நிலம் சார்ந்த மூலாதாரங்களை விடக் குறைவாகும். ஆறுகள் வழியாகவே நிலத்திலிருந்து கடலுக்கு நுண் நெகிழிகள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் கடலோர மண்டலங்களில் நீரோட்டங்கள், அலைகளின் போக்கு, வெள்ள நிகழ்வுகள் போன்றவை நுண் நெகிழிகளை நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்கின்றன. பாலிமர் சிதைவது பொதுவாக உயிரற்ற காரணிகளால் (புற ஊதாக்கதிர்கள், வெப்பநிலை, நீராற்பகுப்பு(hydrolysis))ஏற்படுகிறது. இது பாலிமர் சிறு சிறு துண்டுகளாக சிதைவதற்கு வழிவகுக்கிறது.

இந்த ஆய்வு  மீன்களின் திசுக்களில்  உள்ள நுண்நெகிழிகளின் செறிவு மற்றும் பரவலைக் கண்டறியவும் செய்தது. இந்த ஆய்வுக்காக கடற்மேற்பரப்பு மற்றும் ஆழத்தில் இருக்கும் 32 மீனினங்களை,  58 கடலோர ஆய்வு தளங்களிலிருந்து சேகரித்துப் பரிசோதிக்கப்பட்டது. மீனின் உடல் எடை, குடல் எடை மற்றும் நீளம் ஆகியவற்றுக்கும் நுண்நெகிழிகளின் அளவிற்கும்  எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் ஆய்வு குறிப்பிடுகிறது. அனைத்துண்ணி இனங்களில் நுண்நெகிழியின் அளவு கோடை மற்றும் மழைக்காலங்களில் சுற்றியுள்ள நீர் மற்றும் வண்டலில் நுண்நெகிழியின் அளவுடன் நேர்மறையாக தொடர்புடையது. மாமிச உண்ணி மீன்களில் நுண்நெகிழியின் அளவு தாவர உண்ணி மீன்களை விட குறைவாக உள்ளது, இது (i) இரை மீன்களில் உள்ள நுண்நெகிழிகள் கொன்றுண்ணி மீன்களின் இரைப்பைக் குழாயில் குவிவது குறைவு, அல்லது (ii) தாவர உண்ணி மீன்கள் தங்கள் உணவுத் துகள்கள் என்று தவறாக நினைத்து நெகிழித் துகள்களை உட்கொள்வதாலும் அதிகமாக இருக்கலாம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் உலகளவில் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் நுண்நெகிழிகளின் தாக்கம் நீர்நிலைகளில் நடுத்தர அளவிலேயே கண்டறிப்பட்டதாக ஆய்வின் முடிவுகள் கூறுகிறது. மேலும் கண்டறியப்பட்ட நுண்நெகிழி மாசுபாட்டிற்கு கடல் மற்றும் நிலப்பகுதிகளில் காணப்படும் மனித நடவைகளே காரணம் எனக் கூறும் இந்த  ஆய்வறிக்கை சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.

பரிந்துரைகள்

மதிப்பீடு:  உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்புகளில் நெகிழி மற்றும் நுண்நெகிழி மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கு கீழ்காணும் மதிப்பீடுகள் அவசியம்.

 • நெகிழி மற்றும் நுண்நெகிழி மாசுபாட்டின்  முக்கியப் பகுதிகளை  அடையாளம் காணுதல் (அதாவது, உற்பத்தியாகும் பகுதிகள், நகரங்கள், தொழில்துறை  மண்டலங்கள், சாலைகள், துறைமுகங்கள், ஆறுகள், நதி முகத்துவாரங்கள், கடலோர மண்டலங்கள் போன்றவை).
 • நுண் நெகிழிகளின் சாத்தியமான மூலாதாரங்களை அடையாளம் காணுதல்.
 • சரியாக ஆய்வு மேற்கொள்ளப்படாத கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள், நிலப்பரப்பு தளங்கள் மற்றும் விவசாய நிலங்கள் போன்ற இடங்களை அடையாளம் காணுதல்.

ஆபத்து மதிப்பீடு: மனித ஆரோக்கியத்திற்கும் அனைத்துச் சுற்றுச்சூழல் அமைவுகளில் உள்ள உயிரினங்களுக்கும் ஏற்படும் ஆபத்தைப் புரிந்துகொள்ள நுண்நெகிழிகள் மற்றும் நெகிழிகளின் தாக்கங்கள் குறித்த விரிவான ஆய்வு தேவைப்படுகிறது.

கண்காணிப்பு : அனைத்து சூழல் அமைவுகளையும்   தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்.

நெகிழி மற்றும் நுண்நெகிழி மாசுபாட்டைக் குறைக்க நுகர்வோர் பயன்படுத்தும்  பொருட்களில் நெகிழிப் பயன்பாடு குறித்த கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

 1. பசுமைப் பைகள், பொட்டலங்கள்
 2. பல்வேறு இடங்களில் நீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை நிறுவுதல்
 3. சுழற்சிப் பொருளாதாரம்
 4. உற்பத்தி செய்வோரைப் பொறுப்புக்கு உட்படுத்துதல்
 5. பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்
 6. கழிவுகளில் இருந்து ஆற்றலை உருவாக்குதல்
 7. குப்பைகளை வீட்டிலேயே பிரித்துக் கொடுத்தல்
 8. பசுமைத் திட்டங்களை ஊக்குவித்தல்
 9. பள்ளி, கல்லூரி மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு

கட்டற்ற உற்பத்தி மற்றும் நுகர்வு வெறியால் விளைந்த நுண் நெகிழி மாசுபாடு நம் சுற்றுச்சூழலை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. தண்ணீர் முதல் தாய்ப்பால் வரை கல்ந்துவிட்ட நுண் நெகிழிகளைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை நமது அரசாங்கங்கள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

 

– லோலேஷ் பார்த்திபன்

[email protected]

 

குறிப்பு: இக்கட்டுரை 2024 ஏப்ரல் மாத பூவுலகு இதழில் வெளியானது.

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments